நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்கு பண்டார கைத்துப்பாக்கியுடன் மேடையில் நின்றமை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குறித்து விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்படி கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. உரையாற்றும் போது அருகில் கழுத்துப் பை ஒன்றை தாங்கியபடி கைத்துப்பாக்கி ஒன்றைச் சுடுவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்கும் பாணியில் உதித் லொக்கு பண்டார நின்று கொண்டிருந்தமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தற்போது சுதந்திரக்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உதித் லொக்கு பண்டார அப்படி இருந்தது ஏன்? அவர் நாமல் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கினாரா?
அல்லது தற்பாதுகாப்புக்காக அப்படிச் செயற்பட்டாரா என்ற கோணங்களில் நோக்கப்படுவதால் விசாரணைகளை நடத்த தீர்மானித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றை நுகேகொடை பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரிடம் கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உதித் லொக்குபண்டார மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் வாக்குமூலம் பெறவும் காவல்துறை தயாராகி வருகிறது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து 24ஆம் திகதி திங்கட்கிழமை உயிர் மாய்த்துள்ளார்.
மூளாய் – ஆலடி பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கீர்த்திகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுமி திங்கட்கிழமை (24) காலை சுருக்கிட்டுள்ளார். இதை அவதானித்த தாயார் கயிற்றினை அறுத்துள்ளார். பின்னர் அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது.
அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்து திரும்பி சென்றது.சிறுமியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள், சரியான வேலைப் பயிற்சி மற்றும் ஆதரவு இல்லாததால் பாலியல் தொழிலுக்குத் திரும்புகிறார்கள் என்று பிரஜா சக்தி அபிவிருத்தி அறக் கட்டளை தெரிவிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இளம் பெண்களில் பெரும்பாலானோர் இந்த நிலையங்களில் சேர்க்கப்படுவதற்கு முன்னதாக பாலியல் துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தலை எதிர்கொண்டதாக அறக்கட்டளையின் நிர்வாக பணிப்பாளர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இளம் பெண்கள் இந்த நிலையங்களை விட்டு வெளியேறும் போது, வேலை தேடுவதில் சிரமப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். பயிற்சி அல்லது பாதுகாப்பு இல்லாததால், பலர் பணம் சம்பாதிப்பதற்கான எளிதான வழியாக பாலியல் தொழிலைத் தேர்வு செய்கிறார்கள்.
இந்த இளம் பெண்களை பாலியல் தொழிலை விட்டு வெளியேற அறக்கட்டளை அழுத்தம் கொடுப்பதில்லை, ஆனால் பாதுகாப்பான, சிறந்த வாய்ப்புகளைக் கண்டறிய உதவும் எந்தவொரு அரசாங்கத் திட்டத்தையும் ஆதரிக்கத் தயாராக உள்ளது என்று லட்சுமன் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போது, சுமார் 10,000 பெண் பாலியல் தொழிலாளர்கள் அறக் கட்டளையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த இளம் பெண்களை 18 வயதில் விடுவிப்பதற்குப் பதிலாக, 20 அல்லது 21 வயது வரை நன்னடத்தை மையங்களில் தங்க அனுமதிக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெதுப்பக உணவுகள் தயாரித்தல், அழகு கலை மற்றும் NVQ சான்றிதழ்களை வழங்குதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அவர்களுக்குச் சரியான வேலை வாய்ப்பைக் கண்டறிய உதவும் என்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் நிர்வாக பணிப்பாளர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் இன்று (24) கொழும்பில் உள்ள கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் கேத்தரின் மார்ட்டினுடன் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் பிரிவினைவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை கனேடிய அரசாங்கத்திடம் வெளியுறவு அமைச்சர் ஹார்த் வலியுறுத்தினார்.
இதில் விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரிப்பது மற்றும் இலங்கையில் உள்ள இன சமூகங்களிடையே பிளவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
கனடாவில் உள்ள சில குழுக்களின் நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹெரத் குறிப்பிட்டார்.
இதனிடையே, விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது என்றும், விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றும் உயர் ஸ்தானிகர் கூறினார்.
