Saturday, June 27, 2026
Huis Blog Bladsy 19

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து – உயர் நீதிமன்றம் அனுமதி

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள “நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின்” எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஓய்வூதியச் சலுகைகளை வழங்குவது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமாக இருக்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய ஓய்வூதியச் சட்டம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்காகக் காணப்படுவதாகவும், புதிய சட்டமூலம் அந்த விதிவிலக்கை நீக்கி சமத்துவத்தை உறுதிப் படுத்துவதாகவும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.

இந்தச் சட்டமூலமானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த ஓய்வூதிய முறைமையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இது தொடர்பான தமது வியாக்கியானத்தை இரகசியமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது.

அதற்கமையவே இந்த வியாக்கியானம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெற்று வந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கு தவிசாளர் தொடர்பில் பிரதி அமைச்சர் உபாலி குற்றச்சாட்டு..!

0

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரிபுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனவே நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநருக்கு தான் கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு (வெலிஓயா) பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்கவால் கூட்டத்தில் வைத்து பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று (05.02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மணலாறு அபிவிருத்திக் குழு கூட்டம் காலை 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அந்த நேரத்தில் அங்கு சென்றிருந்தேன். கூட்டம் ஆரம்பித்து 30 நிமிடங்களின் பின்னர் பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா வடக்கின் தவிசாளர்களுக்கிடையில் விவதாம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன் போது மேடையின் முன் வரிசையில் அமர வேண்டும் என தவிசாளர் கோரிக்கை விடுப்பதாக பிரதேச செயலாளர் என்னிடம் வந்து கூறினார்.

இதனையடுத்து மாகாணசபை உள்ளூராட்சி அமைச்சின் விதிமுறைகளின் படி மேடையில் அமர்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அனுமதி உள்ளது. இது தொடர்பாக நான் விளக்கமளித்திருந்தேன்.

இருப்பினும் வலுக்கட்டாயமாக மேலே வந்து அவர் எனக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். நான் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கூட்டத்தை ஆரம்பித்திருந்தேன்.

இதன்போது மொழிபெயர்ப்பு தேவையா என்று அங்கிருந்த மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டிருந்தேன். அவர்கள் தேவையில்லை என்பதால் கூட்டம் அப்படியே நடாத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த தவிசாளர் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒலிவாங்கி வேண்டுமா என்று கேட்ட போது அவர் கோபத்துடன் என்னிடம் இருந்து அதனை வாங்கினார். பின்னர் அவர் உரையாற்றினார்.

நெடுங்கேணியில் நடைபெற்ற கிபுல் ஓயாவிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக அவர் குறிப்பிட்டார். அதற்கு தலைமை தாங்கியமையாலேயே தன்னை நீங்கள் பழிவாங்குவதாக அவர் கூறினார்.

தனக்கு மேலே இருக்க உரிமை உள்ளது. தான் ஒரு பிரதேச சபையின் தவிசாளர் என்று கூறினார். எனக்கு சிங்களம் தெரியாது. அனைத்திற்கும் மொழி பெயர்ப்பு வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவற்றை கூறிக்கொண்டு அவர் வெளியேறியிருந்தார். நீங்கள் கூறியதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற வகையில் நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய போதும் அவர் அதனை கேட்காமல் ஆவேசத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்.

முதலில் கூட்டத்திற்கு வருகைதரும் அனைவரும் வருகையை உறுதிப்படுத்துவதற்காக தங்கள் கையொப்பத்தை இடவேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. கடந்த கூட்டத்தில் பதில் கடமையில் இருந்த பிரதேச செயலாளர் ஒருவராலேயே மேலே ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நான் வவுனியாவில் பிறந்தவன். தமிழ் மக்களுடன் வளந்தவன். அரசியலில் சகோதரத்துவத்துடன் வேலை செய்பவன். இது வவுனியா மக்களுக்கு நன்கு தெரியும். குறித்த தவிசாளருடன் தனிப்பட்ட எந்த கோபமும் எனக்கு இல்லை.

அவர் வெளியேறி சென்றவுடன் முகநூலில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதாவது கூட்டத்தில் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி இனவாத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் விதமாக கருத்துக்களை பகிர்ந்தார்.

மேடையில் வைத்து அவரை அவமானப்படுத்தியதாகவும் அதனை விட்டு இறங்குமாறு நான் கூறியதாகவும் அவர் பதிவிட்டார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு கூற்று. நடந்த சம்பவத்தை கூறாமல் இல்லாத ஒன்றை திரிபுபடுத்தியிருந்தார்.

