பிரதமர் பதவியிலிருந்தோ அல்லது கல்வி அமைச்சுப் பதவியிலிருந்தோ ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஹரிணி அமரசூரிய அவரின் இரு பதவிகளிலும் தொடர்ந்து செயற்படுவார் எனவும் அரசுக்குள் இது குறித்து எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹரிணி அமரசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும், ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அரசின் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும் என்றும், அதற்காக ஹரிணி அமரசூரியவின் தலைமை அவசியமானதாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமருக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள உள்ளக வீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ் வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2025 இன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
குறிப்பாக வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் பள்ளவெளி 01ஆம் குறுக்குவீதி,04ஆம் குறுக்குக்கு வீதி, 05ஆம் குறுக்குவீதி (சுரேந்திரன் கடைவீதி) என்பன மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன.
ஆகவே இவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு குறித்த வீதிகளைச் சீரமைத்துத் தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் மக்களால் இதன் போது கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலைமைகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், கோரிக்கைகளை எழுத்துமூலமாக கையளிக்குமாறு தெரிவித்ததுடன், குறித்த வீதிகளின் சீரமைப்புத் தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய பெண்ணை காணவில்லை என்று உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த அ. கான்சியூஸ் சகாயகீர்த்தனா வயது (21) எனும் திருமணமான பெண்ணை அவரது கணவர் நேற்றைய தினம் ( 10-1-2025) மன்னார் பொது மருத்துவ மனைக்கு பற் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று பின்னார் அங்கிருந்து கணவர் வீடு திரும்பி மீண்டும் மனைவியை அழைத்துவர சென்ற போது அந்த பெண் அங்கு இல்லை.
இது தொடாபாக மருத்துவமனையிலும் விசாரணை செய்து மன்னார் நகரம் முழுவது தேடியும் பெண் தொடர்பான தகவல் இல்லை என்பதால் உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் மன்னார் வைத்திய சாலையில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து வவுனியா செல்லும் பேருந்தில் சென்று வவுனியா குழு மாட்டுச் சந்தியில் இறங்கி வேறு ஒரு முச்சக்கர வண்டியில் சென்றதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தார்கள்.
இன்றைய தினமும் வவுனியா குழு மாட்டுச் சந்தி உட்பட பல இடங்களிலும் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த போதும் பெண் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
காணாமல் போன இந்த இந்த பெண் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும் அவர்களது 0763302475 இந்த தொலைபேசிக்கும் அழைத்து தெரியப் படுத்துமாறு பெண்ணின் உறவினர்கள் கவலையுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்,
அதன்படி, இந்த ஆண்டு முழுவதும் ஏழு முக்கிய பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பின் படி, “இந்த ஆண்டின் முதல் பரீட்சையாக இன்று (11) நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையாகும்.
அடுத்து சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (GCE A/L) பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் ஜனவரி 12 முதல் ஜனவரி 20 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தர பரீட்சை பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26, 2026 வரை நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (GCE A/L) பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்.
2027 ஆம் ஆண்டு முதல் முறையாக உயர்தர பரீட்சைக்கு பங்கேற்கும் மாணவர்களுக்கான மற்றொரு பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்சை, ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும்.
இந்த ஆண்டின் இறுதி தேசியப் பரீட்சையான 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17 வரை நடைபெற உள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பாடங்களை ஜனவரியில் முடிப்பதும், 2026 சாதாரண தர பரீட்சையை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதும் தேசிய பரீட்சை நாட்காட்டியை அதன் வழக்கமான அட்டவணைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை (NCM) சமர்ப்பிப்பதை ஒத்தி வைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய கல்வித் தொகுதிகளிலும் தீர்க்கப்படாத பல சிக்கல்கள் குறித்து எதிர்க்கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தாமதப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்கண்ட விடயம் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கவலைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சேர்க்க கட்சி கூடுதல் நேரத்தைக் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பரந்த ஆதரவைப் பெறுவதற்காக மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் நாடாளுமன்றக் குழுக்களுடன் மேலும் கலந்துரையாடல்கள் தேவைப்படுவதால் இந்த தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கட்டத்தில் பிரேரணையை சமர்ப்பிப்பதால் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்படாமல் போகலாம் என்ற கவலையும் எதிர்கட்சிக்கு உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
யாழில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. கடல்நீர் உட்புகுந்தபோதிலும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இவ்வாறு கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றைய தினம் சனிக்கிழமை (10) காலை முதல் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்லவில்லை.
இதே வேளை இன்றைய தினம் சனிக்கிழமை (10) அசாதாரண வானிலையால் பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விடத்தல்தீவு துறை ஊடாக கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்லவில்லை.இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை என்பது ஈழத் தமிழ் வரலாற்றில் மிக முக்கியமான, அதே நேரத்தில் மிகக் கொடூரமான ஒரு சம்பவமாகும். 1974 ஆம் ஆண்டு யாழில் நடைபெற்ற மூன்வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு ஆகியவற்றை உலக அளவில் உயர்த்தும் நோக்குடன் நடத்தப்பட்டது.
