முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியைச்சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மருத்துவமனை மரணத்திற்கு விரைந்து நீதியை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 03.01.2026அன்று சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி 986பேர் கையொப்பமிட்ட மகஜரும் இக்கடிதத்துடன் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் “மாணவி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் நியாயமான விசாரணை கோருதல் – முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை” எனத் தலைப்பிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
முல்லைத்தீவு மாவட்டம் – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த மாணவி குகநேசன் டினோஜா என்பவரின் மரணம் தொடர்பில் தங்களின் மேலான கவனத்திற்கு மரியாதையுடன் கொண்டு வருகிறேன்.
கடந்த 2025.12.21 அன்று இரவு 7.20 மணியளவில், குறித்த மாணவி உணவு ஒவ்வாமையால் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
ஒவ்வாமையின் விளைவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், குழந்தை நல மருத்துவர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களின் பரிந்துரையோடு குறித்த மாணவிக்கு அதிகளவான மருந்து ஏற்றப்பட்டு அதன் பின்னர் 10 நிமிடத்தின் பின்னர் பிள்ளை மரணமடைந்ததாக பொதுமக்கள் பலரும் முறைப்பாடுகளை முன்வைத்தனர். மேலும் இது தொடர்பில் மருத்துவமனை ஊழியர்கள் சிலரும் நேரடியாக என்னிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி சம்பவத்தின் தீவிர நிலையை கருத்திற் கொண்டு, இது தொடர்பில் நியாயமான, வெளிப்படைத் தன்மையான, சுயாதீன விசாரணை அவசியம் என நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் மருத்துவ சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொது மக்களால் பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் கடந்த காலங்களில் முன் வைக்கப்பட்டமையையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணி பற்றாக்குறை ஆகியவற்றால் மாவட்ட பொது மருத்துவமனை என்ற வகையில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இந்த மருத்துவ மனையில், வினைத் திறனான மருத்துவ சேவை வழங்கல் தொடர்பான தொடர்ச்சியான கண்காணிப்பும் பொறுப்புக் கூறலும் அவசியமாகிறது.
எனவே, மேற்படி சிறுமியின் மரணம் தொடர்பில் நீதியான, சுயாதீன விசாரணை மேற்கொள்ள ஆவன செய்யுமாறும், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவ மனையின் பாதுகாப்பான, தரமான மற்றும் வினைத் திறனான மருத்துவ சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இத்தோடு முல்லைத்தீவு சமூகத்தினரின் 986 கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கைக் கடிதத்தையும் தங்களுக்கு இணைத்து அனுப்புகிறேன்.
தங்கள் கனிவான கவனத்திற்கும் மேற்படி வேண்டுகைக்கான விரைவான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் காணப்படும் மோசமான சட்டங்களான மகாவலி அதிகார சபை சட்ட மூலம், பயங்கரவாத சட்ட மூலம் மற்றும் வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களங்களுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கிய சட்டமூலங்கள் திருத்தம் செய்யப்படவேண்டுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை முன்வைத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (09.01) இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்யும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இங்கு உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலங்களின் ஒழுங்குவிதிகளில் திருத்தம் கொண்டு வரப்படுவதற்காக நாங்கள் விவாதிக்கின்றோம்.
அந்த வகையில் காலசூழ்நிலைக்கு ஏற்ப, நாட்டு மக்களிந் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சட்டங்களில் மாற்றம் செய்யப்படவேண்டிய தேவை இருக்கின்றது, அந்த சட்டங்களிற்கு கீழே வருகின்ற ஒழுங்குவிதிகளை மாற்றம் செய்ய வேண்டியிருக்கின்றது.
எமது நாட்டில் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் மிகவும் பாரதூரமான மனித உரிமைகளைக்கு மதிப்பளிக்காத இந்தநட்டின் குடிமக்களை சமனாக நடத்தாத பல மோசமான சட்டங்கள் இருந்திருக்கின்றது. இந்த நாட்டில் வாழும் மக்களை அடக்கி ஒடுக்கக்கூடிய பல சட்டங்கள் இருந்திருக்கின்றது. அந்தவகையிலே இந்தச்சட்டங்களை காலசூழ்நிலைக்கு ஏற்ப மாற்றவேண்டிய கடப்பாடு இப்பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது.
