Wednesday, July 22, 2026
Huis Blog Bladsy 131

ஆளுநர் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற பிரதம செயலாளரின் பிரிவுபசார நிகழ்வு ..!

0

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஏற்பாடு செய்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவனது பிரிவுபசார நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (03) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் ஆளுநர் செயலக ஊழியர்களால் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 

அத்துடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநர் செயலக கணக்காளர் சோ.பிரபு, ஆளுநரின் இணைப்புச் செயலாளர்களான எந்திரி அ.எ.சு.ராஜேந்திரா மற்றும் சர்வானந்தா, ஆளுநரின் ஊடகச் செயலர் கு.டிலீப்அமுதன் ஆகியோர் வடக்கு மாகாண பிரதம செயலரின் சேவையைப் பாராட்டி உரையாற்றினர்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் தனது 34 ஆண்டுகால அரச சேவையில் பல்வேறு கௌரவ ஆளுநர்களின் கீழ் ஆளுநரின் செயலாளராக 7 ஆண்டுகள் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையில் மாணவியை கடத்த முயற்சித்த நபரால் பரபரப்பு..!

0

கொழும்பில் உள்ள முன்னணி மகளிர் பாடசாலையில் மாணவி ஒருவரை கடத்தும் முயற்சி இடம்பெற்றுள்ளது.

மகளிர் பாடசாலைக்கு முன்பாக ஒரு நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை பாடசாலை நிர்வாகம் உன்னிப்பாக அவதானித்துள்ளது.

இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் நேற்று மதியம் பாடசாலை நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று, அந்த பாடசாலையில் இருந்து ஒரு மாணவியை அழைத்துச் செல்ல அவருடைய தாயார் காரில் வந்திருந்தார்.

அவர் தனது மகளை காரின் பின் இருக்கையில் அமர வைத்தபோது, ​​வெளியாள் ஒருவர் வலுக்கட்டாயமாக காரின் பின் இருக்கையில் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் காரை முன்னோக்கி ஓட்டுமாறு கட்டாயப்படுத்தினார். அந்த நேரத்தில் மாணவியின் தாய் காரில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார்.

 

பாடசாலையின் பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இதன் போது சந்தேக நபர் காரில் இருந்து தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் கூர்மையான ஆயுதத்தைக் காட்டி, அருகில் கூடியிருந்த கூட்டத்தினரையும் அந்த நபர் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ள பாடசாலை நிர்வாகம், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரும் போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது

 

பாதுகாப்பு கமராக்களை சோதனையிட்ட போது குறித்த நபர் பல நாட்களாக பாடசாலை பகுதியில் சுற்றித் திரிந்தமை தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

5,6,7 ஆம் திகதிகளில் முடங்கும் முக்கிய சேவைகள்; விசேட அறிவிப்பு..!

0

எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது என ஆட்களை பதிவுச் செய்யும் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் கொண்டவற்றைத் தவிர, அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

காணி அபகரிப்பு வர்த்தமானியை வாபஸ் பெற அநுர அரசுக்கு மே 28 வரை காலக்கெடு..!

0

வடக்கில் தமிழ் மக்களின் கணிசமான காணிகளைக் கபளீகரம் செய்யும் விதத்தில் அரசு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு இம்மாதம் 28ஆம் திகதி வரை காலக்கெடு விதித்திருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அரசு இந்த விடயத்தில் வர்த்தமானியை வாபஸ் பெறத் தவறுமானால் அந்தத் திகதிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகள் யாவற்றையும் இணைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக சாத்வீக வழிமுறையில் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்று ஆரம்பம் ஆகும் என்று அறிவித்திருக்கின்றார்.

 

“மார்ச் 28ஆம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் அம்பலமாகியுள்ளது. இதனை அரசு கை வாங்குவதற்கு ஒரு மாத காலக்கெடு – மே 28 வரை – வழங்குகின்றோம். அந்தத் திகதிக்குள் இந்த வர்த்தமானியை அரசு கை வாங்காமல் விட்டால், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ்ப் பொது மக்களை இணைத்துக் கொண்டு அந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சாத்வீக முறையில் பெரும் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்றே முன்னெடுப்போம்.” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

“இது தனித்து தமிழரசுக் கட்சி முன்னெடுக்கப் போகின்ற போராட்டம் அல்ல. ஒட்டுமொத்த முழுத் தமிழினமும், தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுக்கப் போகின்ற போராட்டம். மூத்த – முன்னணி – தமிழ்க் கட்சி என்ற முறையில் இந்த அறிவிப்பை அதன் பதில் பொதுச் செயலாளராக நான் அறிவித்திருக்கின்றேன்.

