Wednesday, July 30, 2025
Huis Blog

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!

0

வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.

வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த எழிலரசி வயது 53 என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குடியிருப்பு மடத்தடிவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலம் இருப்பது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டின் கீழ்தளத்தில் தனிமையில் இருந்த பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் பொலிசார் அதனை உடைத்து உள்ளே சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செம்மணி புதைகுழி இலங்கையில் இனப் படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியே..!

0

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாகும். அதனை காக்கவே புத்தரும், இயேசுவும் நீதி வாழ்வுக்கான அறைகூவல் விடுத்தனர். வலுவான மக்கள் சக்தியையும் உருவாக்கினர்.

ஆனால் அவர்கள் பெயரால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள சமய நிறுவனங்கள் தான் நிலை பிறழ்ந்து இனவாத நோக்கில் இலங்கையில் செயல்படுவது சமய தர்மத்தையும், நீதியையும், உண்மையும் சமூக புதைகுழிகளுக்குள் தள்ளுவதாகவே தோன்றுகின்றது.

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். இதுவரை நூற்றுக்கதிகமான மனித எச்சங்கள் முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என பலருடையதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதோடு விசேடமாக குழந்தைகள் பாவிக்கும் பால் போத்தல், பாடசாலை சிறுவர்களின் புத்தகப் பை, உடைகள் உட்பட பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.

கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சாட்சியான சோம ரத்தின ராஜபக்சரின் கூற்றின்படி பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டு குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது உயிரோடு குழிகளுக்குள் தள்ளி கொன்று மண்ணில் மறைத்துள்ளனர்.

இதற்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தலைநகரான கொழும்பிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அல்ஜாஸீரா போன்ற சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில் தெற்கின் பிரதான சிங்கள ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் பேசாதிருப்பது இனவாத நோக்கில் என்பது நாம் அறிந்ததே.

பட்டலந்த விடயம் அல்ஜசீரா ஊடகத்தில் வெளி கொண்டு வந்த போது இவ் ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் செம்மணி விடயத்தில் மௌனம் காப்பது; கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் கொலையாளிகள் சிங்கள படையினர் என்பதாலுமே.

ஆனால் சமய அறம் காக்க உருவாக்கப்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் அதன் தலைமைத்துவங்களும் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடைபெற்ற இனப்படுகொலை யுத்தத்துக்கும் படைவீரர்களுக்கும், ஆயுதங்களுக்கும் ஆசி வழங்கிய சமய தலைமை தலைமைகளிடமிருந்து நாம் நீதியை எதிர்பார்க முடியாது.

உயிர்ப்பு தின குண்டு வெடிப்புக்கும், அதில் கொல்லப்பட்டோருக்கும் நீதி கேட்டு ஜெனிவா வரை சென்றவரும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற வருமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் ஒரு பால் திருமணம் மனித உரிமை சார்ந்தது அல்ல.

அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சமயத்திற்கு எதிரானது என எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.ஆனால் இனப்படுகொலையின் அடையாளமான செம்மணி தொடர்பில் வாய் திறக்காத உள்ளமை கத்தோலிக்க திருச்சபையின் பிளவுபட்ட தன்மையையும் இனவாதத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதன் அடையாளமாகவே கொழும்பு பேராயர் காட்சி தருகின்றார். இதற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் நீதியின் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதுவே இறை நீதியாகும்.

அதுமட்டுமல்ல கொழும்பை தலைமையகமாக கொண்ட ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளும் அதன் நிறுவனங்களும் அதன் தலைமைகளும் இனப்படுகொலை தொடர்பில் கருத்து கூறாதிருப்பது இனவாத தற்காப்பு நிலையே.

இன, மத, பிரதேச வாதத்தை பாதுகாத்து முதலாளித்துவத்திற்கு பணி புரியும் சமய தலைமைகளும் அவர்களின் தலைமையில் இயங்கும் சமய நிறுவனங்களும் சமூகத்திற்கு சாபமே. சாதனை நீதியின் மக்கள் இதற்கு எதிராக எழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒடுக்கப்பட்டோருக்கான நீதிக்கான மக்கள் எழுச்சி இறை நீதி சமயங்களின் வாழ்விடம்.

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனைக்கு 3 அரசியல் கட்சிகள் ஆதரவு..!

0

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை தொடர்பான விவாதத்தின் போது 3 அரசியல் கட்சிகள் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

அதன்போது பொதுஜன பெரமுன கட்சி அந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி அது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நேற்று (28) கருத்து தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஓரிரு தினங்களில் கட்சி கூடி அதற்கான முடிவை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்,

”தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமைக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பைத் தெரிவித்து வரும் கட்சி என்ற வகையில் மேற்படி யோசனைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது நியமனத்திற்கும், போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கும் தமது கட்சி ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த அனைத்து காரணங்களையும் முன்வைத்து மேற்படி யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக் கோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம்இலக்க அலுவலர்களை அகற்றுதல் நடவடிக்கை முறைசட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தை ஓகஸ்ட் 05ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த யோசனை தற்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் உருவாக்கம்..!

