Friday, July 24, 2026
Huis Blog Bladsy 168

பொருத்தமான துறைகளைத் தெரிவு செய்வதன் மூலமே வேலை வாய்ப்பைப் பெற முடியும்..!

0

வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர் கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா இன்று (11) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வட மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

இங்கு உரையாற்றிய ஆளுநர்,

முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர் கல்விக்கான வாய்ப்பு இருந்ததாகவும் இன்று (11) அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது அரச பல்கலைக் கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர் கல்வி வாய்ப்பு பரந்தளவில் கிடைப்பதாகவும் தெரிவித்த ஆளுநர் அதனைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர் கல்வித் தெரிவு இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டிய ஆளுநர், பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

வட மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை என்றும் இவை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

யாழில் மனைவியின் காதை வெட்டி சித்திரவதை செய்த கணவனுக்கு சிறை..!

0

யாழ் – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் சித்திரவதை தாங்காது சண்டிலிப்பாயில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் அங்கு சென்ற கணவன் கடந்த 07.10.2024 அன்று மனைவியின் காதினை வெட்டிவிட்டு தப்பி வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் குறித்து கடந்த 10.10.2024 அன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக வேறு சில முறைப்பாடுகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும் காணப்படுகிறது. இந் நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் மனைவியின் தலை மற்றும் காலை உடைத்து, பல்வேறு சித்திரவதைகளை புரிந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் (11) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பியன்ஸ் கிண்ணம் 2025; 12ஆம் திகதிக்குள் அணிகளை அறிவிக்க உத்தரவு..!

0

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 08 நாடுகளும் தங்களது அணிகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டுமென ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

08 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் மார்ச் 09ஆம் திகதிவரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இருப்பினும், இந்திய அணி தனது போட்டிகளை டுபாயில் விளையாடவிருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 08 அணிகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் வீரர்கள் உபாதை காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம்.

வீரர்களை மாற்ற பெப்ரவரி 13ஆம் திகதிவரை அனுமதி உள்ளது. இதுவரையில் இங்கிலாந்து மட்டுமே இந்த தொடருக்கான அணியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் பணி இடை நீக்கம்..!

0

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இடைநீக்கம் செய்ய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகளிர் T20 உலகக் கிண்ணப் போட்டி; இலங்கை அணி மலேசியா பயணம்..!

0

மலேசியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி இன்று (11) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டது.

16 அணிகள் பங்குபற்றும் இப் போட்டித் தொடரின் ஆரம்ப சுற்றில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இலங்கை அணி ‘ஏ’ பிரிவில் விளையாடவுள்ளது.

தொடரின் முதல் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இதன் கீழ் இலங்கையின் முதல் போட்டி மலேசியாவுக்கு எதிராக ஜனவரி 19ஆம் திகதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷானின் மகள் லிமான்சா திலகரத்ன உட்பட 15 பேர் கொண்ட அணியை நேற்று (10) இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்தது.

அணித் தலைவராக மொரட்டுவை வேல்ஸ் கல்லூரியின் மானுடி நாணயக்கார தெரிவு செய்யப்பட்டார்.

பிரேசிலின் நெய்மர் ஜூனியரின் புதிய சாதனை..!

0

பிரேசிலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் 2024ஆம் ஆண்டில் 2 போட்டிகளில் மொத்தமாக 42 நிமிடங்கள் மட்டுமே விளையாடி 101 மில்லியன் யூரோ பணத்தை உழைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கால்பந்து உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மொத்தமாக தனது கால்பந்து வாழ்க்கையில் 717 போட்டிகளில் விளையாடிய நெய்மர் ஜூனியர் 439 கோல்களை அடித்துள்ளார். அத்தோடு 279 முறை கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.

இங்கிலாந்து – ஆஸி அணிகளுக்கிடையிலான மகளிர் ஆஷஸ் தொடர் நாளை ஆரம்பம்..!

0

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நடப்பாண்டிற்கான மகளிர் ஆஷஸ் தொடர் நாளை(12) தொடங்கவுள்ளது.

இந்தத் தொடர் இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி அவுஸ்திலியாவுக்குச் சென்று தலா 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும், ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.