ஆகவே இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் இறக்குமதி, ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்யும் விடயத்தை எடுத்து பார்க்கும்போது, இங்கே விவாதிக்கப்படுகின்ற ஏற்றுமதி, இறக்கிமதி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றமை காலத்தின் தேவையாக இருக்கின்றது. ஆனால், இந்த சட்டத்தின் ஒழுங்குவிதிகளில் செய்யப்படுகின்ற மாற்றங்களை குறிப்பிட்ட அந்த தேவைக்காக மட்டும் பாவிக்க வேண்டும் என்பதை ஒரு எச்சரிக்கையாக இந்த சபைக்கு சொல்ல விரும்புகின்றேன்.
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களிற்க்கு உதவும் முகமாக வெளிநாட்டு நிறுவனங்கள், அரசாங்கள், வெளிநாட்டிலே வாழும் தனிநபர்கள் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு வழங்கும் நன்கொடைகளை எந்தவிதமான இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு உரிமமும் இல்லாமல் எங்களது நாட்டுக்குள்ளே வரவழைக்கலாம் என்கின்ற அனுமதி இந்த சட்டத்தின் திருத்தப்படும் ஒழுங்குவிதிகளினூடாக வழங்கப்படுகின்றது.
மோசமான ஒரு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள சூழல்நிலையில் அவ்வாறான ஒரு அனுமதியை வழங்குவது அவசியமானதாக இருந்தாலும் இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூற விரும்புகிறேன். ஏனெனில் இவ்வாறான விசேட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் தங்களுக்கு தேவையான, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான விடயங்களை செய்யலாம் என்ற எச்சரிக்கையினையும் அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புகிறேன்.
அவ்வாறே இந்த சட்டத்தினூடாக நன்கொடையாக கிடைக்கும் இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் அவசியமான, எமது நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்கள் போன்றவற்றை கொண்டுவருவதற்கு கூட இந்த சட்டத்தில் அனுமதி வழங்கப்படுகின்றது.
2004ம் ஆண்டு இந்த நாடு மிக மோசமாக சுனாமியால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வைத்தியராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.
அங்கு கிடைக்கப்பெற்ற இவ்வாறான நிவாரனப்பொருட்களில் அவை உணவுப் பொருட்களாக இருக்கலாம், மருந்துப் பொருட்களாக இருக்கலாம், அல்லது உடுபுடவைகளாக இருக்கலாம் கனிசமானவை எங்கள் நாட்டின் காலநிலைக்கு ஒவ்வாத உடுதுணிகளாக, எங்கள் நாட்டில் பேசப்படாத, புரியப்படாத மொழிகளிலே விளக்கம் கொடுக்கப்பட்ட மருந்துகளாக எங்கள் மக்கள் பயன்படுத்த பழக்கப்படாத உணவுப் பதார்த்தங்கள், எமது மக்கள் பயன்படுத்தாத பிளாஸ்ரிக் பொருட்கள் என பல வகையான நிவாரணப் பொருட்கள் வந்து சேர்ந்தது.
இறுதியில் எங்களுடைய நிர்வாகத்திற்கு அந்தப்பொருட்களை எவ்வாறு கையாளுவது என்று தெரியாமல் களஞ்சியங்கள் யாவும் நிறைந்து மக்களிற்கு பயனில்லாமல் அவற்றை இருப்பிலிருந்து வெளியே எடுப்பதற்கு பட்டபாடு அந்த காலத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே, இந்த சட்டத்தை பயன்படுத்தி எங்களுக்கு கிடைக்கக் கூடிய பொருட்கள் எல்லாவற்றையும் கையேந்தி வாங்காமல் , கட்டுப்பாட்டுடன் பொருட்களை பெற எத்தணிக்க வேண்டும்.
அதேபோல இன்னொரு முக்கிய விடயம் யாதெனில், இலங்கை தரநிலைகள் நிறுவனத்தின் அனுமதி பெறாமல் பெறக்கூடிய பொருட்களை நாட்டிற்கு உள்ளே கொண்டுவரலாமா இல்லையா என்கின்ற தீர்மானத்தை இறுதியாக எடுக்கக் கூடியவராக இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஒரு தனிநபருக்கு இவ்வளவு பெரிய அதிகாரத்தை கொடுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இவ்வாறே எமது நாட்டில் இன்னும் பல சட்டங்களை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. நாட்டு மக்களின் ஒரு பகுதியினரை குறிவைத்து அவர்களின் அடிப்படையான வாழும் உரிமையை இல்லாமல் செய்கின்ற பல சட்டங்கள் இன்றும் வலிதானவையாக இருக்கின்றன.
