பசறை பொலிஸ் பிரிவின் உடகம பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி நேற்று இரவு சுகவீனம் காரணமாக பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்று பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பசறை உடுகம பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுமி என தெரிய வந்துள்ளது.
இந்த சிறுமி சுமார் ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் சளிக்கு பல சந்தர்ப்பங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவமனையின் மருத்துவர், அவரது உடலில் காயங்களின் அறிகுறிகள் இருப்பதாக கூறியதால், பொலிஸார் இந்த மரணத்தை சந்தேகத்திற்குரியதாக கருதுகின்றனர்.
மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பசறை மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (09) கருத்து வெளியிடும் போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஒரு சிறுமிக்கு தற்கொலை செய்வது என்ற எண்ணம் வருவது, ஒரு சமூகமாக நாம் அனைவரும் தோல்வியடைந்த ஒரு தருணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நடக்கக் கூடாது என்றும், கொட்டாஞ்சேனை சிறுமி சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் அடிப்படையாகக் கொண்டு தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கல்வி அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து, குழந்தைகள் குற்றங்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன்களை வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று (09) வெளியிட்டுள்ளது.
சுற்றிக்கையின் படி, அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன்களை வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பை தற்போதைய ரூ. 250,000/- இலிருந்து ரூ. 400,000/- ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.
தனிநபர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்தில் சிறிதரன் இதனைத் தெரிவித்திருந்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி கசிப்பை வழங்கி வெற்றியீட்டியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று(8) நாடாளுமன்றில் தெரிவித்திருந்ததாக சிறிதரன் குறிப்பிட்டார்.
அதோடு ஒருபோதும் தமிழரசுக் கட்சி இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது என சுட்டிக்காட்டினார்.
மேலும் பணம் வழங்கி வாக்குகளைப் பெற்ற தரப்பினரும் தாம் இல்லையென சிறிதரன் காட்டமாக குறிப்பிட்டார்.
மாணவி உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகத்திற்கிடமான அரசாங்க பாடசாலையின் ஆசிரியர் ஒருவருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று (09) மாலை தெரிவித்ததாவது,
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் ‘பி’ அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் சில தரப்பினர் தமது பணி பொறுப்புகளை புறக்கணித்திருக்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக அமைச்சினால் உள்ளக விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் அந்த நபர் கூறினார்.
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி டில்ஷி அம்ஷிகா, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.
அதேவேளை அதன் உண்மைத் தன்மை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை எனினும் சில அரசியல் தரப்புக்களால் குறித்த விடயம் திசை திருப்பப்பட்டு வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் இந்த விடயத்தில் இரண்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலாவது குறித்த மாணவியால் ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு, இரண்டாவது தனியார் கல்வி நிலைய ஆசிரியரால் அவமானப்படுத்தப்பட்டதாக கூறும் சம்பவம். ஆக இரண்டும் ஒரே சம்பவம் அல்ல இங்கு இரண்டு சம்பவங்கள் இரண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
முதலாவது சம்பவமானது ஆசிரியரால் மாணவி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம், குறித்த சம்பவமானது கடந்த 2024ம் ஆண்டு இடம் பெற்றதாகவும் அது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த வழக்கில் பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டு ஆசிரியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கில் மாணவி பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பின் குறித்த ஆசிரியருக்கு பிணை வழங்கப்பட்டிருக்க மாட்டாது.
குறித்த சம்பவத்தின் பின்னர் குறித்த மாணவி வேறு பாடசாலைக்கு விலகிச் சென்று கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இரண்டாவது சம்பவம், மாணவியின் மரணத்திற்கு ஒரு சில தினங்களிற்கு முன்னர் தனியார் கல்வி நிலையத்தில் கற்றலில் ஈடுபட்டிருந்த போது குறித்த கல்வி நிலைய ஆசிரியர் ஒருவரால் அவமானப் படுத்தப்பட்டதாகவும், அதனால் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதில் அவமானம் ஒன்று நிகழ்ந்திருப்பின் குற்றவாளி குறித்த கல்வி நிலைய ஆசிரியரே.
இந் நிலையில் குறித்த சம்பவம் காரணமாக ஒரு மாணவியின் உயிர் வீணே இழக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்வு குறித்த மரணத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதேவேளை இதுவரை குறித்த மாணவியின் பெற்றோரால் முறைப்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. என்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடக சந்திப்புக்கள், போராட்டங்களை மட்டும் நடாத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதாவது மகளீர் விவகார அமைச்சர் நேரடியாக வருமாறு அழைப்பு விடுத்த போதும், சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கூறிய போதும் அவைகள் எதனையும் மேற்கொள்ளாது கண்டனப் போராட்டங்களை மேற்கொள்வதாலோ, சமூக வலைத்தளங்களில் எழுதுவதாலோ தீர்வையோ, நீதியையோ பெற்றுக் கொள்ள முடியாது.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், முஜிபுர் ரஃமான் உட்பட பலர் குரல் கொடுத்து வருகின்றனர். உண்மையில் வரவேற்கத்தக்கது. எனினும் அதற்கு பின்னாலும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான விசமத்தனமான அரசியலை காண முடிகின்றது.