வெளியுறவு அமைச்சகத்தின் கொள்கையின் படி, இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடா தொடர்ந்தும் உறுதி பூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில் வந்தாறு மூலையில் நடந்த விபத்தில் சிக்கி ஓட்டமாவடியைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவரொருவர் இன்று திங்கட்கிழமை (24.11.2025) மாலை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவரான முஹம்மத் மஸூத் (வயது-23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.
கொழும்பு கஹதுடுவாவில் உள்ள வெதாரா மாவட்ட மருத்துவமனையில் 26 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக 40 வயது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையில் அளித்த புகாரில், அந்தப் பெண் நவம்பர் 12 ஆம் தேதி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்ததாகவும், சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டு நவம்பர் 19 ஆம் தேதி மீண்டும் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
முறைப்பாட்டின் படி, குறித்த பெண் நவம்பர் 19 ஆம் தேதி சிறுநீர் பரிசோதனை அறிக்கையுடன் OPDக்கு வந்ததாகவும், மருத்துவர் ஒரு பெண் உதவியாளரின் உதவியின்றி அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவளைப் பரிசோதிப்பது போல் நடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் இன்று மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக அருண பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மஹிந்த இலேபெருமவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை ஊடக அடக்கு முறைக்கான ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
“பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டம் ஊடக அடக்கு முறைக்கான ஓர் ஆயுதமாகும். மஹிந்த இலேபெருமவை பொலிஸ் விசாரணைக்கு அழைப்பது தவறானது”
கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியின் போதும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் பயன்படுத்தப்பட்ட பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை இரத்து செய்யுமாறு சுதந்திர ஊடக இயக்கம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது.
அவ்வாறு இருக்கையில், இத்தகைய அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய அரசியல் இயக்கம் ஒன்று தலைமையேற்று நடத்தும் தற்போதைய அரசாங்கம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்த அல்லது ஒடுக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்க ஒரு நிலையாகும்.
பதிவாகியுள்ள மிகச் சமீபத்திய சம்பவம், அருண பத்திரிகையின் ஆசிரியர் மஹிந்த இலேபெரும வாக்குமூலம் அளிப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப் பட்டுள்ளமையாகும்.
பொலிஸ் அறிக்கைகளைப் பெறுவதற்கு கிராம உத்தியோகத்தர் சான்றிதழுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவரின் சான்றிதழும் அவசியம் எனக் குறிப்பிட்டு, இலேபெரும ஆசிரியராகப் பணியாற்றும் அருண பத்திரிகையில் செய்தி வெளியானதே இதற்குக் காரணமாகும்.
பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஆனந்த விஜேபால, இச்சந்தர்ப்பத்தில் மக்கள் நிராகரித்த கடந்த அரசாங்கங்களைப் போன்று தன்னிச்சையாக நடந்து கொள்ளக் கூடாது. செய்தி தவறாக இருப்பின் பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி உண்மையை வெளியிடுவதும், செய்தி உண்மையாக இருப்பின் அந்த தவறான நடைமுறையை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்துவதுமே அவரது அமைச்சுப் பதவிக்கான பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதாகும்.
எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் உண்மையானதாகும். முழு சமூகமும் அந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொலிஸ் சான்றிதழைப் பெறுவதற்கு அரச அதிகாரியான கிராம உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்தலைப் பெறுவது தவறல்ல.
ஆனால் அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கக்கூடிய சிவில் குழுவொன்றின் தலைவரிடமிருந்து இவ்வாறான உறுதிப்படுத்தலைப் பெற வைப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
ஏனெனில் அத்தகைய நபர்கள் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்வார்கள் என்று கூறுவது கடினமாகும்.
அவ்வாறிருக்கையில், அமைச்சர் பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டம் பற்றிக் குறிப்பிட்டு ஊடகவியலாளர் மஹிந்த இலேபெருமவை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்கவோ அல்லது தனது பொறுப்பில் உள்ள பொலிஸாருக்கு அழைக்கவோ முயற்சிப்பது அரசியல் ரீதியாக தவறான முன்னுதாரணமாகும்.