ஆனால் இந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கை அரசின் காவல் துறை வன்முறையால் யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை என்ற துயரமான பெயரைப் பெற்றது. இன்று வரை “1974 யாழ் மாநாடு”, “யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை” என்ற சொற்கள் ஈழத் தமிழர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற அமைப்பு 1966 கோலாலம்பூரில் தொடங்கப்பட்டு, 1968 சென்னையில் நடைபெற்ற பின்னர், 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த 1974 யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கைத் தமிழர்களால் சுயமுயற்சியில் நடத்தப்பட்ட முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பதால் அதற்கு வரலாற்று முக்கியத்துவம் அதிகம்.
யாழ் மாநாடு, ஈழத் தமிழ் அறிவுசார் அடையாளத்தை உலகுக்கு காட்டிய ஒரு மேடையாக அமைந்தது. அதனால் தான் யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இலங்கை அரசுக்கு ஒரு அரசியல் அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது.
1974 ஜனவரி மாதம் முழுவதும் யாழ்ப்பாணம் நகரம் ஒரு தமிழ் பண்பாட்டு தலைநகராக மாறியது. யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், மொழியியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர்.
தமிழ் இலக்கியம், தமிழ் மொழி வரலாறு, சங்க இலக்கியம், ஈழத் தமிழ் பண்பாடு போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்த யாழ் மாநாடு, ஈழத் தமிழர்களின் அறிவுத் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு முக்கிய தருணமாக இருந்தது.
1974 ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற்ற யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி, பெரும் மக்கள் திரளை ஈர்த்தது. யாழ் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியை காண ஆயிரக் கணக்கான பொது மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் யாழில் திரண்டனர்.
ஆனால் இந்த யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசாங்கத்தால் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் இலங்கை காவல் துறையின் கடுமையான கண்காணிப்பும், அரசின் இனவாத அணுகுமுறையும் நிலைமையை பதற்றமாக மாற்றின.
யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நடந்த அந்த இரவில், இலங்கை போலீசார் கூட்டத்தை கலைக்கும் பெயரில் தடியடி மற்றும் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். இந்த போலீஸ் வன்முறையே யாழ் மாநாட்டுப் படுகொலையின் நேரடி காரணமாக அமைந்தது.
அச்சத்தில் மக்கள் ஓட முயன்றபோது பெரும் நெரிசல் ஏற்பட்டது. யாழ் மாநாட்டு வளாகத்திற்கு அருகில் இருந்த மின்கம்பிகள் மற்றும் மின்கோபுரங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். சிலர் நெரிசலில் மிதிபட்டு மரணமடைந்தனர். இதுவே வரலாற்றில் யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை என பதிவானது.
அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசு, யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையில் 9 பேர் உயிரிழந்ததாக அறிவித்தது. ஆனால் தமிழ் ஆதாரங்கள், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ஈழத் தமிழ் வரலாற்று பதிவுகள், 1974 யாழ் மாநாட்டுப் படுகொலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதைவிட அதிகம் எனக் கூறுகின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பதே இந்த யாழ் மாநாட்டுப் படுகொலையின் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது.
இலங்கை அரசு இந்த யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையை ஒரு தற்செயலான விபத்து என கூறியது. ஆனால் ஈழத் தமிழர்கள் இதை ஒரு விபத்தாக ஏற்கவில்லை. யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஒரு அமைதியான பண்பாட்டு நிகழ்வு.
அந்த நிகழ்வின் மீது காவல் துறை மேற்கொண்ட வன்முறை, திட்டமிட்ட அரசியல் அடக்குமுறையாகவே பார்க்கப்பட்டது. அதனால்தான் இந்த சம்பவம் “யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை” என்று அழைக்கப்படுகிறது; “யாழ் மாநாட்டு விபத்து” என்று அல்ல.
1974 யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, ஈழத் தமிழர் அரசியலில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த யாழ் மாநாட்டுப் படுகொலையின் பின்னர், இலங்கை அரசின் மீது இருந்த தமிழர்களின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது.
மாணவர் இயக்கங்கள் தீவிரமடைந்தன. இளைஞர்களிடையே எதிர்ப்பு, போராட்ட உணர்வு வலுப்பெற்றது. பல ஆய்வாளர்கள், 1974 யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையே ஈழத் தமிழர் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி எனக் குறிப்பிடுகின்றனர்.
யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, தமிழ் இலக்கியம், கவிதைகள், அரசியல் உரைகள் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது.
யாழ் மாநாட்டில் உயிரிழந்தவர்கள், தமிழுக்காகவும், தமிழ் பண்பாட்டுக்காகவும் உயிர் தந்தவர்களாக ஈழத் தமிழர்களால் போற்றப்படுகின்றனர்.
இன்றுவரை இந்த யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை தொடர்பாக முழுமையான விசாரணையோ, நீதியோ கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த 1974 யாழ் மாநாட்டுப் படுகொலை, ஈழத் தமிழ் வரலாற்றில் ஒரு தீராத வடுவாக உள்ளது.
