கடந்த வற்றாப்பளை திருவிழா காலத்தின் போது தமது சொந்த இடமான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வந்து குடும்பமாக தங்கியிருந்த பிரான்ஸ் புலம்பெயர் தம்பதிகளின் 15 வயது சிறுமி தற்போது பிரான்சில் 6 மாத கர்ப்பமாகவுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த ஒக்ரோபர் மாத தொடக்கப்பகுதியில் குறித்த சிறுமி பிரான்சில் பாடசாலையில் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கர்ப்பமடைந்துள்ளது வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர் மற்றும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிரான்சிலிருந்து முல்லைத்தீவில் தங்கியிருந்த காலப் பகுதியில் தமது வீட்டு வந்து சென்ற புகைப்பபடம் எடுக்கும் ஒருவரே காரணம் என கூறியுள்ளார்.
குறித்த சிறுமியும் அவளது தாயார் மற்றும் முல்லைத்தீவில் வாழ்ந்து வந்த அவர்களது சில உறவுகளும் குறித்த சிறுமியின் பூப்புனித நீராட்டு விழாவின் தொடர்ச்சியான சில காட்சிகளை எடுப்பதற்காக இரணைமடு மற்றும் அப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் அழகிய இடங்களுக்கு புகைப்பட ஸ்ருடியோவின் வாகனத்திலேயே திரிந்துள்ளார்கள்.
அந் நேரத்திலேயே அந்த வாகனத்தில் வந்த ஸ்ருடியோவில் வேலை செய்யும் ஒருவனுடன் சிறுமிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் சிறுமியும் அவளது தாயார் உட்பட ஒரு சிலரும் குறித்த ஸ்ருடியோவில் வேலை செய்யும் சம்மந்தப்பட்டவுடன் முல்லைத்தீவு நாயாறு கடற்கரை மற்றும் முல்லைத் தீவுக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிறு தீவு என்பவற்றுக்கு சென்று படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார்கள்.
அந் நேரத்தில் முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கியுள்ளதாகவும் அங்கு வைத்தே குறித்த சிறுமியுடன் புகைப்படப்பிடிப்பாளன் உறவு கொண்டதாகவும் சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தற்போது சிறுமியின் பெற்றோர் முல்லைத்தீவுக்கு வந்துள்ளதுடன் சிறுமியை கர்ப்பமாக்கிய புகைப்படப் பிடிப்பாளனை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அவன் வேலை செய்த ஸ்ரூடியோவுக்கு அவன் தற்போது வருவதில்லை எனவும் குறித்த ஸ்ரூடியோவில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அவனைப் போன்றவர்களை தொலைபேசியில் அழைத்து தாம் படப்பிடிப்பை மேற்கொள்வதாகவும் ஸ்ரூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு அவனைக் கைது செய்யும் நடவடிக்கையில் பிரான்ஸ் தம்பதியினிர் ஈடுபட்டுள்ளார்கள்.
கர்ப்பமாக்கியவன் இளைஞனா அல்லது குடும்பஸ்தனா என்பது கூட சிறுமிக்கு தெரியாது என்றும் ஸ்ரூடியோவில் விசாரணை செய்த பின்னரே அவனது புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் என்பவற்றை பெற்றோர் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சிறுமியைக் கர்ப்பமாக்கிய நபர் 27 வயதான வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் முல்லைத்தீவு கள்ளப்பாட்டைச் சேர்ந்த பொருந்திரளான மக்கள் உயிரிழந்தனர்.
இந் நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.12.2025இன்று கள்ளப்படு உதயம் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் ஈகைச்சுடர் மற்றும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த உறவுகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப் பேரலையினால் காவு கொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர்.
மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி. இராஜஜோகினி ஜெயக்குமார், ஒட்டுசுட்டான் பிரதேச காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கிராம உத்தியோகத்தர்கள், கள்ளப்பாடு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், கள்ளப்பாடு கிராமமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 24.11.2025 இடம் பெற்றது. குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389பேருக்கு காணிகள் இல்லை. எனவே காணி அற்றவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
குறிப்பாக புதுக்குடியிருப்பில் 1500 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. இந்நிலையில் கூடியவிரைவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.
