Wednesday, July 30, 2025
Huis Blog

உள்ளக பொறிமுறையால் ஒருபோதும் நீதி கிடைக்காது..!

0

உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது என்ற தொடர்ச்சியான கோரிக்கையை ஐ.நா புறம் தள்ளுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே குறித்த சங்கத்தினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைப்பினர், உள்ளக பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம். அப்படி இருந்த போதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளக பொறிமுறை எப்படி சாத்தியமான முறையில் வழிவகுக்கும் என எமக்கு தெரியவில்லை.

இந்தநாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கி கௌரவிக்கும் நிலையே தொடர்ச்சியாக இருக்கின்றது.

அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கின்றது.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்த புதைகுழிகள் வெளிப்படுகின்றது. இவற்றை செய்தது யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறியமுடியும்.

தொடர்ச்சியாக நீதி கோரி போராடி வரும் நாம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

நிறுத்தப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம்..!

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் சமீபத்தில் நீதி அமைச்சுக்கும் சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது என்பது தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியாகும்.

தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்துக்காக மக்கள் பணம் பெரும் பகுதி வீண் விரயமாக்கப்படுவதாகவும் ஐந்து வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்தால் ஆயுட்காலம் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

அரச சேவையில் உள்ளவர்களுக்கு 60 வயதின் பின்னரே ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சேவையையே செய்கின்றனர் அவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்புரிமை வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் சமூகத்தில் பேசு பொருளாக்கியவர்கள் தேசிய மக்கள் சக்தியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளுக்கான கடமைகளை மேற்கொள்வதற்கு திணைக்களங்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் வரிப்பணத்தில் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட வாகன அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பிலும் அரசு அவதானம் செலுத்த வேண்டும்.

AI தொழில்நுட்பத்தினால் ஏற்படவிருக்கும் பேராபத்து..!

0

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியானது பாரியளவு ஆபத்தை ஏற்படுத்தும் என செயற்கை நுண்ணறிவின் தந்தை என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஷிண்டன் எச்சரித்துள்ளார்.

one decision பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் அதனை தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

AI தொழில்நுட்பத்தால் ஏற்படவிருக்கும் மிக பெரிய ஆபத்துக்களை மென்பொருள் நிறுவனங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், AI யினால் ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்த போதிலும், அவற்றை வெளியுலகிற்கு அறியப்படுத்தாது மறைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

3 வருடங்களில் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடை விலகல் – பிரதமர்

0

கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த 03 வருடங்களில் 20,000 மாணவர்கள் இடை விலகியுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பில் மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளை தெளிவுபடுத்தும் வடமேல் மாகாணத்திற்கான கலந்துரையாடல் குருணாகல் மாவட்ட செயலகத்தில் இன்று(30) நடைபெற்றது.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அதிகாரிகளுக்கு தௌிவுப்படுத்தும் போதே பிரதமர் இதனை கூறினார். நாளாந்தம் பாடசாலை நேரத்தில் 50 வீத மாணவர்களே வகுப்பறையில் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

அடுத்த வருடத்தில் தரம் ஒன்றுக்கும் தரம் 6 க்கும் புதிய பாடவிதானங்களை அறிமுகப்படுத்துவதாகவும் இதன்மூலம் புதிய இலக்குகளை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் துறைசார் அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்; சாட்சியமளிப்பதற்கு யாழ் வரவுள்ள கோட்டா..!

0

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆட்கொணர்வு மனு ஒன்று 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிலர் சாட்சியமளித்திருந்தனர்.

அத்துடன் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்கு முன்னிலையாகுமாறு 2019 ஆம் ஆண்டு பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

எனினும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிமன்றுக்கு செல்ல முடியவில்லை என்பதனை குறிப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரணைக்குட்படுத்திய மேன்;முறையீட்டு நீதிமன்றம், யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கோட்டபய ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்து ரிட் உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

குறித்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று யசந்த கோதாகொட குமுதினி விக்ரமசிங்க ஷிரான் குணரட்ன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வா இந்த அறிவிப்பினை வெளியிட்டார்

இன்றில் இருந்து நான்கு வாரங்களுக்குள் யாழ் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து உத்தரவுகளை பெறுமாறு சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

அத்துடன் தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இதனால் குறித்த வழக்கின் விசாரணையை நிறைவுக்கு கொண்டுவருமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் மனுதாரர்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போப்பகே இந்த கோரிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

பொது இடத்தில் வெற்றிலை மென்று துப்பிய எழுவர் கைது..!

0

வெற்றிலையை மென்று துப்பிய நபர்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, கடந்த வாரம் (26) குருநாகல் பேருந்து நிலையத்தில் 07 பேரை அவர்கள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2025 அன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

பொது இடத்தில் மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் வெற்றிலையை மென்று துப்புதல், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் என்பது இலங்கையில் குற்றமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

செம்மணியில் குழந்தையை அரவணைத்தவாறு கிடந்த எலும்புக் கூட்டுத் தொகுதி..!

