மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக நான்கு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
தொல்பொருள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருட்கள் உள்ள இடங்களுக்கான திசைகளைக் காட்டும் வகையில் திசைப் பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை நிறுவும் பணியை கடந்த நவம்பர் 3 ஆம் திகதி ஆரம்பித்திருந்தது.
அதன் பின்னர், பிரதேச சபை ஒன்றின் அதிகாரிகளினால் இப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதுடன் அப்பலகைகள் கழற்றி அகற்றப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. அதற்கமைய உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, இன்று (24.11.2025) நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இதற்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கும் சுகாதார அமைப்புக்கும் தீர்வுகளை அறிவிப்பதற்கு பொறுப்பானவர்களுக்கு 48 மணி நேரம் கால அவகாசம் வழங்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
48 மணி நேரத்திற்குள் தீர்வுகளை வழங்க முடியாவிட்டால், 26 ஆம் திகதி நடைபெறும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைப்பின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுடன் தொடர்ச்சியான தீர்வுகளை அறிவிப்பதன் மூலம் சுகாதார அமைப்பில் தற்போதைய சிக்கல் நிறைந்த சூழ்நிலையைத் தீர்க்க ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் பிற பொறுப்பான நபர்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்று சங்கம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியான பணிபகிஸ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதமர் முன்னெடுக்கும் கல்விக் கொள்கைகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சமூகத்திடம் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக குற்றம் சுமத்திய ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளின் நேரத்தை இரண்டு மணிவரை நடாத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முடிவும் தவறான தீர்மானம் என்றார்.
அத்துடன் பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் போது முஸ்லிம் பிள்ளைகள் வெள்ளிக்கிழமைகளில் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்படும்.
மேலும் இம்முறை அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் தொகையும் மிக சொற்பமான நிலையில் இந்த விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்றில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவபடுத்தும் உறுப்பினர்கள் கூட எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமை கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமை, மற்றும் சுபோதினி அறிக்கையிலும் விடயங்கள் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவும் இது தொடர்பாகவே தமது பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. என்றார்.
ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழு ஒன்று சனிக்கிழமை (22) மாலை குறித்த துப்பாக்கியை மீட்டு எடுத்துச் சென்றிருப்பதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி ஏதாவது குற்றச் செயலுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதா அல்லது கடந்த காலங்களில் அப்பகுதியில் இயங்கிய ஆயுதக் குழுக்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதா என மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் 07 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக தனது தந்தை இவ்வாறு ஆயுதத்தை மறைத்து வைத்திருந்ததை மகன் அறிந்து அத்துப்பாக்கியை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியை கடிதம் ஊடாக அணுகியுள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் குறித்த பிரிவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் உள்ள பொலிஸ் குழுவினர் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள வீட்டை குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஊடாக அறிவித்த நபருடன் வருகை தந்து அவ்வாயுதத்தை எடுத்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாயுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சந்தேககிக்கப்படும் நபர் விமான ரிக்கட் மற்றும் விசா வழங்குதல் தொடர்பான உப முகவராக செயற்பட்டுள்ளதுடன் சுமார் 7க்கும் மேற்பட்ட மொழியறிவு கொண்டவராக தன்னை இனங்காட்டி சமூகத்தில் நடமாடி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இளவரசர் நாமல் ராஜபக்சவின் கனவானது ஐஸ்லாந்தில் மீண்டும் கலைந்துள்ளது என்பதையே அரசுக்கு எதிரான நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நுகேகொடைக் கூட்டத்தை குழப்புவதற்கு ஆளுங்கட்சி சதி செய்தது என்று கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. உண்மையில் நுகேகொடை கூட்டத்துக்கு அரசு எவ்வித இடையூறும் செய்யவில்லை.
இளவரசர் நாமல் ராஜபக்சவின் கனவானது ஐஸ்லாந்தில் மீண்டும் கலைந்துள்ளது என்பதையே நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
ரணில், மகிந்த போன்றவர்களை மக்கள் விரட்டியடித்தனர். எனவே, அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்தவர்களுக்கு மீள உயிர் கொடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப் படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்று(23.11.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எம்முடைய ஆட்சியில் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வோம்” என தற்போதைய ஜனாதிபதி அவரது ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மேடைகளில் முழங்கினார். இது தமிழர்களுக்கு கொடுத்த அரசியல் வாக்குறுதியாகும்.
இதனை நிறைவேற்றுவதைவிடுத்து இன்று வரை காலம் தாழ்த்துவது என்பதும் அது தொடர்பில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காதது என்பது அரசியல் வாக்குறுதி கொலையாகும்.
இதனையே கடந்த கால ஆட்சியாளர்களும் செய்தனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பல்வேறு மட்டங்களில் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடத்தி குரல் கொடுத்தப் போதும் கடந்த கால ஆட்சியாளர்கள் அதற்கு செவிமடுக்கவில்லை.
அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றே சிந்தித்தனர். தற்போதைய ஜனாதிபதி அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என கூறியபோது அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பமும் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் மகிழ்ந்தனர்.