இதில் இவ்விரு அணிகளுக்கிடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் தொடரானது சிட்னி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Identity படம் – திரை விமர்சனம்

0

மலையாள சினிமாவில் தொடர்ந்து மிக தரமான படங்கள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது.

அதிலும் கிரைம் திரில்லர் என்றால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல், அந்த வகையில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ஐடென்டிட்டி எப்படியுள்ளது பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண் ஆடை மாற்றுவதை ட்ரையல் ரூமில் வீடியோவாக எடுத்து ஒருத்தன் மிரட்டி பணம் கேட்கிறான்.

அப்படி ஒரு பெண்ணை மிரட்டும் போது, ஒருவன் அவன் இருக்குமிடம் தேடி சென்று அனைத்தையும் அழித்து அவனையும் கொன்று அந்த இடத்தையே எரித்து விடுகிறான்.

இந்த கொலையை இதே கேஸை பாலோ செய்து வரும் திரிஷா நேரில் பார்க்கிறார். அப்போது அந்த செய்தியை தொலைக்காட்சியில் வெளியிட வேகமாக போக அவர் மீது லாரி மோதி பேஸ் ப்ளைண்ட் என்ற பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது இந்த கேஸை வினய் விசாரிக்க, டொவினோ நன்றாக படம் வரைபவர், அவர் உதவியுடன் திரிஷாவிற்கு அந்த கொலை செய்தவன் முகம் மட்டும் நியாபகமிருக்க, அதை டொவினோ வரைகிறார்.

ஆனால், திரிஷா சொன்ன அத்தனை அடையாளமும் டொவினோ தாமஸுடன் ஒன்றி போக, அட இது என்னடா டுவிஸ்ட் என்று வினய் பார்வை டொவினோ மீது போக, அவரும் அப் நார்மலாக செயல்பட, சந்தேகம் வலுவாகிறது,

இந்த நேரத்தில் நான் தான் அந்த கொலை செய்தேன் என்று ஒருவர் ஆஜராக, அட யார் தான்பா அந்த கொலை செய்தது என்ற சுவாரஸ்யமே இந்த Identity.

படத்தை பற்றிய அலசல்

மலையாள படம் என்றாலே கிரைம் திரில்லர் எடுப்பதில் வல்லவர்கள், அப்படி ஒரு கிரைம் திரில்லரை ஆண்டின் இரண்டாம் நாளே இறக்கியுள்ளது மலையாள சினிமா.

படத்தின் முதல் பாதி முழுவதும் அந்த கொலையை செய்தது யார் என்ற பதட்டம் தொடங்க, இரண்டாம் பாதி அப்படியே மாறி எதோ போக்கிரி படம் பார்ப்பது போல் மாறுகிறது.

டொவினோ தாமஸ் யார் என்ற கொஞ்சம் ஓவர் என்றாலும் படத்தின் கதைக்கு தேவை, அவரும் ஆ ஊ என்று அலட்டாமல் மௌனமாகவே தன் மேனரிசம் மூலமாவே கலக்கியுள்ளார்.

திரிஷாவும் ஒரு பேஸ் ப்ளைண்ட் பெண்ணாக படம் முழுவதும் ஒரு குழப்பத்துடனே வந்து கடைசியில் அவரும் அந்த கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஆள் யார் என்று கண்டுப்பிடிகும் இடம் சூப்பர்.

வினய் இந்த கதாபாத்திரம் பார்த்தவுடனே இவர் இந்த வேலையை செய்து இருப்பார் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை, அவரும் வழக்கம் போல் கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்.

படத்தின் முதல் பாதி சீட் எஜ்-ல் உட்கார வைத்தாலும், இரண்டாம் பாதி களமே மாறி அதிரடி ஆக்‌ஷன் படம் பார்ப்பது போல் உள்ளது, லாஜிக் மீறலும் கொஞ்சம் வருகிறது,

கிளைமேக்ஸ்

ப்ளைட்டில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் லெவல் தான். ஜாக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம், ஒளிப்பதிவு அட்டகாசம்.

மொத்தத்தில் இந்த Identity மூலம் Malayalam சினிமா தன் ஹிட் கணக்கை ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கி விட்டது.

கேம் சேஞ்சர் – பட விமர்சனம்

0

தமிழ் சினிமாவின் தரத்தை மற்றும் வர்த்தகத்தை பல மடங்கு உயர்த்தி சென்ற ஷங்கர் சமீப காலமாக சின்ன சறுக்கலில் இருக்க, அந்த சறுக்கலிலிருந்து கேம் சேஞ்சரில் மீண்டாரா, பார்ப்போம்.

