கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ தொடருந்தின் தலைமை கட்டுப்பாட்டாளர் தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் இன்று (25.10.2025) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த குறித்த தொடருந்து, பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் தொடருந்து நிலையத்தை அடைந்துள்ளது.
இதன் போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்நது, அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.
யாழ்தேவி தொடருந்துக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தின் சோஷலிச சனநாயகக் கட்சியின் (SP) பொதுக் கூட்டத்தில் (Parteitag 25.10.2025) ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி விவாதிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் வெளியான அறிக்கையில்,
“எமது ஈழத்தமிழர்களின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டது, என்றைக்கும் அது மறைக்கப்பட வேண்டியதல்ல – நீதிக்கு வழிகாட்ட வேண்டியது. அதற்காகவே இந்த கோரிக்கைகளை முன் வைக்கின்றோம்.
2009ம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களையும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையையும் சர்வதேச நாடுகள் பார்த்தும், பேச மறுக்கும் கொடூரங்களாகவே உள்ளன.
16 வருடங்களாகியும் இன்றுவரை எமது மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை என்பதே கவலைக்குரிய உண்மை. ஆகவே, இந்த வலியை தினமும் மனதில் சுமந்து வாழும் நாம் இனியும் மௌனமாய் இருக்கக் கூடாது.
எங்கள் குரல் சர்வதேச அரங்கில் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுவிட்சர்லாந்தின் சோஷலிச சனநாயகக் கட்சியின் (SP) அடுத்த பொதுக்கூட்டத்தில் (Parteitag 25/10/2025) விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய தீர்மானத்தை, எங்கள் குழு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது.
இத்தீர்மானம் மனித உரிமைகள் மற்றும் நீதி என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, 2009ம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
மேலும், அந்த நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நெடுந்தூர பேருந்து பயணிகளுக்கு உணவு வழங்கும் வீதியோர உணவகங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புத்தளம் பாதையில் முதலில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சேனா நானாயக்கரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நெடுந்தூர பேருந்துகள் நிறுத்தப்படும் 73 உணவகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் புத்தளம் பாதையில் 14 உணவகங்களும், ஹை லெவல் வீதியில் 19 உணவகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கூட்டு கால அட்டவணையை அறிமுகப்படுத்தும் போது ஏனைய பகுதிகளிலும் உணவகங்களை அடையாளம் காணப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தனியார் பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் (PHI) மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஒழுங்குபடுத்தும் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், இது ஒரு தீவிர பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேன்று(24.10.2025) நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சுட்டிக் காட்டிய அவர், வெலிகம பிரதேச சபை தவிசாளர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாததால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.
இது நகைச்சுவையல்ல. ஒருவர் கொல்லப்பட்டால் என்ன செய்ய முடியும்? வெலிகம சம்பவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
யாழ், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர்.
இதன்போது, பொலிஸாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த சாரதி, சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர், பாலாவி தெற்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணிக்கவாசகர் மதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (24.10.2025) இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் வெள்ளிக் கிழமை மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்தினர்.
குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை தொடங்க அவுஸ்திரேலிய முதலீட்டாளர் நிதி வழங்கியிருந்தார்.
இந்த முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தொன்னந்தோட்டம், ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கும்.
இதன்போது, சுமார் 180 மில்லியன் பெறுமதியான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சி.ஐ.டி.யினர் இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
எனினும், முக்கிய சந்தேக நபரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாக உள்ளனர். குறித்த இருவரையும் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (24) மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தினர்.
இதன் போது, விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு வடக்கு மாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடம்மாற்றத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் மாவட்டத்தில் பணிபுரியும் ஏனைய ஆசிரியர்களும் அதிபர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கான நியாயப்பாடுகளை தங்களின் மேலான கவனத்திற்கு முன் வைக்கின்றோம்” எனக் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் நடந்த மொத்த திருமணங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பத்தாயிரத்து இருநூற்று தொண்ணூறு (139,290) ஆக பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு (151,356) திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஒரு லட்சத்து எழுபத்தொராயிரத்து நூற்று நாற்பது (171,140) திருமணங்கள் நடந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து அறுநூற்று இருபத்தெட்டு (162,628) திருமணப் பதிவுகள் இடம் பெற்றுள்ளன, மேலும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் திருமணங்களில் படிப்படியாகக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்த திருமணங்களில் பெரும்பாலானவை பொதுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொருளாதாரப் பிரச்சினைகள், அதிகரித்த குடும்பப் பொறுப்புகள், உயர்கல்வி, வேலையின்மை, இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயங்குவது, குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேலையில் இருந்து போதுமான சம்பளம் இல்லாமை மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஆகியவை திருமணத்தைத் தாமதப்படுத்துவதற்கான காரணங்களாக சமூகவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றுபதிலை வழங்கியிருந்தார்.
பிரதமர் தெரிவித்ததாவது,
உள்நாட்டு பொறிமுறை மாத்திரமே அனுமதிக்கப்படும் சர்வதேச பொறிமுறைக்கு அனுமதியில்லை இதனால் நாடு பிளவுபடும் எனக் கூறி இருந்தார்.
