செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 53ஆவது நாளான இன்று 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்படி, இதுவரை 107 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 562 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளில், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘ரடம எகட’ (நாடொன்றாக இணைந்து) தேசிய நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர், கடந்த 2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் 2 சம்பவங்களில் 26 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் கைது நடவடிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.
பரீட்சையை மையமாகக் கொண்ட கற்றல் முறையிலிருந்து விலகி, திறன்கள், படைப்பாற்றல், அனுபவரீதியான கற்றல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இலங்கையின் கல்வி மற்றும் மதிப்பீட்டு முறைகளை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இடம்பெற்ற, ஃபுல்பிரைட் நிபுணர் கலாநிதி பிரியான்வதா அபேவிக்ரம நிகழ்த்திய “250 Years of Educational Excellence: Lessons from a Sri Lankan American” என்ற பகிரங்க விரிவுரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வானது, 1952 ஆம் ஆண்டு முதல் கல்வி, கலாசார மற்றும் தொழில்முறை பரிமாற்றங்கள் ஊடாக அமெரிக்காவிற்கும் இலங்கையிற்கும் இடையிலான பரஸ்பர புரிதலையும் அமைதியையும் மேம்படுத்தி வரும் ஒரு தன்னாட்சி ஈர்-தேசிய ஆணையமான இலங்கை – அமெரிக்க ஃபுல்பிரைட் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பரீட்சைகள் மீதான அதிகப்படியான தங்கிவாழும் தன்மையைக் குறைத்து, செயற்பாட்டு வழிக் கற்றல் மற்றும் அனுபவரீதியான கற்றலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய அம்சம் மதிப்பீட்டு முறையைச் சீர்திருத்துவதாகும் என பிரதமர் கூறினார்.
கல்வி ரீதியாக வெற்றியடைந்த பல தலைமுறை இலங்கையர்களை உருவாக்கிய தற்போதைய கல்வி முறையின் பலங்களை இச்சீர்திருத்தங்கள் நிராகரிக்காது என்றும், மாறாக நிகழ்காலம் மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய இரு பாதைகளும் சமமான அங்கீகாரத்தையும் செல்லுபடியாகும் தன்மையையும் பெறுவதை உறுதிசெய்யும் அதே வேளையில், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்களிடையே டிஜிட்டல் எழுத்தறிவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சீர்திருத்தச் செயல்பாட்டில் கலாநிதி அபேவிக்ரமவின் ஒரு மாத கால பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நிபுணத்துவமும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
ஃபுல்பிரைட் ஆணைக்குழு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில முதுகலை நிறுவனம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் இந்த முயற்சியை ஆதரித்த அனைத்து அதிகாரிகள் மற்றும் பங்காளிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கைக்கு அனைவரையும் உள்ளடக்கிய, நவீன மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வி முறையைக் கட்டியெழுப்புவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நாடாளமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13.08.2026) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு வருகை தந்துள்ளார்.
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பலகைமுனை மீன்பிடி இறங்குதுறைக்கான 2கிலேமீற்றர் படகு ஓடு பாதையினை அமைத்துத் தருமாறு பாப்பாமோட்டை கடற்றொழிலாளர் சங்கத்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மீன்பிடி இறங்குதுறைக்கான ஓடுபாதை அமைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன் போது மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னார் – மாந்தை மேற்கு, பாப்பா மோட்டை கிராமமக்கள் மற்றும் பாப்பா மோட்டை கடற்றொழிலாளர் சங்கத்தினரின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அப்பகுதி மக்களின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டார்.
