Saturday, July 18, 2026
Huis Blog

வவுனியாவில் கோர விபத்து; பொலிஸ் சாஜன்ட் பரிதாபமாக பலி..!

0

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து மேலும் தெரிய வருவதாவது,

வவுனியாவிலிருந்து இரட்டைபெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஏ9 வீதியில் அமைந்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகாமையில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜன்டான கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் சாவகச்சேரி நகரசபை புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்..!

0

யாழ் சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆட்சேபனையை தொடர்ந்து அதனை நிறுத்த உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உப தவிசாளர் ஞா.கிஷோர் சபையில் தான் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, மூன்றாவது தடவையாக வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 13.07.2026 அன்று நடைபெற்ற முந்தைய தவணை விசாரணையின் போது, எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி கெடு விதித்திருந்தார். எனினும், குறித்த தினத்தில் ஆளுநர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தரப்பால் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவில்லை.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான அவசரக் கூட்டத்திற்கு இரண்டாம் எதிர்மனுதாரரான வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளமையை, முறையீட்டாளரின் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இரண்டாம் எதிர் மனுதாரரான உள்ளூராட்சி ஆணையாளருடன் அரச சட்டத்தரணி கலந்தாலோசித்தார்.

அதன் பின்னர், இவ்வழக்கின் விவாதம் நடைபெறும் நாள் வரை புதிய உப தவிசாளர் தெரிவிற்கான கூட்டத்தை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதன்படி, எதிர்வரும் 21ம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த புதிய உப தவிசாளர் தெரிவுக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காக வரும் 23ம் திகதிக்கு வழக்கை திகதியிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் இறுதி விவாதத்தை அடுத்த நாளான 24 அன்று நடத்துவதற்குத் திகதியிட்டுக் கட்டளையாக்கினார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதல்; இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100% வரி..!

0

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் மசகு எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, சுலோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பதற்கான மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடினுக்குக் கிடைக்கும் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு மூலமான நிதி ஆதாரத்தைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மேற்கூறிய 5 நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும்.

இந்த 5 நாடுகளும் வாங்கும் எண்ணெய்யின் அளவை 180 நாட்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து, அதற்கேற்ப வரிவிதிப்பை மாற்றியமைக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு மசோதா அதிகாரம் அளிக்கின்றது.

தங்களின் மொத்த தேவையில் 15% மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதால் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த 100% வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது அணு உலைகளுக்காக ரஷ்யாவிடம் வாங்கும் யுரேனியத்திற்கும், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள கூட்டுச் செயல்பாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேறினால், மற்றொரு நாட்டின் போர் முயற்சிகளுக்கு நிதி அளிக்கும் நாடுகளைத் தண்டிக்க, வரிவிதிப்பை ஒரு புவியரசியல் ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் மீட்கப்பட்ட விரல்..!

0

யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் விரல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 35ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 89 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 423 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நான் சண்டியன் அல்ல – இது அநுர அரசாங்கம்; மோசடிகளுக்கு இடமும் இல்லை..!

0

வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களின் முதற்கட்ட நிகழ்வு இன்று (17.07.2026) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திப் பேசினார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அக்கூட்டம் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது. இச்சம்பவம் சமூக வலைத் தளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறியது.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன். யாருடனும் சண்டை போடுவதோ அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது. நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அங்கு நடந்த உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான துல்லியமான தரவுகளைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி என்னிடம் கேட்டுக் கொண்டார்.

ஏனெனில், எதிர்வரும் ஆண்டில் எமது அரசாங்கம் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கவுள்ளது. மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் இந்த சமூகப் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்களது பிரச்சினைகளைத் தெரிவிக்கலாம்.

என்னுடைய அமைச்சுப் பதவி என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. தேசிய மக்கள் சக்தியினருக்கு மட்டுமன்றி, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதே எமது பிரதான நோக்கமாகும். அனைவரையும் அரவணைத்துக் கொண்டே எமது பயணம் தொடரும்.

நாட்டில் இன்று இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனச் சிலர் பேசுகின்றனர்.

எதிர்காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளை அலுவலகங்கள் மாவட்ட ரீதியில் திறக்கப்படவுள்ளன. எனவே, யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்காலத்தில் நீங்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.

மக்களின் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சயம் விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும். இது அநுரகுமாரவின் அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு எவ்வித இடமும் இல்லை.

எமது ஜனாதிபதி குப்பி லாம்பு வெளிச்சத்தில் படித்து, வறுமை மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னுக்கு வந்தவர். அதனால்தான் ஏழை எளிய மக்களின் பக்கம் நின்று அவர் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார்.

