Sunday, March 8, 2026
Huis Blog Bladsy 85

எரிபொருள் விலையில் திருத்தமில்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

0

இந்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 305 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 289 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அதேபோல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மாரீசன் திரைப்படம் – திரை விமர்சனம்

0

தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் : சுதீஷ் சங்கர்
நடிப்பு : வடிவேலு, பஹத் பாசில், விவேக்பிரசன்னா, சித்தாரா, கோவை சரளா
இசை : யுவன்சங்கர்ராஜா
ஒளிப்பதிவு : கலைச்செல்வன் சிவாஜி
வெளியான தேதி : ஜூலை 25.20.25
நேரம் : 2 மணிநேரம் 34 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

அல்சைமர் என்ற ஞாபக மறதிநோயால் அவதிப்படும் வடிவேலுவின் வங்கி கணக்கில் ரூ 25 லட்சம் இருப்பதை அறிந்த திருடனான பஹத் பாசில், அதனை அபகரிக்க அவர் பின்னாலேயே சுற்றுகிறார். வடிவேலு வைத்திருக்கும் ஏ.எடி.எம் இலக்கத்தை பஹத் பாசில் தெரிந்து கொண்டாரா? பணத்தை வடிவேலு இழந்தாரா என ஆரம்பிக்கிறது கதை. ஆனால், இடைவேளைக்குபின் வடிவேலு கதாபாதிரத்தில் அதிரடி மாற்றங்கள். சில ‘சம்பவங்களை’ செய்கிறார். உண்மையில் வடிவேலு யார்? வடிவேலு, பஹத் பாசில் உறவு எப்படி முடிகிறது என்பது மாரீசன் கதை.

இத்திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி இருக்கிறார். கிருஷ்ண மூர்த்தி இத் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.

பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து விடுதலையாகும் திருடனான பஹத் பாசில், நாகர்கோவிலில் ஒரு வீட்டில் திருட நினைக்கிறார். அங்கே இருக்கும் ஞாபக மறதிக்காரரான வடிவேலு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபகரிக்க நினைக்கிறார். அதற்கு அவரின் ஏடிஎம் அட்டையின் இரகசிய இலக்கம் தேவைப்படுகிறது. அதை தெரிய வடிவேலு சொல்படி திருவண்ணாமலை, கோவை என அவருடன் மோட்டார் சைக்கிளில் சுற்றுகிறார். இப்படி பயணத்திலேயே முதற்பாதி முடிந்துவிடுகிறது.

அடுத்த பாதி கதை வேறு மாதிரி நகர்கிறது. வடிவேலுவின் உண்மையான குணம், அவர் நோக்கம் வெளிப்படுகிறது. பின்னர் திரைப்படத்தின் இறுதியில் இன்னொரு டிவிஸ்ட் என ரசிகர்களை ஈர்க்க வைத்துள்ளது மாரிசன்.

சற்றே வயதான வேடத்தில், தனக்கே உரிய, வழக்கமான உடல் பாவனை, டயலாக் டெலிவரி, நகைச்சுவை என எதையும் வெளிப்படுத்தாமல் கதைக்கு தக்கபடி நடித்து இருக்கிறார் வடிவேலு. கலகலவென, காமெடி செய்யும் வடிவேலுவை இப்படி பார்ப்பது முதலில் வித்தியாசமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் அவரின் கதாபாத்திரத்துடன் ஒன்றி விட, நாமும் அவரை பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடுவோம். குறிப்பாக, வடிவேலு ஞாபகமறதியால் அவர் தவிக்கும் காட்சிகள் , இடைவேளைக்குபின் வேறு மாதிரி மாறும் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.

வடிவேலுவுக்கும், அவர் மனைவியாக வரும் சித்தாராவுக்குமான பாசப்பிணைப்பு அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடைசியில் பெண் குழந்தைகள் மீதான பாசம், பரிதவிப்பில் அவர் பேசும் வசனங்களும், செயல்களும் இயக்குனரின் சமூக அக்கறையை காண்பிக்கின்றன. மனைவிக்காக வடிவேலு எடுக்கும் முயற்சிகள் உணர்ச்சி பூர்வமானவை, கொஞ்சம் கோபமானவை.