இதன்போது பாப்பாமோட்டை கிராமத்திலிருந்து 3கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பலகைமுனை மீன்பிடி இறங்குதுறைக்கு படகு ஓடுபாதை இன்மையால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக பாப்பாமோட்டை மீனவர் சங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அந்த வகையில் பலகைமுனை இறங்குதுறையை பாப்பாமோட்டை, முள்ளிக்கண்டல், அடம்பன், தாமரைக்குளம், மாளிகைத்திடல், பாலைக்குழி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 165வரையிலான குடும்பங்கள் பயன்படுத்தி வருவதாக மீனவர்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அத்தோடு குறித்த பலகைமுனை மீன்பிடி இறங்குதுறையின் 2கிலோமீற்றர் தூரமான பகுதி ஆழம் குறைந்த களப்பு பகுதியாகக் காணப்படுவதால், களப்பு வற்றுகின்ற சந்தர்ப்பங்களில் தமது கடற்றொழில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் காணப்படுவதாகவும் மீனவர்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த மீன்பிடி இறங்குதுறைக்கு படகு ஓடுபாதை இன்மையால், படகினை 2கிலோ மீற்றர் தூரம்வரையில் தள்ளிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதுடன், பிடிக்கின்ற மீனையும் உரிய நேரத்தில் சந்தைப்படுத்த முடியாத நிலையும் ஏற்படுவதாகவும் மீனவர்கள் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கவலை தெரிவித்தனர்.
குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலப் பகுதியிலிருந்து குறித்துபலகைமுனை இறங்குதுறைக்கான படகு ஓடுபாதையை அமைத்துத் தருமாறு தாம் தொடர்ச்சியாக உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்து வந்த போதும் இதுவரை படகு ஓடுபாதையை அமைக்க உரிய தரப்புக்கள் முன் வரவில்லை எனவும் மீனவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான சூழலில் மீனவர்கள் பலரும் தமது வாழ்வாதாரத் தொழிலைக் கைவிட்டு வேறு தொழில்களை நாடிச்செல்கின்ற அவல நிலையும் ஏற்பட்டுள்றதாகவும் மீனவர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
எனவே தமது பலகைமுனை மீன்பிடி இறங்கு துறைக்கான 02கிலோ மீற்றர் தூரமான படகு ஓடுபாதையை அமைத்துத் தருமாறு இதன் போது மீனவர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்தோடு பாப்பாமோட்டை கடற்றொழிலாளர் சங்கத்தினரால் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்ததுடன், நிலமைகளையும் நேரில் பார்வையிட்டு, மகஜரையும் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்விடயம் தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம் (LKIIRSS) இணைந்து ஆகஸ்ட் 12 அன்று தானம் வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
கொழும்பு ஸ்ரீ சம்போதி விஹாரையைச் சேர்ந்த மஹாநுவர அமித கவேசி தேரர் தலைமையில், மகா சங்கத்தின் ஏழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் சமய வழிபாடுகள் நடைபெற்றன.
அனுசாசன உரையாற்றிய வணக்கத்திற்குரிய அமித கவேசி தேரர், மறைந்த அமைச்சரின் அரசியல் ராஜதந்திரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டதுடன், இலங்கைக்கு அவர் ஆற்றிய சேவை வாழ்நாள் முழுமைக்கும் உரியது என்றும் வர்ணித்தார்.
அதனைத் தொடர்ந்து பிரீத் பாராயணம் நடைபெற்றதுடன், நாட்டின் நலனுக்காகச் செயற்படும் நிறுவனத்தின் எதிர்காலப் பணிகளுக்காக ஆசிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மறைந்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் LKIIRSS இன் ஆயுட்காலப் பணிப்பாளர் சபை உறுப்பினருமான சுகந்தி கதிர்காமர், LKIIRSS இன் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 2005ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பில், சட்டமா அதிபரினால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டம்மான், சார்ள்ஸ் மாஸ்டர், முத்தையா சகாதேவன் மற்றும் சிதோர் ஆரோக்கிய நாதன் ஆகிய ஐவருக்கும் எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
2009ஆம் ஆண்டு, யுத்தம் முடிவுக்கு, வந்ததன் பின்னர், முதல் மூன்று பிரதிவாதிகளின் பெயர்களும், குற்றச்சாட்டுப் பத்திரத்திலிருந்து அகற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை ஒன்றிணைப்பதுடன், அதனுடன் தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து கலந்துரையாடுவதற்காக தனியார் ஊழியர் மையத்தின் (PWC) பிரதிநிதிகள் ஆகஸ்ட் 12 அன்று தொழிலும் தொழில் உறவுகள் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்தனர்.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தொழிலாளர் போராட்ட மையத்தின் ஒழுங்கமைப்புச் செயலாளர் துமிந்த நாகமுவ,
EPF மற்றும் ETF நிதிகளை ஒன்றிணைத்து, முதலாளிமார், அரசாங்கம் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மும்முனை ஆளுகைக் கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்தார்.
