மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், இன்றைய தினம் (மே 01) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பிறகு, சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 382 ரூபாய்க்கும், ஒரு லீட்டர் சூப்பர் டீசல் 443 ரூபாய்க்கும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 255 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று(27.04.2026) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சிறுமி தனது வீட்டில் தனிமையில் இருந்த வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர், இச்சம்பவம் குறித்துத் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டினை அடுத்து துரிதமாகச் செயற்பட்ட காத்தான்குடி பொலிஸார், அதே கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர் கடந்த 3 வருடங்களாக அச்சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் மேலதிக சிகிச்சைகளுக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று(28.04.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து, தோணிக்கல் ஆலடி தொடருந்து கடவைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போதே குறித்த இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் தொடருந்து பாதையை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் நகர்ப் பகுதியில் உள்ள மதுபான சாலைகளில் தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மன்னார் நகரசபையில் இன்று (28) மதுவரித் திணைக்கள அதிகாரிகள், மன்னார் பொது சுகாதார வைத்தியதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
மன்னார் நகரசபை தலைவர் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சந்தைப்படுத்தல் சவால்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை முறையாக விற்பனை செய்ய முடியாமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மதுபான விற்பைனையாளர்களின் சம்மந்ததுடன் விற்பனை நேரக் கட்டுப்பாட்டு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது அதன்படி மன்னார் நகர்ப்பகுதியில் உள்ள மதுபானசாலைகளில் தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரம் தற்போது இயங்காமல் இருக்கும் உயிலங்குளம் கள் உற்பத்தி நிலையத்தை மீண்டும் முழுமையான அளவில் இயங்கச் செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மதுவரித் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் உற்பத்தியாளர்களின் கள்ளினைத் தரமான முறையில் போத்தல்களில் அடைத்து வெளி மாவட்டங்களுக்கும் சந்தைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடைமுறைகளை மதுபானசாலை உரிமையாளர்கள் முறையாகப் பின்பற்றுவதை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பதோடு, உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தின் தென்னை மற்றும் பனைசார் கள் உற்பத்தியாளர்கள் பெரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுவதோடு, உள்ளூர் உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்று இரவு குறித்த நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, அது குறித்து செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செட்டிக்குளம் பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, தற்போது சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆறு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பாடசாலை அதிபரினால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டுக்கு அமைய, முதற்கட்டமாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 வயதுடைய குறித்த மூன்று மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (28) அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன், மாணவர்களை புதன்கிழமை (29) வரை அச்சுவேலி பகுதியில் உள்ள ‘சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில்’ (தடுப்புக்காவல் இல்லம்) தடுத்து வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டியுள்ளதாகப் பொலிஸார் நீதவானின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது சட்டத்தின் ஊடாக அதிபர், ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் சமூக சீர்கேடுகள் அதிகரித்துச் செல்வதையே காணக் கூடியதாக உள்ளது.
இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் சேவைக்கு (US Post) வழங்கிய கொடுப்பனவில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி குறித்த தகவல்களை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (28) வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி குறித்து விளக்கும் போதே தபால் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த மோசடி பற்றிய விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, இலங்கைத் தபால் திணைக்களத்தினால் அமெரிக்கத் தபால் சேவைக்கு செலுத்தப்பட்ட சுமார் 600,000 முதல் 625,000 வரையான அமெரிக்க டொலர் பணம், குறித்த தரப்பினருக்கு சென்றடையவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிதி முறைகேடு தொடர்பாக தபால் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இணைந்து ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, குறித்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (28) நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து அரச அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
யாழ். வடராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எவ்வித உத்தியோக பூர்வ அறிவிப்புக்களும் இன்றி திடீரென இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
25 வருடங்களுக்கு மேலாக முகாம் அமைத்து இருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து நேற்று இராணுவம் வெளியேறியதை தொடர்ந்து அங்கு பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
மேலும், பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளது.
கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவமானது நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 19 வயதுடைய இயன்முகிலன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் இரவு பலமணி நேரம் ஆகியும் இளைஞனை காணவில்லை என தாய் மற்றும் தந்தை இணைந்து தேடியுள்ளனர்.
எனினும் தமது மகன் நண்பர்களுடன் எங்காவது சென்றிருப்பான் என்ற எண்ணத்தில் அவர்கள் உறக்கத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இன்று காலை குறித்த இளைஞனின் தந்தை மாடு கட்டுவதற்காக சென்ற நிலையில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் உயிரிழந்திருப்பதை அவதானித்ததாக தெரிய வருகின்றது.
இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இச் சம்பவம் குறித்து ஜெயபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.