உயர்தரப் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களுக்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று முன்மொழிவு ஒன்றை நாடாளுமன்றத்தில் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதற்கும், நல்ல இசையைக் கேட்பதற்கும், கடற்கரைகளைப் பார்வையிடுவதற்கும், கலாசார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த ஒதுக்கீடு கலாசார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் சபை முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளன.
தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கும் அனைத்து தொழிற் சங்கங்களும் இன்று (24) பிற்பகல் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க குறித்த தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக, மின்சார தொழிற் சங்கங்கள் பல நாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும், பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது உரிமை என்றும், சில தினங்களில் மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் எச்சரித்துள்ளார்.
மன்னார் போராட்டக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று புதன்கிழமை (24) 53 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான தனது செய்தியை அனுப்பி உள்ளார்.
மன்னாரில் குறித்த 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நிறுத்த தேவையில்லை. அதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் முன்னர் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கியுள்ளார்.
எதை வைத்து குறித்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்று எமக்கு தெரியவில்லை. பல முறை குறித்த திட்டம் குறித்து அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும், ஜனாதிபதியுடனும் தொடர்பு கொண்டு மக்களுடைய கருத்துக்களையும், எங்களுடைய கருத்துக்களையும் முன் வைத்தோம்.
எனினும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல், தான்தோன்றித்தனமாக தனது சுய முடிவை எடுத்துள்ளமை மன வேதனையை நம்பியிருந்த எமக்கு ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வது எமது உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது. அந்த உரிமைக்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். எமது போராட்டம் விரிவடைகிறது என்பதை உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம். எமது மூன்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும். மாவட்ட ரீதியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டமாக மாறவுள்ளது.
நாங்கள் சட்டத்தை மீறுகின்ற போராட்டமாக ஏனையவர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்ற போராட்டமாக இப்போராட்டம் ஒருபோதும் அமையாது.
இவற்றுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்ற போதும்,எமது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படும்.
கவலைக்குரிய விடயம் என்ன என்றால் எமது மன்னார் மாவட்டச் செயலகம், அரச அதிபர் மற்றும் அவருடன் கடமையாற்றுகின்ற அதிகாரிகளுடைய செயற்பாடுகள் எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றது.
குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேற்று செவ்வாய்க் கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை ஒருவரை அனுப்பி இக்கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளோம். மிகவும் வேதனையான விடயமாக அமைந்துள்ளது.
கடந்த 40 நாட்களாக இடம் பெற்ற வேலைத் திட்டங்களை மாவட்டச் செயலகம் கண்காணிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
மாவட்டச் செயலகமும், அதிகாரிகளும் இத்திட்டங்களுடன் ஒத்துப் போகின்றார்களா?என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. எமது மக்களை அழிக்கும், மக்களின் வாழ்விடங்கள் பறிக்கின்ற, இத்தீவை இல்லாது செய்கின்ற செயற்பாடுகளுடன் அதிகாரிகள் அனைவரும் இணைந்து போகின்றார்களா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (29) மன்னாரில் மாவட்ட தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது சக்தியை இந்த அரசுக்கு காண்பிக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் தண்டனைச் சட்டத் திருத்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர்,
வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் பெருந்தெருக்கள் போன்ற இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதாகவும் குறிப்பிட்டார்.
அதன்படி, கடந்த ஆண்டு 1,350 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை அதிபர், ஆசிரியர்களின் கைகளைக் கட்டி மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதையும் துஸ்பிரயோகம் என வகைப்படுத்தி சிறைக்குள் தள்ளும் அரசு இத்தகைய பாலியல் துஸ்பிரயோகங்கள் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதற்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த ஆசிரியை பாடசாலையின் நூலகத்தில் வைத்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனிடம் பாட புத்தகம் தொடர்பில் கேள்வி கேட்டட்போது இந்த மாணவன் ஆசிரியையின் கேள்விக்கு பிழையான பதிலை அளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியை மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரான ஆசிரியை கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியையின் தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆசிரியைக்கு பிணை வழக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பு கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் நேற்று செவ்யாக் கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், ச.குகதாசன், து.ரவிகரன், மருத்துவர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
13 ஆவது திருத்தச் சட்டம் பற்றியும் எடுத்துக் கூறினர், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் பிற்போடப்படுகின்றமை குறித்தும் விளக்கிக் கூறியுள்ளனர். அனைத்து விடயங்களையும் தூதுவர் செவிமடுத்தாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வதேச நீதி கோரி மக்களிடம் பெறப்பட்ட கையொப்பம் அடங்கிய மனுவை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ரெலோ இயக்கப் பேச்சாளர் கு.சுரேன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு,
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் இன்றைய தினம் கொழும்பில் கையளிக்கப்பட்டன.
23-09-2025 செவ்வாய் மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இக்கையொப்பங்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவும் கையளிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதனும், சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம் சந்திரகுமார், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரனும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு ஐநா செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்பு சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதி செய்யப்பட்டுள்ள இக் கடிதத்தில் நீதியரசர் திரு சீ.வீ. விக்னேஸ்வரன், கெள.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் திரு செ. கஜேந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு. முருகேசு சந்திரகுமார் மற்றும் திரு எஸ். நவீந்திரா (வேந்தன்)ஆகியோர் கையொப்பம் இட்டு இருந்தனர்.
காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட எமது வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும், கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனே, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன.
அவற்றை நேரடியாகவும் ஐநா ஒருங்கிணைப்பாளரிடம் இச்சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக நடந்த இச்சந்திப்பு கையெழுத்து ஆவணங்களையும் கடிதப் பிரதியையும் கையளித்ததுடன் முடிவு பெற்றது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் யாழ். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் ஆடைகளை மினுக்கிக் கொண்டிருந்த வேளை மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சாட்சிகளை சுன்னாகம் காவல்துறையினர் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகிய மாணவர்கள் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி கோரிப் போராடி வந்த, அவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது 84) என்பவரே, எவ்வித நீதியும் கிடைக்காமல் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்துள்ளார்.
அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக் கிழமையாகும்.
மகனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை காலமாகியுள்ளார்.