Wednesday, June 10, 2026
Huis Blog

கலைஞர் சங்கீதனை விடுதலை செய்; ஜனாதிபதி செயலகம் முன் வெடித்த போராட்டம்..!

0

சொல்லிசைப் பாடகரான கணேஸ்குமார் சங்கீதன் என்பவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், பல தசாப்தங்களாக நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற் சங்கத் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது பலத்த எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “Repeal PTA! Withdraw PSTA!”, “பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்!” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தமது எதிர்ப்பை பலமாகப் பதிவு செய்தனர்.

இதன் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக மக்களுக்குத் தெளிவான வாக்குறுதி அளித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நெருங்கும் நிலையிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும், மாறாக இந்த அரசாங்கத்தின் கீழ் சுமார் 80 பேர் வரை இந்த மிலேச்சத்தனமான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் சாடினார்.

கடந்த காலங்களில் தெற்கில் உரிமைக்காகப் பேசிய சிங்கள மக்களுக்கும், வடக்கில் போராடிய தமிழ் மக்களுக்கும், கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராகவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், தற்போது கிளிநொச்சியில் ஒரு பாடலைப் பாடினார் என்பதற்காக கலைஞர் சங்கீதன் கைது செய்யப்பட்டுள்ளமை பேச்சு சுதந்திரத்திற்கும் கலை சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட மரண அடியாகும் என்றார்.

மேலும், அரசாங்கம் புதிய ஒடுக்குமுறைச் சட்டங்களை (PSTA) கொண்டுவந்து மக்களை ஒடுக்குவதை விடுத்து, உடனடியாக இந்தத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அமைப்பாளர் வசந்த முதலிகே கருத்துத் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறியே சுரேஷ் சலே போன்றவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனப் பேசப்பட்டு வரும் நிலையில், அத்தகைய தீவிர சம்பவங்களுடன் சங்கீதன் போன்ற கலைஞர்களின் கைதை எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது என்றார்.

 

இலங்கையின் சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஒரு சிறையறையின் கொள்ளளவை விட மூன்று மடங்கு கைதிகள் அடைக்கப்பட்டு, டின்மீன் டப்பாக்களைப் போல மிக மோசமான சூழலில் வாழ்கின்றனர் என்றும், சிறை அதிகாரிகள் கூட இதனால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,

1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த தற்காலிக பயங்கரவாதத் தடைச் சட்டம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் தங்களது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், தேர்தலின் போது இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக உறுதியளித்திருந்ததை நினைவுபடுத்திய அவர், வடக்கில் ஒரு இளம் கலைஞர் பாடினார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதும், எழுத்தாளர் தீபச்செல்வன் போன்றவர்களின் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுவதும் இந்தச் சட்டத்தின் கொடூரத்தையே காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

வடபகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி

0

வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்குமாகாண கடற்றொழிலாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என வடமாகாணத்தில் நான்கு மாவட்டங்களிலும் மீனவர்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்களான சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமெற் வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற தீய செயல்களால் வடபகுதிக் கடல்வளம் முற்றாக அழிந்து போகின்றது.

 

இத்தகைய சட்டவிரோத தொழில்களைத் தடுக்க வேண்டிய கடற்றொழில் திணைக்களமோ, கடற்படையோ செயலற்றவர்களாக இருக்கின்றனர்.

இதுகுறித்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கேட்டால், ஆளணிப் பற்றாக்குறை இருப்பதாகவும், ஆளணிக்கு ஏற்ப செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடற்றொழில் அமைச்சரிம் இதுதொடர்பில் நாம் ஏற்கனவே கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எனவே இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி உரியவகையில் சீர்செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன் எம்.பி கோரிக்கை

0

இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த கோரிக்கையை உரியவகையில் பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற குழு அறையில் 09.06.2026இன்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆடி அமாவாசை என்பது இந்துக்களின் ஓர் புனித நாளாகும்.

