Saturday, June 27, 2026
Huis Blog Bladsy 29

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரத்தில் பொய்யுரைத்த இராணுவம் – ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவத்தின் குறித்த பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 07.01.2025இன்று பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்றில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பிற்பகல் 07.01.2025இன்று 04.00மணியளவில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

அந்த வகையில் இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுர குமாரதிசாநாயக்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்திருந்தனர். அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்புத் தொடர்பில் பேசப்பட்டது.

குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயத்தில் 44பேருக்கு காணிகள் விடுவிக்க வேண்டியிருந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்களின் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டு விட்டதாகவும், இன்னும் குறிப்பிட்ட அளவானவர்களுக்கே கணிகள் விடுவிக்க வேண்டியுள்ளதாகவும் இதன் போது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சில அதிகாரிகளால் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில் குறுக்கீடு செய்து அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற தகவல்கள் தவறானவை என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

கேப்பாப்பிலவில் ஏற்கனவே இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப் பட்டிருக்கின்றன. எனினும் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும், 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது என்பதை இதன் போது சுட்டிக்காட்டினேன்.

இதன் போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளுக்கு பதிலாக பதிலீட்டுக்காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் இராணுவத்தினரால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பிழையான தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

அத்தோடு மக்களுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்படவில்லை. சீனியாமோட்டை என்னுமிடத்தில் சிறிய காணித் துண்டுகளில் தற்காலிகமாக வீடுகள் அமைத்து கேப்பாப்புலவு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினேன்.

அதேவேளை முறையற்ற விதத்திலேயே மக்களுக்கு அங்கு வீடுகள் அமைக்கப்பட்டு கேப்பாப்புலவு மக்கள் தற்காலிகமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன் போது சுட்டிக்காட்டினேன்.

எதிர்காலத்தில் இராணுவத்தினர் காணிகளை விடுவித்த பிற்பாடு சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவீர்கள், அதுவரை சீனியா மோட்டைப்பகுதியில் தற்காலிகமாகவே குடியேற்றப்படுகின்றீர்கள் என்ற அரச அதிகாரிகளின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அங்கு தற்காலிகமாக குடியேறித் தங்கியுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன் போது வெளிப்படுத்தியிருந்தேன்.

இந்நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையுடனேயே கேப்பாப்புலவு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற விடயத்தினையும் இதன் போது ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இந்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு தொடர்பான உண்மையான விபரங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமிருந்தும், கரைதுறைப்பற்று பிரதேச செயலரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதன் போது ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில் இராணுவத் தளபதியிடம் குறித்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பான ஒரு அறிக்கையினை தமக்கு தருமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.

இதுதொடர்பில் நானும்முல்லைத்தீவு மாவட்ட செயலாளருடனும், கரைதுறைப்பற்று பிரதேச செயலருடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் – என்றார்.

வவுனியாவில் மக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் – சத்தியலிங்கம் எம்பி

0

வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் வீதிகளை திறக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று 7/1/2026 ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி படைத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக் காணிகள், பாதுகாப்பு வலயத்தில் மூடப்பட்டுள்ள வீதிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற கூட்டத்திலும் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

முதற் கட்டமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று முறிப்பு தச்சங்குளம் பிரதான வீதிக்கு பதிலாக நோத்கேற்வே ஹோட்டலிற்கு பக்கத்தில் செல்லும் வீதியை மக்கள் பயன்படுத்தக் கூடியதாக புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அத்துடன் கனகராயன்குளத்தில் 561 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள பொதுக் காணிகள், மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்ததாக தெரிவித்தார்.

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் கட்டாய இடமாற்றம் குறித்து வெளியாகிய அறிவிப்பு..!

0

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் கட்டாய இடமாற்றத் திட்டத்தின் கீழ் இடமாற்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.

மேலும் மேல்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையையும் கோடிட்டுக் காட்டியுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, ஆரம்பப் பிரிவு (பொது) பாடப்பிரிவில் உள்ள ஆசிரியர்களுக்கான இடமாற்ற உத்தரவுகள், 2026 ஜனவரி 6 முதல் இணையத்தில் கிடைக்கும்.

இந்த நிலையில்,தேசிய பாடசாலை ஆசிரியர்கள் nstt.moe.gov.lk என்ற இணையத்தின் மூலம் உள்நுழைந்து அவர்களின் இடமாற்ற உத்தரவுகளைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்ற முடிவுகளில் அதிருப்தி அடையும் ஆசிரியர்கள், அதே இணையத்தை பயன்படுத்தி, ஜனவரி 6 முதல் ஜனவரி 20 வரை வருடாந்த இடமாற்ற மறுஆய்வுக் குழுவிற்கு மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சாரா ஜஸ்மின் உயிரோடு இருக்கிறார்; அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு..!