இது தொடர்பாக எனது கட்சியின் ஆலோசனையின் படி ஆளுநரிடம் ஒரு முறைப்பாட்டை செய்திருக்கின்றேன். எனது கோரிக்கை என்னவென்றால் நான் அவரை அவமதித்துள்ளதாகவோ அல்லது மேடையில் இருந்து இறங்க சொன்னேன் என்று கூறும் குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

அந்த இடத்தில்50 அரச அதிகாரிகள் இருந்தனர். அவர்களுள் தமிழ் அதிகாரிகளும் அடங்கும். பிரதேச செயலாளர் ஒரு தமிழர். கூட்டத்தில் மொத்தமாக 150 பேர் இருந்தனர். எனவே அவர்களிடம் விசாரணை நடாத்தி நான் அவரை அவமதித்தேனா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஆசனங்கள் ஒதுக்கும் விதிமுறைகள் தொடர்பாக அவருக்கு தெரியப்படுத்துமாறு ஆளுநரிடமும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.

பல கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் யாழ் வர்த்தகர் கைது..!

0

இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பயணி, யாழ் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வான்பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த பயணியின் பயணப் பையின் ரகசியப் பகுதியில் இரண்டு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 116 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமதி 2 கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் (ரூபா 21,160,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஏனைய இருவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் தொழிநுட்பவியலாளராகப் பணியாற்றி வருபவராவார்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு; விண்ணப்பம் கோரல்..!

0

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழி (Online) முறைமை இன்று (05) முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 9.00 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளிடமிருந்தும் (ஆண், பெண் இருபாலாரும்) இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான இணையவழி முறைமை பெப்ரவரி 20 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, மார்ச் 05 ஆம் திகதி முற்பகல் 9.00 மணியுடன் நிறைவடையும்.

மேலதீக விபரங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் வெளியிடப்பட்டுள்ளன.

இணையத்தளத்தில் உள்ள “Our Services” பிரிவின் கீழ் “Online Applications – Recruitment Exams/ E.B. Exams” ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை இணையவழி (Online) முறைமையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கானகு முக்கிய அறிவித்தல்..!

0

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில் 2025 (2026) பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் இருந்தால், இம் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்துக்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3545 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏற்கனவே அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் காணப்படின், பாடசாலை அதிபர்கள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று, தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு..!

0

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) மு.ப.08.04 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைமைத் தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் இணைய வழி ஊடாக தேசிய நிகழ்வுகளோடு உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்திருந்தனர்.

செயலக உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர், சுதந்திர தினம் தொடர்பான வரலாற்று ரீதியான விடயங்களை குறிப்பிட்டு, பிரதேச செயலகத்தில் கருவிலுள்ள குழந்கைகள் நலனைக் கவனிப்பது தொடங்கி, முதியோர் சேவை ஈறாக ஒவ்வோரு துறை சார்ந்தும் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கிராம மட்டத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பணியாற்றுவதோடு,

நீங்களும் மகிழ்ச்சியுடன் மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்விலே செப்டெம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரை காலை 8.30 முன்னர் வருகை தந்த உத்தியோகத்தர்களில் முதல் மூன்று நிலைகளிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும், முதியோர் செயலக செயற்பாடுகளில் அர்ப்பணிப்பாக பணியாற்றிய உத்தியோகத்தருக்கு அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட மெச்சுரை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நிறைவாக செயலக வளாகத்தில் சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்; கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்..!

0

இலங்கையின் 78ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி 04.02.2026இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

யாழ் பல்கலை கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் இடம்பெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளாநொச்சி கந்த சுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.

இவ்வார்ப்பட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோசங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப்பிரச்சிற்கான தீர்வை வலியுத்தியும், தமிழர்தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைப் படுத்தப்படுவதையும், கொடுமைப் படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பியும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி இடம்பெற்ற போது A-9 பிரதான வீதியின் ஒருபக்க வழித் தடத்தில் வீதிப் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி

0

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே 04.02.2026 நாளைய தினம் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்னும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவு நல்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஊடகங்களுக்கு 03.02.2026 இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் நாளானது தமிழ் மக்களால் நேசிக்கப்படக்கூடியதாகவோ, கொண்டாடக்கூடியதாகவோ இல்லை. தமிழர்களுக்கு விடிவு என்பது இல்லாத ஒன்றாகவே நோக்கப்படுகின்றது. ஒடுக்குமுறைகள் மிக அதிகமாகி வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களே ஏராளம்.

நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட முன்னைய ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள். ஆனால் இதுவரை எமக்குத்தான் விடிவில்லாமல் அலைகின்றோம் எனத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றார்கள்.