இந்த ஆடி அமாவாசை புனித நாளில் இந்துக்கள் தமது முன்னோர்களுக்காக, குறிப்பாக இறந்த தந்தையர்களுக்காக விரதமிருந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து தமதுபிதிர்க்கடன்களை நிறைவேற்றி ஆசி பெறுகின்றனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்திற்கு பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.

இருப்பினும் இந்த நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்த பிற்பாடு இந்துக்களின் இந்த புனித தினத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படுவதில்லை.

அந்த வகையில் இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த கடந்தகால ஆட்சியாளர்கள் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான தமது வழிபாட்டிரிமையை மறுத்து வந்துள்ளதாகவே இந்துக்கள் கருதுகின்றனர்.

மாதம் தோறும் பௌர்ணமிக்கு விடுமுறை வழங்கும் இலங்கை அரசு, வருடத்தில் ஒரு நாள் வருகின்ற ஆடி அமாவாசைக்கு பொது விடுமுறை வழங்க தவறியிருப்பது இந்துக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆகவே இந்துக்கள் தமது புனிதநாளான ஆடி அமாவாசை தினத்தில் இடர்பாடுகளின்றி, நிம்மதியாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எனவே இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை நாளாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கோரிக்கைவிடுத்தார்.

இந்நிலையில் இதன்போது புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் பதிலளிக்கையில்,

சமயரீதியாக இந்த விடயங்களைக் கையாள்வதற்கென குழுவொன்று உள்ளது. அந்தவகையில் ஆடி அமாவாசை புனித நாளினை அரச விடுமுறையாக பிரகடனப்படுத்துதல் என்ற விடயம் அந்தக் குழுவிற்கு பாரப்படுத்தப்படும்.

அதற்கமைய அந்தக்குழுவில் இந்த ஆடி அமாவாசை புனித நாளினை பொது விடுமுறையாக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

அதன் பின்னர் அந்தக்குழுவின் பரிசீலனை முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படுமெனத் தெரிவித்தனர்.

சங்கீத்சனை விடுதலை செய்வதுடன் பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்படல் வேண்டும் – ரவிகரன் எம்.பி

0

அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிககை எடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கபட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஸ்குமார் சங்கீத்சன் என்னும் சொல்லிசைப் பாடகர் அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நாட்டிலே காலத்திற்கு காலம் இவ்வாறான கலைஞர்களும், படைப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். பல படைப்புக்கள் வெளியீடு செய்ய முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கலைஞனுடைய கைது இடம்பெற்றிருக்கின்றது.

இந்த சொல்லிசைப் பாடகர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதானது கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்கு முறையினையே வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறாக இந்தநாட்டில் அடக்குமுறைக் கருவியாக பயங்கரவாதத் தடைச் சட்டம் பாவிக்கப்பட்டு வருகின்றது. எனவேதான் இந்த நாட்டிற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவையில்லையென நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இந்நிலையில் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீத்சன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருவதுடன், இந்த நாட்டில் அடக்கு முறைக் கருவியாக உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்புண்டு – பீமல் தெரிவிப்பு

0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக பல விடயங்கள் வெளியாகும் போது ஒரு தரப்பினர் பிரதான சூத்திரதாரியையும், தாக்குதலுக்கு உளவு பார்த்தவர்களையும் பாதுகாக்க போராடுகிறார்கள். உண்மையில் நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும்.

ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக இடையூறு விளைவிக்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் விசாரணைகளை இடைநிறுத்தப் போவதில்லை. குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உண்மை வெகுவிரைவில் வெளிவரும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கோட்டபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டது. 2019.04.21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. 2019.04.23 ஆம் திகதி தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்துக்கும், ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

குண்டுத் தாக்குதலின் பின்னர் நாட்டின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முழுமையாக வீழ்ச்சியடைந்தது.பொருளாதார பாதிப்புக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும். கத்தோலிக்க மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகளாக அடையாளப் படுத்தப்பட்டார்கள்.

முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக திட்டமிட்ட வகையில் வெறுப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறான பின்னணியில் தான் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

சுரேஸ் சலே நாடகம் தற்போது அரங்கேற்றப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்த நபர் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கும், சுரேஸ் சலேவுக்கும் இடையில் தொடர்புண்டு என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக பல விடயங்கள் வெளியாகும் போது ஒரு தரப்பினர் பிரதான சூத்திரதாரியையும், தாக்குதலுக்கு உளவு பார்த்தவர்களையும் பாதுகாக்க போராடுகிறார்கள்.

 

உண்மையில் நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும். ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக இடையூறு விளைவிக்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் விசாரணைகளை இடைநிறுத்தப் போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம் செல்கிறார்.அப்போது அவர் பரிவாரங்களுடன் நீதிமன்றம் செல்லவில்லை. ஆனால் ராஜபக்ஷர்களும், ரணில் விக்கிரமசிங்கவும் நீதிமன்றம் செல்லும் போது பரிவாரங்களுடன் செல்கிறார்கள். சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது சிறந்த முறையில் விசாரணைகள் இடம்பெறுகிறது. கோட்டபய ராஜபக்ஷவுக்கு பயணத்தடை விதிக்கும் வரை ஆரோக்கியமாக இருந்த சுரேஸ் சலே பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னர் நோயாளியாக மாறிவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இவர்களுக்கு முழுமையான சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பல போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். வங்குரோத்து நிலையடைந்த அரசியல்வாதிகளும் அவருக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். நாட்டு மக்கள் இவர்களை ஒரு போதும் கவனத்திற் கொள்ள போவதில்லை. வெகுவிரைவில் உண்மை வெளிவரும் என்றார்.

மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து படையினர் உல்லாசம் – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

0

யாழ் – வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அமைத்து உல்லாசமாக இருக்கும் நிலையில், காணிகளுக்குரிய மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது அந்த அந்த மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்பட்டால், அரசிற்கும் கொடுமையான நிலைகளே ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.

மயிலிட்டி மக்களால் தமது காணிவிடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 1986ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கு, மயிலிட்டியில் வாழ்ந்த இந்த மக்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இவ்வாறு தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அரசானது எமது மக்களுக்கு செய்யும் கொடுமையிலும் கொடுமையான செயற்பாடாகவே இதனைக் காண்கின்றோம்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த மக்களை மீள்குடியமர்துவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே தற்போதைய ஆட்சியாளர்களாவது தங்களை தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதே இந்த மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ‘ஹிரிகம’ என்னும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றும் போது ” நிலம் என்பது உங்களுடைய உரிமை, உங்களுடைய சொத்து, அதனை நீங்கள் பேணிப்பாதுகாக்கவேண்டும்” என கருத்துத் தெரிவித்திருந்ததை ஊடகங்களின் ஊடாகப் பார்வையிட்டிருந்தோம்.

ஜனாதிபதி குறிப்பிட்ட அதே விடயத்தைத்தான் நாமும் கோருகின்றோம்.

நிலம் என்பது எமது உரிமை, எமது சொத்து, எங்களுடைய நிலத்தை எமக்குத்தாருங்கள் என்பதைத்தான் எமது மக்களும் நாங்களும் கோருகின்றோம்.

இந்த மக்கள் ஏறத்தாள 3500 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீகக் காணிகளை இழந்துள்ளனர். எனவேதான் அந்த மக்கள் வீதி ஓரங்களில் நின்று தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த மக்களின் பூர்வீக காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இந்தப் பகுதியில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் ஒரு கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது இங்கு வந்து இராணுவத்தினர் தங்கிவிட்டுச் செல்வதற்காகவே அந்த பங்களா அமைக்கப்பட்டுள்ளதாக எம்மால் அறிய முடிகின்றது.