நீதியமைச்சினால் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு கருத்து வெளிப்பாடுச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளுக்கு அச்சுறுத்தலானதாக இருப்பதனால், அதனை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என கத்தோலிக்க பாதிரிமார் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் கத்தோலிக்க பாதிரிமார் 37 பேர், கத்தோலிக்க அருட்சகோதரிகள் 3 பேர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 8 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதியமைச்சின் இணையத்தளத்தில் புதிய சட்ட வரைவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தடைச் சட்டமானது சிறுபான்மையின மக்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்துப் பிரயோகிக்கப்படுவதனை மேற்கோள்காட்டி, அச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது.
முதலில் தற்காலிக நடைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், பின்னர் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. அச்சட்டமானது ஒருவரைப் பிடியாணையின்றிக் கைது செய்வதற்கும், 18 மாதங்கள் வரை தடுத்து வைப்பதற்கும் இடமளிப்பதுடன், குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான மீறல்களுக்கு இடமளிப்பதாகக் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.
இவ்வாறானதொரு பின்னணியில் புதிய வரைவை வெளியிட்டிருப்பதன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அதிகாரங்களையும் அரச ஆதிக்கத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கான அரசாங்கத்தின் தற்போதைய நகர்வானது ஒடுக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாகவும், சிவில் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகவும் அளித்த தேர்தல்கால வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.
அதுமாத்திரமன்றி இப்புதிய சட்ட வரைவானது கருத்து வெளிப்பாடுச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளுக்கு அச்சுறுத்தலானதாக இருப்பதனால், அதனை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் அமெரிக்காவின் டெல்டா படைப்பிரிவு அதிரடியாக களமிறங்கி அந்நாட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் சிறைப் பிடித்து தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றதைப் போன்றதொரு படை நடவடிக்கையை இலங்கையிலும் இந்திய படையினர் 1987ல் மேற்கொண்டிருந்தனர்.
மிகவும் கனகச்சிதமாக இந்திய சிறப்பு படையால் திட்டமிடப்பட்டு அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவர்களின் இந்த நடவடிக்கை படுதோல்வியில் முடிவடையும் என்பதை அவர்கள் கனவிலும் உணர்ந்திருக்கவில்லை என்பதுடன் இதில் ஈடுபட்ட பலர் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்திய அமைதி காக்கும் படை (IPKF) யாழில் தரையிறங்கியது. இதன் முதன்மை நோக்கம், ஆயுதக் குழுக்களை ஆயுத ஒழிப்பு செய்து, ஒப்பந்தத்தை அமுல்படுத்தி, வடக்கு – கிழக்கில் அமைதியை நிலை நாட்டுவதாகும்.
ஆரம்பத்தில், தமிழ் மக்களிடையே ஒரளவு எதிர்பார்ப்பு இருந்தாலும், விரைவில் புலிகள் – IPKF மோதல்கள் தீவிரமடைந்தன. யாழ் நகரம் மற்றும் சுற்றுப் புறங்களில் நடந்த இராணுவ நடவடிக்கைகள், கடும் சண்டைகள், ஊரடங்குகள் ஆகியவை தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையை பெரிதும் பாதித்தன. குறிப்பாக 1987 அக்டோபரில் நடந்த யாழ்ப்பாணப் போர் இந்த மோதல்களின் உச்சக் கட்டமாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்வுகள், இந்திய இராணுவத்தின் பங்கு அமைதி காக்கும் பணியிலிருந்து நேரடி போர் நடவடிக்கையாக மாறிய ஒரு முக்கிய கட்டமாக வரலாற்றில் பதிவானது.
1987 அக்டோபரில், இந்திய–இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிந்தைய சூழலில், இந்திய அமைதி காக்கும் படை (IPKF) யாழில் ஹெலிகாப்டர்கள் மூலம் படையினரை இறக்கி பிரம்படி வீதியில் இருந்த புலிகளை அழித்தல், பிரபாகரனை கைது செய்தல் எனும் நோக்கில் முக்கிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இம்முயற்சி படுதோல்வியுடன் நிறைவுக்கு வந்தது.
இந்த நடவடிக்கைகள் குறிப்பாக யாழ் நகரப் பகுதிகள், பலாலி, கோப்பாய், நல்லூர் போன்ற இடங்களை மையமாகக் கொண்டு, வான்வழி தரையிறக்கம் மற்றும் சமாந்தரமாக தரைப் படை முற்றுகை போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன.
இந்த தாக்குதல்களில் புலிகள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். அதே நேரத்தில், கடும் உயிரிழப்புகள், பொது மக்கள் பாதிப்பு, மற்றும் பொருளாதார சேதங்கள் ஏற்பட்டதாகவும் வரலாற்றுகள் கூறுகின்றன.
இதன் மூலம், IPKF-யின் பங்கு “அமைதி காக்கும் படை” என்ற நிலையிலிருந்து “இன அழிப்புப் படை” என்ற நிலைக்கு மாற்றியது.