Sunday, October 26, 2025
Huis Blog

பாடசாலைக் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் ரூ.1.5 பில்லியன் நிதி – விளையாட்டு அமைச்சர்

0

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே நேற்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.1.5 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்கிறது.



தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் உப்புல் கித்சிறி பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பு குறித்து வாய்மொழி பதில் கோரிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பாடசாலை கிரிக்கெட் தொடர்பான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது முதல் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்துவது வரை பல்வேறு துறைகளின் கீழ் பாடசாலை கிரிக்கெட் சங்கம் மூலம் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இந்த பணம் வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.



பாடசாலை கிரிக்கெட் சங்கத்துடன் கலந்துரையாடி நாட்டின் பல மாவட்டங்களில் பல இடங்களில் கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பியகமவில், கிரிக்கெட்டை கிராமத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக, சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை நிர்மாணிப்பதற்காக, பல மாவட்டங்களுடன் இணைந்து, சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்.



“இலங்கையில் தடகளத்தை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக மிஷன் ஒலிம்பிக் 2028 ஐ மேம்படுத்துவதற்காகவும், நம்பிக்கைக்குரிய இளம் விளையாட்டு வீரர்களை ஆதரித்து வளர்க்கவும், கிரீட சக்தி திட்டத்தை மேம்படுத்துவதற்காகவும் ஏற்கனவே பல சிறப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எனத் தெரிவித்தார்.

மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலையில் வாழும் 17,000 குழந்தைகள் – ஆனந்த விஜேபால

0

மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் வாழும் சுமார் 17,000 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழந்தைகளை கண்காணித்து வருவதாகவும், யாரையும் விட்டு வைக்காமல் ஒவ்வொரு குழந்தையின் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.



வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (26) வடமேற்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கியவர்களை பாராட்டி உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.



ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், எதிர்கால சந்ததியினர் வாழ ஏற்ற ஒரு நாட்டை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் எண்பதாயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள்..!

0

இலங்கையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், அவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பேராசிரியர், சட்டத்தரணி பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.



கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகள் மூலம் பாலியல் கல்வியை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



அத்துடன், பாலியல் தொழிலாளர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் இருக்க வேண்டும் என்றும், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும் ஆண்களும் சமூகத்தில் ஒருவித அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.

நேரத்தை அதிகரித்து, பாடசாலைகளை மூடும் செயற்பாட்டிற்கு எதிராக பாரிய போராட்டம்..!

0

முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்களை அரசாங்கம் மாற்றாவிட்டால், அடுத்த ஆண்டு பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.



கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணங்க, பாடசாலை நடைபெறும் காலத்தை நீடிக்கவும், 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தநிலைமைகளால் மாணவர்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள் என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.



எவ்வாறாயினும், கல்வி மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் தனது தீர்மானங்களை மாற்றாத பட்சத்தில், பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மன்னாரில் மாடு திருடியவர்களை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்..!

0

மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் இரண்டு மாடுகளை திருடிய நபர்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். நேற்று (25) மதியம் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

”நானாட்டான் பிரதேசத்தின் உமநகரி வீதியில் நேற்று முன்தினம் (24) இரவு மாடுகளை கொண்டு செல்வதற்காக முச்சக்கரவண்டியில் சுற்றித்திரிந்த மூவர் அப்பகுதி இளைஞர்கள் சிலரை பார்த்தவுடன் தப்பி ஓடியுள்ளனர்.



கிராமத்து இளைஞர்கள் அவர்களை துரத்திச் சென்று மன்னார் தள்ளாடி பெரிய பாலத்தடியில் பிடித்து மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர்கள் மன்னார் நகரப் பகுதியில் சாவற்கட்டு, மற்றும் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் திருடப்பட்ட மாடுகள் கட்டைக்காடு மற்றும் மற்றும் உமநகரி கிராமங்களை சேர்ந்த உரிமையாளர்களுடையது என தெரியவந்துள்ளது.



அத்துடன் குறித்த இரு மாடுகளும் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முருங்கன் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக முருங்கன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.



இதேவேளை நானாட்டான் பிரதேசத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலையிலும் பாரிய சிரமப்பட்டு வளர்க்கும் கால்நடைகள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நடுவானில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான பணிப்பெண்கள் மீது தாக்குதல்..!

0

சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களைத் தாக்கியதற்காக 28 வயது சவுதி நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை 6:32 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்த UL-266 விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.



மலேசியாவுக்குச் சென்று கொண்டிருந்த பயணி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது கழிப்பறைக்குச் செல்ல முயன்றதால் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானம் தரையிறங்கத் தயாராகும் போது அனைத்து பயணிகளும் தங்கள் ஆசனப்பட்டிகள் அணிந்து இருக்க வேண்டும்.



இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விமானப் பணிப்பெண்கள் விமானிக்குத் தகவல் தெரிவித்ததும், விமான நிலைய காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, விமானம் தரையிறங்கியதும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை, கட்டுநாயக்க விமான நிலைய சுற்றுலா காவல்துறையுடன் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



இந்த சம்பவம் இலங்கை வான்வெளியில் நடந்ததால், சந்தேக நபரான சவூதி நாட்டவர் நாளை (27) கொழும்பு நீதவான் நீதிமன்றம் எண். 01 இல் முற்படுத்தப்படவுள்ளார்.