அதற்கமைய துணுக்காய் மாந்தை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளிலுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணிகளின்றி இருப்பதாக பிரதேச செயலகத் தரவுகளின் மூலம் அறியக் கூடியதாக விருக்கின்றது.
எனவே காணிகளுக்காக விண்ணப்பித்துள்ள எமது மக்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு காணிகளற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்கத் தவறினால், காணிகளற்ற மக்களுடன் இணைந்து பிரதேச செயலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டிருக்கும்.
எனவே விரைவாக குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – என்றார்.
இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் இதன் போது பதிலளிக்கையில்,
காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கமைய அவ்வாறு காணியற்றோருக்கு வழங்கப்படவேண்டிய காணிகள் இனங் காணப்பட்டுள்ளதுடன், அக்காணிகள் அளவீடு செய்யப்பட்டு வழங்குவதற்கு ஏற்ற வகையில் தயார் நிலையிலும் உள்ளன.
எனவே காணியற்றவர்களுடைய பட்டியலை ஆராய்ந்து, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் காணிக்கச்சேரி நடாத்தப்படும் எனத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் நீதியானாவிசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றில் தம்மால் மனு கையளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமியின் மரணத்தில் மருத்துவத் தவறுகள் இருப்பதாக பரிசோதனை அறிக்கைகள் வெளிவந்தால், உரிய தரப்பினருக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென இதன் போது முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபாவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதேபோல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இதற்கு முன்னர் வினோதரன் வினோதா என்னும் பெண்ணினுடைய மரணம்தொடர்பிலும் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு கிடைக்கப்பற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக அந்தப் பெண்ணின் குடும்பத்தாருடனும், வைத்தியர்களுடனும் ஏற்கனவே கலந்துரையாடியிருந்தேன்.
இதனையடுத்து அப்பெண்ணின் மரணம் தொடர்பிலே அவரது குடும்பத்தாரினால் என்னிடம் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் வினோதரன் வினோதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்றில் மனு ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளேன். இந்நிலையில் சபாநாயகராலும் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அந்த மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பிலும் தற்போது என்னிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு இத்தகைய மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கே பயமாக்இருப்பதாக மக்கள் என்னிடம் முறையிடுகின்றனர்.
மேலும் குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ளளுமாறு பாராளுமன்றிலும் வலியுறுத்துவேன்.
குறிப்பாக இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்றில் சபாநாயகரிடம் மனுவினைக் கையளிப்பேன் – என்றார்
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் இதன்போது பதிலளிக்கையில்,
வினோதரன் வினோதாவினுடைய சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் மாகாண சுகாதார பணிமனையினால் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினால் விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
அதேபோல் குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக தற்போது எம்மால் குறித்த சிறுமியினுடைய மரணப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருதி, சிறுநீர் மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மருந்தின் அளவு கூடுதலாகச் செலுத்தப்பட்டதால் சிறுமியின் மரணம் நிகழ்ந்ததாக பரிசோதனை அறிக்கை வெளிவந்தால், உரியதரப்பினருக்கெதிராக மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.