திருடனாக வரும் பஹத் பாசில் நடிப்பு தான் படத்தின் பெரிய தூண் எனக் கூறலாம். முதற்பாதி முழுக்க அவர் கலகலப்பாக படத்தை நகர்த்தி இருக்கிறார். அவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் பஹத். என்ன, இன்னுமும் அவர் பேச்சில் அதிக மலையாள வாடை. சில வார்த்தைகள் புரிய கஷ்டமாக இருக்கிறது. வடிவேலுவை ஏமாற்ற அவர் நடிப்பதும், ஒரு கட்டத்தில் அவர் யார் என்பதை உணர்ந்து தவிப்பதும் சிறப்பாக காட்சியமைக்கப்பட்டுள்ளன.

வடிவேலு மனைவியாக சில காட்சிகளில் மாத்திரம் வந்தாலும் ‛புது வசந்தம்’ சித்தாரா மனதில் நிற்கிறார். இவர்களை தவிர, பஹத் அம்மாவாக வரும் ரேணுகா, பொலிஸ் அதிகாரியாக வரும் கோவை சரளாவுக்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு பொருத்தமாக அமையவில்லை. நடிப்பில் அவ்வளவு செயற்கைதனம். வடிவேலு நண்பராக வரும் லிவிஸ்டனும் நடித்து கொட்டுகிறார். சின்ன கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி, இறுதியில் மிரட்டியிருக்கிறார் விவேக் பிரசன்னா. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை கொண்டாடும் அளவுக்கு இல்லை.

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். வில்லனாக காட்டப்படும் சிலரின் பின்னணி குறித்து விரிவான காட்சிகள் இல்லை. சில வசனங்களின் மூலம் அவர்கள் பிளாஷ்பேக்கை சொல்கிறார்கள், ஒருவகையில் அது குடும்பத்தினருடன் பார்க்க வைக்ககூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

முதற்பாதி நகைச்சுவை, பிற்பாதி திருப்பங்கள், திரில்லர் என வேறு திசைக்கு நகர்கிறது. பொலிஸ் விசாரணையில் பல லாஜிக் சொதப்பல்கள். படத்தின் தலைப்புக்கும், கதைக்குமான தொடர்பு பலருக்கு பிடிபடவில்லை.

ஞாபக மறதி விஷயத்தில் வரும் டுவிஸ்ட், வடிவேலுவின் கிளைமாக்ஸ் செயல்பாடுகள், சித்தாரா போர்ஷன் ஆகியவை டச்சிங் என்றாலும், அந்த பயணம் இழுத்துக்கொண்டே போவதை எடிட் செய்து இருக்கலாம். பல கசாட்சிகளில் பஹத் பாசில், வடிவேலு போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்.

நகைச்சுவை திரைப்படத்தை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமாக இருக்கும், கதையை நம்பி வந்தால் ஏமாற்றம் கிடைக்காது. ஒட்டு மொத்தத்தில் அழுத்தமான மலையாள படம் பார்த்த மாதிரி இருக்கிறது, வடிவேலு சிறந்த குணசித்திர நடிகராக மாறியிருக்கிறார்.

வடிவேலுவை வைத்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற விழிப்புணர்வு கதையை எடுத்து இருக்கிறார் இயக்குனர். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் பேசுவதை கவனிங்க. அவங்க சோகமாக இருந்தால், மனம் விட்டு பேசுங்க என்ற கருத்து இன்றைக்கு தேவையான ஒன்று. பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், அந்த குடும்பத்தினர் வலியை, வடிவேலு மாதிரியான நடிகரை வைத்து சீரியசாக கதை சொல்லியிருப்பதும் இயக்குனர் தைரியத்தை, ஸ்கிரிப்ட் மீதான நம்பிக்கையையும் காண்பிக்கிறது.

வவுனியா மாநகர சபையின் ஆதனங்களை உடன் கையகப்படுத்துங்கள் – முதல்வர்

0

வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்கள் சிலவற்றை சில அமைப்புக்களும் குழுக்கள் மற்றும் தனியார்களின் ஆளுகைக்கு உட்பட்டுள்ளமையால் அவ்வாறான இடங்களை உடனடியாக மாநகர சபைக்கு கையகப்படுத்தி அதன் உரிமத்துவத்தை பேணுமாறு வவுனியா மாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்தார்.

இன்றைய தினம் சபை அமர்வின் போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்சனா நாகராஜன் வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் குருமன்காடு பகுதியில் உள்ள கலைமகள் சனசமூக நிலையம் என்பன உட்பட ஒரு சில இடங்கள் சில அமைப்புகளாலும் குழுக்களாலும் கையகப்படுத்தி செயற்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக மாநகர சபைக்கான வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

இதனை மாநகர சபை கொண்டு வந்து அதன் வருமானம் மற்றும் செயற்பாட்டை மாநகர சபையே மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையையும் முன் வைத்திருந்தார். இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அப்துல் லரிப்பும் ஆமோதித்து கருத்து தெரிவித்தார்.

