Wednesday, April 15, 2026
Huis Blog Bladsy 38

முல்லைத்தீவில் சீரற்ற வானிலை காரணமாக பல்லாயிரம் பேர் பாதிப்பு..!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 12691குடும்பங்களை சேர்ந்த 39193 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 656 குடும்பங்களை சேர்ந்த 2062 நபரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4400 குடும்பங்களை சேர்ந்த 13559 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5443 குடும்பங்களை சேர்ந்த 17132 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1408 குடும்பங்களை சேர்ந்த 4041 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 520 குடும்பங்களை சேர்ந்த 1811 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 264 குடும்பங்களை சேர்ந்த 588 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதில் உறவினர் வீடுகளில் 3620 குடும்பங்களை சேர்ந்த 9913 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1186 குடும்பங்களை சேர்ந்த 3178 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒதியமலைப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்..!

0

முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02.12.2025) உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் கிரிதரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விசேட அத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய 25,000 ரூபாய்..!

0

சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது அவற்றைச் சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் ரூபாய் 25,000 வழங்கப்படவுள்ளது.

தொடக்கத்தில் ரூபாய் 10,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

தாயின் காதலனால் கர்ப்பமான பாடசாலை மாணவி; தமிழர் பகுதியில் சம்பவம்..!

0

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் கனிஷ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையாரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலைக்கு இரண்டு மாதங்களாக செல்லாத குறித்த மாணவி தொடர்பாக பாடசாலை நிர்வாகம் அவரது தாயாரிடம் வினவியதாகவும் உரிய பதில் இன்மை காரணமாக தாயார் கூறிய முரண்பாடான பதில்களில் சந்தேகம் காணப்பட்ட நிலையில் தற்போது மாணவியின் தந்தை குறித்த விடயம் அறிந்து பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி அவரது தயார் தகாத உறவில் இருந்த நபரினால் பாலியல் வல்லுறவிற்கு உட்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவத்திற்கு உடந்தையான மாணவியின் தாயார் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் பெற்றோர் விவாகரத்து ஆகிய நிலையில் பிரிந்து வாழ்கின்றதாக தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கல்முனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வடக்கில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நடமாடும் மருத்துவ சேவை..!

0

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடமாடும் மருத்துவ கிளினிக்குகள் மற்றும் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மக்களுடன் நேரடியாக களத்தில் இணைந்து, எமது வைத்திய அதிகாரிகள் தங்கள் அர்ப்பணிப்பு, பொறுப்பு உணர்வு மற்றும் மனிதநேயப் பணிப்புலத்துடன் இந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எமது (GMOA) மருத்துவர்கள் வழங்கி வரும் பெரும் சேவையின் தேவையை இந்தப் பேரிடர் சூழல் மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அவசர வைத்திய தேவைகளுக்கான வாட்ஸ்அப் இணைப்பு இவ்வனர்த்த நிலைமையை முன்னிட்டு, வடமாகாணத்தில் பொது மக்களின் அவசர வைத்திய தேவைகள் எதற்காகவும் தொடர்பு கொள்ள (76) 220 2990 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எண்ணிற்கு தகவல் அனுப்பி, உங்களின் அவசர வைத்திய ஆலோசனை மற்றும் சிகிச்சை உதவிகளைப் பெறலாம். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளராகிய நான், இந்த மனிதநேய சேவையில் பங்கேற்று வரும் அனைத்து வைத்திய அதிகாரிகளுக்கும், அவர்களை ஆதரித்து செயல்படும் சுகாதாரத் துறையினருக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வடமாகாண மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சேவையை உறுதி செய்யும் பாரிய பொறுப்பில் உறுதியாக நிற்கிறது என மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்திற்கான அவசர தேவைப் பட்டியலை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை..!

0

வட மாகாணத்திற்கான அவசர தேவைகள், என்ன பிரச்சினை இருக்கின்றன என்பது தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி இதன்போது ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்களுக்கு இடையிலான Zoom கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

இதன் போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது தெரிவித்த கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தை விட மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம், குடிநீர் போன்றன முல்லைத்தீவில் மிகவும் பிரச்சினையாக உள்ளது. பாலங்கள் உடைந்திருக்கின்றன.

மன்னாரில் பிரதான வீதிகளில் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. முல்லைத்தீவிற்கு தொலைத் தொடர்பு சேவை வழமைக்கு திரும்பவில்லை

வடக்கில் 159 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் நாளை அவர்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் போது யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர்,

யாழில் பெரிதாப் பிரச்சினை இல்லை. கிளிநொச்சியில் இரணைமடுவில் நீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் உதவிகளை வழங்கினார்களா என ஜனாதிபதி எழுப்பிய கேள்விக்கு இராணுவத்தினர் பூரண ஆதரவை வழங்கி வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள், என்ன பிரச்சினை இருக்கின்றன என்பது தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டித்வா புயலின் தாக்கம்; உயிரிழப்புகள் 390 ஆக அதிகரிப்பு..!

0

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 352 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (01) மாலை​ 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 382,651 குடும்பங்களைச் சேர்ந்த 13,373,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

432 வீடுகள் முழுமையாகவும், 15,688 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அத்துடன் 1,368 பாதுகாப்பு முகாம்களில் 57 ஆயிரத்து 790 குடும்பங்களைச் சேர்ந்த 204,597 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரபல ஹோட்டலின் பாதுகாப்பு மேலாளர் கைது..!

0

கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலின் பாதுகாப்பு மேலாளர், பயிற்சி விடுதி மாணவர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மேலாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளில், ஒரு அறைக்குள் இருந்த இரண்டு பயிற்சியாளர்களை அந்த நபர் அறைந்து, பயிற்சியாளர்கள் குழுவை துஷ்பிரயோகம் செய்யும் விதத்தைக் காட்டியதைத் தொடர்ந்து இந்த கைது நடந்துள்ளது.

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்..!

0

பேரிடர் காலப்பகுதியில் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்க முடியாது போனவர்கள், எந்தவித இடையூறுமின்றி தமது வாகனங்களை செலுத்துவதற்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

காலாவதியாகிய சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் காவல்துறை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த முடியும் என இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மூளையில் கிருமித் தொற்று; யாழ். போதனாவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

0

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த சுப்ரமணியம் தசிகரன் என்ற 31வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று (30) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபருக்கு கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!