நிலைமையைக் கருத்திற் கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற் கொண்டு, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்காக இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டுமென அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் ஏனைய வகுப்புக்களிலும் உயர்தர வகுப்புக்களிலும் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் கல்வித் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியாது.
கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் இருக்கின்றன, அவற்றைப் பின்பற்றாமல் இறுதியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை முதலில் செய்ய முயற்சிப்பதால் இதனை வெற்றிகொள்ள முடியாது.
குறிப்பாக, பாடசாலைகளை பிற்பகல் 2.00 மணி வரை நடத்துவதும், பாடவேளைகளை 50 நிமிடங்கள் வரை நீடிப்பதும் தோல்வியடைந்துள்ளது, அதனை உடனடியாக மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் 6ஆம் தரத்திற்கும், ஜனவரி மாத இறுதியில் 1ஆம் தரத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், தற்போது அது பாரிய சிக்கலாக மாறியுள்ளது.
ஏனைய தரங்களுக்கான பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்குமாறு கூறப்பட்டாலும், அது இதுவரை நான்கு முறை சுற்றறிக்கைகள் மூலம் மாற்றப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதியில் பாடசாலை நேர அட்டவணைகள் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டு அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு கல்வி அமைச்சு தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கந்தசாமிநகர் கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள நித்தியநகர் கிராமத்திற்கு இன்று (26.12) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கள விஜயம் செய்திருந்தார்.
அண்மைய வெள்ளப் பாதிப்பின் பின்னர் பாதிக்கப்பட்ட தமது கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவொரு நிவாரண திட்டங்களும் வழங்கப்படவில்லையென்றும் தம்மை அரச அதிகாரிகள் எவரும் கண்டு கொள்ளவில்லை என்றும் குறித்த பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று குறித்த கிராமத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்திருந்தார்.
விடயம் தொடர்பில் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் தொலைபேசியூடாக விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், மேலதிக அரசாங்க அதிபரின் பணிப்பின்கீழ் மாவட்ட செயலகத்தின் விசாரணைக் குழுவினர் நித்தியநகர் கிராமத்திற்கு வருகை தந்து முறைப்பாடு தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியதுடன் வெள்ள பாதிப்புக்குள்ளான வீடுகளையும் பார்வையிட்டனர்.
அத்துடன் குறித்த கிராமத்தில் மிகமோசமாக பாதிப்படைந்துள்ள வீதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டிருந்தார். அவற்றினை புனரமைப்பது தொடர்பில் பிரதேச சபையினூடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் தேவைப்பாடுகள் நிறைந்த நித்தியநகர் லோகேஸ்வரா வித்தியாலயத்தையும் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த கிராமத்தில் புனரமைக்கப்பட்டு வரும் குளத்தினையும் ஆய்வு செய்திருந்தார்.
இதன் போது செட்டிகுளம் பிரதேசசபையின் உபதவிசாளர் தே.சிவானந்தராசா (ஜெகன்), பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், செட்டிகுளம் பிரிவு இணைப்பாளர் ச.பத்மசீலன் (ஜெகன்) ஆகியோரும் இணைந்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் இடம்பெற்ற விசாரணையில் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு டக்லஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, பின்னர் 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான ‘மாகந்துரே மதுஷ்’ என்பவரின் விசாரணையைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதத்தின் தொடர் எண்ணைச் சரிபார்த்த போது, சம்பந்தப்பட்ட துப்பாக்கி தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது.
இந்நிலையில் விசாரணையின் போது, அந்த சிரேஷ்ர அரசியல்வாதி அது எவ்வாறு காணாமல் போனது என்பதை வெளியிடத் தவறிவிட்டதாகவும், அதன்படி அவர் சிஐடியால் கைது செய்யப்பட்டார் என்றம் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முள்ளியவளை 8ம் வட்டார உறுப்பினருமான சின்னராசா லோகேஸ்வரன் கட்சியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடன் செயற்படும் வண்ணம் நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் உத்தரவை மீறி தேசிய மக்கள் சக்தியின் கரைத்துரைப் பற்று பிரதேச சபையின் பாதீட்டுக்கு வாக்களித்தமையால் கட்சியின் செயலாளரால் நீக்கப்பட்டுள்ளார்.
கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் போது ஆழிப் பேரலையினால் உயிரிழந்த 68 மாணவர்களுக்கு 26.12.2025இன்று கள்ளப்பாடு பாடசாலையில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ம.சுரேஸ்தரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில் உயிர்நீத்த மாணவர்களின் உறவினர்கள் பொதுச் சுடரினை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக கள்ளப்பாடு பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு மலர் தூவி தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும், உறவினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரம் முதல் தொடர் வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டு பல்கலைக் கழகங்களை முடக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களின் பீடாதிபதிகள் மற்றும் துறைகளின் பிரதானிகளை நீக்கும் அதிகாரம் பல்கலைக்கழக செனட் சபைக்கு சட்டமொன்றின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை திருத்தம் செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் பல்வேறு தடவைகள் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திற்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார்.
எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதமரின் வாக்குறுதியை மீறும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் எனவே குறித்த விடயத்தில் உடனடி தீர்வொன்றை வலியுறுத்துவதாகவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறின்றேல் அடுத்த வாரம் முதல் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களையும் முடக்கும் வகையில் தொடர் வேலை நிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் சாருதத்த இளங்கசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (26) அதிகாலை முந்தலம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிரதேச சபையின் மங்களஎலிய தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி தான் அனர்த்த நிவாரணக் கடமை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், குறித்த உறுப்பினர் பயணித்த சிறிய லொறி வண்டி மோதி விபத்து இடம்பெற்றதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் உறுப்பினர் தன்னைத் திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தான் முந்தலம பிரதேச செயலாளருக்குத் தெரியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற அனர்த்தக் குழுக் கூட்டத்தின் பின்னரும் குறித்த உறுப்பினர் தனக்குத் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தித் திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், குறித்த உறுப்பினர் இன்று காலை முந்தலம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜா-எல, தண்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டார்.
வேறு ஒருவரால் திருடப்பட்ட தங்க நகைகளை முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்துள்ளதாகவும், அந்த திருட்டுப் பொருட்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமலிருக்கவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமலிருக்கவும் 300,000 ரூபா பணமும் முக்கால் பவுன் தங்கமும் இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.
இதில் 250,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற போதே சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவித்தது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், தனது கட்சிக்காரரின் மகள் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும், மற்றைய பிள்ளை பெப்ரவரி மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த சந்தேகநபர் தொடர்பான பிணை கோரிக்கையை எதிர்வரும் தினத்தில் உரிய பிரதான நீதவான் நீதிமன்றில் முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு வருஷவிதான, சந்தேகநபரை ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.