அதற்கு தமிழர்கள் தம் வாக்குகளை அள்ளி வழங்கி நன்றி தெரிவித்தார். அந்த நன்றி உணர்வின் மீது தற்போதைய அரசாங்கம் மண்ணை அள்ளி கொட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து அமைதியோடு பார்க்கும் நிலையிலும் தமிழர்கள் இல்லை எனலாம்.
தற்போதைய அரசியல் கைதிகள் அனைவரும் தண்டனை காலத்தை விட அதிகமான காலத்தை சிறைகளுக்குள் கழித்துவிட்டனர்.
தற்போது நிலையில் இவர்களுடன் சேர்ந்து இவர்களது குடும்பங்களும் தண்டனையை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தப் போதும் அது நடக்கவில்லை. ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதன் மூலம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க முடியும். அதனை தற்போதைய ஜனாதிபதி செய்வார் என எதிர்பார்க்கின்றோம்.
அதேபோன்று அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து தமிழ் மக்களின் அரசியல் கௌரவத்தையும் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றுமாறு கேட்கின்றோம்.
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப் படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்.
தமிழர் தாயக அரசியல் பலமடைந்து முன் செல்வதற்கான உறுதி ஏற்று சுடரேற்றுவதன் மூலம் தமிழ் தேசம் ஒளி வீசும்.அதுவே மாவீர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனும் தமிழர் தாயகத்திற்கு கடமையுமாகும் என்பதை உணர்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன.
Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, நாட்டின் 25% ஆனோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் வேறு பல நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்புகள் நாட்டில் தற்போது வறுமை நிலையானது 40-50% க்கு இடையில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.
நாட்டில் ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை யாதென்பதை தற்போதைய அரசாங்கத்திற்கோ அல்லது முந்தைய அரசாங்கத்திற்கோ சரியாகத் தெரியாது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூட இன்னும் இதை துல்லியமாகக் கணக்கிடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் காலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு, அம்லங்கொடை தேர்தல் தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதில் பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
வீட்டு அலகின் வருமான மற்றும் செலவின கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்த வேளையே, இதை செய்திருக்க வேண்டும்.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமானது, ஒரு வீட்டின் உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளைக் கணக்கிட்டு வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்து, வறுமைக் கோட்டில் இருப்பவர்கள் மற்றும் அதற்குக் கீழே இருப்பவர்களை ஏழ்மையடைந்தோர் என அடையாளப்படுத்துகிறது.
இதைக் கணக்கெடுக்காது, அஸ்வெசும வழங்கப்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்டப்புற வறுமையை சரியாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அஸ்வெசும வழங்கப்பட்டது.
தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றன. பலர் அஸ்வெசும கோரி விண்ணப்பித்த போதிலும், அவர்களில் உண்மையான வறியோரைக் கண்டறிய எந்த விஞ்ஞானபூர்வ அளவுகோல்களும் இல்லை.
இது இவ்வாறு இருக்கத்தக்க, இப்போது பிரஜா சக்தி என்ற புதிய பெயரில், திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரஜா சக்தி வேலைத்திட்டத்தில் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கும் இந்தத் தலைவர்களின் பரிந்துரை தேவையாம். தமது கட்சிக் கட்டமைப்பை கிராமிய மட்டத்தில் பலப்படுத்திக் கொள்வதற்கே பிரஜா சக்தி வேலைத்திட்டம் ஊடாக இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட போலி பிம்பங்களால் இன்று மக்களே இறுதியில் ஏமாந்தும் உதவியற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
மறுபுறம் உழைக்கும் வர்க்கத்தை காக்க வந்த ஜே.வி.பி தலைவர்கள் இன்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை 2026ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் முழுமையாக கைவிட்டுள்ளதாகவும், வடக்கு-கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் எந்த திட்டமும் அரசினால் முன் வைக்கப்படவில்லை எனவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2030 இல் 8 பில்லியன் வருமானத்தை சுற்றுலாத் துறையிலிருந்து எதிர்பார்க்கிறீர்கள், அதற்கு 4 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.
ஆனால் உங்களது பாதீட்டில் சுற்றுலாத்துறை சார்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்கு எத்திட்டமும் இல்லை. சுற்றுலாவிற்கான உட்கட்டமைப்பு வசதிகள் அங்கில்லை. சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறையில் முதலீடுகள் இல்லை. வடக்கில் சுற்றுலாவை மேம்படுத்த சந்தைப்படுத்தல் தொடர்பாக திட்டம் ஏதுமில்லை.