மேலும் இதன் போது கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா மற்றும் தொம்மைப்பிள்ளை பௌவுள்ராஜ் ஆகியோரும் இந்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணையினைக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து, ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக் கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், மண்சரிவு போன்ற அச்சுறுத்தல்கள் நிலவும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு இடமாற்றவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
‘டித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல தேசிய பாடசாலையை இன்று, நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடும் காற்றினால் மரம் முறிந்து விழுந்ததில் முற்றாகச் சேதமடைந்த கெட்டவத்தை, யோதஉல்பத்த சமூக மண்டபத்தில் இயங்கிவந்த பாலர் பாடசாலையைப் பார்வையிட்ட பிரதமர், பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, பாதுகாப்பான ஓரிடத்தில் குறித்த பாலர் பாடசாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக வழங்கப் படுகின்றனவா என்பது குறித்துக் கவனம் செலுத்திய பிரதமர், அனர்த்தத்தினால் தொடர்ந்து இயங்க முடியாத அளவிற்குச் சேதமடைந்துள்ள பாலர் பாடசாலைகளைக் கண்டறிந்து, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மண்சரிவு காரணமாகக் கடும் சேதங்களுக்கு உள்ளான பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையையும் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் தியத்தலாவை தீரானந்த தேரர், ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, மாகாணப் பிரதம செயலாளர் அனுஷா கோகுல, மீகஹகிவுல தேசிய பாடசாலையின் அதிபர் எச்.டபிள்யூ.கே.ஏ. பத்மகுமார, பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் கே. இந்துமதி உள்ளிட்ட அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், ஹெம்மாத்தகம பிரதேச வைத்திய சாலைக்கு 28 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வைத்திய சாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மக்களினதும், பாடசாலை மாணவர்களினதும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவர்களினது அடிப்படை உரிமைகளை மீறக் கூடாது. பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் சரியான திட்டமொன்று இல்லாமையால் பிள்ளைகளே பாதிப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் விரும்புவது போல் ஜனவரி முதல் புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால், இது குறித்து சிந்தித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.
இத்தருணத்தில் மக்கள் எந்தளவு உதவியற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, இந்தப் பேரழிவால் 374,000 தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன.
23% விவசாய காணிகளும் 35% தேயிலைத் தோட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
மாதத்திற்கு ரூபா.48 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தேயிலை காணிகள் கூட அழிந்து போயுள்ளன.
அரசாங்கம் வீராப்பு பேசிக் கொண்டிருக்காமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் வழிமுறைமைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று 22.12.2025 இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த அனர்த்த பாதிப்புத்தொடர்பான இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், பாதிப்புக்களை சீரமைப்புச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேரலையில் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், உபாலி சமரசிங்க, செல்லத்தம்பி திலகநாதன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேன், வடக்கு மாகாண திணைக்கள அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட மட்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கம்பஹாவின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பேசியமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
அந்த மாணவி பரிசளிப்பு விழா மேடையில் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
குறித்த மாணவி பாடசாலை சார்பில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகளாக தாம் வெற்றிகளை குவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச போட்டிகளிலும் குறித்த மாணவி தனது திறமையை வெளிப்படுத்தி இருந்ததாகவும் இதன்போது குறிப்பிட்டார்.
பரிசளிப்பு விழாவின் ஒத்திகை ஒன்றுக்கு தாம் வராத காரணத்தினால் அதற்கு தண்டனையாக தமக்கு கிடைக்க வேண்டிய விருதினை அதிபர் தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.
விழா மேடையில் பாடசாலையின் அதிபரை விமர்சனம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் நிதி உதவியில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாக மக்களால் தம்மிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விவசாய நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான விபரங்களை வழங்குமாறு விவசாயத் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.
முல்லைத்தீவு – துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
உலக வங்கியின் நிதி உதவியில் விவசாய நவீன மயமாக்கல் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அறிகின்றோம்.
இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மாதுளைச் செய்கையும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழைச் செய்கையும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பப்பாசி மற்றும் நிலக்கடலைச் செய்கையும், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் பேஷன்ஃப்ரூட் செய்கையும் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அறிகின்றோம்.
அந்தவகையில் வெளிநாட்டு ஏற்றுமதி நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிவதுடன், இத்திட்டத்திற்கு ஒரு பயனாளிக்கு ஒருமில்லியன் வரையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.
அத்தோடு ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பாரிய நிதிச்செலவில் இத்திட்டத்திற்கு கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாரிய நிதிச் செலவில் இத்திட்டத்திற்கென உபகரணங்களும் பெறுப்பட்டுள்ளன.
அத்தகைய சூழலில் இவ்வாறு உலகவங்கியின் நிதி உதவியில் செயற்படுத்தப்பட்ட இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாக பலரும் என்னிடம் முறையீடு செய்துள்ளனர்.
குறிப்பாக இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்பட்ட கரைதுறைப்பற்றின் கொக்குத்தொடுவாய் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் பழம்பாசிப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.