வவுனியாவில் மீற்றர் வட்டி, போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை – ஜெகதீஸ்வரன் MP

0

வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிசாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு இன்று (25.10) பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிசாருக்கோ வழங்கலாம். அவ்வாறு வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை இழந்தவர்களும் தொடர்பு கொள்ள முடியும்.



வன்னியின் பல பகுதிகளில் போலியான ஆவணங்கள் மற்றும் போலியான உறுதிகள் மூலம் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.



மேலும், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை மேற்கொள்ளபவர்கள் மற்றும் அச் செயற்பாடுகள் மூலம் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பாகவும் முறைப்பாடுகளை செய்ய முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் உரிய வகையில் விசாரணை நடத்தப்பட்டு சடட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தொலைபேசி தடை; அனுர அரசின் புதிய திட்டம்..!

0

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன தொலைப்பேசிகள் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ள அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொண்ட நிகழ்வொன்றில் பெண்கள் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சர் சரோஜா போல்ராஜ் வெளியிட்டுள்ளார்.



அதன்போது, 12 வயதுக்குட்பட்ட எந்த மாணவரும் தொலைபேசி வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவதைத் தடுக்க அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, அதிகப்படியான திரை நேரம் மற்றும் தீங்கு விளைவிக்கும் நிகழ்நிலை உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் சிறுவர்கள்ளை பாதுகாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



அத்துடன், இது ஆரோக்கியமான பிள்ளைப் பருவ வளர்ச்சி மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த வயதெல்லையினை 16ஆக அதிகரிப்பது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகளுக்கு இராணுவத்தினர் இடையூறு..!

0

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று (26.10.2025) சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று (26.10.2025) காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன.



தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள் காணப்படுகின்ற நிலைமையில் துயிலும் இல்லத்தில் ஒரு சிறிய பகுதியிலேயே குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையிலே குறித்த வளாகத்தின் முன் பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட வேளையில் குறித்த இடத்தில் இராணுவத்தினர் வருகைத்தந்து தமது முகாமுக்கு அருகில் உள்ள பகுதியில் வேலி கம்பங்களை அமைக்க வேண்டாம் என இடையூறு வழங்கியுள்ளனர்.

எனினும், குறித்த பகுதிக்கான வேலி அமைப்பு பணிகள் நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிர்வாகத்தினர்,“ இவ்வாண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெறுவதற்கான சிரமதான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏற்பாடுகளும் இடம்பெறவுள்ளன.

மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் வருகைத்தந்து தொடர்ந்து இடம்பெறும் பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.



மேலும் துயிலும் இல்லத்தில் மிக நெருக்கடிக்குள்ளேயே மாவீரர் நாளை அனுஸ்டித்து வருவதாகவும் இந்த அரசாங்கமாவது இந்த மாவீரர் துயிலும் இல்ல காணியை முழுமையாக விடுவித்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயமட்ட விரைவு கணித போட்டியில் முறைகேடு..!

0

09/10/2025 அன்று நடைபெற்ற வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலய மட்டத்திலான விரைவு கணிதப் போட்டியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன எனவும் அதனை உரிய முறையில் அறிவித்த போதும் வலயக் கல்விப் பணிப்பாளர் கவனத்தில் எடுக்கவில்லை எனவும் இதனால் சிறுமி ஒருவர் கடும் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலை மாணவி தரம் 04 விரைவு கணித போட்டியில் பங்கு பற்றிய போது குறித்த ஒரு மாணவிக்கு மட்டும் தரம் 02 வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடங்களின் பின் வினாத்தாள் பெறப்பட்டு தரம் 04 வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. பின் மூன்றாவது தடவையாகவும் வேறொரு வினாத்தாள் வழங்கப்பட்டு போட்டி நடைபெற்றுள்ளது.



மேற்படி விடயங்கள் காரணமாக குறித்த மாணவி மன அழுத்தத்திற்கு உள்ளாகி பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபர் ஊடாக 13/10/2025 அன்று எழுத்து மூலம் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்திருந்தும் இன்று வரை எதுவிதமான பதிலும் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் 31/10/2025 அன்று மாகாண மட்ட விரைவு கணிதப் போட்டி நடைபெற உள்ளது.

குறித்த மாணவி சென்ற வருடம் தரம் 03 விரைவு கணிதப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்றதுடன், இவ்வருடம் நடைபெற்ற கோட்ட மட்டப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



வட மாகாண கல்விப் புலத்திலுள்ள உரிய அதிகாரிகள் மாணவியின் கல்வி உரிமை பாதிப்படையாத வண்ணம் உடனடியாக விசாரணை ஒன்றை நடாத்தி குறித்த மாணவிக்கு நிவாரணத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் செயற்பாடுகள் மாணவர்கள் சார்பாக நடைபெறாமல் இருப்பதை மேற்படி விடயம் நிரூபணமாக்கியுள்ளது. இது மட்டுமின்றி வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே செல்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



மாணவர்களின் கல்வி செயற்பாடுகளிலும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் அதிக கவனத்தை செலுத்தும் இலங்கை ஆசிரியர் சங்கமானது மேற்படி மாணவியின் விடயத்தில் அதிக கரிசனை கொண்டுள்ளதுடன், மாணவியின் கல்வி உரிமையைப் பாதுகாக்க எப்போதும் முன்னிற்கும் என்பதை தெரியப்படுத்துகின்றோம் எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!