Friday, May 16, 2025
Huis Blog

உயிரை மாய்த்த மாணவி விவகாரம்; விசாரணையை புறக்கணிக்கும் அதிபர், ஆசிரியர்..!

0

கொழும்பு கொட்டாஞ்சேனையில் பாடசாலை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் பாடசாலையின் அதிபரிடமும் ஆசிரியரிடமும் விளக்கம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் இற்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பம்பலபிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் குறித்த மாணவி கல்விகற்ற பாடசாலை அமைந்துள்ள கல்வி வலய அதிகாரிகளிடம் இந்த அறிக்கைகள் கோரப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலபிட்டியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் அதிபரும், உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியை துஷ்பிரயோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

அவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமைக்கான காரணம் தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குறித்த விடயத்தினை ஏனைய தரப்பினர் சவாலுக்கு உட்படுத்த முடியுமா? என்ற வினா எழுகின்றது.

தமிழர் மீதான இனப் படுகொலையை அங்கீகரிக்க வேண்டும்; விடுக்கப்பட்ட கோரிக்கை..!

0

இலங்கையில் தமிழ் இனப் படுகொலையை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று (15.05.2025) நடைபெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் உறுப்பினர்களுக்கான கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துரைக்கும் காணொளி ஒன்று ஒளிபரப்பட்டுள்ளது.

இதன் போது, “உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றும் வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக 2 அல்லது 3 தமிழர்களுக்கு ஒரு இராணுவ உத்தியோகத்தர் உள்ளார். அத்துடன் வடக்கு கிழக்கில் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலத்தின் அளவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் அவ்வப்போது சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தனித்துவம் தொடர்ந்தும் உறுதி செய்யப்படுவதற்கான சில காரணங்களையும் அவர் தமது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரான்சில் உள்ள 47 மாநகர சபைகளில் இலங்கையில் தமிழ் இனப் படுகொலை நடந்ததை அங்கீகரிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இந்தியாவின் தமிழக மாநிலமும் கனேடிய நாடாளுமன்றமும் இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

எனவே, ஆர்மெனியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் இனப் படுகொலை இடம்பெற்றமையை அங்கீகரித்ததை போன்று இலங்கையிலும் இனப் படுகொலை இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்சிகா விவகாரத்தில் புதிய திருப்பம்; தப்பிய தனியார் கல்வி நிலைய உரிமையாளர்..!

0

கொட்டாஞ்சேனை மாணவி மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

உயிர் மாய்த்துக் கொண்ட மாணவியின் தாயாரது வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“தாயாரின் வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாக வைத்துக் குறித்த மேலதிக வகுப்பின் உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை.

இதுதொடர்பாக குறித்த தனியார் வகுப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளன.

எந்தவொரு நபரும் அந்த வகுப்பு நிலையத்தின் உரிமையாளருடன் தொடர்புபடுத்தப்படும் சம்பவம் குறித்து நேரடியான சாட்சிகளை வழங்கவில்லை. எவ்வாறாயினும் இந்த விசாரணைகள் கைவிடப்படாமல் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், குறித்த மாணவி கடந்த ஆண்டு பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாமை மற்றும் கல்வி அமைச்சுக்கு அறியப்படுத்தாமை தொடர்பான பிரச்சினை ஒன்று உள்ளது.

இது தொடர்பாக குறித்த மகளிர் பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதி 32 வயதான திவியன் பலி..!

0

வவுனியா ஒமந்தை இலங்கை வங்கிக்கு அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதுண்டு வீதியின் அருகே நின்ற நபருடனும் விசேட அதிரடிப் படையின் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் வீதியின் அருகே நின்றவர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளின் சாரதி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் 32வயதுடைய கண்ணதாசன் திவியன் என்பவரே உயிரிழந்தவராவார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அரச வைத்திய சாலையில் நடந்த துயரம்; பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த அவலம்..!

0

கேகாலையில் திடீர் சுகயீனம் காரணமாக ஹெம்மாத்தகம அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனை, அதிபரின் கடிதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹெம்மாத்தகம மருத்துவமனையின் மருத்துவர் இவ்வாறு கூறியதை அடுத்து, முச்சக்கர வண்டியில் மாவனெல்ல மருத்துவமனைக்கு மாணவன் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஹெம்மாதகமவில் உள்ள பள்ளிப்போருவ முஸ்லிம் பாடசாலையில் 4 ஆம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரியும் தந்தை, விரைவாக பாடசாலைக்கு சென்று, மாணவனை ஹெம்மாதகம பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவன் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்ததுடன், வாந்தி எடுத்த நிலையில், உடல் மிகவும் சூடாக காணப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடையில் இருந்த மாணவர் மருத்துவரிடம் அழைத்து சென்றபோது, ​​அவரிடம் பாடசாலை பை இல்லை என்று கூறி மருந்து மறுக்கப்பட்டது. பின்னர் அதிபரின் கடிதம் இல்லாமல் மருந்து கொடுக்க முடியாது என கூறப்பட்டது.

அதற்கமைய, உதவியற்ற தந்தை, மிகுந்த அதிர்ச்சியில், மாணவனை சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாவனெல்ல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய தந்தை, தன்னிடம் பணம் இருந்தால், மாணவனை ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து படகில் யாழ் வந்தவர்களும், அவர்களை அழைத்து வந்தவர்களும் கைது..!

0

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு , மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நால்வரும் இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக திரும்பியுள்ளனர்.

அவர்கள் நால்வரையும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இரண்டு படகோட்டிகள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று அழைத்து வந்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த பொலிஸார் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் புகுந்த நால்வரையும் , அவர்களை அழைத்து வந்த படகோட்டிகளையும் கைது செய்து , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் பிரபல பாடசாலையில் மாணவர்களை கதிரையால் தாக்கிய ஆசிரியர்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

0

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றிற்கு சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது.

எனினும் ஆசிரியரின் கேள்விக்கு மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் , ஆனால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் பாடசாலை அதிபர் கூறியதாக தெரிய வருகின்றது.

அதோடு மாணவர்கள் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதலால் கழுத்து அறுக்கப்பட்ட பாடசாலை மாணவன்; தமிழர் பகுதியில் கொடூரம்..!

0

திருகோணமலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (15.05.2025) திருகோணமலை – புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

“திருமலை – புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் போது ஒரு மாணவர் இன்னுமொரு மாணவர் மீது கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாணவரின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் புல்மோட்டை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் பிரச்சனை காரணமாகவே இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நபரால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; நபர் ஒருவர் கைது..!

0

யாழில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் யாழ். நெடுந்தீவிலுள்ள 15 வயது சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

“குறித்த சிறுமி ஐந்து மாதங்கள் கர்ப்பமாகிய நிலையில் நேற்றையதினம் (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், குறித்த சிறுமியை பல தடவைகள் தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய இராசி பலன்கள் (13.05.2025)

0

மேஷம்

இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மிதுனம்

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்

இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்வது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்

இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கன்னி

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்

இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்

இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்

இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

error: Content is protected !!