எங்கள் நாட்டிலே இருக்கின்ற மிகமோசமான சட்டங்களை பார்த்தால், குறிப்பாக பயங்கரவாத தடுப்புச்சட்டம், மற்றும் மகாவலி அதிகாரசபையை உருவாக்கிய சட்டமூலங்களை குறிப்பிடலாம். அவர்களிற்கு எந்த விசாரனையும் இல்லாமல் சிறைப்படுத்தக்கூடிய, எமது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு எல்லையற்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வனவளத் திணைக்களம், வணஜீவராசிகள் தினைக்களம் போன்ற எல்லையற்ற அதிகாரம் குவிக்கப்பட்ட மேற்படி திணைக்களங்கள் இந்த நாட்டில் எவராலும் கட்டுப்படுத்த முடியாதவையாக உள்ளன.
எம் மக்களுக்கு தொடர்ச்சியாக துன்பங்களை தருபவர்களாக எமது இருப்பை, வாழும் உரிமையை மறுக்கின்ற திணைக்களங்களாக இவை உள்ளன. இவ்வாறான சட்டங்களிலும் நாம் மாற்றங்களை கொண்டுவர வேண்டியுள்ளது.
அதேபோல எமக்குப் பிரயோசனமான சில மாற்றங்களை சட்டங்களில் செய்ய வேண்டிய தேவை எமக்குள்ளது. மிகக் குறைந்த வருமானத்தை பெறும் உள்ளூராட்சி சபைகளை எடுத்துக் கொண்டால், அவற்றை பலப்படுத்தக் கூடிய பல சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டிய தேவை எமக்குள்ளது.
நாம் சிறுவர்களாக இருந்தபோது உள்ளூராட்சி சபைகள் மிதிவண்டிகளிற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதனூடாக தமக்கான வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்பொது அவர்களால் அந்த அனுமதிப் பத்திரம் வழங்கமுடியாமல் இருக்கின்றது.
ஏனெனில், அந்த இலக்கத் தகட்டை வழங்க இப்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி சபை வாங்கக் கூடிய கட்டணம் 5 ரூபாய். ஆனால் இலக்கத்தகடு செய்ய செலவாகும் பணம் 25 ரூபாய். ஆகவே அந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு 20 ரூபாய் செலவை உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டும். ஆகவே அந்த சட்டத்தையும் உடனடியாக திருத்த வேண்டும்.
அதேபோல இந்த உயரிய சபையில் நேற்று வீதிவிபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் துன்பங்களையும் குறைப்பதற்காக சட்டத்திருத்தம் ஒன்றினை கொண்டுவந்து விவாதித்திருந்தோம்.
நான் பல இடங்களில் இதுபற்றி பேசியிருக்கின்றேன். குறிப்பாக வடக்கு கிழக்கை எடுத்துக் கொண்டால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பிரதானமான காரணங்களில் ஒன்றாக இருப்பது கட்டாக்காலி விலங்குகள். குறிப்பாக உரிமையாளர்களால் முறையாக பராமரிக்கப்படாத கால்நடைகள். அந்த விலங்குகள் இரவு நேரத்தில் வீதியில் படுத்திருப்பதால் பலபேர் அவற்றுடன் மோதுண்டு இறக்கின்றார்கள்.
எமது நாட்டில் யுத்தத்தால் இறந்தவர்களை விட வீதி விபத்துக்காலால் இறந்தவர்கள் அதிகம். ஒரு வருடத்திற்கு சராசரியாக 2500 பேர் இந்த விபத்துக்களால் இறக்கின்றார்கள், 35,000 நபர்கள் காயங்களுக்கான மருத்துவ சிகிச்சை பெறுகிறார்கள்.
நான் குறிப்பிடும் சிறிய ஒரு விடயத்தை செய்தால் பல விபத்துக்களை தடுக்கலாம். அதாவது கால்நடை சுகாதார திணைக்களத்தால் ஒவ்வொரு பதிவு செய்யப்ப்பட்ட கால்நடைக்கும் காதிலே ஒரு பட்டி அணிகிறார்கள். அந்த பிளாஸ்ரிக் பட்டியை இரவிலே வெளிச்சத்தில் ஒளிரக் கூடிய வகையில் ஒளிரும் பட்டியாக போட்டால் இரவு நேரத்தில் இடம்பெறும் பல விபத்துக்களை தடுக்கலாம்.