தற்போது மத்திய வங்கியின் கீழ் EPF கணிசமான பாதுகாப்பைக் கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நாகமுவ, இந்த நிதியைத் திறைசேரிப் பிணைப்பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, பங்குச் சந்தையை நோக்கித் திருப்பிவிடும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.
முதலாளிமாரின் பொருளாதார நன்மைக்காக நிதியின் ஆளுகையை மாற்றியமைக்க கடந்த காலங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நினைவூட்டிய அவர், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் அத்தகைய சந்தர்ப்பங்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் கீழ் EPF ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முறையில் இயங்கி வருவதாகவும், அந்த நிதி பெருமளவில் திறைசேரிக்குக் கடன்களை வழங்குவதற்கே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
தற்போதைய முயற்சியானது, நிதியைத் திறைசேரிக் கடன்கள் மற்றும் பிணைப்பத்திர முதலீடுகளிலிருந்து விலக்கி, பங்குச் சந்தை முதலீடுகளை நோக்கி மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தச் சீர்திருத்தங்கள் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரநிலைகள் மற்றும் உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் முன்வைக்கும் வாதத்தை அவர் நிராகரித்தார்.
ILO வெளியிட்ட அத்தகைய வழிகாட்டல் அல்லது ஆவணம் எதுவும் உண்மையிலேயே இருந்தால், அதனை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திற்குச் சவால் விடுத்த நாகமுவ, தனியார் துறை முதலாளிகள் மற்றும் பெருவிலான தொழில்முனைவோரின் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக தொழிலாளர்களின் உரிமைகளைப் பலிகொடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
முந்தைய அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான முன்மொழிவுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய தரப்பினரே, தற்போது அதே கொள்கையைத் தாங்களே நடைமுறைப்படுத்த முயல்வது வருந்தத்தக்கது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் மின்னணு சேவைகள் பல வருடங்களாக செல்லுபடியாகும் சேவை ஒப்பந்தம் இன்றியே இயங்கி வந்துள்ளதாக கணக்காய்வாளர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, அதுகுறித்த அதிகாரப்பூர்வ விசாரணைக்கு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் எழுப்பப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து, பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக களுவேவ (Nalaka Kaluwewa) நேற்று (12) தெரிவித்தார்.
திணைக்களம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மின்னணு சேவைகள் தொடர்பான சேவை ஒப்பந்தம் 2021 நவம்பர் 30 அன்றே முடிவடைந்துள்ளது.
இருப்பினும், 2025 ஏப்ரல் 21 வரை இணையதளத்தைப் புதுப்பிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் குறைபாடு சரி செய்யப்படாமல் இருந்ததாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
திணைக்களத்தின் இணையதளம் மற்றும் மின்னணு சேவைகளை தடையின்றி பராமரிப்பதற்கும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் தரவுகளின் ரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் உரிய அதிகாரிகளே பொறுப்பாவார்கள் என்று கணக்காய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இணையதளம் மற்றும் மின்னணு சேவைகளை மேம்படுத்தும்போது, திட்டமிடல் கட்டத்திலேயே பொருத்தமான பாதுகாப்பு வழிமுறைகளுடன் ரகசியத்தன்மை மற்றும் நம்பகத் தன்மை ஆகியவை கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே திருத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் தயாரிக்கப்பட்ட விபரக் குறிப்புகளுடன், புதிய அமைப்பிற்கான கொள்முதல் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தச் செயன்முறையை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான எஞ்சியப் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரி மார்கரெட் சாட்டர்ஸ்வைட் (Margaret Satterthwaite), இலங்கையின் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
2026 ஆகஸ்ட் 7 ஆம் திகதியிட்ட இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், இந்த முன்மொழியப்பட்ட திருத்தம், சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளான நீதித்துறை சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை ஆகியவற்றிற்கு அமைவாக இல்லாமலிருக்கலாம் என்று சாட்டர்ஸ்வைட் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பின் படி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 63 வயதிலும் ஓய்வுபெற வேண்டும். ஐ.நா. சிறப்பு அதிகாரியின் கூற்றுப்படி, இந்த வரம்பை முறையே 67 மற்றும் 65 ஆக இரண்டு ஆண்டுகள் உயர்த்த இத்திருத்தம் முன்மொழிகிறது.