கதைக்களம்

ராம் சரண் ஒரு நேர்மையான IAS அதிகாரியாக தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில் எந்த ஒரு குற்றமும் நடக்கக்கூடாது என்று ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வருகிறார்.

இதனால் CM மகனான எஸ் ஜே சூர்யாவின் மணல் கொள்ளை பாதிக்கப்படுகிறது, முதலமைச்சருக்கு தெரியாமல் இரவில் மணல் எடுக்கலாம் என்று பார்த்தால், ராம் சரண் அதற்கு தடையாக இருக்கிறார்.

இதனால் ராம் சரணுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் முதலமைச்சரை பதவிக்காக எஸ் ஜே சூர்யா கொல்லவும் செய்கிறார், அதோடு ராம் சரணை கொல்லவும் திட்டமிடுகிறார்.

ஆனால், இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஒரு வீடியோவில் அடுத்த CM யார் என்பதை வெளியிட, அதை பார்த்த ஒட்டு மொத்த மாநிலம் மற்றும் எஸ் ஜே சூர்யாவும் ஷாக் ஆக, அதன் பின் ராம் சரண், எஸ் ஜே சூர்யா மோதல் மேலும் பல மடங்கு ஆக, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அரசியல் கதை எல்லாம் அல்வா சாப்பிடுவது போல் ஷங்கருக்கு, ஆனால், அந்த அரசியல் களத்தில் தான் இந்தியன் 2-வில் சறுக்க, கேம் சேஞ்சர் மூலம் மீண்டும் தான் அரசியல் கிங் என நிரூபிக்க போராடியுள்ளார்.

ஆம், போராடியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும., ராம் சரண் IAS ஆபிசராக மிடுக் ஆன தோற்றத்தில் கலக்கியுள்ளார், மொத்த படத்தையும் தாங்கி செல்வது ராம் சரண் தான், ப்ளாஷ்பேக்கில் வரும் அப்பா ராம் சரண் கேரக்டரில் திக்கு வாயில் அவர் படும் கஷ்டங்களை நம் கண் முன் கொண்டு வருகிறார்.

அதோடு இரண்டாம் பாதியில் மகன் ராம்சரண் தேர்தல் ஆணைய அதிகாரியாக வந்து செய்யும் அதிரடி ஆக்‌ஷன் என ராம் சரண் கெரியரில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துள்ளது கேம் சேஞ்சர்.

கியாரா ஷங்கர் படம் என்றாலே ஹீரோயினுக்கு கொஞ்சமாது முக்கியத்துவம் இருக்கும், இதில் அதுக்கூட இல்லை, வெறும் அழகு பதுமையாக வந்து செல்கிறார், அதோடு பாடல்களுக்கு தலையை காட்டுகிறார்.

வில்லனாக எஸ் ஜே சூர்யா படம் முழுவதும் பழைய ஷங்கர் வில்லன் ரகுவரனை நியாபகப்படுத்துகிறார், அதோடு கிளைமேக்ஸில் பாம் வைக்கிற காட்சியெல்லாம் அப்படியே ரகுவரனாகவே மாறிவிடுகிறார்.

ஆனால், எஸ் ஜே சூர்யா கண்டிப்பாக தன் உடல் மொழியை இந்த படத்திலிருந்து மாற்றியே ஆகவேண்டும், இதுவே தொடர்ந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்.

படத்தின் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக சென்றாலும், ராம் சரண் காலேஷ் போஷன் கியாராவுடன் காதல் படத்தின் வேகத்தடையாக வருகிறது.

இரண்டாம் பாதியில் ப்ளாஸ்பேக் டிபிக்கல் ஷங்கர் ஸ்டைல், ஆனால் இந்த முறை மசாலா மிக அதிகம், அதுவும் கொஞ்சம் ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் படம் போலவும் உள்ளது ப்ளாஸ்பேக் காட்சிகள்.