0

டிஜிட்டல் ஊடகத்தின் விரிவாக்கமும் அதன் தாக்கமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களின் ஒற்றுமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் நிறுவப்பட்டுள்ளது.

இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதோடு, மக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளுக்காகவும் பாடுபடுவது இந்தச் சங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும்.

டிஜிட்டல் ஊடகத்தில் முழுநேரமாகவோ அல்லது பகுதிநேரமாகவோ ஈடுபடும் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு இந்தச் சங்கம் திறந்திருக்கும்.

எந்தவொரு இன, மத, தேசிய அல்லது புவியியல் பாகுபாடுகளுமின்றி, பொதுவான இலங்கை அடையாளத்தின் கீழ் செயல்படுவது சங்கத்தின் நோக்கமாகும்.

டிஜிட்டல் ஊடகத்திற்கு உள்ள வெளியைப் பாதுகாப்பதோடு, அதை விரிவுபடுத்துவதும், அதற்கு எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் சட்டரீதியான சவால்களை ஒருமித்து எதிர்கொள்வதற்கு ஒரு தளமாக மாறுவது எங்களது மற்றொரு எதிர்பார்ப்பாகும்.

டிஜிட்டல் ஊடகத்தின் வளர்ச்சியுடன், அதன் பயன்களைப் பெறும் மக்களுக்கு, சில சமயங்களில் ஊடகத்தின் தவறான பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து நாம் அறிந்திருக்கிறோம்.

தொழில்முறை ஊடகப் பயன்பாட்டிற்குத் தேவையான நிபந்தனைகளைப் புறக்கணிப்பதால் ஏற்படும் தவறான தகவல் பரப்புதல், மக்களைத் தவறாக வழிநடத்துதல், வெறுப்புணர்வு தூண்டும் தகவல்கள், தனிநபர்களின் மற்றும் நிறுவனங்களின் புகழுக்கு வேண்டுமென்றே இழிவு செய்தல் போன்றவை இதில் அடங்கும்.

எனவே இன்று அறிமுகப்படுத்தப்படும் இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம், தொழில்முறை மற்றும் ஒழுக்கமான ஊடகப் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை குறைப்பதற்கு, ஊடகத் துறையிலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், இணைய வழி ஊடகம், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பிரகடன உரிமை தொடர்பான பிரச்சினைகள் குறித்து, அரசு மற்றும் பிற ஊடக மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து, ஊடகம் சார்ந்த சீர்திருத்தங்கள், கொள்கைகள் மற்றும் சட்டவாக்கங்களுக்கு ஒரு பங்குதாரராக இருப்பது எங்களது நோக்கமாகும்.

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பது அவசியம் – சுமந்திரன்

0

செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களைச் சரியான முறையில் ஆராய்ந்தாலே நாட்டில் நடைபெற்ற பலவிதமான சர்வதேசக் குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அகழ்வுப் பணிகளில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. இரண்டு சிறிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கைகள் இடம் பெறுகின்ற போதும் நூற்றுக்கும் மேற்பட்ட என்புத் தொகுதிகள் மீட்கப்படுகின்ற காரணத்தால் இன்னும் அதிக எண்ணிக்கையில் என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்படலாம் என்ற சந்தேகம் உள்ளது.

மேலும் என்புத் தொகுதிகள் ஆழமாகப் புதைக்கப்படவில்லை. நில மட்டத்திலிருந்து ஐம்பது சென்ரிமீற்றர் ஆழத்தில் கூட உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றமையைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இங்கு உடல்கள் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய விதமானது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. வயது குறைந்தவர்களுடைய என்புத் தொகுதிகளும் கண்டெடுக்கப்படுகின்றன.

மேலும் செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதி மயானமாக இருப்பதனால் ஒரு சில முறையாக புதைக்கப்பட்ட என்புத் தொகுதிகளும் கண்டறியப்படலாம். ஆனால், அவற்றை இலகுவாகக் கண்டறிந்து கொள்ள முடியும்.

கொக்குத்தொடுவாய், மன்னார், மாத்தளை போன்ற இடங்களிலும், 1994களுக்குப் பின்னர் தெற்கிலே சில இடங்களில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுடன் சம்பந்தப்பட்ட அனுபவமுடையவர்கள் இருந்தாலும் கூட மனிதப் புதைகுழியில் இருந்து அகழப்படும் என்புத் தொகுதிகள் பற்றிய பரிசோதனையைச் செய்வதற்கான நிபுணத்துவம் இலங்கையில் இல்லை.

உலகில் ஒரு சில பல்கலைக் கழகங்களில் மாத்திரமே அந்தத் தொழில்நுட்பம் உள்ளது. அகழ்ந்தெடுக்கப்படுபவை யாருடைய எச்சங்கள் என்பது அடையாளம் காணப்படுவது மிக முக்கியமானது.