இதன் பிரகாரம் உடனடியாக குறித்த இரண்டு இடங்களுடன் மேலும் மாநகர சபைக்கு உட்பட்ட ஆதனங்களின் பெயரில் மாற்றத்தை உட்படுத்தி அது மாநகர சபையின் பெயரில் அனைத்து ஆவணங்களையும் மாற்றம் செய்து மாநகர சபைக்கு கீழ் கொண்டு வருமாறு முதல்வர் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய மாநகரசபை உறுப்பினரும் கலைமகள் சனசமுக நிலையத்தின் பொருளாளராக கடந்த 29 ஆம் தேதி வரை செயல்பட்டு வந்த வி. விஜயகுமார் குறித்த கலைமகள் சன சமூக நிலையம் அமைந்துள்ள பகுதியானது கடந்த 60 ஆண்டு காலமாக குறித்த சன சமூக நிலையத்தினால் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அங்குள்ள கட்டிடங்கள் மக்களினால் அமைக்கப்பட்டதாகவும் அதனை பராமரிப்பதற்காக நிதி தேவைப்படுவதன் காரணமாகவே அதனை நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனினும் மாநகர முதல்வர் வாடகைக்கு பெறுபவர்கள் மாநகர சபைக்கும் நிதி செலுத்தி மீண்டும் சன சமூக நிலையத்துக்கும் நிதி செலுத்த வேண்டிய தேவை ஏற்படுவதன் காரணமாக அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது எனவும் அது முற்றும் முழுதாக மாநகர சபையினுடைய ஆதனமாக காணப்படுவதனால் அங்கு எவ்வாறான கட்டிடங்கள் இருந்தாலும் அது மாநகர சபைக்கு உரியது எனவும் தெரிவித்து அதனை உடனடியாக மாநகர சபைக்குள் கொண்டுவந்து அங்குள்ள மின்சாரப் பட்டியல் மற்றும் நீர் விநியோகப்பட்டியலிலும் மாநகரசபையின் பெயர் மாற்றம் செய்யுமாறு தெரிவித்தார்.

மர்மத்தை தொடும் செம்மணி புதைகுழி; எலும்புக் கூடுகள் 118ஆக உயர்வு..!

0

செம்மணி புதைகுழியில் இன்று புதிதாக மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்

செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெறும் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணியின் 26வது நாளான இன்று மேலும் 3 புதிய மனித எலும்பு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்

இதனுடன் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகளின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன அத்தோடு மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக் காவலுக்குள் வழங்கபட்டுள்ளன.

இந்நிலையில் இதுவரை 105 மண்டையோட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பாக சட்ட வைத்தியரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து 27ம் நாள் அகழ்வுப்பணி நாளை நடைபெறவிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்

முஸ்லிம் பெண்கள் கலாச்சார ஆடைகளை அணிய தடை? எம்.பி கேள்வி..!

0

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிப்புரை விடுத்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாதென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவிக்கையில்,

திருகோணமலையிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் தாதியர்கள், மருத்துவ மாதுகள் மற்றும் சிற்றூழியர்கள் இனிமேல் கலாச்சார ஆடை அணிந்து கடமைக்கு வரக்கூடாது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அலுவலர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

தாங்கள் கடமை ஏற்றது முதல் தற்போது ஓய்வூதியம் பெறும் வயதை அடைந்துள்ள இதுவரையான காலத்தில் எங்களது சீருடையுடன் கலாச்சார உடையும் சேர்த்து அணிந்தே சென்றே கடமைகளை முன்னெடுத்து வருகிறோம்.

இந்நிலையில், தற்போது கலாச்சார உடை அணிந்து கடமைக்கு வரக் கூடாது என்றும் இதை மீறும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் தெரித்துள்ளனர்.

இனவாதம் இல்லாத ஆட்சி என்று மேடைக்கு மேடை கூறிக் கொள்ளும் இந்த அரசாங்க காலத்தில் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் இனவாத போக்கை கையில் எடுத்துள்ள அரச அதிகாரிகளுக்கு எதிராக இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த பதவிகளுக்குரிய சீருடைக்கு மேலதிகமாக முஸ்லிம் பெண் ஊழியர்கள் தமது கலாச்சார ஆடைகளை காலாகாலமாக அணிந்து வருகிறார்கள். எனவே இந்த உத்தரவை வாபஸ் பெறப்பட வேண்டும்.