இங்கு இரண்டு சம்பவம், இரு குற்றச் சந்தேக நபர்கள், இவர்களுக்கு அப்பால் பெற்றோர், சக மாணவிகள் என்போரும் குற்றச் சந்தேக வலயத்திற்குள் உள்ளனர். இந்த நிலையில் ஒருதலைப் பட்சமாக ஆசிரியரை மட்டும் குற்றவாளிகளாக்க பல்வேறு தரப்பினரும் முயல்வதன் நோக்கம் என்ன?
குறித்த மாணவி தற்கொலை செய்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள், வீட்டில் நடந்த சம்பவம், மாணவியின் உடற்கூற்று அறிக்கை, உள்ளிட்டவைகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஒருதலைப் பட்சமாக ஒருவரை நோக்கி கை நீட்டுவது என்பது தவறான முன்னுதாரணம்.
அதேபோல் விசாரணைகளே முடிவுறாத நிலையில் வடகிழக்கில் மட்டும் இயங்கும் தமிழர் ஆசிரியர் சங்கம் குறித்த ஆசிரியருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்பது அவர்களின் கல்வி பின் புலத்தையே ஐயப்படுத்துவதாக அமைந்துள்ளது. விசாரணைகள் நடைபெற்று, குற்றம் உறுதிப் படுத்தப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமே தவிர விசாரணையே நடைபெறாது தண்டனை வழங்கும் நடைமுறை இலங்கைச் சட்டத்தில் உள்ளதா???
அடுத்து குறித்த மாணவி மாடியிலிருந்து கீழே விழும் வீடியோவை அவதானிக்கும் போது உடல் அசைவு இன்றியே விழுவது போன்று உள்ளதுடன், அவர்களின் பெற்றோரின் முகத்தில் அவ்வளவு கவலையை காண முடியவில்லை என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே சட்டம் தனது கடமையை செய்யும், நீதித்துறை சுயாதீனமானது அதுவும் தனது கடமையை சரிவரச் செய்யும், சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி பாதிக்கக் கூடாது இதில் குற்றவாளி யார் என்பதை பொலிசாரும், நீதிமன்றமும் விரைவில் வெளிப்படுத்தும் அதுவரை உங்கள் வட்டார, குறுகிய அரசியலை ஓரங்கட்டி வைத்து விட்டு நீதிக்கு மதிப்பளித்து செயற்படுங்கள்.
வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.24 வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நீண்ட நேரமாக அவரது வீட்டு அறையில் அமைதியாக இருந்தமையை அடுத்து வீட்டார் அறையின் கதவினைத் திறந்து பார்த்த சமயத்தில் வீட்டின் கூறையின் மேற்பகுதியில் துணியின் மூலம் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2022 அரகலய போரட்ட காலத்தில் தீ வைப்புகளினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சொத்து சேதத்திற்காக 92 முன்னாள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களும் ரூ. 620 மில்லியன் இழப்பீடு பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனை ஹொரண பிரதேசததில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் இன்று (03) அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2022 மே 09 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தின் போது தீ வைப்புகள் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சொத்து சேதத்திற்கு இழப்பீடு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை பெப்ரவரி 6 ஆம் திகதி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் சமர்பித்திருந்தார்.
குறித்த பட்டியலின் படி, 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ரூ. 1.22 பில்லியன் இழப்பீடு வழங்கப் பட்டிருந்ததாக அம்பலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்து விடும். அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும் சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் சனிக்கிழமை (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள்.
அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும். கடந்த 70 ஆண்டுகளாக மாறி மாறி பல தேர்தல் மூலம் பல கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டன ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை நலிவடைந்தே போகின்றது.
காலத்துக்கு காலம் ஆட்சியாளர்கள் பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கி தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியதும் தமிழ் மக்களை ஏமாற்றியதுமே வரலாறாக நீள்கின்றன.
பன்னாட்டு அனுசரணையோடு செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களையும் காற்றில் பறக்க விட்டதே அரசின் தொடர் கதை. அரசாங்கம் தொடர்ந்து நிலப்பறிப்பு,குடிப்பரம்பல் மாற்றம், மொழிச் சிதைப்பு ,பண்பாட்டுச் சீரழிப்பு, இனத்துவ ஏகாதிபத்திய அடக்குமுறை ,இனவாத வகுப்புவாத சிந்தனை, அரச திணைக்களங்கள் மூலம் நில அபகரிப்பு போன்ற பல்வேறு விதமான நெருக்கடிகளை தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்களால் அரங்கேற்றப்படுகிறது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை சிறு பான்மையினராக்கும் முயற்சியிலே அரசாங்கம் முன் நோக்கி நகர்கின்றது. ஆட்சி அமைக்கின்ற எவரும் பௌத்த தேசியவாத மனநிலையில் இருந்தும் சிங்கள மேட்டிமை வாத சிந்தனையில் இருந்தும் தங்களை மாற்றிக் கொள்ள தயாராகவில்லை.