இறுதியாக, எமது நாட்டில் இருக்கின்ற பல சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களுக்கு பிரயோசனமான மாற்றங்கள் வரும் போது நிச்சயமாக எமது ஆதரவு அரசாங்கத்திற்கு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
திரு. திலித் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர், “மாகாண சபைகள் இலங்கைக்கு பொருத்தமற்றவை” என அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
திரு. திலித் ஜயவீர அவர்கள் ஒரு திறமையான சட்டத்தரணியும், முன்னணி தொழிலதிபரும், சிங்கள தேசியவாதியாக அரசியலில் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட நீதியரசர், அவரது சிங்கள தேசியவாதத்தை முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக கருதுவது தவறான புரிதல் என சுட்டிக் காட்டினார்.
அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், புத்தமதம் பரவுவதற்கும், சிங்கள மொழி உருவாவதற்கும் முன்னரே, தமிழ் மொழி பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களாக இருந்துள்ளன என அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் கே. இந்திரபாலாவின் ஆய்வுகளின் படி, தமிழ் பேசும் மக்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும், 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் இதனை அரசியல் ரீதியாக அங்கீகரித்துள்ளதும் அவர் நினைவூட்டினார்.
மாகாண சபைகளின் உண்மையான நோக்கம்
மாகாண சபைகள் முழு இலங்கைக்காக அல்ல, மாறாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு தன்னாட்சி வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடு என நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
“சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களுக்கு மாகாண சபைகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவை சிங்கள மக்களின் நலனுக்காக உருவாக்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்ட அவர்,
தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்ட காரணங்களாக,
1956 ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் அரச மொழியாக்கப்பட்ட சட்டம்,
1958, 1977, 1981 மற்றும் 1983 இனப்படுகொலை,
1971 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக தரநிலைப்படுத்தல் (Standardisation) போன்ற அரச கொள்கைகள், தமிழ் மக்களின் அரசியல் நம்பிக்கையை முற்றிலும் உடைத்தன, இவைதான் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டதற்கான அடிப்படை காரணங்கள் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச சட்டமும் சுயநிர்ணய உரிமையும்
சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (ICCPR) –
கட்டுரை 1 இன் படி, “எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது” என்பதையும், அது தனி நபர்களுக்கல்ல, மக்கள் என்ற குழுவுக்கே உரியது என்பதையும் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
மேலும் வடக்கு – கிழக்கின் தமிழ் பேசும் மக்கள், ICCPR வரையறைப்படி ஒரு “இன மக்கள்” ஆகும் என்றும், அவர்களுக்கு சுய ஆட்சி உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனினும் இன்றுள்ள மாகாண சபை அமைப்பு, தமிழ் மக்களுக்கு முழுமையான தன்னாட்சியை வழங்கவில்லை. ஆனால், அதற்கு மாற்றான அரசியலமைப்பு ஏற்பாடு உருவாகும் வரை, மாகாண சபைகளை ஒழிப்பது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முற்றிலும் அழிக்கும் செயல் ஆகும்” என நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அதனால், “மாகாண சபைகள் இலங்கைக்கு பொருத்தமற்றவை” என்ற திரு. திலித் ஜயவீர அவர்களின் கருத்தை, தான் திடமாக நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன்(09) முடிவடைகிறது.
அதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இந்த மாதம் 21 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தர (உயர்தர) பரீட்சை பாடங்கள் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2,086 பரீட்சை மையங்களில் நடைபெறும்.
இந்த நிலையில், அனர்த்தம் காரணமாக தேசிய அடையாள அட்டையை (NIC) இழந்த மாணவர்கள் தற்காலிக அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தற்காலிக அடையாள அட்டை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலை அதிபரால் வழங்கப்படும் என்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்த ஸ்ரீயினால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தீர்ப்புக்காக இன்றைய தினம் (09.01) திகதியிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.
இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார்.
குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் கல்வித் துறைசார் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் 08.01.2026 அன்று நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் 1ம் மற்றும் 6ம் தரங்களிற்கான புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் ஊடாக உரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலை அதிபர்களை தயார்ப்படுத்தல், புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விரிவான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல், வடக்கு மாகாணத்தின் கல்வி மட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு வருவதற்காக செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான விடயங்கள் ஆகியன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன், மாகாண கல்வி அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை தற்போதய பிரதம செயலாளர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில் பொருத்தமற்ற பின்கதவு நியமனம் பெற்ற ஒருவர் அக் கதிரைக்கு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், குறித்த கல்விசார் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கடிதமொன்றினைக் கையளித்துள்ளார்.