அந்த கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 200இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகள் காணப்படுகின்றன.

இவ்வாறு அந்த காணிகளுக்குரிய குடும்பங்கள் வீதிகளிலிருந்து தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்க, அந்த மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து அவற்றை அலங்கரித்து பங்களா அமைத்து இராணுவத்தினர் சுகபோகம் காண்கின்றனர். எனவேதான் நாம் எமது மக்களுக்கு கொடுமை இழைக்கப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றோம்.

இதேபோன்ற கொடுமைகள் முல்லைத்தீவில் கேப்பாப்புலவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, வட்டுவாகல் உட்பட பல இடங்களில் இடம்பெறுகின்றது. மான்னாரில் முள்ளிக்குளத்திலும் இதேபோன்ற கொடுமைகள் இடம்பெறுகின்றது. அந்த மக்களும் தமது காணிகளை விடுவிப்பதற்கு தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நாட்டில் தமிழ் மக்களாக நாம் பிறந்தது குற்றமா? தமிழ் மக்களை இவ்வாறாக வதைக்க வேண்டாம் என்றே நாம் கூறுகின்றோம்.

எமது மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்பட்டால், உங்களுக்கும் கொடுமையான நிலைகள் ஏற்படுமெனத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.

இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி: எலும்புக் கூடுகள் 300-ஐத் தாண்டியது..!

0

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், 72 நாட்களாக நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300-ஐத் கடந்துள்ளது.

செம்மணி சித்துப்பதிப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 302 மனித எலும்புக் கூடுகளில் 298 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு வருடத்திற்கும் மேலாக அகழ்வாய்வைக் கண்காணித்து வரும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

புதைகுழியில் அகழ்வாய்வின் 72-வது நாளான இன்று (ஜூன் 7), மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு சிறுவர்களுடையது என அவர்கள் மேலும் தெரிவித்தனர். இன்று கண்டறியப்பட்ட 6 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 302-ஆக அதிகரித்தது.

மனிதப் புதைகுழியின் மேலதிக அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப் பெற்றுள்ளமையை தொடர்ந்து, ஏழு மாதங்களின் பின்னர் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் 2026 ஏப்ரல் 27 திங்கட்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகின.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ச்சியாக 12 நாட்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அகழ்வாய்வுப் பணியாளர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காக மே 9 சனிக்கிழமை அன்று பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போது 261 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மூன்று வார கால ஓய்வின் பின்னர், இதன் அகழ்வாய்வுப் பணிகள் மீண்டும் 2026 ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகின.

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் முதன் முதலாக 2025 மே 15 ஆம் திகதி ஆரம்பமாகின.

மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளுக்கு மேலதிகமாக, கண்டெடுக்கப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பிற பொருட்களில், குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்குகின்றன.

முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சலே மருத்துவ மனையில் சேர்ப்பு..!

0

முன்னாள் அரச புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சற்று நேரத்திற்கு முன்பு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈஸ்டர் விசாரணை இறுதிக் கட்டத்தில்; பீதியில் தடுமாறும் ராஜபக்ஸ குடும்பம் – ஜெகதீஸ்வரன் எம்.பி

0

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் ராஜபக்ஸ குடும்பம் என்ன செய்வது என்று பீதியடைந்த நிலையில் தடுமாறுகின்றனர். எதிர்கட்சியினரும் அவர்களுக்கு உடந்தையாக மௌனிகளாக இருக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதலன் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர். மேலும் அவர்கள் குறுக்கு வழியிலாவது தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

இதற்கும் மேலாக, ரஞ்சித் மத்தும பண்டார, ஞானசார தேரர் உட்பட பலரும் இணைந்து ஒன்றிணைந்து எதிர்க்கட்சியினர் என இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும், மக்களிடையே ஒரு சினிமா பாணியிலான நடிப்பைக் காட்டுவதற்காகவே இத்தகைய செயல்பாடுகளைச் செய்கிறார்கள்.