0

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

சாரா ஜஸ்மின் மரணமடைந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை.

அவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சில தகவல்களை வெளிப்படுத்த முடியாது. அவை மேலதிக விசாரணைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர்களுக்கு நீதியையும் நியாயமான அரசியல் தீர்வையும் வழங்க வேண்டும்..!

0

தமிழ் மக்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ யாழ். தையிட்டி காணி உரிமையாளர்கள் அறவழியிலேயே போராடினார்கள். ஆனால் அவர்கள் மீது பொலிஸார் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டனர்.

வேலன் சுவாமிகள் மிக மோசமாகக் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர். பௌத்த துறவியொருவரை இவ்வாறு கைது செய்ய முடியுமா?” எனவும் ஸ்ரீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

நீங்கள் இந்து ஆலயங்கள், கத்தோலிக்க தேவாலயங்களை இடித்து அழிக்கின்றீர்கள், அப்படியானால் வலுக்கட்டாயமாக கட்டப்பட்ட புத்த விகாரையை இடிக்க முடியாதா?

வடக்கு, கிழக்கில் இராணுவம் இன்றளவிலும் குவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுங்கள். தமிழர்களுக்கு நீதியையும், நியாயமான தீர்வையும் வழங்க முன்வாருங்கள்.” – என சிறிதரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

தரம் 6 ஆங்கில சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு

0

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

யாழில் விசேட அதிரடிப் படையினர் அதிரடி சோதனை; போதைப் பொருட்களுடன் நால்வர் கைது..!

0

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது ஒரு வாள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின் போது 24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!

0

முல்லைத்தீவில் வெளிச்சவீடு இன்மையால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரைதிரும்புவதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிச்ச வீடொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைப்பதுதொடர்பில் துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவில் வெளிச்ச வீட்டினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுமெனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் பதில் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 05.01.2025நேற்று இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 1950ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டப்பட்ட வெளிச்சவீடொன்று காணப்பட்டது.

இந்த வெளிச்சவீட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் 74கிலோமீற்றர் தூரமான கரையோரத்தில் கொக்கிளாய் தொடக்கம் பேப்பாரப்பிட்டி வரையிலுள்ள மீனவர்கள் பயனடைந்தவந்தனர்.

குறித்த வெளிச்சவீட்டின் உதவியுடனேயே மீனவர்கள் தொழிலுக்குச் சென்று தமது மீன்பிடித் துறைகளுக்கு கரைதிருப்பிவந்தனர்.

இவ்வாறாக மீனவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவிருந்த இந்த வெளிச்சவீடு கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்துடன் முற்றாக அழிவடைந்துள்ளது.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது மீனவர்கள் வெளிச்சவீடின்றி பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

எனவே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு கடற்றொழில் அமைச்சு முல்லைத்தீவில் வெளிச்ச வீடொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கடந்த 09.09.2025அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இந்நிலையில் வெளிச்ச வீடுகளை அமைப்பதற்கு துறைமுக அதிகார சபையே பொறுப்பெனவும், எனவே துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருடன் கலந்துரையாடி முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் இதன்போது பதில் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய 05.01.2025அன்று இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் குறித்த வெளிச்சவீட்டினை அமைப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன்.

அந்த வகையில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருடன் இது தொடர்பில் தாம் பேசியுள்ளதாகவும், நிச்சயமாக இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீட்டினை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் இதன்போது பதில் வழங்கியிருந்தார் – என்றார்.

கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்ட ஒழுங்கு விதிகளில் திருத்தம் வேண்டும்..!

0

கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்டம் சார்பாக கடற்றொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளில் சில திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் ஓய்வுகாலத்தையும் மேலும் வளப்படுத்த முடியுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்தவகையில் இறுக்கமான தவணைக் கட்டண முறைக்கு மாற்றாக பருவ காலத்துடன் இசைந்த வகையில் தவணைக் கட்டண முறையை நடைமுறைப்படுத்தல், அரசின் கூட்டுப்பொறுப்பை உறுதிப்படுத்தல், பண வீக்கத்துடன் இணைந்த வகையில் ஓய்வூதியத் தொகையை தீர்மானித்தல், இழப்பீட்டுத் தொகை காலப் பொருத்தமற்று இருத்தல், மதுபாவனையால் குடும்பத்தினர் தண்டிக்கப்படுவதை தவிர்த்தல், ஒழுங்குவிதிகளில் உள்ள இடைவெளிகளை ஆராய்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மேலும் கரிசனை கொள்ள வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 06.01.2026இன்று இடம்பெற்ற கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்ட சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

30 ஆண்டுகளின் பின்னர் கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்டம் சார்பாக தற்போதைய கடற்றொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை வரவேற்கிறோம். வயதுக்குரிய பங்களிப்பு, ஓய்வூதிய கட்டங்கள், இயலாமை மற்றும் இறப்பின் போதான பணிக்கொடை விபரம் என்பன தெளிவாக வரையறுக்கப்பட்டிருத்தல் வரவேற்புக்குரியன.

