முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கணவன், மனைவி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றைய தினம் (15) குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள், 61,000 ரூபாய் பணம் மற்றும் சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப் பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகரின் வழிகாட்டலில் மாவட்ட புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த இளைஞன்(வயது22) ஒருவர் போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட பிரான்ஸ் போலி கடவுச் சீட்டை வைத்துக் கொண்டு ஓமான், மஸ்கட் நகர் ஊடாக ஜெர்மனி நோக்கி பயணிக்க முயன்ற இளைஞனே குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவராவார்.
ஓமான், செல்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை 05.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த குறித்த நபர் அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு கரும பீடத்தில் தனது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இதன்போது ஏற்பட்ட சந்தேகத்தில் இளைஞனை தலைமை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போது, இளைஞனுடன் அவர் வைத்திருந்த அனைத்து ஆவணங்களும் எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, அவரின் கடவுச்சீட்டு போலியானது எனவும் அதில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் மற்றும் முத்திரைகளும் போலியானவை என்றும் தெரியவந்துள்ளது.
பின்னர் இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஒரு தரகருக்கு 30 இலட்சம் ரூபாய் பணம் வழங்கி குறித்த கடவுச்சீட்டை பெற்றதாகக் கூறியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞன், மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை திருகோணமலை கந்தளாய் ஈச்சலம்பற்று கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சலம்பட்டு பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படிக்கும் மாணவி என கூறப்படுகின்றது.
சந்தேக நபர் டிக்டொக் மூலம் மாணவியுடன் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர், நேரடியாக பேச வேண்டுமெனக் கூறி, லங்கா பட்டுன விஹாரைக்கு பின்னால் உள்ள கடற்கரைக்கு அழைத்து வந்துள்ளார்.
மாணவியும் மாணவனும் பேசிக் கொண்டிருந்த போது, மாணவனின் மூன்று நண்பர்களும் அங்கு வந்தனர், அதோடு மாணவியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈச்சலம்பட்டு பொலிஸாரிடம் மாணவி புகார் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரும் அவரது மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஈச்சலம்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன்
30 வருடங்களாக போரை நடத்திக் கொண்டு, தன்னுடைய தலைமைத்துவத்திலும் எவ்வித குறையும் வைக்காமல் செயற்பட்டவர் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என தெரிபே சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
தர்ம போதனையொன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விரும்பியோ விரும்பாவிட்டாலும் சிலரின் வார்த்தைகளில் வெளிவரும் ஒரு வசனம் தான் ‘சிங்கள மக்களின் ஞாபகம் ஒரு வாரம்தான்’ என்பது. இதை நானும் கேட்டிருக்கிறேன். இது பிரபாகரன் சொல்லிப் பிரபலமான வார்த்தைகளாகும்.
முப்பது வருடங்களாக அவரின் தலைமைத்துவ செயற்பாட்டில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. அது அவர்களின் தேசிய பற்றாகும். நான் கூறும் இவை சரியாகவோ பிழையாகவோ இருக்கலாம். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரபாகரனை தமிழர்கள் தெய்வமாக போற்றுகின்றனர். ஏனென்றால் அவர் தமிழர்களின் மனதில் ஆழமாக பதிவாகியுள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எங்கே ஒரு இடத்தில் இருந்த புத்தர் சிலையை கொண்டு வந்து வைத்து விட்டு பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.
அத்தோடு பெயர் பலகையை கழற்றிவிட்டு மீண்டும் நாட்டுகின்றனர். இதெல்லாம் காட்டு மிராண்டித்தன செயற்பாடுகளாகும். தமிழ் மக்களுக்கு பிரபாகரன் மாவீரன், தெய்வமாகும். அதே போன்று சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைந்த ஒரு சந்தர்ப்பம் இல்லை.
விகாரையில் விகாராதிபதி ஏதும் சொன்னால் ஆயிரம் காரணம் சொல்ல ஆட்கள் இருக்கின்றனர். அதனால் இதை பௌத்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (15) பிறப்பித்துள்ளார்.
இந்தநிலையில், வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறித்தல் வழங்கியது.
இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 8-12-205 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டபோது தேரர் முன்னிலையாகாத நிலையில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் முன்னிலையாகி, மட்டு தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்னலையாகி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று முன்னிலையாக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் மற்றும் மறைந்திருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றுள்ளதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதித்து கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டு எதிர்வரும் ஜனவரி 26 திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்சியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் அலுவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அலுவலர் சந்தேகநபர் நந்தகுமார் தக்சியுடன் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்டதாகவும், சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த நிலையில், பின்னர் அவரும் அவரைப் போலவே தோற்றமளிக்கும் இந்தச் சந்தேகநபரான நந்தகுமார் தக்சி உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேபாளத்தின் காத்மண்டு நகரிலுள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இஷாரா செவ்வந்தி மற்றும் நந்தகுமார் தக்சி ஆகிய இரண்டு சந்தேக நபர்களும் தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அலுவலர் கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உப சேவைக் கடமையில் இருந்த போது, இலக்கம் 03 சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்தகுமார் தக்சி என்ற சந்தேக நபரிற்கு பிஸ்கட் கொடுத்ததாகவும், அதனை சந்தேகநபர் பாதி உட்கொண்டதன் பின்னர் மீண்டும் குறித்த பொலிஸ் அலுவலருக்கு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், அவர் பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்கு அருகில் சென்றதாகவும், அவருடன் சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சிசிரிவி (CCTV) காட்சிகளைச் சோதனைக்கு உட்படுத்திய போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய இருவர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பெய்து வந்த மழை காரணமாக வெள்ளநீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டத்தை சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக வவுனியா, பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர். இதன்போது குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை பரிசோதனை செய்யும் போது குறித்த வீட்டில் டெங்கு நுளம்பு இனங் காணப்பட்டுள்ளன.
இதனை அடுத்து நுளம்புகளை கட்டுப்படுத்தி அப்பகுதியை சுத்தம் செய்து தமக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார பரிசோதர்களால் அறிவுறுத்தப்பட்டபோது சுகாதார பரிசோதர்களுடன் வீட்டு உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், சுகாதார பரிசோதர்களின் கடமைக்கும் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து சுகாதார பரிசோதகர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் வீட்டு உரிமையாளரை பொலிஸ் நிலையம் வருமாறு தெரிவித்தனர்.
இருப்பினும் பொலிஸாருடனும் குறித்த வீட்டு உரிமையாளர்கள் முரண்பட்ட நிலையில் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு (MOE) தெரிவித்துள்ளது.
அதன்படி, 6 ஆம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 11ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (15.12.2025) கொழும்பில் இடம்பெற்றது. இதில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் கலந்து கொண்டார்.
டித்வா புயலுக்கு பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையினை மீட்டெடுக்கத் தேவையான கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவன வழிகாட்டுதல்கள் இதன் போது எடுக்கப்பட்டது.
தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைத் திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட சபை அறிக்கைக்கு இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப் பட்டதுடன், தரவுகளைச் சேகரித்தல், காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்களை மறுசீரமைத்தல் மற்றும் நடைமுறை சாத்தியமான திட்டத்தை செயல்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில்,13 வருடக் கல்வியை நிறைவு செய்வதற்கு முன்னரே பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித மற்றும் பௌதிக வளங்களின் விநியோகத்தில் காணப்படும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, கல்வி முறைமை மீதான பெற்றோரின் நம்பிக்கை குறைந்துள்ளமையே இடைவிலகல்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன் இலவசப் பாடநூல்கள், சீருடைகள், பாடசாலை உணவு மற்றும் காப்புறுதி போன்ற பொருளாதாரத் தடைகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க நிதியியல் சுமைகளை எதிர்கொள்வதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த காலங்களில் தேசிய அளவில் நிலவிய இடையூறுகளால் ஏற்பட்ட ஒழுங்கற்ற பாடசாலை நாட்காட்டியையும் சுட்டிக் காட்டிய குறித்த அறிக்கை இது பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துவதையும் ஒட்டுமொத்த கற்றல் செயற்பாட்டையும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கல்விச் செயற்பாடுகளைச் சாதாரணமாக மாற்றுவதற்கும், பொது நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், கல்விச் சலுகைகளைத் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் சீரமைப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.