ஆகையால் இவ்விடயம் பற்றி அதிக கவனமெடுத்து வடக்கு கிழக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்
இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று, நவம்பர் 24 அன்று தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1968 இல் பிறந்த ஜனாதிபதி திசாநாயக்க பல தசாப்தங்களாக நீடித்த தனது வாழ்க்கையில் இலங்கை அரசியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
ஆரம்பக் கல்வி மற்றும் பல்கலைக் கழக வாழ்க்கை
ஜனாதிபதி திசாநாயக்க தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் தனது கல்வியைத் தொடங்கினார், பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் சேர்ந்து, உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சிறந்து விளங்கினார். 1992 இல், அவர் களனி பல்கலைக் கழகத்தில் அறிவியல் பீடத்தில் நுழைந்தார், 1995 இல் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அவரது அரசியல் பயணம் அவரது பல்கலைக்கழக ஆண்டுகளில் தொடங்கியது, 1987 இல் சோசலிச மாணவர் சங்கத்தில் ஒரு ஆர்வலராக ஆனார். அதே ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அரசியலில் நுழைதல்
1993 ஆம் ஆண்டு, அரசின் அடக்குமுறைக்குப் பிறகு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மீண்டும் எழுச்சி பெற்றதால், திசாநாயக்க மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1997 ஆம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார், அதே ஆண்டு ஜே.வி.பி மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு வாக்கில், அவர் ஜே.வி.பியின் அரசியல் குழுவில் இணைந்தார்.
திசாநாயக்க 1999 மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாணத்திற்கான ஜே.வி.பியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு, தேர்தல் அரசியலில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். 2000 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
பாராளுமன்றம் மற்றும் அமைச்சர் பதவிகள்
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், திசாநாயக்க குருநாகல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (யு.பி.எஃப்.ஏ) அரசாங்கத்தின் கீழ் விவசாயம், நிலம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2008 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2010 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். 2015 ஆம் ஆண்டு, அவர் நாடாளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தலைமைத்துவம்
பெப்ரவரி 2, 2014 அன்று நடைபெற்ற ஜே.வி.பி.யின் 7வது தேசிய மாநாட்டில் திசாநாயக்க அதன் தலைமையை ஏற்றுக் கொண்டார். 2019 ஆம் ஆண்டு, ஜே.வி.பி உட்பட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி (NPP) உருவாவதற்கு அவர் தலைமை தாங்கினார்.
செப்டம்பர் 21, 2024 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் வரலாற்றைப் படைத்தார், இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் காணப்படுகின்றது.
2026 ஜனவரியில் அமுலுக்கு வர உள்ள அரசின் கல்வி சீர்திருத்தங்களை எதிர்த்து, ஆசிரியர்களும் அதிபர்களும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் நாடளாவிய வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதால், கல்வித் துறையில் பெரும் குழப்பம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கொழும்பு மற்றும் காலி/ களுத்துறை பகுதிகளில் நேற்று தனித்தனியாக பத்திரிகையாளர் சந்திப்புகள் நடைபெற்றன. பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படுவது உள்ளிட்ட சீர்திருத்தங்கள், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனை செய்யாமல் திணிக்கப்படுவதாக சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
களுத்துறை மாவட்ட ஐக்கிய اسசிரியர் சங்கச் செயலாளர் தரிந்து தில்ஷான் கூறியதாவது,
2024 தேர்தல்களில் NPP-ஐ ஆசிரியர்கள் ஆதரித்தது கல்வித் துறையின் நீண்டநாள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையினால். “அதற்கு பதிலாக எங்களின் விருப்பத்திற்கு முற்றிலும் முரணான சீர்திருத்தங்களை கொண்டு வருகின்றனர். எந்த ஆசிரியருடனோ, அதிபருடனோ ஆலோசனை செய்யவில்லை,” என்ற அவர், இந்த நடவடிக்கையை “தோற்கடிக்க” சங்கங்கள் உறுதியுடன் உள்ளன என்றார்.
இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் (CTU) பிரியந்த பெர்னாண்டோ கூறியதாவது,
பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இந்த மாற்றங்களுக்கு எதிராக உள்ளனர். “ஊதிய வேறுபாடுகளை சரிசெய்வார்கள் என்று நாங்கள் நம்பி வாக்களித்தோம். ஆனால் யாரும் கேட்டுக் கொள்ளாத சீர்திருத்தங்களே வந்துள்ளன,” என அவர் கூறி, அனைத்து சங்கங்களும் டிசம்பர் 12 வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்றார்.
இங்கு CTU பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது,
அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளது. தலைவர் அனுர குமார திஸாநாயக்க சமீபத்தில் பாராளுமன்றத்தில், ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினைகள் 2027 வரை தீர்க்க முடியாது என்று கூறியது, “வாக்குறுதியின் முற்றிலும் எதிர்மறை” என அவர் குறிப்பிட்டார். “ஆசிரியர்களின் உரிமைக்காக பல ஆண்டுகளாக போராடிய CTSU கூட இப்போது எங்களுடன் இணைந்துள்ளது,” என்றார்.
மேலும், கல்வி தொழில்முறை சங்கத் தலைவர் வெண். உலாபனே சுமங்கல தேரர் கூறும் போது,
பல தொழிற் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் இணைவதோடு, அரசு சீர்திருத்தங்களை வாபஸ் பெறவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என எச்சரித்தார். பரவலான எதிர்ப்புகள் இருந்த போதும், அரசு ஏற்கனவே சுற்றறிக்கைகளை வெளியிட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் இதுவரை கல்வி அமைச்சு அதிகாரிகளிடமிருந்து கருத்து பெற முடியவில்லை.