ஆனாலும் மேற்படி ஒழுங்குவிதிகளில் மேலும் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் அவை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் ஓய்வு காலத்தையும் மேலும் வளப்படுத்தும்.

இறுக்கமான தவணைக் கட்டண முறைக்கு மாற்றாக பருவ காலத்துடன் இசைந்த வகையில் தவணைக் கட்டண முறையை நடைமுறைப்படுத்தல், அரசின் கூட்டுப்பொறுப்பை உறுதிப்படுத்தல், பணவீக்கத்துடன் இணைந்த வகையில் ஓய்வூதியத்தொகையை தீர்மானித்தல், இழப்பீட்டுத் தொகை காலப்பொருத்தமற்று இருத்தல், மதுபாவனையால் குடும்பத்தினர் தண்டிக்கப்படுவதை தவிர்த்தல், ஒழுங்குவிதிகளில் உள்ள இடைவெளிகளை ஆராய்தல் தொடர்பில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் மேலும் கரிசனை கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மீனவ சமூகத்தின் முதுமைக்காலம் மதிப்போடு கணிக்கப்பட வேண்டியது. எனினும் பொதுவான இயற்கை அனர்த்தங்களுக்கு மேலாக தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் இன்னமும் கட்டுப்படுத்தப்படாதிருத்தல், இழுவைமடிப்படகுகளின் அத்துமீறல் என்பவற்றால் எரிபொருள் செலவுக்கேனும் மீன்பிடிக்க இயலாது கரைதிரும்பும் வள்ளங்களும் உள்ளன.

இலட்சக்கணக்கான பெறுமதி கொண்ட வலைகளை இழந்து விட்டு கரை திரும்பும் மீனவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் சீரான வருவாயை கடற்றொழில் ஈட்டித் தருவதில்லை.

இந்நிலையில் தவணைக் கட்டணங்களில் மட்டும் மீனவர்களுக்கு இறுக்கமான நடைமுறை எவ்வாறு பொருந்தும்? இந்தியா, பிறேசில் உள்ளிட்ட நாடுகளில் பேணப்படும் பருவகாலத்துடன் இசைந்ததான நெகிழ்வுப் போக்குடனான தவணைக் கட்டண முறைமை இலங்கை மீனவர்களுக்கும் மிகவும் பொருந்தும்.

செய்ச்செல்ஸ் (Seychelles) மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மீனவர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் அரசுடன் இணைந்த, பகிரப்பட்ட பொறுப்பை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. மீனவர்களின் ஓய்வூதியத்திட்டத்தில் பகுதியளவில் அரசின் பொறுப்பேற்றல் மீனவர் வாழ்வை மேலும் வலுவூட்டும்.

தற்போது 45 வயதில் உள்ள ஒருவர் 15 ஆண்டுகளின் பின்னர் ஒரு மாத ஓய்வூதியமாகப் பெறும் 1000 ரூபாய் தொகை ஒரு வேளை உணவுக்கு கூட போதாமல் இருக்கும். இப்போது 18 வயதில் உள்ள ஒருவர் 42 ஆண்டுகளின் பின்னர் ஒரு மாத ஓய்வூதியமாக பெறும் 1000 உரூபாய் தொகை பணவீக்கத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட இப்போதைய 130 ரூபாய்க்குச் சமனாக காணப்படும்.

மேற்படி நலன்புரித்திட்டத்தின் ஊடாக 42 ஆண்டுகளின் பின்னர் கிடைக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தில் ஒரு பால் தேநீரைத்தான் குடிக்க முடியும் என்பது எத்தகைய அபத்தம்!

பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுடன் இணைந்ததான வகையில் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைத் தொகைகள் அவ்வப்போது இற்றைப் படுத்தப்படுவது மிகவும் பொருத்தமானதாக அமையும்.

46 வயதுடைய மீனவர் ஒருவர் கடலில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தால் அவர் சார்பாக வழங்கப்படும் 6 ஆயிரம் உரூபாய் அம்மீனவரின் குடும்பத்தின் எதிர்காலத்தை எந்த அளவில் ஆற்றுப்படுத்தும்? மேற்படி இழப்பீட்டுத் தொகை காலத்திற்கு பொருத்தமான தொகை தானா?

