வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட களப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) இடம்பெற்றது.
முதலில் காஞ்சிரமோட்டைக்குச் சென்ற ஆளுநர் தலைமையிலான குழுவினர் அங்கு தற்போது வசிக்கும் 23 குடும்பங்களையும் சந்தித்தனர். அந்தப் பகுதி மக்கள், யானை வேலி அமைத்துத்தருமாறு, கிணறுகளை புனரமைத்துத்தருமாறும் கோரினர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் ஊடாக அமைக்கப்பட்ட வீடுகள் அரை குறையாக உள்ளமையால் அவற்றை முழுமைப்படுத்தி தருமாறும் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் தமக்கான காணி ஆவணங்கள் இல்லை எனவும் தெரிவித்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி சீரில்லை என்பதையும் தெரியப்படுத்தினர். தாம் மீளக்குடியமர்ந்த பின்னர் வனவளத் திணைக்களத்தால் குடிமனைக்கு அண்மையாக எல்லைக்கல்லுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன எனவும் குற்றம் சுமத்தினர்.
மருதோடை – காட்டுப்பூவரசன்குளம் வீதியிலிருந்து நாவலர் பண்ணை வரையிலான 5.5 கிலோ மீற்றர் நீளமான வீதியை துரிதமாகப் புனரமைப்பதற்கும், அதன் ஊடாக போக்குவரத்துச் சேவையை சீராக்குவதற்கும் ஆளுநர் அறிவுறுத்தினார். மேலும், அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளிக்கு ஆசிரியரை அடையாளம் கண்டு விரைவில் நியமிக்கவும், அந்தப் பகுதி மக்களுக்கான மேட்டுக்காணியை விரைந்து வழங்கவும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து வெடிவைத்தகல்லு கிராம மக்களை ஆளுநர் சந்தித்தார். யானைவேலி அமைக்கப்படாமல் தம்மால் மீளக்குடியமர முடியாது என மக்கள் இதன்போது தெரிவித்தனர். உயிரிழப்புக்களைக் கூட யானைகளால் தாம் சந்தித்துள்ளதாகவும், பயிரழிவு கூட ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். மாடுகள் உள்பட தமது பொருட்களும் களவாடப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் வனவளத் திணைக்களம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் தமது காணிகள் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
மிக அடர்ந்த காடுகள் ஏக்கர் கணக்கில் அருகிலுள்ள பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களால் அழிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத வனவளத் திணைக்கள அதிகாரிகள், தாம் சிறிய விறகுத் தடியை வெட்டினால் கூட வழக்குத் தொடுப்பதாகவும் ஆளுநரிடம் முறையிட்டனர். வனவளத் திணைக்களத்தினரால் தற்போதும் இனப்பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சுமத்தினர்.

மேலும், திரிவைத்தகுளத்தில், 1983ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொண்ட நிலையில் இடம்பெயர்ந்து சென்று மீள்குடியமர்ந்த பின்னர், 2019ஆம் ஆண்டு காணிகளைத் துப்புரவு செய்தபோது வனவளத் திணைக்களத்தால் தடுக்கப்பட்டதாகவும், தற்போது காணிகள் வனவளத் திணைக்களத்திடமிருந்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப் பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். தமக்கு காணி வழங்கப்பட வேண்டும் எனக் கோரினர்.
மக்களின் கோரிக்கைக்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் எனத் தெரிவித்த ஆளுநர், நீங்களும் மீள்குடியமர்வுக்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். உங்களின் மீள்குடியமர்வு முயற்சியில்தான் நாமும் உற்சாகமாக உங்களுக்கான உதவிகளைச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் மருதோடைப்பகுதியைப் பார்வையிட்ட ஆளுநர், கடந்த கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்துடன் மூடப்பட்ட ஊஞ்சல்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பெரிய கோரமோட்டைக் குளத்தையும் பார்வையிட்டார். குளத்தின் கீழான பயிர்ச்செய்கை கைவிடப் பட்டுள்ளமையையும் ஆளுநர் அவதானித்தார். இது தொடர்பில் கமநலசேவைத் திணைக்களத்தினருக்கு, குளத்தை புனரமைப்பதற்கான அறிவுறுத்தலையும் வழங்கினார்.
நெடுங்கேணி மருதோடை அ.த.க. பாடசாலைக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் நிதி வழங்கப்பட்டு அங்கு கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில், பாடசாலையையும் ஆளுநர் சென்று பார்வையிட்டார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மக்களையும் ஆளுநர் சந்தித்தார். இதன் போது, கோவில் புளியங்குளம் மக்களால், யானைவேலி அமைத்தல், வெடிவைத்த கல்லு வரையிலான வீதிப் புனரமைப்பு, வீதி விளக்குகள் பொருத்துதல், மருதங்குளம் புனரமைப்பு ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், மாமடுக் குளம் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.
அத்துடன், சம்பளம்குளத்திலிருந்து பனைநின்றான் செல்லும் வீதியை புனரமைத்து தரவேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொண்டனர்.
வனவளத் திணைக்களத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வது தொடர்பாக மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் வனவளத் திணைக்கள பிரதிநிதிகளிடம் ஆளுநர் தெரியப்படுத்தினார். அவ்வாறு செயற்படுவது தவறு எனவும் சுட்டிக் காட்டினார்.

மேலும், வனவளத் திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட காணிகள் விடுவிக்கப் படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் காணிகளை அடையாளம் காண்பதற்கு பிரதேச செயலரையும் உள்ளடக்கிய குழுவை நியமித்து செயற்படுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
கால்நடை வைத்தியர்கள் தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியருக்குரிய வாகன வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் பதிலளித்தார். அதேபோல காணிக் கச்சேரிகள் விரைவில் நடத்தப்பட்டு காணி ஆவணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
ஆளுநரின் இந்தப் பயணத்தின் போது, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.