குறிப்பாக கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை, முற்றுப் பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள், இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப நெருக்கடி, சுகாதார வசதிக் குறைவுகளால் பாடசாலைகளில் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், கற்றல் பெறுபேறுகளிலுள்ள ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட மிகமுக்கியமான குறைபாடுகள் வன்னியில் காணப்படுவதாகவும் அக் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு கோரியே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு பிரதமரிடம் கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 09.01.2025இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இக்கடிதத்தைக் கையளித்துள்ளார்.
அந்த வகையில் வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் அவசர கல்விசார் குறைபாடுகள் தொடர்பில் உடனடித் தலையீடு கோருதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கல்வி மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நான் எழுப்பிய விடயங்களைத் தொடர்ந்து, வன்னி தேர்தல் மாவட்டம் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் முறைமைசார் சவால்களை மீண்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எமது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பாரதூரமான வளப் பற்றாக்குறைகள் குறித்து உங்களின் உடனடித் தலையீட்டை நான் பணிவுடன் வேண்டுகிறேன்.
கல்வியில் சமத்துவம் மற்றும் இலக்கமுறை நிலைமாற்றம் ஆகியவற்றுக்கான தேசியக் கொள்கையில் அர்ப்பணிப்புகள் இருந்த போதிலும், வன்னி பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் கட்டமைப்பு ரீதியான, மனிதவள ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இவை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாணவர்களைக் கடுமையான பின்னடைவுக்கு உள்ளாக்குகின்றன.
பின்வரும் ஐந்து முக்கிய விடயங்களை நான் உங்கள் கவனத்திற்கு ஈர்க்க விரும்புகிறேன்:
01. கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை: வடமாகாணத்தில் மாத்திரம் ஆரம்பக் கல்வியில் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இது ஒரு குழந்தையின் கற்றல் பயணத்தின் அடித்தளத்தையே இது பாதிக்கின்றது.
02. முற்றுப்பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள்: வன்னிப் பிராந்தியத்தில் 20 இற்கும் மேற்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் முற்றுப்பெறாமலும், பயன்படுத்த முடியாத நிலையிலும் கைவிடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
03. இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) நெருக்கடி: மன்னார் கல்வி வலயத்தில் 45 பாடசாலைகளுக்கு இணைய வசதி இல்லை, 26 பாடசாலைகளில் ஒரு கணினி கூட இயங்கும் நிலையில் இல்லை. வன்னிப் பிராந்தியத்தில் தற்போது 2000 இற்கும் மேற்பட்ட கணினிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. ( மன்னார் கல்வி வலயத்தில் 539, முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 552, வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 318). இலத்திரனியல் மயமாக்கலில் சமத்துவத்தை உறுதி செய்ய இவற்றை பழுதுபார்க்க அல்லது மாற்றீடு செய்ய ஒரு முறையான பொறிமுறையை விரைவாக உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
04. சுகாதார வசதிகள்: குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற விகிதம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. பாடசாலைகளுக்கு கிடைக்கும் மிகவும் குறைவான பராமரிப்புச் செலவு காரணமாக பாடசாலைகள் சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்கின்றன. இது குறிப்பாக மாணவிகளின் வரவு மற்றும் பாதுகாப்பினைப் பாதிக்கின்றது.
05. கற்றல் பெறுபேறுகளில் உள்ள ஏற்றத்தாழ்வு: தேசிய மதிப்பீடுகளின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் பின்தங்கியுள்ளனர். சமமற்ற வளப் பகிர்வும், ஆசிரியர் பற்றாக்குறையுமே இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, பின்வரும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சை நான் தயவோடு கேட்டுக்கொள்கிறேன்:
1. வன்னிப் பிராந்தியத்திற்கென பிரத்யேகமான ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றத் திட்டம்.
2. பாதியிலேயே கைவிடப்பட்ட அனைத்து பாடசாலைக் கட்டடங்களையும் உடனடியாகக் கட்டி முடித்தல்.
3. வசதிகள் அற்ற பாடசாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கணினிகள், இணையம் மற்றும் ஆய்வுகூட வசதிகளை வழங்குதல்.
4. கிராமப்புறப் பாடசாலைகளுக்கு பிரத்தியேக சுகாதார மற்றும் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல்.
5. முல்லைத்தீவு மற்றும் வன்னிப் பிராந்தியத்தின் உண்மை நிலையை நேரில் கண்டறிய தாங்கள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு, மாணவர்களின் நிலையை அவதானித்தல்.