இந்த திருத்தம் ஒரு நிர்வாக சீர்திருத்தமாக முன்வைக்கப்பட்ட போதிலும், இதன் துல்லியமான வரைவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இத்திருத்தம் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மட்டுமன்றி, தற்போது பதவியிலுள்ள நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் பதவிக் காலம் என்பது நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படைப் பாதுகாப்பாகும் எனக் குறிப்பிட்ட சாட்டர்ஸ்வைட், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் இலங்கைக்கு உள்ள பொறுப்புகளை நினைவூட்டினார்.
தற்போது பதவியிலுள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை உடனடியாக நீடிப்பது, நீதித்துறையில் நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்ட மன்றத்தின் தலையீடுகள் குறித்த கவலைகளை எழுப்பக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
குறிப்பிட்ட எந்தவொரு நீதிபதியும் பயனாளிகளாக வெளிப் படையாக அடையாளம் காணப்படாது விட்டாலும், இந்த மாற்றங்கள் தற்போதைய குறிப்பிட்ட நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
இடைக்கால ஏற்பாடுகள் மற்றும் பிற புறநிலைப் பாதுகாப்புகள் இல்லாதது, இந்தத் திருத்தமானது ஒரு பொதுவான அரசியலமைப்பு விதியை உருவாக்குவதை விட, உடனடி நிறுவன நோக்கங்களுக்காக நீதித்துறையின் அமைப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்ற எண்ணத்தை உருவாக்கக்கூடும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சேவை நீடிப்பினால் பயனடையும் நீதிபதிகள், பின்னைய நாட்களில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடியாகும் தன்மையை பரிசீலிக்க நேரிட்டால், அது நலன்களின் முரண்பாட்டிற்கு (conflict of interest) வழிவகுக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றங்களைச் செய்வது நீதித்துறை நிபுணத்துவம் மற்றும் நிறுவனத் தொடர்ச்சியைப் பேணுதல் போன்ற சில சூழ்நிலைகளில் நியாயப்படுத்தப்படலாம், ஆனால் அத்தகைய சீர்திருத்தங்களுக்கு அர்த்தமுள்ள கலந்தாய்வு, வலுவான பாதுகாப்புகள் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில் அவற்றின் தாக்கம் குறித்த கவனமான பரிசீலனை தேவை என்று சாட்டர்ஸ்வைட் வலியுறுத்தினார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான எந்தவொரு திருத்தமும் வெளிப்படையான, உள்ளடக்கிய, நடுநிலையான, கலந்தாய்வு மற்றும் விரிவான நீதிச் சீர்திருத்தச் செயன்முறை மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின் தற்போதைய வரைவு மற்றும் நிலை, அதன் பின்னணி மற்றும் தற்போது சேவை செய்யும் நீதிபதிகளுக்கு மாற்றத்தைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு ஐ.நா. சிறப்பு அதிகாரி இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிறைவேற்று அல்லது சட்டமன்றத் தலையீட்டிற்கு எதிரான பாதுகாப்புகள், நீதித்துறை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), சட்ட வல்லுநர்கள், சிவில் சமூகம் மற்றும் கல்வியாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வுகள் பற்றிய தகவல்களையும் அவர் கோரியுள்ளார்.
சிறப்பு அதிகாரியின் கடிதம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பதில்கள் ஆகியவை ஐ.நா.வின் தகவல்தொடர்பு அறிக்கையிடல் இணையதளம் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்றும், பின்னர் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் பதவியேற்பு
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் (Eric Meyer) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவு, அமெரிக்கத் துணை வெளியுறவுத்துறை செயலாளர் லாண்டாவ் (Landau) முன்னிலையில் இப்பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.
எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த வெளிநாட்டுச் சேவை அதிகாரியாவார். தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் மூத்த துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக அவரது தலைமையின் கீழ் பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் மேயரை வரவேற்றுத் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனுக்கும் கொழும்புக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் மேயரின் பதவிக்காலம் கவனம் செலுத்தும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் காலகட்டத்தில் மேயரின் இந்த நியமனம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தூதரை கொழும்புக்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கும் தூதரகம் ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.