இந்நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தின் ஊடாக இவ்வாறான நடத்தைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது உட்பட ஒட்டுமொத்த மாற்றத்தையே எதிர்பார்த்தார்கள் என்பது சுதந்திர ஊடக இயக்கத்தின் நம்பிக்கையாகும்.
எனவே, ஊடகவியலாளர் மஹிந்த இலேபெருமவை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பது செய்யக்கூடாத ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டி அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், பொலிஸாருக்கு ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அவரிடம் செல்ல முடியும் என்பதையும் அறியத் தருகிறோம்.
அத்தோடு, அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு பதிலளிக்கும் உரிமை இருப்பதால் பத்திரிகையைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் உள்ளதென்பது சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைப்பாடாகும். மேலும், சில சந்தர்ப்பங்களில் அடக்குமுறைச் சட்டமாகவும், சில ஊழல் மிக்க அரசியல்வாதிகள் ஊடகங்களிடமிருந்து தமது நிர்வாணத்தை மறைத்துக் கொள்ளும் திரையாகவும் அமையும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை ஊடகவியலாளர்களுக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் எதிராகப் பயன்படுத்த வேண்டாம் என சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்துகிறது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழலை முற்றாக ஒழிப்பதாக வழங்கிய வாக்குறுதிகளை இத்தகைய பரந்த சீர்திருத்தங்களின் மூலமே நிறைவேற்ற முடியும்.” என்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடைந்தது.
கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, இரண்டாவது முறையாகவும் தவிசாளர் ஹர்ஷ ரத்நாயக்க, எவ்வித திருத்தங்களும் இன்றி சபையில் சமர்ப்பித்தார்.
அதற்கு தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக தமது வாக்குகளை அளித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள், பொதுஜன ஐக்கிய முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள், பொது முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள், அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது 04 மேலதிக வாக்குகளால் கந்தகெட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தோல்வியடைந்தது.
யாழ் – புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மது அருந்த சென்ற நபர் ஒருவர் இருவரால் தாக்குதல்களுக்கு உள்ளானார்.
தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவர்மீது தாக்குதலை நடத்திய இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், அவர்களில் ஒருவரை இன்றைய தினம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 25 வயது யுவதி ஒருவர் காதலனை ஏமாற்றி சுவிஸிலிருந்து வந்த குடும்பஸ்தருடன் தொடர்பட்டு சுவிஸ்லாந்து சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
யாழ் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த 40 வயதான குறித்த சுவிஸ் குடும்பஸ்தர் சுவிஸில் மனைவியை விவாகரத்து செய்த பின் கடந்த வருட தொடக்கத்திலிருந்து வடமராட்சி கிழக்கு மற்றும் கிளிநொச்சியில் சில மாதங்கள் தங்கியிருந்த பின் மீண்டும் சுவிஸ் சென்றுள்ளார்.
அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவரை யாரும் அறியாத வண்ணம் பதிவுத் திருமணம் முடித்துள்ளார். ஆனால் அந்தப் பதிவுத் திருமணம் யுவதியின் பெற்றோருக்கு தெரியும் என காதலன் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த யுவதி வவுனியா பல்கலைக் கழகத்தில் கற்று வந்ததுடன் அங்கு கல்வி கற்றுவந்த விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை காதலித்தும் வந்துள்ளார்.
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், காதலனின் சகோதரியின் திருமணம் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என காதலியின் பெற்றோரால் கூறப்பட்டு வந்ததாம்.
இந் நிலையிலேயே குறித்த யுவதி தனது காதலனுக்கும் தெரியாமல் சுவிஸ்லாந்துக்கு சென்றுள்ளதாக காதலன் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புக்கு தனியார் வங்கி ஒன்றின் பரீட்சை ஒன்று எழுதுப் போவதாகவும் 5 நாட்கள் அதற்காக கொழும்பில் தங்கியிருக்கப் போவதாகவும் தனது தாயாருடன் கொழும்பு சென்று அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து பரீட்சை எழுதி விட்டு வரப் போவதாகவும் காதலனுக்கு தெரிவித்து காதலனை ஏமாற்றிவிட்டு சுவிஸ் சென்றுள்ளார் குறித்த யுவதி.