தமிழர் தாயகப்பரப்புகளில் தொடர்சியாக நிலஆக்கிரமிப்புக்கள், பௌத்த மயமாக்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தோடு தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்குவதற்காக திட்டமிட்டு பெரும்பான்மையினக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதவிர வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு இதுவரை நீதி வழங்கப்படாமை, சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகள் இதுவரை விடுக்கப்படாமை, தமிழர்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியைக் கோருகின்ற போதும் இதுவரை ஆட்சியாளர்கள் அதற்கு செவிசாய்க்காத நிலை, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி இதுவரை வழங்கப்படாமை என இந்தநாட்டில் தமிழர்கள் ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக பலவழிகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வாறு இலங்கையின் சுதந்திரதினத்தை கொண்டாடுவது என்ற எண்ணத்தில்தான் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள அரச அலுவலகங்களில் கூட இலங்கை சுதந்திரதினம் மனமகிழ்வோடு கொண்டாடப்படுவதில்லை. ஒரு சம்பிரதாய செயற்பாடாகவே சுதந்திர தினச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எங்களுடைய இளைஞர்களே எங்களுடைய எதிர்காலம். ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04ஆம்திகதி பல்கலைக் கழக சமூகம் “ஸ்ரீலங்காவிற்கு சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்று ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டி வருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இளைஞர்கள் 04.02.2026ஆம் திகதி நாளையதினம் தமிழர்கள் தமது வேதனையை வெளிப்படுத்தும் “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

எனவே குறித்த கவனயீர்ப்பிற்கு அணிதிரண்டு ஆதரவு நல்குமாறு அனைத்து தமிழ் மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.

சுதந்திர தினம் கறுப்பு நாள்; போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ரெலோ..!

0

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(03) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் என சொல்லப்படுகிறது. உண்மையிலேயே இலங்கை சுதந்திரமடைந்து 76ஆண்டுகள் கடந்துகொண்டு இருந்தாலும் தமிழ் மக்களை பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது பேச்சளவில் பேசப்படுகின்ற ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுகிறது.

இலங்கை தீவில் சிங்கள மக்களுக்கு தான் அந்த சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. ஏனைய இனங்களுக்கு அந்த சுதந்திர காற்று என்பது சரியாக கிடைக்கவில்லை. அடக்குமுறைக்குள் இருக்கின்ற இனமாகவே ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள்.

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கின்ற நோக்கமாக, நாங்கள் தமிழ் மக்கள் என்ற வகையில் இதுவரை சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்ற விடயத்தை அனைவருக்கும் தெரிவிக்கவே முயல்கின்றோம்.

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை நம்ப வைத்து தமது நிகழ்ச்சி நிரல்களை நடத்திச் செல்வதே அவர்களுடைய நோக்கமாக இருக்கின்றது.

அதுபோல தான் அனுர அரசும் இனவாதமற்ற, மதவாதம் அற்ற நாட்டை கட்டி எழுப்புவதாகவும் தங்களது ஆட்சியில் இனவாதம் மதவாதம் என்பதற்கு இடமில்லை என்ற வகையிலும் போலிப் பிரசாரங்களை செய்கின்றனர் என்றார்.

பிரதி அமைச்சரால் பழிவாங்கப்பட்டதாக தவிசாளரால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..!

0

கிபுள் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றயதினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கிபுள் ஓயாத்திட்டம் தமிழ் மக்களுக்கு வேண்டாம் என்று எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்றய தினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.

அந்த போராட்டத்தின் விளைவாக எனக்கு இன்று அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்றையதினம் வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது.

அதில் நான் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன். அந்த கூட்டத்தில் எனக்கு வழமையாக ஒதுக்கப்படும் இடத்தில் அமர்வதற்கு நான் சென்றபோது அங்கு அமர வேண்டாம் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார்.

வழமையாக கூட்டம் இடம்பெறும் போது எனக்கு வழங்கப்பட்டு வந்த இடத்திலேயே நான் அமரச் சென்றேன். அத்துடன் கூட்டம் ஆரம்பிக்க முன்னரே தமிழ்மொழி பெயர்ப்பு தேவை என்பதை பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால் அந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே என்னை அவமதிக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்ப்பாட்டை மேற்கொள்கிறீர்கள் என ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதும் மக்கள் பிரதிநிதி என்று பாராமல் அவர்கள் அவமதித்துள்ளனர்.

இதனால் இக்கூட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து விட்டு வெளியேறி விட்டேன்” என்றார்.

error: Content is protected !!