Saturday, May 2, 2026
Huis Blog Bladsy 69

நடுவானில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான பணிப்பெண்கள் மீது தாக்குதல்..!

0

சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களைத் தாக்கியதற்காக 28 வயது சவுதி நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை 6:32 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்த UL-266 விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.



மலேசியாவுக்குச் சென்று கொண்டிருந்த பயணி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது கழிப்பறைக்குச் செல்ல முயன்றதால் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானம் தரையிறங்கத் தயாராகும் போது அனைத்து பயணிகளும் தங்கள் ஆசனப்பட்டிகள் அணிந்து இருக்க வேண்டும்.



இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விமானப் பணிப்பெண்கள் விமானிக்குத் தகவல் தெரிவித்ததும், விமான நிலைய காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, விமானம் தரையிறங்கியதும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை, கட்டுநாயக்க விமான நிலைய சுற்றுலா காவல்துறையுடன் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



இந்த சம்பவம் இலங்கை வான்வெளியில் நடந்ததால், சந்தேக நபரான சவூதி நாட்டவர் நாளை (27) கொழும்பு நீதவான் நீதிமன்றம் எண். 01 இல் முற்படுத்தப்படவுள்ளார்.

வவுனியாவில் மீற்றர் வட்டி, போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை – ஜெகதீஸ்வரன் MP

0

வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிசாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு இன்று (25.10) பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிசாருக்கோ வழங்கலாம். அவ்வாறு வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை இழந்தவர்களும் தொடர்பு கொள்ள முடியும்.



வன்னியின் பல பகுதிகளில் போலியான ஆவணங்கள் மற்றும் போலியான உறுதிகள் மூலம் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.



மேலும், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை மேற்கொள்ளபவர்கள் மற்றும் அச் செயற்பாடுகள் மூலம் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பாகவும் முறைப்பாடுகளை செய்ய முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் உரிய வகையில் விசாரணை நடத்தப்பட்டு சடட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தொலைபேசி தடை; அனுர அரசின் புதிய திட்டம்..!

0

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன தொலைப்பேசிகள் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ள அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொண்ட நிகழ்வொன்றில் பெண்கள் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சர் சரோஜா போல்ராஜ் வெளியிட்டுள்ளார்.



அதன்போது, 12 வயதுக்குட்பட்ட எந்த மாணவரும் தொலைபேசி வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவதைத் தடுக்க அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, அதிகப்படியான திரை நேரம் மற்றும் தீங்கு விளைவிக்கும் நிகழ்நிலை உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் சிறுவர்கள்ளை பாதுகாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



அத்துடன், இது ஆரோக்கியமான பிள்ளைப் பருவ வளர்ச்சி மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த வயதெல்லையினை 16ஆக அதிகரிப்பது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகளுக்கு இராணுவத்தினர் இடையூறு..!

0

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று (26.10.2025) சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று (26.10.2025) காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன.



தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள் காணப்படுகின்ற நிலைமையில் துயிலும் இல்லத்தில் ஒரு சிறிய பகுதியிலேயே குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையிலே குறித்த வளாகத்தின் முன் பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட வேளையில் குறித்த இடத்தில் இராணுவத்தினர் வருகைத்தந்து தமது முகாமுக்கு அருகில் உள்ள பகுதியில் வேலி கம்பங்களை அமைக்க வேண்டாம் என இடையூறு வழங்கியுள்ளனர்.

எனினும், குறித்த பகுதிக்கான வேலி அமைப்பு பணிகள் நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிர்வாகத்தினர்,“ இவ்வாண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெறுவதற்கான சிரமதான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏற்பாடுகளும் இடம்பெறவுள்ளன.

மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் வருகைத்தந்து தொடர்ந்து இடம்பெறும் பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.



மேலும் துயிலும் இல்லத்தில் மிக நெருக்கடிக்குள்ளேயே மாவீரர் நாளை அனுஸ்டித்து வருவதாகவும் இந்த அரசாங்கமாவது இந்த மாவீரர் துயிலும் இல்ல காணியை முழுமையாக விடுவித்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயமட்ட விரைவு கணித போட்டியில் முறைகேடு..!