வன்னிப் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு குழந்தையும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் பின் தங்கிவிட மாட்டார்கள் என்பதை உங்கள் தலைமையின் கீழ் உறுதி செய்ய முடியும் என நான் பெரிதும் நம்புகிறேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களுக்குமிடையில் இன்றைய தினம் (09.01.2026) விசேட சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்ற குழுவின் தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தின் போது இன்றைய தினம் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையிலேயே இன்று காலை 10.30 மணிக்கு குறித்த சந்திப்பு இடம் பெற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.
இதன் போது தமிழ் மொழி மூல வரலாற்று நூல்கள் மற்றும் பாடத் திட்டங்களில் தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளமை பற்றி பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவற்றினை மீண்டும் பாடப் புத்தகங்களில் கொண்டுவர வேண்டும் என தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வடக்கு, கிழக்கு பல்கலைக் கழகங்கள் மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தினை சேர்ந்த ஆய்வாளர்களை இவ்விடயத்தில் தொடர்புபடுத்தி வரலாற்று தகவல்களை தொகுத்து அவற்றை தமிழ் மொழி மூல பாடத்திட்டத்தில் உள்ளீர்ப்பு செய்ய இதன் போது பிரதமருக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது.
விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் வரலாறுகள் பாடத் திட்டங்களில் உள்ளீர்ப்பு செய்யப்படுமென பிரதமர் இதன் போது தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் பாட புத்தகங்கள் மற்றும் தரம் – 01 இற்கான பாடப் புத்தகங்களில் அதிக எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக இதன் போது பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. அவற்றினையும் விரைவாக திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் தயாரிக்கும் போது அவை ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் மொழிமாற்றம் செய்யப்பட்டே தமிழுக்கு மாற்றப்படுகின்றது. அதில் குறிப்பாக உயிரியல் பாட வினாத்தாள்கள். அவ்வாறு மொழி மாற்றம் செய்யும் போது நிறைய பிழைகள் ஏற்படுகின்றது.
மொழி மாற்றத்தில் காணப்படும் சிக்கலினால் பரீட்சை பெறுபேறுகளிலும் அதிக தாக்கம் ஏற்படுகின்றது. இந்த விடயத்திற்கும் உடன் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டதுடன், இவ் விடயம் மீள நிகழாது என பிரதமர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெவ்வேறு திட்டங்களினூடாக அமைக்கப்பட்ட பல பாடசாலை கட்டிடங்கள் இன்னும் பூரணப்படுத்தப் படாதுள்ளது. அவற்றில் சில ஆபத்தான நிலையில் இடிந்துவிழும் நிலையில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அவற்றினை பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது.
இங்கு பதிலளித்த பிரதமர் கடந்த வருடம் மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் பாவிக்கப்படாது மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வருடம் உரிய அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நேரடியாக தலையிட்டு மேற்படி விடயங்களுக்கும் குறித்த நிதியை பயன்படுத்தவும் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கையெடுக்குமாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தொழினுட்ப கல்லூரியில் ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் (Early Childhood Development and Education) கற்கை நெறியினை கடந்த 8 மாதங்களாக தமிழ் மொழி மூலம் கற்று வருகின்றவர்கள் அதற்கான பரீட்டையினை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்ற விடயம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை அக்கறையோடு கேட்டுக்கொண்ட பிரதமர் விடயத்தை குறிப்பெடுத்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் பெருந்தொகை ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலும் பிரதமருடன் பேசப்பட்டது. வடக்கில் தமிழ்மொழி மூலம் 3771 வெற்றிடங்களும், சிங்களமொழி மூலம் 68 வெற்றிடங்களும், கிழக்கில் 5854 வெற்றிடங்களும் நிலவுவதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது. இந்த வருட ஆசிரிய நியமனங்களின் போது இயலுமானவரை இந்த வெற்றிடங்களை நிரப்ப நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.
மேற்படி முக்கிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஶ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஶ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், துரைராசா ரவிகரன், மருத்துவர் ஶ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா நீதிமன்றத்தில் இன்று(09) முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது, 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், அது தொடர்பான விசாரணை தொடர்பாக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் எமில்நகர்ப் பகுதிக்கு அண்மையாக 15 வயதுச் சிறுமி ஒருவர் அவளது காதலன் மற்றும் நண்பர்களால் கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளான நிலையில் மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய காதலன் உட்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இருவர் தேடப்படுகின்றார்கள். அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆறு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு 5 பேர் வவுனியா சிறைசாலைக்கும் ஒருவர் யாழ் சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.