Tuesday, October 28, 2025
Huis Blog Bladsy 13

முல்லைத்தீவு வைத்திய சாலையில் இந்திய உதவியுடன் விடுதி நிர்மாணம்..!

0

முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் ஆண் மற்றும் பெண் நோயாளர்களுக்காக இந்திய உதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடி விடுதிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாகும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண், பெண் நோயாளர்களுக்கான விடுதிக்கான நிரந்தர கட்டிடம் இல்லாமை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் ஆண், பெண் நோயாளர்களுக்கான தற்காலிக விடுதி இயங்கி வருகின்றது. இந் நிலையில் அங்கே இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ் நான்கு மாடி விடுதி கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

அந்த திட்டத்தை செயற்படுத்த அனுமதி வழங்கப்பட்டள்ளதுடன், இது தொடர்பான இருதரப்பு உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவை இந்திய உதவித் திட்டத்தில் நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டுள்ளதுடன், அடுத்ததாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்த பின்னர் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆசிரியர்களே அவதானம்; தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்..!

0

பாராளுமன்றத்தில் 2025.09.24 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீடுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள (19ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இத்திக தலைமையில் இன்று (23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இச்சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தண்டனை முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கிலும், அவ்வாறான குற்றச் செயல்களுக்கு சட்டரீதியாகத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இச்சட்டமூலம் கொண்டு வரப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சிறுவர் தடுப்பு நிலையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற உடல் ரீதியான தண்டனைகளை நிறுத்துவதற்கு இலங்கையில் நீண்டகாலமாக சட்ட ஏற்பாடுகள் காணப்படவில்லை.

இது தொடர்பில் சமூகத்தில் விரிவாகப் பேசப்பட்டு வந்ததுடன், அவ்வாறான நிலைமையை மாற்றுவதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இது பற்றிய சட்டமொன்றுக்கான தேவை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்புக்களிடமிருந்தும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த சட்டமூலத்தைக் கொண்டு வந்திருப்பதாக சட்டம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சு, ஆசிரியர் தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களுக்கு அமைய இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது ஆசிரியர்களை இலக்கு வைத்துக் கொண்டுவரப்படும் சட்டமூலம் அல்ல என்றும், சிறுவர்களை உடல் ரீதியாகத் தண்டனைக்கு உட்படுத்தும் அனைவருக்கும் உரிய சட்டம் இது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இரத்து..!

0

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, மின்விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து நேற்று முன்தினம் நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையை நடத்திச்செல்ல குறித்த சேவைகள் அத்தியவசியமானவை என்பதையும் அந்த சேவைகளுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படக்கூடும் என்பதை கருத்திற் கொண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

24 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்களுடன் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் கடந்த 25ஆம் திகதி முதல் சுகவீன் விடுமுறை, சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையின் மூன்றாவது கட்டமாக அனைத்து பெறுகை செயற்பாடுகளிலிருந்தும் விலகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மின்சார தொழிற் சங்கங்கள் தெரிவித்தன.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி சுழற்சி முறை உண்ணாவிரதம்..!

0

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25ம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை அடையாள சுழற்சி முறையான உண்ணா விரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

குறித்த போராட்டத்தை செம்மணி வளைவு பகுதியில் செய்ய இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எமது உறவுகள் அங்கு வருகை தந்து ஒன்றிணைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

செம்மணி வளைவு பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக் கிழமை காலை 9 மணி முதல் போராட்டம் செம்மணி வளைவு பகுதியில் ஆரம்பமாகி இரவு பகலாக தொடர்ச்சியாக 29ம் திகதி மாலை 4 மணி வரை நடைபெறும்.

தமிழ் மக்கள் அனைவரும் இதனை ஒரு பொது அழைப்பாக கருதி அனைவரும் பங்கேற்று போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறுபதாவது கூட்டத் தொடரில் 22 ஆம் திகதி தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த மாநாட்டில் எமக்காக எமது உறவுகளுக்காக நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். இதுவரை காலமும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

மனிதாபிமானத்தை பேணுகின்ற மனித உரிமை பேரவையிலே எமக்கான நீதியினை வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் புவியியல் அரசியலைத் தவிர்த்து முன்வர வேண்டும். ஏனைய நாடுகள் மற்றும் அனுசரணை வழங்கும் நாடுகளிடமும் நாம் கோரிக்கையை விடுக்கிறோம்.

தமிழ் மக்களுக்கு நிகழ்ந்தது இனப் படுகொலை என்பதை நாம் இங்கே ஈழத்தில் வாழும் தமிழர்களாக தெரிவித்து கொள்கிறோம்.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – என்றனர்.

