மேற்கு குஜராத் மாநிலத்தில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உட்பட மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏஎல்எச் என்ற இந்த உலங்குவானூர்தி குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் இருந்து மேற்கே 416 கிமீ தொலைவில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் வழக்கமான பயிற்சி செய்து கொண்டிருந்த வேளை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், குறித்த உலங்குவானூர்தி தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அதிலிருந்த மூன்று பணியாளர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மோசமாக எரிந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எனினும், துரதிர்ஷ்டவசமாக, மூன்று பணியாளர்களும் உயிரிழந்துள்ளதாக போர்பந்தர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இந்திய காவல்துறை மற்றும் கடலோர காவல்படை விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.