0

09/10/2025 அன்று நடைபெற்ற வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலய மட்டத்திலான விரைவு கணிதப் போட்டியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன எனவும் அதனை உரிய முறையில் அறிவித்த போதும் வலயக் கல்விப் பணிப்பாளர் கவனத்தில் எடுக்கவில்லை எனவும் இதனால் சிறுமி ஒருவர் கடும் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலை மாணவி தரம் 04 விரைவு கணித போட்டியில் பங்கு பற்றிய போது குறித்த ஒரு மாணவிக்கு மட்டும் தரம் 02 வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடங்களின் பின் வினாத்தாள் பெறப்பட்டு தரம் 04 வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. பின் மூன்றாவது தடவையாகவும் வேறொரு வினாத்தாள் வழங்கப்பட்டு போட்டி நடைபெற்றுள்ளது.



மேற்படி விடயங்கள் காரணமாக குறித்த மாணவி மன அழுத்தத்திற்கு உள்ளாகி பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபர் ஊடாக 13/10/2025 அன்று எழுத்து மூலம் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்திருந்தும் இன்று வரை எதுவிதமான பதிலும் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் 31/10/2025 அன்று மாகாண மட்ட விரைவு கணிதப் போட்டி நடைபெற உள்ளது.

குறித்த மாணவி சென்ற வருடம் தரம் 03 விரைவு கணிதப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்றதுடன், இவ்வருடம் நடைபெற்ற கோட்ட மட்டப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



வட மாகாண கல்விப் புலத்திலுள்ள உரிய அதிகாரிகள் மாணவியின் கல்வி உரிமை பாதிப்படையாத வண்ணம் உடனடியாக விசாரணை ஒன்றை நடாத்தி குறித்த மாணவிக்கு நிவாரணத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் செயற்பாடுகள் மாணவர்கள் சார்பாக நடைபெறாமல் இருப்பதை மேற்படி விடயம் நிரூபணமாக்கியுள்ளது. இது மட்டுமின்றி வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே செல்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



மாணவர்களின் கல்வி செயற்பாடுகளிலும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் அதிக கவனத்தை செலுத்தும் இலங்கை ஆசிரியர் சங்கமானது மேற்படி மாணவியின் விடயத்தில் அதிக கரிசனை கொண்டுள்ளதுடன், மாணவியின் கல்வி உரிமையைப் பாதுகாக்க எப்போதும் முன்னிற்கும் என்பதை தெரியப்படுத்துகின்றோம் எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண முதலீட்டாளர் மாநாடு ஜனவரியில்; ஆதரவை வழங்குமாறு ஆளுநர் கோரிக்கை..!

0

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை தீர்மானித்துள்ளது. அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அதிகாரிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், பிரதம செயலாளர், வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்களின் பங்குபற்றுதலுடன் த மனேஜ்ட்மன்ட் க்ளப்பினருடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று (24.10.2025) கலந்துரையாடல் நடைபெற்றது.



கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் த மனேஜ்ட்மன்ட் க்ளப் வடக்குக்கான முதலீட்டாளர் மாநாட்டை ஒழுங்குபடுத்துகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கு அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், தொழில்துறை அமைச்சகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் இந்த மாநாட்டை முன்னெடுப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.



மாநாட்டுக்குத் தேவையான எமது வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்தினதும் தகவல்கள் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் தொடர்பான ஒத்துழைப்புக்களை வழங்குவதன் ஊடாக, எமது மாகாணத்தை மேம்படுத்த முடியும்.

உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்திக்கு எமது மாகாணம் 4.2 சதவீதமே பங்களிப்புச் செய்கின்றது. அதனை ஆகக் குறைந்தது 10 சதவீதமாகவேனும் உயர்த்த வேண்டும். அதற்கு இவ்வாறான முதலீட்டாளர் மாநாடுகளும் அதன் ஊடாக எமது மாகாணத்தை நோக்கி முதலீட்டாளர்களும் வரவேண்டும்.



முதலீட்டாளர்கள் இங்கு வருகின்ற போது அவர்களுக்கான ஒத்துழைப்புக்களை அரசாங்க அதிகாரிகள் வழங்கவேண்டும். அதேநேரம், மக்களும் முதலீடுகளை எதிர்க்காமல் அந்த முதலீடுகள் ஊடாக எமக்குத் தேவையானவற்றை பேரம்பேசிப் பெற்றுக்கொள்ள வேண்டும், என்றார் ஆளுநர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் பங்கேற்றனர்.

