Tuesday, October 28, 2025
Huis Blog Bladsy 12

யாழில் மின்சாரம் தாக்கிய 21 வயதுடைய இளைஞருக்கு நேர்ந்த கதி..!

0

யாழில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் யாழ். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் ஆடைகளை மினுக்கிக் கொண்டிருந்த வேளை மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சாட்சிகளை சுன்னாகம் காவல்துறையினர் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மகனின் கொலைக்கு நீதி கோரிய தந்தை உயிரிழப்பு; மகனின் பிறந்த தினத்தில் சோகம்..!

0

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகிய மாணவர்கள் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி கோரிப் போராடி வந்த, அவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது 84) என்பவரே, எவ்வித நீதியும் கிடைக்காமல் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்துள்ளார்.

அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக் கிழமையாகும்.

மகனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை காலமாகியுள்ளார்.

யாழில் சோகம்; பிறந்தவுடன் பலியான இரட்டை குழந்தைகள்..!

0

யாழில் பிறந்து சிறிது நேரத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன் பின்னர், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த நிலையில், பெண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அத்தோடு, ஆண் குழந்தை உயிருடன் பிறந்த நிலையில் 45 நிமிடங்கள் கழித்து உயிரிழந்துள்ளது.

குழந்தைகளின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வயிறு வீக்கம் காரணமாக யாழ். போதனா போதனாவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

0

வயிறு வீக்கம் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

இவர் மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 21ஆம் திகதி இவருக்கு திடீரென வயிறு வீக்கம் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அன்றிரவே யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் மற்றும் அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!

0

முல்லைத்தீவு, குமுழமுனை மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (22) முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் மற்றும் அதிபர் நியமனம் தொடர்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

​வலய மற்றும் மாகாண அதிகாரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபரை நியமிக்கத் தவறியதோடு, வேண்டுமென்றே இந்த நியமனச் செயல்முறையை தாமதப்படுத்தியதாகவும், பின்னர் உத்தியோகபூர்வ நேர்முகத் தேர்வு முடிவுகளுக்கு எதிராக ஒரு ஆசிரியரை அதிபராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் ஆளுநர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஆளுநர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்ப வேண்டிய மனு, அவ்விடத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கையளிக்கப்பட்டது.

போதைப் பொருளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விபரம் படிப்படியாக வெளிவரும்..!

0

இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்புடன் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த சில தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் சூழலில், எவரும் அச்சமடைய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது வாக்கு மூலங்களின் அடிப்படையில் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். அரசியல் தொடர்புகள் எதிர்காலத்தில் படிப்படியாக வெளிப்படும், என்றார்.

முல்லைத்தீவு வைத்திய சாலையில் இந்திய உதவியுடன் விடுதி நிர்மாணம்..!

0

முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் ஆண் மற்றும் பெண் நோயாளர்களுக்காக இந்திய உதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடி விடுதிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாகும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண், பெண் நோயாளர்களுக்கான விடுதிக்கான நிரந்தர கட்டிடம் இல்லாமை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் ஆண், பெண் நோயாளர்களுக்கான தற்காலிக விடுதி இயங்கி வருகின்றது. இந் நிலையில் அங்கே இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ் நான்கு மாடி விடுதி கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

அந்த திட்டத்தை செயற்படுத்த அனுமதி வழங்கப்பட்டள்ளதுடன், இது தொடர்பான இருதரப்பு உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவை இந்திய உதவித் திட்டத்தில் நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டுள்ளதுடன், அடுத்ததாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்த பின்னர் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆசிரியர்களே அவதானம்; தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்..!

0

பாராளுமன்றத்தில் 2025.09.24 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீடுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள (19ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இத்திக தலைமையில் இன்று (23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இச்சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தண்டனை முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கிலும், அவ்வாறான குற்றச் செயல்களுக்கு சட்டரீதியாகத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இச்சட்டமூலம் கொண்டு வரப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சிறுவர் தடுப்பு நிலையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற உடல் ரீதியான தண்டனைகளை நிறுத்துவதற்கு இலங்கையில் நீண்டகாலமாக சட்ட ஏற்பாடுகள் காணப்படவில்லை.

இது தொடர்பில் சமூகத்தில் விரிவாகப் பேசப்பட்டு வந்ததுடன், அவ்வாறான நிலைமையை மாற்றுவதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இது பற்றிய சட்டமொன்றுக்கான தேவை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்புக்களிடமிருந்தும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த சட்டமூலத்தைக் கொண்டு வந்திருப்பதாக சட்டம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சு, ஆசிரியர் தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களுக்கு அமைய இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது ஆசிரியர்களை இலக்கு வைத்துக் கொண்டுவரப்படும் சட்டமூலம் அல்ல என்றும், சிறுவர்களை உடல் ரீதியாகத் தண்டனைக்கு உட்படுத்தும் அனைவருக்கும் உரிய சட்டம் இது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இரத்து..!

0

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, மின்விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து நேற்று முன்தினம் நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையை நடத்திச்செல்ல குறித்த சேவைகள் அத்தியவசியமானவை என்பதையும் அந்த சேவைகளுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படக்கூடும் என்பதை கருத்திற் கொண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

24 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்களுடன் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் கடந்த 25ஆம் திகதி முதல் சுகவீன் விடுமுறை, சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையின் மூன்றாவது கட்டமாக அனைத்து பெறுகை செயற்பாடுகளிலிருந்தும் விலகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மின்சார தொழிற் சங்கங்கள் தெரிவித்தன.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி சுழற்சி முறை உண்ணாவிரதம்..!

0

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25ம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை அடையாள சுழற்சி முறையான உண்ணா விரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

குறித்த போராட்டத்தை செம்மணி வளைவு பகுதியில் செய்ய இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எமது உறவுகள் அங்கு வருகை தந்து ஒன்றிணைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

செம்மணி வளைவு பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக் கிழமை காலை 9 மணி முதல் போராட்டம் செம்மணி வளைவு பகுதியில் ஆரம்பமாகி இரவு பகலாக தொடர்ச்சியாக 29ம் திகதி மாலை 4 மணி வரை நடைபெறும்.

தமிழ் மக்கள் அனைவரும் இதனை ஒரு பொது அழைப்பாக கருதி அனைவரும் பங்கேற்று போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறுபதாவது கூட்டத் தொடரில் 22 ஆம் திகதி தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த மாநாட்டில் எமக்காக எமது உறவுகளுக்காக நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். இதுவரை காலமும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

மனிதாபிமானத்தை பேணுகின்ற மனித உரிமை பேரவையிலே எமக்கான நீதியினை வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் புவியியல் அரசியலைத் தவிர்த்து முன்வர வேண்டும். ஏனைய நாடுகள் மற்றும் அனுசரணை வழங்கும் நாடுகளிடமும் நாம் கோரிக்கையை விடுக்கிறோம்.

தமிழ் மக்களுக்கு நிகழ்ந்தது இனப் படுகொலை என்பதை நாம் இங்கே ஈழத்தில் வாழும் தமிழர்களாக தெரிவித்து கொள்கிறோம்.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – என்றனர்.

error: Content is protected !!