இனவாதத்தை தற்போது கையில் எடுத்துள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்..!

0

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட துணைக்குழு, முழு அரச சேவைக்கும் புதிய சம்பள அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள பதவிகள், தொடர்புடைய கடமைகள் மற்றும் சம்பள அளவுகள் போன்றவற்றை அறிவியல் ரீதியாக மதிப்பாய்வு செய்த பின்னர் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி தலைமையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுவின் கீழ் ஒரு துணைக்குழு சமீபத்தில் நியமிக்கப்பட்டது.

செம்மணிப் புதைகுழியில் ஸ்கான் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை..!

0

யாழ் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் எலும்புக்கூடுகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஸ்கான் இயந்திரத்தின் மூலம் ஓகஸ்ட் 4ஆம் திகதி பரிசோதனை நடைபெறவுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜூலை 25 அன்று பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்ட போதிலும், புதிய அனுமதி தேவையில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாமல் ஸ்கான் செய்யலாம் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று (30) இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கில், செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாய்வில் இருந்து, இதுவரை 115 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வில் சிறுவர்கள் உட்பட 102 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த புதைகுழி, நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியுள்ளது.

தடயவியல் தளம் 1ல், ஒரு பெரிய எலும்புக்கூட்டின் அருகில், ஒரு குழந்தையின் எலும்புக்கூடு அரவணைக்கப்பட்டபடி காணப்பட்ட நிலையில் அது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

மனித எலும்புகளுடன், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் குழந்தை பால் போத்தல், குழந்தைகள் விளையாடும் பொம்மை, காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை அடங்கும்” என தெரிவித்தார்.

இந்த அகழ்வுப் பணிகளை, தொல்பொருள் மற்றும் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, யாழ் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோர் இணைந்து வழிகாட்டி நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இளம் குடும்ப பெண் மாயம்; கண்டு பிடிக்க உதவுமாறு கோரிக்கை..!

0

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்று முன் தினத்தில்(29) இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் இளம்குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார் இந்த பெண்ணை கண்டு பிடிக்க உதவுமாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடந்த 29ம் திகதி இரவு 11மணியளவில் தூக்கத்தில் இருந்து கணவன் எழுந்து பார்த்த வேளை மனைவி காணாமல் போயுள்ளார்.

அதனையடுத்து கணவன் மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார். அங்கும் குறித்த பெண் போகவில்லை இதன் பின் பதற்றம் அடைந்த கணவன் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காணமல் போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் காவல் துறையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுடன் குறித்த பெண் காணமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியினையும் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பம் கேட்டு நிற்கின்றனர் .

உள்ளக பொறிமுறையால் ஒருபோதும் நீதி கிடைக்காது..!

0

உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது என்ற தொடர்ச்சியான கோரிக்கையை ஐ.நா புறம் தள்ளுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே குறித்த சங்கத்தினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைப்பினர், உள்ளக பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம். அப்படி இருந்த போதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளக பொறிமுறை எப்படி சாத்தியமான முறையில் வழிவகுக்கும் என எமக்கு தெரியவில்லை.

இந்தநாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கி கௌரவிக்கும் நிலையே தொடர்ச்சியாக இருக்கின்றது.

அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கின்றது.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்த புதைகுழிகள் வெளிப்படுகின்றது. இவற்றை செய்தது யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறியமுடியும்.

தொடர்ச்சியாக நீதி கோரி போராடி வரும் நாம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

நிறுத்தப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம்..!

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் சமீபத்தில் நீதி அமைச்சுக்கும் சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது என்பது தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியாகும்.

தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்துக்காக மக்கள் பணம் பெரும் பகுதி வீண் விரயமாக்கப்படுவதாகவும் ஐந்து வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்தால் ஆயுட்காலம் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

அரச சேவையில் உள்ளவர்களுக்கு 60 வயதின் பின்னரே ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சேவையையே செய்கின்றனர் அவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்புரிமை வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் சமூகத்தில் பேசு பொருளாக்கியவர்கள் தேசிய மக்கள் சக்தியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளுக்கான கடமைகளை மேற்கொள்வதற்கு திணைக்களங்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் வரிப்பணத்தில் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட வாகன அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பிலும் அரசு அவதானம் செலுத்த வேண்டும்.

error: Content is protected !!