இது தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய சாணக்கியன்,
பிரதமர் அளித்த பதிலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், பிரதமரே, உங்களின் ஆட்சிக் காலத்தின் சுமார் 20% ஏற்கனவே முடிந்து விட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அதாவது, ஒரு வருடம் கடந்து விட்டது. இப்போது, ஒரு வருடம் கடந்த நிலையில், நீங்கள் இந்த சபைக்கு கூறுவது என்னவெனில் அரசு உள்நாட்டு முறைமையைக் கொண்டு செல்ல விரும்புகிறது, சர்வதேச தலையீடுகளுக்கு அனுமதியில்லை என்கிறீர்கள், ஏனெனில் அது சமூகங்களைப் பிளக்கும் என்றும் நாட்டில் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் கூறுகிறீர்கள்.
அந்த கருத்துடன் நான் ஒப்புக் கொள்வதில்லை. உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் நம்பும், நம்பிக்கையுடன் ஈடுபடும் ஒரு செயல்முறை இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை நிராகரித்துள்ளீர்கள், மறுத்துள்ளீர்கள்.
இதன் பொருள், பாதிக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக, எனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறேன். இந்த அரசு குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலைக் கேட்டு சர்வதேச விசாரணைக்கு ஒப்புக் கொள்வார்கள் என நாங்கள் நம்பியிருந்தோம்.
எனினும், எனது நிலைப்பாடு தெளிவாகவே இருக்கிறது, நாங்கள் உங்கள் உள்நாட்டு முறைமையை நிராகரிக்கிறோம், மேலும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக நாங்கள் சர்வதேச விசாரணையையே கோருகிறோம், ஏனெனில் இலங்கையின் அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை. இது போர் முடிந்த 16 ஆண்டுகளாக எங்களின் நிலைப்பாடாகவே உள்ளது.
இப்போது, நீங்கள் குறிப்பிட்ட உள்நாட்டு முறைமைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன், பிரதமரே, உள்நாட்டு முறைமை நீதியாக சமமாக செயல்படும் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள், எப்போது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் (Office of Missing Persons) இயங்குவதற்குத் தேவையான பணியாளர் எண்ணிக்கை 250-ஐ கடந்து இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குப் பிறகும், தற்போது 29 பேரே உள்ளனர்? இதுதான் உள்நாட்டு பொறிமுறையா?
நீதி அமைச்சரே, தயவுசெய்து நான் இவ் எண்ணிக்கையை பிழையாக கூறுகிறேன் என்று சொல்ல வேண்டாம், நீங்கள் உங்கள் அமைச்சகத்தில் சிறிது நேரம் செலவழித்து இந்த எண்ணிக்கைகள் மற்றும் தரவுகளைப் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது, காணாமல் போனவர்களின் அலுவலகத்தில் 59 இடங்களில் 13 பேர் மட்டுமே உள்ளனர். ஒதுக்கப்பட்ட 129 மில்லியனில், ஜூன் 30 ஆம் திகதியளவில் 36 மில்லியன் ரூபாயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரே, எமக்கான நீதி நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு விடயம். நீங்கள் கூறும் இந்த உள்நாட்டு முயற்சிகள் எந்தளவு பயனளிக்கும்?
இலங்கை இழப்பீடு அலுவலகம் (Office of Reparations) பற்றியும் கவலை இருக்கிறது. 2009 இல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாக ரூ.200,000 வழங்க ஒப்பந்தம் இருந்தது. ஆனால் 253 குடும்பங்களுக்கு மட்டுமே சுமார் ரூ.60 மில்லியன் வழங்கப்பட்டது.
2022 இல் அமைச்சர் அலி சப்ரி ரூ.100,000 வழங்க முன்வந்தார், அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் ரூ.200,000 ஆக உயர்த்தினார்கள், அதுவும் நிராகரிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் ரூ.1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டதில் ரூ.800 மில்லியன் மட்டுமே செலவழிக்கப்பட்டது.
2025 பட்ஜெட்டில் மீண்டும் ரூ.1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை ஒரு காசும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பெரும்பாலும் 2,000 இற்கும் முன்னரே காணாமல் போனவர்களின் தாய்மார்கள். மொத்தம் 16,000 பேரில் சுமார் 7,000–8,000 பேர் அதற்கு முன்னரே பதிவு செய்யப்பட்டவர்கள்.
இப்போது, இலங்கை இழப்பீடு அலுவலகத்தில் நியமிக்கப்படவிருக்கும் இரண்டு உறுப்பினர்களும் இராணுவ பின்னணியுடையவர்கள் இதனால் பாதிக்கப்பட்ட எமது மக்களை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஐந்து உறுப்பினர்களில் மூவர் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். இந்நிலையில், நஷ்டஈடு அலுவலகம் எவ்வாறு நம்பகமாக செயல்படும் என்று நீங்கள் எப்படி கூற முடியும்?
மேலும், அன்றாட பிரச்சினைகள், உதாரணத்திற்கு மட்டக்களப்பு மருத்துவக் கல்லூரி பதாதை சிங்களத்தில் மட்டுமே உள்ளது, தமிழில் இல்லை. இவற்றையும் நான் எழுத்து மூலமாக தெரிவிப்பேன். எனது நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதே ஆகும் என தெரிவித்தார்