குறிப்பாக தங்களுடைய அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் தற்காக மேற்கெள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதல் மூலமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. அத்தோடு இதன் விசாரணையானது நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டது. இந்த அநீதிக்கு நிச்சயமாக எங்களது அரசாங்கம் மற்றும் சட்ட ரீதியாகத் தீர்ப்பு வழங்க இருக்கின்றோம்.

அதேவேளையில், பீதியடைந்த இக்குழுவினர் குறித்த விசாரணையைக் குழப்பும் வகையில் பல்வேறுபட்ட முயற்சிகளைச் செய்து வருகின்றார்கள். நிச்சயமாக அவர்களது முயற்சிகள் பலனளிக்கப் போவதில்லை.

எதிர்க்கட்சியினருக்கு எழுப்பப்படும் கேள்விகள் நான் ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் மக்களுக்காக அரசாங்கத்தை அமைக்க முற்படுகிறீர்களா? அல்லது உங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்காக, உங்களுடைய கூட்டாளிகளையும், கடந்த காலங்களில் மக்களுக்கு எதிராக அநீதி இழைத்தவர்களையும் காப்பாற்றுவதற்காகக் கூடுகிறீர்களா? நிச்சயமாக மக்கள் அனைத்தையும் அறிவார்கள்.

உங்களுடைய போலி நாடகங்கள் எடுபடப் போவதில்லை. விரைவாக இந்த விசாரணைக்குரிய தீர்ப்புகள் வெளிவரும் போது, வெட்டவெளிச்சமாக அனைத்துக் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்குரிய தண்டனையை எங்களது அரசாங்கம் வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இப்படிச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சியினர் விசாரணையைக் குழப்புகின்ற நடவடிக்கையை ஏற்படுத்துகின்ற போதும், வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள். நான் அவர்களிடம் கேட்க விரும்புவது.

இவர்களும் அந்தத் தாக்குதலை ஏற்றுக் கொள்கின்றார்களா? அல்லது இவர்களும் அந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக, ஆதரவாக இருக்கின்றார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது.

எத்தனையோ சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்கின்ற இவர்கள், பாரிய அளவில் ஒரு அநீதி நடந்திருக்கின்ற போது குறிப்பாக வட- கிழக்கு பகுதியில் கூடுதலாகக் கிறிஸ்தவ மக்கள் இருக்கின்றார்கள்.

அவர்களுடைய மனங்களில் ஆறாத வடுவாக இருப்பது இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் தான் ஏன் உங்களுடைய ஆர்ப்பாட்டங்கள் இல்லை? ஏன் இந்த அநீதிக்கு எதிராக உங்களால் குரல் கொடுக்க முடியவில்லை? வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றீர்கள். இதன் மூலமாக அநீதி இழைக்கப்பட்ட இந்த மக்களுக்கு நீங்கள் என்ன விடயத்தை வெளிப்படுத்துகிறீர்கள்?

நவீன் திஸாநாயக்கவின் கருத்து மற்றும் வடிவேலு பாணி நகைச்சுவை இதற்கும் மேலாக, வடிவேலு பாணியில் கூறுவதாக இருந்தால், ஸ்பெஷல் ஐட்டம் ஒன்றாக நவீன் திஸாநாயக்க ஒரு கனவு கண்டிருக்கின்றார்.

இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு அல்லது இந்த நாட்டைச் சொர்க்க புரியாக மாற்றுவதற்காக, ரணில் விக்ரம சிங்கவின் மூளையும் சஜித் பிரேமதாசவின் உடலும் இணைய வேண்டும் என்று கூறியிருக்கின்றார். ஒட்டு மொத்தத்தில் இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. சஜித் பிரேமதாசவுக்கு மூளை இல்லை என்ற வகையில், அவரால் தனித்துச் செயல்பட முடியாது.