தேர்தல் ஆணையராக வரும் ராம் சரண் போஷன் மீண்டும் படம் செம வேகமெடுக்கிறது, அதிலும் கிளைமேக்ஸில் தேர்தல் கவுண்டிங்-கை எஸ் ஜே சூர்யா நிறுத்த வரும் காட்சியெல்லாம் இந்த டிஜிட்டல் உலகில் கூட இப்படி ஒரு காட்சி வைத்தது அதுவும் ஷங்கர் படமா இல்லை பாலையா படமா என்று தான் கேட்க தோன்றுகிறது.

படத்தின் ஒளிப்பதிவு வழக்கம் போல் பல பிரமாண்ட கூட்டம், செட் என அனைத்தையும் அத்தனை அழகாக காட்டியுள்ளனர்.

தமனின் இசையில் தொப், ஜருகண்டி பாடல் அட்டகாசம், இரண்டும் விண்டேஜ் ஷங்கர் டச். பின்னணி இசை கொஞ்சம் இரைச்சலை குறைச்சு இருக்கலாம்.

மொத்தத்தில் கேம் சேஞ்சர் ஷங்கர் எடுத்துள்ள ஆந்திரா மீல்ஸ், ஆனால் அதிலும் காரசாரம் குறைவே.

மெட்ராஸ்காரன் – திரை விமர்சனம்

0

ஷான் நிகம், கலையரசன் நடிப்பில் வெளியாகியுள்ள மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

கதைக்களம்

சத்யா (ஷான் நிகம்) தான் காதலித்த பெண்ணுடன் சொந்த ஊரான புதுக்கோட்டையில் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடுகளை செய்கிறார்.

மறுநாள் திருமண என்ற நிலையில் ஏடிஎம்மிற்கு செல்லும் சத்யாவுக்கும், அங்கு ஒரு ஆளை அடிக்க தயாராக நிற்கும் துரைசிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் சத்யா, மணப்பெண்ணை பார்க்க அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு காரில் போகும்போது கர்ப்பிணி பெண் ஐஸ்வர்யா தத்தா மீது மோதி விடுகிறார்.

இதனால் அவரது உறவினர்கள் ஒன்று கூடி சத்யாவை தாக்க முயல, முதலில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று பேசி அழைத்து செல்கிறார் சத்யா.

அங்கு ஐஸ்வர்யா தத்தாவின் சகோதரரான அரசியல்வாதியும், கணவர் துரைசிங்கமும் வருகிறார். சிகிச்சையில் இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறந்து விடுகிறது.

இதன் காரணமாக குற்ற உணர்ச்சியில் சத்யா தாமாக சரணடைந்து சிறைக்கு செல்கிறார். அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? காதலியை மீண்டும் கரம் பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

சென்னையில் கஷ்டப்பட்டு உழைத்து தனது திருமணத்தை சொந்த ஊரில் தடபுடலாக நடத்த வேண்டும் என்று ஷான் நிகம் ஏற்பாடுகளை செய்கிறார். திருமணத்திற்கு தயாராகும் வீடு எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சத்யாவாக வரும் ஷான் நிகம் பேசும் தமிழில் மலையாள சாயல் தெரிவது ஆரம்பத்தில் உறுத்தலாக இருந்தாலும் அவரது நடிப்பால் அதனை மறக்கடிக்க செய்கிறார்.

கலையரசன் துரைசிங்கம் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். முதல் பாதிவரை பரபரப்பாக செல்ல வேண்டிய திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் ஏதோ ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என்பதை யூகிக்க முடிந்த நிலையில், வில்லனின் பின்னணி மற்றும் அவர் செய்த குற்றங்கள் என கதை எங்கெங்கோ செல்கிறது.

அதிலும் சுவாரஸ்யம் இல்லை. வலுவில்லாத திரைக்கதையில் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாதது போல் இருக்கிறது கிளைமேக்ஸ்.

நடிப்பை பொறுத்தவரை கருணாஸ், தீபா உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை மற்றும் கல்யாண பாடல் ஆறுதல். படத்தின் கதைக்கும் தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லை.

புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ஹீரோ வேலைக்காக தான் சென்னை சென்றிருக்கிறார். மேலும் நீ எந்த ஊரு என உள்ளூரில் கேட்கும் போது சென்னை என்கிறார். இதுபோல் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் படத்தில்.

மொத்தத்தில் ஆராவாரமாக தொடங்கி அயர வைத்து விட்டார் இந்த மெட்ராஸ்காரன்.

error: Content is protected !!