பலஸ்தீன தேசம் ஒருபோதும் உருவாகாது; ஹமாஸ் ஸ்தாபகரின் மகன் பரபரப்புப் பேட்டி..!

0

ஹமாஸ் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஷேக் ஹஸன் யூசுப்பின் மகன் மொசாப் ஹசன் யூசுப், “பலஸ்தீன தேசம் ஒருபோதும் உருவாகாது” என ஸ்கை நியூஸ் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கம் ஒரு பலஸ்தீன தேசத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், பலஸ்தீன அதிகாரசபை ஊழல் நிறைந்தது என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

“பசுமை இளவரசன்” (Green Prince) என அறியப்படும் மொசாப் ஹசன் யூசுப், ஹமாஸ் இயக்கத்தின் எதிர்கால தலைவராகக் கருதப்பட்டவர். ஆனால், 1997 முதல் 2007 வரை, அவர் இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு சேவையான ஷின் பெட்-ன் உயர்மட்ட ரகசிய உளவாளியாகச் செயல்பட்டார்.

இந்த கால கட்டத்தில் பல தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்துள்ளார். இது குறித்த தகவல்களை அவர் தனது சுயசரிதையான ‘ஹமாஸின் மகன்’ (Son of Hamas) என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

யூசுப் தனது பேட்டியில்,

ஹமாஸ் தலைவர்கள் பலஸ்தீன மக்களின் நலன்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், அதிகாரத்தையும் தனிப்பட்ட ஆதாயங்களையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்றும் கூறினார்.

பலஸ்தீன தேசம் என்பது சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான ஒரு அரசியல் கருவி மட்டுமே என்றும், ஹமாஸின் உண்மையான நோக்கம் ஒரு இஸ்லாமிய கலிபாவை நிறுவுவதே என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பலஸ்தீன அதிகாரசபை ஒரு “ஊழல் நிறைந்த மற்றும் தோல்வியடைந்த அமைப்பு” என்றும் அது இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு உளவாளி என்று அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்ட பிறகு, யூசுப் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார். அவருக்கு 2010 இல் அங்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது. அதன் பிறகு, அவர் பலஸ்தீன அரசியல் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதுடன், இஸ்ரேல்-பலஸ்தீன மோதலுக்கு ஒரு அமைதியான தீர்வை ஆதரிப்பவராகவும் மாறியுள்ளார்.

இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை..!

0

அருண ஜயசேகர பிரதி அமைச்சர் தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பிற்பாடு, அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறே, பாதிக்கப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணையை வேண்டி நின்றாலும், அது அவ்வாறு நடக்காமையினால், ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றின் தந்தை ஒருவர், Zoom தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டு, இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற விடயங்கள் நாட்டிற்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிரான மனு மீளப் பெறப்பட்டது..!

0

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமிப்பதற்காக ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்த பரிந்துரை மற்றும் நியமனம் ஆகியவற்றை வலுவற்றதாக்கி தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று (23) உயர் நீதிமன்றத்தில் மீளப் பெறப்பட்டுள்ளது.

உடவலவே சோம விகாரையின் விகாராதிபதி வேவெல்துவ ஞானபிரபா தேரர் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று பிரத நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன் அழைக்கப்பட்டது.

அப்போது, ​​மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, மனுவை மீளப்பெற அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார்.

அதன்படி, குறித்த மனுவை மீளப்பெற அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஈழத் தமிழரின் பிரச்சினைகள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது – சாணக்கியன் MP

0

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்த ஒருவருட காலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை.

அண்மையில் யாழிற்குச் சென்று சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள், கொழும்பில் அவசர அவசரமாக சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள்.

ஒருவருட ஆட்சியில் என்ன செய்தீர்கள் என யாரும் கேட்டால் அவமானப்படாமல் இருக்க அவசர அவசரமாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகள் இதுவரைக்கும் காணப்படவில்லை.

இராணுவ முகாம்களை விடுவிப்பத்தாக சொன்னார்கள், வன இலாகா துறையினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதாக சொன்னார்கள் ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது.

யாழ் செம்மணியில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விடயத்திற்கு இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன. ஏனெனில் கடந்த கால அரசாங்கள் நாங்கள் செய்ய மாட்டோம் என வெளிப்படையாகச் சொன்னார்கள்.

ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது எங்களுக்கே அதிக கரிசனை இருப்பதாக சொல்லிச் சொல்லியே ஏமாற்றுகின்றனர்” என்றார்.

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா..!

0

கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாகியுள்ளது.

கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இராமநாதன் அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

நேற்றையதினம்(22) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தையில் ரயிலுடன் விபத்து; கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

0

ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதி குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!