அதேபோல் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆரோக்கியமான உடல் இல்லை என்ற வகையில் அதாவது அந்த வடிவேலு பாணியில் மீண்டும் சொல்வதானால் ‘பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்’ என்ற வகையில் இருக்கின்றது. இவர்களுடைய இந்தக் கற்பனைகளும் யதார்த்தத்திற்குப் பொருத்தமில்லாத விடயங்களும் நிச்சயமாக ஒரு வேடிக்கையான வினோதமான ஒன்றாக இருக்கின்றது.

இவர்கள் எந்தத் தந்திரோபாய ரீதியில் இந்த மக்களை அணுகலாம் அல்லது மக்களை எவ்வாறு ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்களே தவிர, இவர்களிடம் முறையான திட்டம் இல்லை. இவர்களுக்கு யோசனைகளும் இல்லை. சிந்தனைச் சக்தியும் இல்லை. இவ்வாறான வேடிக்கையான அறிக்கைகளை விட்டுச் சமூகத்திலே மிகவும் கேலிக்குள்ளானவர்களாக இருக்கின்றார்கள்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் பொருளாதார நிலை எங்களைப் பொறுத்த வரையில், எங்களது அரசாங்கம் மக்களின் வரப்பிரசாதத்தைப் பெற்ற அரசாங்கம் என்ற ரீதியில், மக்கள் எங்கள் மீது பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட அநீதி, அத்துமீறல்களுக்கு நிச்சயமாகப் படிப்படியாகத் தண்டனைகள் வழங்கப்படும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்குரிய விசாரணைகள் படிப்படியாக இடம்பெறும்.

இப்போது சிறைச்சாலை சென்றிருப்பவர்கள். தங்களுடைய அனுபவங்களைப் பெற்றுத் தாங்களாகவே திருந்துவதற்குரிய வழிவகைகளைத் தேடிக்கொள்ள வேண்டும். நாங்கள் சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை.

‘பணங்காட்டு நரி’ என்ற பாணியில், நாங்கள் எதற்கும் அஞ்சாத வகையில் எங்களது நியாயமான அரசாங்கத்தை, மக்கள் விரும்புகின்ற அரசாங்கத்தை, நீதியான முறையில் கொண்டு செலுத்துவோம்.

இப்பிரச்சினைகளால் வேதனை அடைந்து, துன்புற்று இருக்கின்ற இந்த மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை ஆசுவாசப்படுத்துகின்ற அரசாங்கமாகவும் தொடர்ச்சியாக எங்களது அரசியல் பயணத்தை மேற்கொள்வோம்.

எனவே, இவர்களது வேடிக்கை விளையாட்டுகளுக்கு இங்கே இடமில்லை. இவை அவ்வப்போது வந்து செல்லும் மழைத்தூறல் போன்றது தான். மக்கள் மத்தியில் இவை எடுபடப் போவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

ஈஸ்டர் புனித தினத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்குரிய தண்டனைகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொடுக்கத் தான் போகிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எனவே, எஞ்சியிருப்பவர்களும் தங்களைத் தாங்கள் திருத்திக் கொண்டு மக்கள் பணியைச் சரியான முறையில் செய்ய முயற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் முக்கிய திருப்புமுனை..!

0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து பல பயிற்சி முகாம்களில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு உறுதியளித்திருந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர், தற்போது இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக மாறி (State Witness) நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

200 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கு விசாரணையின் போது, தானும் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த சத்தியப் பிரமாணம் செய்திருந்ததை நீதிமன்றில் ஏற்றுக் கொண்ட அவர், தாக்குதலின் பின்னணி மற்றும் வலையமைப்புகள் குறித்த பல இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

​நள்ளிரவு 12 மணி வரை நீண்ட இந்த நீதிமன்ற விசாரணையின் போது, சாட்சியாளரின் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு அவரது பெயரைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ரகசியமான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் திடீர் வாக்குமூலமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதில் சட்டப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள மிக முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

error: Content is protected !!