அரசு அதிகாரிகளைக் கூடச் சுதந்திரமாக வேலை செய்யவிடாமல் இங்குள்ள சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர். ரணில் விக்கிரமசிங்க சிறைக் கம்பி எண்ணினார், மஹிந்த ராஜபக்ஷவும் கம்பி எண்ண வேண்டிய நிலை வரலாம். சட்டத்தை அமுல்படுத்தும் போது நாம் ஒரு போதும் தராதரம் பார்ப்பதில்லை” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே துறையில் இயந்திர நெருக்கடி; உடனடி நடவடிக்கை கோரும் நிலைய அதிபர்கள் சங்கம்..!

0

ரயில்வே திணைக்களத்தின் வசமுள்ள ரயில் இயந்திரங்கள் (Engines) மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகள் குறைவடைந்துள்ளதன் காரணமாக, ரயில் சேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையை சீர்செய்து, தற்போதுள்ள ரயில் நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர சுட்டிக்காட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டளவில் 106 ஆகக் காணப்பட்ட மொத்த ரயில் இயந்திர தொகுதி இருப்பு, 3 வருடங்களின் பின்னர் இன்று 98 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த ரயில் நேர அட்டவணையின் படி, சுமார் 450 ரயில் சேவைகள் இயக்கப்பட்டதுடன், அந்த சேவைகளுக்காக ரயில்வே திணைக்களத்திற்கு 74 இயந்திரங்கள் தேவைப்பட்டிருந்தன.

இருப்பினும், அவ்வாறானதொரு எண்ணிக்கையிலான சேவைகளை இயக்குவதற்கு, அந்த காலப்பகுதியில் ரயில்வே திணைக்களத்திடம் இயக்கத்திற்கு உகந்த நிலையில் 68 இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. இன்று அந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் 49 ஆகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டளவில் ரயில்வே திணைக்களத்திடம் 109 ரயில் ரயில் இயந்திர வலு தொகுதிகள் (Power Sets) இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 106 ஆகக் குறைவடைந்துள்ளது. இதன்படி, 3 ரயில் இயந்திர வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தற்போதைய சேவைகளை வழங்குவதற்கு 88 ரயில் இயந்திர வலு தொகுதிகள் அவசியமாகின்றன.

2023ஆம் ஆண்டில் ரயில்வே திணைக்களத்திடம் இயங்கு நிலையில் இருந்த ரயில் இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆகும். அது தற்போது 52 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு திணைக்களத்திடம் 26 ரயில் இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது.

இதற்கமைய, ஒட்டுமொத்தமாக 2023ஆம் ஆண்டில் 261 ஆகக் காணப்பட்ட ரயில் இயந்திரங்கள் மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 19 நீக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டளவில் அதன் மொத்த இருப்பு 242 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே, நிலவும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கசுன் சாமர மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்..!

0

நாட்டின் சில பகுதிகளில் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

யாழில் மது அருந்திவிட்டு உறங்கிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!

0

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய பே.கனிடஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

பின்னர், அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார்.

பின்னர், அந்த மாடிக் கட்டிட வேலைகளைச் செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த குடும்பஸ்தர் அசைவற்றுக் காணப்படுவதை அவதானித்தனர்.

அதன்பின்னர், காவல்துறையினருக்கு மற்றும் உறவினர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர் பதவி விலகல்; ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதாக ஆளுநர் ஒருவர் தெரிவிப்பு..!

0

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனப் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.

கண்டிப் பகுதியில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதவியை ஏற்கும் சந்தர்ப்பத்திலேயே, மிகக் குறுகிய காலத்திற்குள் தான் இதிலிருந்து விலகப் போவதாக ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ‘டித்வா’ சூறாவளி நிலைமை காரணமாக மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, தனது முடிவை இதுவரையில் பிற்போட்டிருந்ததாகச் சரத் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

முற்றிலும் தனிப்பட்ட காரணத்தினால் தான் தனது பதவியிலிருந்து விலகுவதாகவும், இதற்கு எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தான் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகப் பேராசிரியர் சரத் அபேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸின் மடியில் அமர முயன்ற ஆண் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்..!

0

கடமை நேரத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு துன்புறுத்தல் விளைவிக்க முயன்ற மற்றும் மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று (17) முதல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி தம்புள்ளை ‘கம்உதாவ’ மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடமையில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், தனது கடமைகளைப் பதிவு செய்வதற்காக அவர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்திருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், குறிப்பிட்ட கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் கடுமையான மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!