புதுக்குடியிருப்பு – திம்பிலியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (21.09.2025) இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு திம்பிலியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக துப்பாக்கி (இடியன்) மூன்றினை மறைத்து வைத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இரகசிய தகவலினையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸாரால் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் அதனை தமது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் திம்பிலி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதிக் கொன்று விட்டு தப்பிச் சென்றிருந்த வாகனம் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டதுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்றுள்ளார்.
இதன்போது ஏ-9வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்ப்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது.
சம்பவத்தில் அந்தபகுதியை சேர்ந்த ம. இதயரஞ்சினி என்ற 32 வயதான நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்திருந்தார்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையிலேயே விபத்தை ஏற்படுத்திய வாகனத்துடன் சாரதி மற்றும் உரிமையாளர் ஆகியோர் விசுவமடுப் பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்தக் கைது இடம் பெற்றுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட “எல்லை கணினி கட்டமைப்பு” செயலிழந்துள்ளது.
இன்று (20) பிற்பகல் 01.45 மணி முதல் குறித்த கணினி கட்டமைப்பு செயலிழந்த நிலையில், மாலை 4.15 மணியளவில் அதன் செயற்பாடு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள இந்த கணினி அமைப்பு கடந்த 08 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு ஒவ்வொரு மாதமும் பல முறை இவ்வாறு செயலிழப்பதாகவும் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இந்த அமைப்பு மெதுவாகச் செயல்படுவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு வருகை தரும் நேரத்தில், இதுபோன்ற பலவீனமான கணினி அமைப்புக்குப் பதிலாக அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மற்றும் அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் கணினி அமைப்பின் தேவையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கணினி கட்டமைப்புகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கின் கல்வியில் நிகழும் துஸ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகள் உட்பட வடக்கின் கல்வி ஊழலை நிறுத்தக் கோரி சிவசேன அமைப்பு ஒரு நாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தினை எதிர்வரும் திங்கள் 22.09.2025 ஆளுநர் அலுவலகம் முன்னால் காலை 6.00மணி தொடக்கம் பிப 6.00மணி வரை நடாத்தவுள்ளது.
உங்களின் ஆதரவு வடக்கின் கல்வி ஊழலையும் தொடரும் அதிகார துஸ்பிரயோகத்தையும் இல்லாது ஓழிக்கும்.
எனவே இதற்கான ஆதரவை வழங்கும் முகமாக திங்கட்கிழமை தங்களுக்குப் பொருத்தமான நேரத்தில் கலந்து கொள்ளுங்கள். என ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை வடக்கு மாகாணம் தொடர்ச்சியாக பெறுபேற்றில் ஒன்பதாவது மாகாணமாக இறுதி நிலையிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு இவ்வாறு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (19.09.2025) யாழ் – குருநகர் 5மாடி பகுதியில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பொலிஸ் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது.
மானிப்பாய் – சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
கிடைத்த தகவல்களின் படி, இவருக்கு செப்டம்பர் 14 முதல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மானிப்பாயில் உள்ள தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற போது மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அவர் தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
உறவினர்கள் ஆலயத்திற்கு சென்று பார்த்த போது, அசைவற்ற நிலையில் இருந்துள்ளர். அவரை உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
உடற்கூற்று பரிசோதனைகளில், நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய நபரொருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு (Colombo) உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று (18) பிறப்பித்துள்ளார்.
வயது முதிர்ந்த வான் சாரதி ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
“பாடசாலையில் இருந்து வீடு திரும்புவதற்காக காத்திருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரே சாரதியால் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வான் ஒன்றுக்குள் வைத்து சிறுமியை குறித்த சாரதி தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பு சட்டதரணிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி அவை நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்ற பிரதிவாதியின் வழக்கறிஞருடைய கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.
இதையடுத்து, 30,000 ரூபாய் அபராதமும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு 500,000 ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனுடன், குற்றம் சமத்தப்பட்ட சாரதிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மஹரகம காவல்துறையினரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பற்றாக்குறை தொடர்பாக பலமுறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும் பெற்றுத்தரவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்குவலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது விரைவில் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா வடக்கில் கடமை புரிந்த ஆசிரியர்கள் பலர் வலயக் கல்விப் பணிப்பாளரின் பழிவாங்கல் செயற்பாடுககள் மற்றும் அதீத அழுத்தம் காரரணமாக வலயத்திலிருந்தும், ஆசிரிய சேவையிலிருந்தும் வெளியேறிச் சென்றுள்ளதுடன் சில ஆசிரியர்களை செயலாளரின் துணையுடன் வெளி வலயங்களுக்கு இடமாற்றி ஆசிரிய வளத்தை விரயம் செய்தும் வருகின்றார்.
இது தொடர்பில் ஆளுநருக்கு அறிவித்த போதும் நடவடிக்கை ஏதுமற்ற நிலையில் உள்ளது. தமிழ் அமைச்சர் ஒருவரின் பின்னணியில் இயங்கும் வடக்கின் கல்வி ஒன்பது மாகாணங்களுள் ஒன்பதாவது இடத்திலும் வவுனியா வடக்கு வலயம் 100 வலயங்களுள் 96வது இடத்திலும் உள்ளது. இதனை 100 வது இடத்திற்கு கொண்டு வந்த பின்னரா ஆளுநர் தீர்வை வழங்குவார் என்பதே மக்கள் முன்னுள்ள கேள்வி.