பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மேலும் 400,000 குடும்பங்கள் இந்த நலன்புரித் திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, தற்போதைய மறு ஆய்வுகளின் படி இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 4 லட்சம் குடும்பங்கள் இத் திட்டத்திலிருந்து வெளியேற உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‘மிகவும் ஏழ்மையான’ பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்றும், அதற்குப் பதிலாக 2030ஆம் ஆண்டிற்குள் இவ்வாறான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து மீட்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை பாடப் புத்தகங்களின் கொள்முதல், களஞ்சிய மேலாண்மை, விநியோகம் மற்றும் இருப்புத் தரவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளை முறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சும், கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் இணைந்து பல புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகம் அறிக்கைகளையும், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் தற்போதைய செயல்பாடுகளையும் பரிசீலிப்பதற்காக, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கூடிய போது இந்தத் தகவல் வெளியாகியது.
இதற்கமைய, அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது கையிருப்பில் உள்ள பாடநூல்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய புத்தகங்கள்பற்றிய விபரங்களை 2024-ஆம் ஆண்டு முதல் நேரடியாகப் பெற்றுக் கொள்வதற்காக புதிய கணினி தரவுத்தள முறைமையொன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சையின் மறுமதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றின் ஊடாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் தங்களது பெறுபேறுகளை மேற்கண்ட இணையத்தளங்களில் நேரடியாகச் சென்று சரிபார்த்துக் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 4765 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4465 ரூபாய் ஆகும்.
அதேபோல், 1910 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1792 ரூபாவாகும்.
890 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 835 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள “எல் நினோ” இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செப்டெம்பர் வரையான காலப் பகுதியில் மிகக் கடுமையாகத் தாக்கும் என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கமக்காரர் அமைப்பு மற்றும் மீனவசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு ஏற்படப் போகும் எல்நினோ நிலையை எவ்வாறு எதிர் கொள்வது தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் K.அழகக்கோன், பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வல்லிபுரம் வாசுகி, கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவசங்க பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
150,000ரூபா பெறுமதியான பசு ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, மாமடுவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மேய்ச்சலிற்காக அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கட்டியிருந்த மாட்டை, சந்தேக நபர்கள் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இறைச்சிக்காக அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையொன்றிற்கு சந்தேக நபர்கள் அதனை விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட லொறி வண்டியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படடநிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (30.06) இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் கேரள கஞ்சா 78 கிலோகிராம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார்.
நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, குறித்த வாகனம் நிறுத்தி சோதனை செய்த போது இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 31 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வடலியடைப்பு பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி காலமானர். அவரது பூதவுடல் மறுநாள் 5ஆம் திகதி விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் , மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட குறித்த விளாவெளி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்ய பிரதேச சபையில் விண்ணப்ப படிவம் பெற்று , அதற்கான கட்டணமாக 2ஆயிரம் ரூபாய் செலுத்தி பற்று சீட்டை இந்து மயானத்திற்கு பொறுப்பான உத்தியோகஸ்தரிடம் கையளித்தே தகனம் செய்யப்பட வேண்டும்.
ஆனால் , பிரதேச சபையிடம் அனுமதி பெறாமல் , அதற்கான கட்டணத்தையும் செலுத்தாது , பிரதேச சபை உறுப்பினர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து , தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச வாசி ஒருவர் , குறித்த இந்து மயானத்தில் உடல் தகனம் செய்தவர்களின் விபரம் தொடர்பிலும் , அதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் தொடர்பிலும் தகவல் அறியும் சட்டம் ஊடாக மே மாதம் 15ஆம் திகதி தகவல் கோரியுள்ளார்.
இதனையடுத்து கட்டணம் செலுத்தாது தந்தையின் உடலை தகனம் செய்த உறுப்பினரிடம் பிரதேச சபையினர் கட்டணம் செலுத்த கோரி , உடல் தகனம் செய்து சுமார் 50 நாட்களின் பின்னர் மே மாதம் 25ஆம் திகதி கட்டணத்தை அறவிட்டு அதற்கான பற்று சீட்டை வழங்கியுள்ளனர்.
அதேவேளை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யும் போது, மரண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு , தகனம் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று , பூரணப்படுத்தி சமர்பிப்பதுடன் , அதற்கான கட்டணத்தை செலுத்தி, பற்று சீட்டை பெற்ற பின்னரே உடலை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது நியதியாக இருக்கும் போது குறித்த பிரதேச சபை உறுப்பினர் இவை எவற்றையும் பின்பற்றாது தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார்.
இந் நிலையில் குறித்த உறுப்பினர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளமை இதனூடாக வெளிப்பட்டுள்ளதால் , உறுப்பினருக்கு எதிராகவும் , பற்று சீட்டு எதுவும் வழங்காது உடலை தகனம் செய்ய அனுமதித்த உத்தியோகஸ்தர்கள் , 50நாட்கள் கடந்தும் கட்டணம் செலுத்த தவறியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக தகவலை பெற்றுக் கொண்ட பிரதேசவாசி கோரியுள்ளார்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்காகத், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தலா ஒரு ஜோடி காலணிகளை (Footwear) வழங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
தகுதியுடைய ஒவ்வொரு மாணவருக்கும் காலணிகளைக் கொள்வனவு செய்வதற்காக தலா 3,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.
2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முறையைப் போன்றே இம்முறையும் விநியோகம் இடம்பெறும்.
மேல், தென், சபரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் ஊடாக பாடசாலை மட்டத்திலேயே காலணிகள் விநியோகிக்கப்படும்.
மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாணவர்கள் சந்தையிலிருந்து நேரடியாகக் காலணிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.
இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணை முடிவடைவதற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் (2025/2026) இரு வேறு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த உதவித் திட்டத்தின் மூலம் 836,571 பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்கள் பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த டித்வா புயலின் அகோரத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட வவுனியாவின் செட்டிகுள கோட்டம் மற்றும் மன்னாரின் நானாட்டான், முசலி கோட்டப் பாடசாலைகள் முழுவதற்கும் இம்முறை விசேட திட்டத்திலாவது பாதணி வவுச்சர்களை வழங்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
யாழ் பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் தொடர்பான அவதூறான கூற்றுக்களை பிரசுரித்தனர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேருக்கு எதிராகவும், முகநூல் தளங்கள், வலையொளி தளங்கள், ரிக்ரொக் தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் 20ம் பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கினை எடுத்துக் கொண்ட பருத்தித்துறை நீதிவான் எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதிக்கு நிபந்தனை உடனான கட்டளை ஒன்றை பிறப்பிப்பது தொடர்பிலான தீர்மானத்திற்காக வழக்கை திகதியிட்டார்.
மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
அதேவேளை யாழ் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த நிகழ்நிலை காப்புச் சட்ட வழக்கினுடைய தீர்ப்பின் பிரதியையும் இந்த வழக்கில் இணைக்குமாறு தெரிவிக்கப்பட்டதாக மனுதாரரின் சட்டத்தரணி தெரிவித்தார்.