அகழப்படும் என்புத் தொகுதிகளை ஆய்வுக்காக வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் சான்றுப் பொருள்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது போன்ற நிபுணத்துவங்கள் கூட சர்வதேச நிபுணர்கள் இடத்தில் இருந்தே பெற வேண்டியனவாக உள்ளன.

ஆகவே, செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

இந்த விடயங்களைச் சரியான முறையில் ஆராய்ந்தாலே நாட்டில் நடைபெற்ற பலவிதமான சர்வதேச குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரும். நல்லிணக்கத்தை நோக்கி நகர்கின்றோம் எனச் சொல்லுகின்ற அரசு இந்த உண்மைகள் வெளிவருவதற்கு ஏற்ற சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேச குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளி வருகின்றன. அரசு நல்லிணக்கத்தை நோக்கி நகர்கின்றோம் எனச் சொல்கின்ற போது, எந்த நல்லிணக்கமும் உணமையின் அடிப்படையிலேயே செய்யப்படலாம். உண்மையை மூடி மறைத்து விட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

எனவே,செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மையும் வெளிவருவதற்குச் சகல நடவடிக்கைகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். அதற்கான அனுமதிகளைக் கொடுக்க வேண்டும். இதனைப் பரிசோதிக்கச் சர்வதேச நிபுணர்களை வரவழைத்து பரிசோதனைக்காகச் சர்வதேச நிபுணர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை நாமும் வேறு விதங்களில் செய்து கொண்டிருக்கின்றோம். சர்வதேச நிபுணர்களை வரவழைத்து அவர்களுடைய கையிலே செம்மணி விடயத்தை ஒப்படைக்க வேண்டும். என்புத் தொகுதிகள் பற்றிய பரிசோதனையை மேற்கொண்டு அறிவிக்கும் பொறுப்பு முழுவதும் சுயாதீனமாகச் செயற்படுகின்ற சர்வதேச நிபுணர்களிடத்தே கையளிக்கப்பட வேண்டும்.

சர்வதேச நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான நகர்வுகளை வேறு வழிகளிலும் மேற்கொண்டு வருகின்றோம். வரும் நாள்களில் நீதிமன்றம் ஊடாக ஏதாவது கட்டளைகள் பெறப்பட வேண்டிய தேவை ஏற்படின் அந்தக் கருமங்களிலும் ஈடுபடுவோம் என்றார்.

ரோயல் பார்க் கொலையாளிக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கைப் பிடியாணை; தலைநிமிரும் சட்டத்துறை..!

0

இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ரோயல் பார்க் கொலைச் சம்பவம் மீண்டும் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பொது மன்னிப்பைப் பெற்று விடுதலை செய்யப்பட்ட ஜுட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையுடன் கூடிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு சட்டத் துறையிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதியில் நடைபெற்ற கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார் ஜுட் ஷ்ரமந்த.

ஆனால், அரசியல் வட்டாரங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திய வகையில், மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்த பொதுமன்னிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜுட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை அண்மையில் இரத்துச் செய்தது.

மேலும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ள அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துமாறும் சட்ட மா அதிபருக்கும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 29, 2025) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சஜித் பண்டார, “ஜுட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையுடன் கூடிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இந்த சர்வதேச பிடியாணையானது, ஜுட் ஷ்ரமந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வர வழிவகுக்கும்.

இந்த நடவடிக்கை, நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை மீண்டும் மக்கள் மத்தியில் விதைத்துள்ளதுடன், சர்ச்சைக்குரிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து மீண்டும் ஒருமுறை விவாதங்களைத் தூண்டியுள்ளது.

ரோயல் பார்க் கொலையாளி பிடிபடுவாரா? இந்த விவகாரம் அடுத்த கட்டமாக என்ன ஆகும் என்பதை உலகமே உற்றுநோக்கி வருகிறது.

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

0

வங்காள விரிகுடாவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 12.11 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

ஜூலை 22 காலை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

0

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருந்த நிலையில் தற்போது குறித்த வேலைநிறுத்த திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் சரணடைந்த நாமல் ராஜபக்ஸவிற்கு முன்பிணை.!

0

நீதிமன்றத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை முன்பிணையில் விடுவிக்குமாறு ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமல் ராஜபக்ஸ இன்று(29) பிற்பகல் நீதிமன்றத்தில் சரணடைந்ததை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய வழக்கின் 35ஆவது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஸ நேற்று(28) நீதிமன்றில் முன்னிலையாக தவறியதால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடியமை, நீதிமன்றின் உத்தரவை மீறியமை, 03 ஜீப் வாகனங்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் நெடுஞ்சாலையில் தீ விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை; சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்..!

0

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று (28) ஒப்புதல் வழங்கியது.

இதன்படி டிக்டொக், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்குத் முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது யூடியூப் தளமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு நடைமுறைக்கு வந்ததும், அதனை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், அது தீங்கு விளைவிப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துமாறு கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!