இந்நிலையில் கொக்குத்தொடுவாயில் இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் மாதுளைச் செய்கையிலும் பாரிய குழறுபடிகள் இருப்பதாகவே என்னிடம் பலரும் முறையிட்டனர்.
மக்களுக்கு உரிய வகையில் உள்ளீடுகள் வழங்கப்படவில்லை எனவும், இத்திட்டத்தின் பிரகாரம் அப்பகுதியில் இரு கட்டடங்கள் அமைக்கப்படவேண்டிய நிலையில் ஒருகட்டடம் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதுடன், இரு கட்டடங்களும் அமைக்கப் பட்டுள்ளதாக உரிய தரப்பினரின் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.
குறித்த மாதுளைச் செய்கைத் திட்டம் செயற்பாடற்று தோல்வியடைந்த நிலையில் காணப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
அதேவேளை பழம்பாசிப் பகுதியில் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பப்பாசி செய்கையிலும் முறைகேடுகள் இருப்பதாகவே அறிய முடிகின்றது. குறிப்பாக செய்கைக்காக வழங்கப்படுகின்ற விதைப் பைக்கட்டுக்களில் விதை தொடர்பான தெளிவான விபரங்கள் வழங்கப்படவில்லை.
அத்தோடு பப்பாசித் திட்டத்திற்கென பாரிய நிதிச்செலவில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் பயன்பாடற்று சீரற்றநிலையில் காணப்படுவதுடன், பாரிய நிதிச் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள் களஞ்சிய அறைகளில் மூடிவைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் பேஷன்ஃப்ரூட் செய்கைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அறிகின்றோம் அந்தத் திட்டம் தொடர்பிலான விபரங்களையும் அறிய விரும்புகின்றேன்.
மேலும் இந்த திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்டரீதியான விபரங்களையும் அறிய விரும்புகின்றேன்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் எத்தனை பயனாளிகள் உள்வாங்கப்பட்டனர்?
இத்திட்டத்திற்கு மொத்தம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது?
இத்திட்டத்தினால் பயனாளிகள் நன்மை அடைந்தார்களா?
இத்திட்டத்தின் மூலம் செய்கை பண்ணப்பட்ட உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றதா?
எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது?
என்கின்ற விபரங்களை அறிய விரும்புகின்றேன்.
ஏன் எனில் இந்த திட்டத்திற்கென உலக வங்கியினால் பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு ஒன்று வழங்கப்பட்ட நிலையில், இத் திட்டத்தில் பாரிய ஊழல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவே என்னிடம் பலரும் முறையிட்டுள்ளனர்.
இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற சில இடங்களை நேரில் சென்று பார்த்தவரையில் எம்மாலும் அவ்வாறே அவதானிக்க முடிகின்றது.
அவ்வாறு இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் ஊழல்கள் இடம் பெற்றிருப்பின், இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரியப்படுத்த வேண்டும். அதன் மூலம் இது தொடர்பான முறையான விசாரணைகளை மேற்கொண்டு, ஊழலில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எனவே இத்திட்டம் தொடர்பான சகல விபரங்களையும் தரவுகளையும் பெற்றுக் கொள்ள விரும்புகின்றேன். விவசாயத் திணைக்களத்திடம் இத்திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களையும், தரவுகளையும் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
இந் நிலையில் உதவி மாகாண விவசாயப் பணிப்பாளர் பதிலளிக்கையில்,
விவசாயத்திணைக்களம் இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை மாத்திரமே வழங்கியது. இதுதவிர இந்தத் திட்டத்திற்கும் விவசாயத் திணைக்களத்திற்கும் வேறெந்தத் தொடர்புகளும் கிடையாது.
எனினும் இத்திட்டத்திற்கு எத்தனை பேர் உள்வாங்கப்பட்டனர் என்பது தொடர்பான விபரங்களையும், தற்போது எத்தனைபேர் இந்த செய்கைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பான விபரங்களையும் எம்மால் தரமுடியுமெனத் தெரிவித்தார்.