பௌத்த தேசிய இனவாதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதனால் தான் சமூக, சமநீதி, சமத்துவம், இனத்துவ மொழித்துவ வேறுபாடின்மை போன்ற விடயங்களை குறைந்தபட்ச மேனும் நோக்கு நிலையாக கொள்வதில்லை.
பௌத்த பீடங்களை திருப்திப்படுத்தவும் இராணுவத்தை மகிழ்ச்சிப்படுத்தவும் சிங்கள அடிப்படை வாதிகளை சாந்தப்படுத்தும் வேலையிலுமே ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய அரசும் இதுக்கு விதிவிலக்கு அல்ல . ஆட்சிக்கு வர முன்னர் பல்வேறு விதமான இடதுசாரி தத்துவத்தை முன் வைத்தவர்கள் ஆட்சிக் கதிரையில் அமர்ந்த பின்னர் இயல்பான இனவாத வலதுசாரி வகுப்பு வாதிகளாக மாறி விட்டார்கள்.
நடைமுறைச் சாத்திய மற்ற வாக்குறுதிகளை எல்லாம் தாராளமாக அள்ளி வீசியவர்கள் அதில் ஒரு சிலதை கூட நடைமுறைப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள். ஜே.வி.பி யில் இருந்து என்.பி .பி என பெயரை மாற்றிக் கொண்டால் கடந்த காலத்து இனவாத சக்திகள் எதனையும் இன்றைய இளைய சமூகம் அறிந்திருக்காது என் கின்ற அற்ப ஆசையிலே இத் தந்திரத்தை உபயோகிக்கிறார்கள்.
அது தொடர்ந்தும் வெற்றியை நோக்கி முன் னகர்துமா என்பது கேள்விக்குறியே!இலங்கையிலே இனவாதத்தை பட்டவர்த்தனமாக பொது வெளியிலே சிங்கள மக்கள் மத்தியிலே வெறுப்புணர்வை தூண்டி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகைமையை ஏற்படுத்தியதில் மிகப்பெரிய பங்காற்றியவர்கள் ஜே.வி.பியினர் என்பது மறக்க முடியாத கடந்த கால வரலாறு.
பெயரை மாற்றி விட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என எண்ணுகிறார்கள் போலும் வடக்குக் கிழக்கில் அரச ஒட்டுக் குழுக்களாக இருந்தவர்கள் இப்பொழுது ஜன நாயகவாதிகளாக தங்களை காட்டிக் கொள்வது போல் தான் இவர்களுடைய மாய விம்பமும் தோன்றுகின்றது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட போதும் உருப்படியாக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் பொய்யும் புரட்டுமாக பேசி வாக்கை தமதாக்கிக் கொள்ள முனைகிறார்கள்.
மக்களே விழித்துக் கொள்ளுங்கள். தமிழின அழிப்பாளர்களான ராஜபக்சக்களின் அடக்குமுறையை கூட துணிச்சலாக எதிர்கொண்ட தமிழ் மக்கள் ஜேவிபியின் என். பி .பி நாடகத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம்.
குறிப்பாக மன்னார் போன்ற பிரதேசங்களில் காற்றாலை மின்சாரம் ,கனிம மண் அகழ்வு, கரையோர மண்ணகழ்வு ஆகிய மூன்று திட்டங்களுக்கும் கொள்கை அளவில் அரசாங்கம் ஆதரவாகவே இருக்கிறது.
இத்திட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்கலாமா? வடமராட்சி கிழக்கு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை 5940 ஏக்கரை கபளீகரம் செய்வதற்கு அரசாங்கம் முயல்கிறது இதை ஆதரிக்கலாமா? எனவே தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள் அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை அது விரைவில் தீர்ந்துவிடும்.
அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும் சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம். நீண்ட நெடிய விடுதலைப் போரை நடத்திய இனம் வெறும் வாய்ச்சொல் வீரர்களுக்கு வாக்களிக்க முனைவது தேசத்துக்காக இழந்த எம்மவர்களின் ஆத்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது.
ஆகவே தென்னிலங்கையில் யாரும் எவருக்கும் வாக்களிக்கட்டும். வடக்கு கிழக்கிலே எங்களை நாங்கள் ஆளக்கூடிய சுயநிர்ணய உரித்தை தகவமைத்துக் கொள்வதற்கு எமது இருப்பு எமக்கு முக்கியம் அற்ப சொற்ப சலுகைகளுக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கும் உங்கள் வாக்கை அளித்து வாழ்க்கையையும் இருப்பையும் இழந்து விடாதீர்கள்.
வாக்களிக்க முன் நான் ஏன் இவருக்கு வாக்களிக்க வேண்டும். அதனால் நம் இனத்துக்கும், எம் நிலத்துக்கும், என் பண்பாட்டிற்கும், அடுத்த சந்ததிக்கும் நான் மதிப்பிடும் அரசியல் கணக்கு என்ன? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் வாக்குச் சாவடிக்கு போக முன்னர் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும். என்றுள்ளது.