மது அருந்திய நிலையில் விபத்து நடந்தால் இழப்பீடு இல்லை என்ற விதி, பல நேரங்களில் அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் மருத்துவ வசதிகளிலும் தீவளாவிய வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளமை இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்து விடும்.

மேலும் ஒருவரின் தனிப்பட்ட பழக்கம், குடும்பத்துக்கான அரசின் ஆற்றுப்படுத்தலை ஏன் தடை செய்யவேண்டும்.

ஒழுங்குவிதிகளில் உள்ள இடைவெளிகள் கடலில் ஒருவர் காணாமல் போனால் 2025 இன் ஒழுங்குவிதி என்ன தீர்வைத்தரும்? மீனவர்களுக்கு அவர்களின் கைகளே முதன்மையான வாழ்வாதார மூலங்கள். விபத்து ஒன்றில் மீனவர்கள் விரல்களை இழந்தால்? உள்ளங்கை சிதைந்தால்? கைகளுக்குச் செல்லும் நரம்புகள் சேதமுற்றால்?

கௌரவ அமைச்சர் அவர்களே,

ஒரு மீனவர் விரல்களை இழந்து, அவரின் கேட்டல் திறனை இழந்தது, கடற்பரப்பிலே பாதுகாப்பாக நிலைகொள்ளும் திறனை இழந்து அதனால் அம்மீனவரின் வாழ்வாதார வலு முற்றாக நிலைகுலைந்தாலும் கூட, 2025 இன் ஒழுங்குவிதி அம்மீனவரை இயலாமை உடையவர் என வரையறுக்க மறுக்கிறது! இது நியாயமா? மேற்படியான பாதிப்புகள் மீனவர்களின் மீன்பிடி வாழ்வை பாதிக்காதா?

இந்தியா, வாழ்வாதார இழப்புக்கான இழப்பீட்டைத் தான் கொடுக்கிறது. உடல் கூறுகளின் இழப்பை அளவிட்டு அல்ல. பல நாடுகள், சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உருவாக்கப்பட்ட,
மீன்பிடித் தொழிலில் வேலைவாய்ப்பு தொடர்பான C188 உடன்படிக்கைக்கு அமைய, உடல் உறுப்புகளின் இழப்பில் கவனம் செலுத்தாது பணிபுரிவதற்கான உடற் தகுதியில் கவனம் செலுத்துகின்றன.

முதுகெலும்பு வட்டுகள் சேதமடைதல், நாள்பட்ட முதுகு வலியால் அவதியுறல், பகுதிளவான பாரிசவாதம், நுரையீரல் நோய், காசநோய், எரிபொருள் புகையால் ஏற்படும் நோய், கை-கால் வலிப்பு, பகுதி குறைபாட்டுடனான பக்கவாதம், சமநிலை கோளாறு, உளநிலை பாதிப்புகள், பணிசார் நோய்கள் என்பவற்றுக்கு 2025 இன் ஒழுங்குவிதிகள் கூறும் தீர்வென்ன?

மேற்படி ஒழுங்குவிதிக்கான இயலாமை வரையறையும் மேலும் விரிவாக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தப் பேரவையில் கேட்டுக் கொள்கிறேன் – என்றார்.

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்பி

0

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாகச் சிதைக்கின்ற இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 05.01.2026இன்று இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வடக்கில் யாழ்ப்பாணம், தீவகம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப் படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன் போது கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறிப்பாக வடபகுதி கடற்பரப்பில் கடற்கரைகளை அண்மித்து இந்திய இழுவைப் படகுகள் இழுவைமடித் தொழிலில் ஈடுபட்டு கடல் வளங்களை சூறையாடுவதுடன், வடபகுதி மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்திச் செல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

வடபகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த யுத்த காலப் பகுதியில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது அவர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கே பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்திய இழுவைப் படகுகளின் இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாடுகள் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இந்திய இழுவைப் படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் தொடர்ச்சியாக முறையீடுகளைச் செய்து வருவதாகவும், கடற்றொழில் பிரதியமைச்சர் முல்லைத்தீவிற்கு வரும் போதும் இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது நினைவுபடுத்தினார். இருப்பினும் தற்போதும் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசிற்கு இராஜதந்திர ரீதியான சிக்கல் நிலை இருந்தாலும், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பு நிலையை கருத்திற்கொண்டு இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்திய இழுவைப் படகுகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இதன் போது கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோரால் பதிலளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!