பெக்கோ சமனிடம் இலஞ்சம் பெற்ற அதிகார சபையின் முன்னாள் தலைவர்..!

0

தமக்கு சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் தம்மிடம் இருந்து மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கெஹெல்பத்ர பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைதான ‘பெக்கோ சமன்’ தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட உள்ளார்.



தற்போது மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ‘பெக்கோ சமன்’, தனக்கு சொந்தமான ரூபா 8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சொகுசு பேருந்துகளை கண்டுபிடிக்க கடந்த நாட்களில் குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவினார்.

இந்த இரண்டு பேருந்துகளில் ஒன்றைக் கொழும்பு – மொனராகலை வீதியில் இயக்க அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் தன்னிடம் இருந்து மாதாந்தம் ரூபா மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் இலஞ்சம் பெற்றதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அனுமதிப்பத்திரம் கடந்த மார்ச் மாதம் காலாவதியான போதிலும், “ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நான் பார்த்துக்கொள்வேன், பேருந்தை இயக்குங்கள்” என முன்னாள் தலைவர், ‘பெக்கோ சமன்’ தரப்பினருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.



பெக்கோ சமன்’ கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மைத்துனர் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, கடந்த மாதம் கூட முன்னாள் தலைவரின் கணக்கில் குறித்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கு அவர் பதவி இழந்த பின்னரும், தமக்குச் செய்த உதவிக்காக அந்தப் பணம் அவருக்கு வழங்கப்பட்டதாக ‘பெக்கோ சமன்’ கூறியுள்ளார்.



இது குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் தலைவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்காது காலத்தை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு..!

0

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கும் நெடும் பயணத்தில் ஈடுபடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்களில் இந்த நீண்ட நெடும் பயணத்தில் சிறு சிறு பேச்சுவார்த்தைகளுக்கான வழிகள் அல்லது ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.



எனினும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன்னமும் அது குறித்து சிந்திக்கவில்லை என ஸ்ரீதரன் கூறினார்.

சூரியன் வானொலியில் ஒலிபரப்பாகும் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் ஸ்ரீதரன் வெளிப்படுத்தினார்.



ஜனாதிபதி தெரிவாகி ஒருவருடம் கடந்துள்ளதாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒருவருடம் பூர்த்தியாகவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர அரசியல் பிரச்சினை உள்ளது என்றும் அந்த நிரந்தரமான அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய அரசாங்கத்துக்கு இருக்கின்றதா என்று தமக்குத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.



காலம் இழுத்தடிக்கப்படுவதே தவிர அரசாங்கம் இன்னமும் ஊக்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பது தான் தம்முடைய நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள HIV மற்றும் பாலியல் தொற்றாளர்கள்..!

0

லங்கையில் 150,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடத்தைகளில் ஈடுபடுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உடனடி தலையீடு இல்லாவிட்டால், வரும் ஆண்டுகளில் நாட்டில் HIV மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த் தொற்றுகள் (எஸ்.டி.ஐ) கூர்மையாக அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.



சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாலியல் தொற்று/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி, நாடு முழுவதும் 127,511 அதிக ஆபத்துள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த புள்ளிவிவரங்கள் பரந்த சமூகத்தில் பதிவு செய்யப்படாத நபர்களைக் கணக்கிடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கையானது அதிகமாகவே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளையும் கணவனையும் கைவிட்டு யாழ் காதலனுடன் பெண் மாயம்..!

0

முல்லைத்தீவு புதுகுடியிருப்பை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு யாழ்ப்பாணம் சென்று காதலனுடன் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கணவன், தனது பிள்ளைகளுடன் மனைவியை தேடிவருவதாக கூறப்படுகின்றது.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

புதுக்குடியிருப்பில் வசித்த குறித்த குடும்ப பெண் , தனது கணவன் மற்றும் 3,6,9 வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகளை தவிக்க விட்டு பெருமளவான நகை மற்றும் பணத்துடன் தலை மறைவாகியுள்ளார்.



குறித்த பெண் தற்பொழுது காதலனுடன் யாழ் தென்மராட்சி பிரதேசத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் பற்றிய தகவல்கள் கிடைத்தால் 077622114 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கணவன் கோரிக்கை விடுத்துள்ளதாக சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!