0

செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, குழந்தையின் எலும்புக் கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 37 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது .

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!

0

வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.

வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த எழிலரசி வயது 53 என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குடியிருப்பு மடத்தடிவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலம் இருப்பது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டின் கீழ்தளத்தில் தனிமையில் இருந்த பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் பொலிசார் அதனை உடைத்து உள்ளே சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செம்மணி புதைகுழி இலங்கையில் இனப் படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியே..!

0

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாகும். அதனை காக்கவே புத்தரும், இயேசுவும் நீதி வாழ்வுக்கான அறைகூவல் விடுத்தனர். வலுவான மக்கள் சக்தியையும் உருவாக்கினர்.

ஆனால் அவர்கள் பெயரால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள சமய நிறுவனங்கள் தான் நிலை பிறழ்ந்து இனவாத நோக்கில் இலங்கையில் செயல்படுவது சமய தர்மத்தையும், நீதியையும், உண்மையும் சமூக புதைகுழிகளுக்குள் தள்ளுவதாகவே தோன்றுகின்றது.

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். இதுவரை நூற்றுக்கதிகமான மனித எச்சங்கள் முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என பலருடையதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதோடு விசேடமாக குழந்தைகள் பாவிக்கும் பால் போத்தல், பாடசாலை சிறுவர்களின் புத்தகப் பை, உடைகள் உட்பட பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.

கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சாட்சியான சோம ரத்தின ராஜபக்சரின் கூற்றின்படி பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டு குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது உயிரோடு குழிகளுக்குள் தள்ளி கொன்று மண்ணில் மறைத்துள்ளனர்.

இதற்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தலைநகரான கொழும்பிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அல்ஜாஸீரா போன்ற சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில் தெற்கின் பிரதான சிங்கள ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் பேசாதிருப்பது இனவாத நோக்கில் என்பது நாம் அறிந்ததே.

பட்டலந்த விடயம் அல்ஜசீரா ஊடகத்தில் வெளி கொண்டு வந்த போது இவ் ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் செம்மணி விடயத்தில் மௌனம் காப்பது; கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் கொலையாளிகள் சிங்கள படையினர் என்பதாலுமே.

ஆனால் சமய அறம் காக்க உருவாக்கப்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் அதன் தலைமைத்துவங்களும் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடைபெற்ற இனப்படுகொலை யுத்தத்துக்கும் படைவீரர்களுக்கும், ஆயுதங்களுக்கும் ஆசி வழங்கிய சமய தலைமை தலைமைகளிடமிருந்து நாம் நீதியை எதிர்பார்க முடியாது.

உயிர்ப்பு தின குண்டு வெடிப்புக்கும், அதில் கொல்லப்பட்டோருக்கும் நீதி கேட்டு ஜெனிவா வரை சென்றவரும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற வருமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் ஒரு பால் திருமணம் மனித உரிமை சார்ந்தது அல்ல.

அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சமயத்திற்கு எதிரானது என எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.ஆனால் இனப்படுகொலையின் அடையாளமான செம்மணி தொடர்பில் வாய் திறக்காத உள்ளமை கத்தோலிக்க திருச்சபையின் பிளவுபட்ட தன்மையையும் இனவாதத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதன் அடையாளமாகவே கொழும்பு பேராயர் காட்சி தருகின்றார். இதற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் நீதியின் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதுவே இறை நீதியாகும்.

அதுமட்டுமல்ல கொழும்பை தலைமையகமாக கொண்ட ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளும் அதன் நிறுவனங்களும் அதன் தலைமைகளும் இனப்படுகொலை தொடர்பில் கருத்து கூறாதிருப்பது இனவாத தற்காப்பு நிலையே.

இன, மத, பிரதேச வாதத்தை பாதுகாத்து முதலாளித்துவத்திற்கு பணி புரியும் சமய தலைமைகளும் அவர்களின் தலைமையில் இயங்கும் சமய நிறுவனங்களும் சமூகத்திற்கு சாபமே. சாதனை நீதியின் மக்கள் இதற்கு எதிராக எழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒடுக்கப்பட்டோருக்கான நீதிக்கான மக்கள் எழுச்சி இறை நீதி சமயங்களின் வாழ்விடம்.

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனைக்கு 3 அரசியல் கட்சிகள் ஆதரவு..!

0

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை தொடர்பான விவாதத்தின் போது 3 அரசியல் கட்சிகள் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

அதன்போது பொதுஜன பெரமுன கட்சி அந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி அது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நேற்று (28) கருத்து தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஓரிரு தினங்களில் கட்சி கூடி அதற்கான முடிவை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்,

”தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமைக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பைத் தெரிவித்து வரும் கட்சி என்ற வகையில் மேற்படி யோசனைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது நியமனத்திற்கும், போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கும் தமது கட்சி ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த அனைத்து காரணங்களையும் முன்வைத்து மேற்படி யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக் கோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம்இலக்க அலுவலர்களை அகற்றுதல் நடவடிக்கை முறைசட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தை ஓகஸ்ட் 05ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த யோசனை தற்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!