 

தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்ட எழுச்சியை, தங்கள் நிலங்களைக் காப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய ஒரு தேவை வந்துள்ளது. தமிழினத்தின் கருத்தை இந்தப் போராட்டம் மூலம் முழு உலகக்கும் நாம் முன் வைப்போம்.” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

யாழில் உட்கட்சி மோதல்; டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடந்த முயற்சி..!

0

யாழ். ஊர்காவற்றுறையில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் பின்னர் நையப்புடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் குறித் நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அந்தப் பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

 

பலர் சமரசம் செய்ய முயன்ற போதும் அதனை ஏற்க மறுத்து டக்ளஸ் தேவானந்தாவை நெருங்கித் தர்க்கத்தில் ஈடுபட்ட அவர் திடீரென டக்ளஸ் தேவானந்தா மீது தாக்க முற்பட்டார்.

இதையடுத்து கூடியிருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டினர். அந்தப் பகுதியில் பிரச்சார நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் அந்த நபரின் இல்லத்துக்கு வானில் சென்ற சிலர் அவரை நையப்புடைத்தனர்.

இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஜனாதிபதி நிதியத்தின் நிதி முறைகேடு; தகவல்களை வழங்குமாறு உத்தரவு..!

0

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரச மற்றும் தனியார் வைத்திய சாலைகளின் பணிப்பாளர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்த்தல் பத்திரத்தினூடாக குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நிலுப்லி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2008 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றவிசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனரா என்பது குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக் கழக அனுமதிக்கான கையேடு – வெளியான அறிவிப்பு

0

அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இன்று (02.05.2025) வெளியிடப்பட்ட இந்தக் கையேடுகள் நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படவிருப்பதுடன், விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 30 எனவும், அனுமதிக்கான வழிகட்டல் கையேடுகளை நாளை 03ஆம் திகதி சனிக்கிழமை முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்ற மாணவர்களில் அரச பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07 எனும் முகவரியில் அமைந்துள்ள பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலகத்தில் அல்லது நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கையேட்டுக் கட்டணமாக ரூபா 1,000.00 செலுத்தி நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

தபால் மூலம் அனுமதிக் கையேட்டைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இலங்கை வங்கி, ரொறிங்டன் கிளையின் 0002323287 என்ற கணக்கிலக்கத்துக்கோ அல்லது மக்கள் வங்கி, நகர மண்டபக் கிளையின் 167-1-001-4-3169407 என்ற கணக்கிலக்கத்துக்கோ விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1,000.00 வைப்பிலிட்ட சிட்டையுடன் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வேண்டுகைக் கடிதத்துடன், சுயமுகவரியிடப்பட்ட தபாலுறையுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும்,

மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 011-2695301, 011-2695302 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சார பணிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..!

0

எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நாளைய தினம் நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு அதாவது நாளைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள், வேட்பாளர்கள் தங்களது பிரசாரப் பணிகளை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனப் படுகொலை நடைபெறவில்லை; நிரூபிக்க தேர்தலை பயன்படுத்தும் அரசு – சிறிதரன் எம்.பி

0

வடக்கு கிழக்கில் இனப் படுகொலை நடைபெறவில்லை மனித குலத்திற்கு எதிரான போர்க் குற்றங்களில் இலங்கையின் அரச, இராணுவ நிர்வாகம் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஜனநாயகத் தீர்ப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு பயன்படுத்த எல்லா வகைப் பிரயத்தனங்களையும், மோசடிகளையும் முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முழங்காவில் – நாச்சிக்குடா சந்தியில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு முதன்மை உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பூநகரி பிரதேச சபைக்கான வேட்பாளர்கள், கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் 23 வருட பாதுகாப்பு அதிகாரி யாழிற்கு இடமாற்றம்..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விக்ரமசிங்கவின் முக்கிய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய தலைமை காவல் பரிசோதகர் அசோக ஆரியவன்ஸ, தற்போது காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றத்திற்கு தேசிய காவல் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அசோக ஆரியவன்ஸ கடந்த 23 ஆண்டுகளாக விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அணியில் பணியாற்றியுள்ளார். இதில் 15 ஆண்டுகள் அவர் முக்கிய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

இந்த இடமாற்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது கைதிலிருக்கும் முன்னாள் எம்பி சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விக்ரமசிங்கவின் இடையிலான தொலைபேசி உரையாடலைப் பெற முயன்றதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக குறித்த அதிகாரி CID அதிகாரியொருவரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!