Sunday, July 6, 2025
Huis Blog Bladsy 39

கிளிநொச்சியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள்..!

0

வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரிடம் வழிபறியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து முகக் கவசத்துடன் சென்ற இருவர் பரந்தன் பூநகரி வீதியில் உள்ள தம்பிராய் பகுதியில் குறித்த வர்த்தரின் தொலைபேசி மற்றும் பணப்பையை பறித்துகொண்டு தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.

அவ்வீதியால் பயணித்த மக்களுக்கு விடயத்தை பாதிக்கப்பட்ட வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த இருவரையும் துரத்திச் சென்ற பொது மக்கள், இருவரையும் மடக்கிப் பிடிக்க முயற்சித்த நிலையில், முட்கொம்பன் பகுதிக்குள் சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

முட்கொம்பன் காரியன்கட்டுக் குளம் பகுதியினூடாக தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த இருவரையும் பிரதேச மக்களின் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நையப்புடைந்த மக்கள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.

யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்கள்..!

0

யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரை வழி மறித்து பொலிஸார் சோதனையிட்ட போது 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது..!

0

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் கல்னேவ பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த அதிகாரிகள் 30,000 ரூபா இலஞ்சம் பெற முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவனை தாக்கியதாக முறைப்பாடு; பாடசாலை அதிபர் விளக்கமறியலில்..!

0

பாடசாலை மாணவன் ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டிற்காக பொலன்னறுவை பகுதி பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மெதிரிகிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான அதிபரை, அடுத்த மாதம் 11 ஆம் திகித வரை விளக்க மறியலில் வைக்க ஹிங்குராக்கொடை பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த மெதிரிகிரிய காவல்துறையினர், தாக்குதலுக்குள்ளான 17 வயது மாணவன், தான் படித்து வந்த பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் தன்னை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபரை விசாரித்து கைது செய்ததாக கூறியுள்ளனர்.

அத்தோடு, தாக்குதலினால் மாணவனின் காதில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்ததாகவும், மெதிரிகிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதற்கு முன்னதாகவும் மாணவனை குறித்த அதிபர் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது சித்திரவதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஹிங்குராக்கொட வலயக் கல்வி அலுவலகமும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அதிபர் மீதான விசாரணைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சங்கில் இணையும் ஈ.பி.டி.பி; வெளியேறியது மணிவண்ணன் அணி..!

0

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்துப் போட்டியிட தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகப் போட்டியிடப் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. யாழில் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், தமக்கிடையில் இரண்டு சுற்றுப் பேச்சுகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பின்னர், 9 கட்சிகள் இணைந்து தேர்தலில் கூட்டாகப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தன.

இந்நிலையில், ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் தலைமையில் இயங்கும் கட்சியையும் இந்தப் புதிய கூட்டில் உள்ளடக்கியமையால் சில கட்சிகள் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.

இதையடுத்து, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் என்பன இந்தப் புதிய கூட்டில் இருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, கடந்த காலத்தில் அரசுடன் இணைந்து தமிழர் விரோத செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுடன் எதுவித கூட்டும் இல்லை என்ற கொள்கைக்கு இணங்க தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு..!

0

25 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியான காலம் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த நிலையில், வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கு காலணிகளை வழங்குவதற்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2025 மார்ச் 20 வரை நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அஸ்வெஸ்ம நலன்புரி நன்மைகளைப் பெறுபவர்களுக்கு பணமாகவும் ஏனையவர்களுக்கு வவுச்சராகவும் வழங்கப்பட்டுள்ளமை குறைபாடாக உள்ள போதும் குறித்த காலணி வவுச்சர்கள் மற்றும் 6000ரூபாய் வவுச்சர்கள் என்பவற்றை பெற்றோர் மற்றும் மாணவர்கள் சிலர் பணமாக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றமை கண்டறியப்ப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட குழுவினரே விலகியுள்ளனர்..!

0

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே விலகி வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.கே. தெரிவித்தார். ஜே. திரு. ராஜகருணா கூறுகிறார்.

சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இன்று (1) காலை 7 மணி நிலவரப்படி பணம் செலுத்தப்பட்ட 2,924 ஓடர்கள் தற்போது டெலிவரி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இன்று வரை, CPC-யிலிருந்து 1696 லோடுகள் பணம் செலுத்தி ஓடர் செய்யப்பட்டுள்ளன. மேலும், IOC-யிலிருந்து 471, சினோ பெக்கிலிருந்து 391, மற்றும் RM பார்க்கிலிருந்து 366 லோடுகள் ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

குறித்த குழுவினரின் திட்டமிட்ட செயற்பாட்டினால் சிறு தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதே தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் இது எதிர்வரும் திங்கள் முதல் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா? மீண்டும் வரிசை யுகமா?

0

இலங்கை முழுவதும் உள்ள பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்திய புதிய கட்டண முறையை எதிர்த்து, அவர்கள் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகல் முதல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன, மேலும் பலர் கொள்கலன்களில் அதிகபட்ச எரிபொருளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட அதிக தேவையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்து விட்டது. இருப்பினும், ஏனைய நிறுவனங்களின் எரிபொருள் நிலையங்கள் வழமை போல் எரிபொருள் விநியோகம் செய்கின்றன.

அதேவேளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சில விநியோகஸ்தர்களும் தங்கள் எரிபொருள் விற்பனையை வழமை போல் செய்து வருகின்றனர்.

சிறைகளில் வாடும் ஆனந்த சுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க..!

0

நீண்ட காலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 01.03.2025இன்று இடம் பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி, மருதநகரைச்சேர்ந்த ஆனந்தசுதாகர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்தசுதாகர் ஆயுள் தண்டனை கைதியாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவி கடந்த 2018 இல் உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிக் கிரியைக்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.

இறுதிக் கிரியையினை முடித்துக் கொண்டு சிறைச்சாலை பேருந்தில் ஆனந்தசுதாகர் ஏறச் சென்ற வேளை அவரது பிள்ளை தங்தையின் கையைப் பிடித்து தானும் சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் கலங்க வைத்தது.

நீதி அமைச்சரே, நீதியைத் தாருங்கள். அவரோடு சேர்ந்து சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளவர்களுக்கும் உடன் விடுதலையைத் தாருங்கள் – என்றார்.

விகாரையின் கீழ் இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள்; மடியில் கனமில்லை எனில் நிரூபியுங்கள்..!

0

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் கீழ்ப் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (01) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே விகாரையை அகற்றி அகழ்வினை மேற்கொண்டோ, நவீன முறையில் ஸ்கேன் கருவிகள் மூலமோ ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய அரசாங்கம் முன்வர வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட போது தமது உறவுகளை, குறிப்பாக கணவரை மனைவியும், மகன், மகளை பெற்றோரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய முன்றலில் ஒப்படைத்தார்கள். தடுப்பு முகாம்கள், கடல் எனப் பல இடங்களிலும் சரணடைந்தார்கள்.

வட்டுவாகலில் ஒப்படைக்கப்பட்டவர்களை கொக்குத்தொடுவாய் நோக்கியும், கேப்பாப்புலவு நோக்கியும், வட்டுவாகல் கடற்கரை நோக்கிய பாதையிலும் பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டார்கள்.

இலங்கைப் படையினரிடம்தான் ஒப்படைத்தோம். இன்னும் காணவில்லையே அவர்கள் எங்கே என்று தேடுகின்றார்கள். நீதிஅமைச்சரே நீதி தாருங்கள். நியாயப்படி நடந்து கொள்ளுங்கள்.

வட்டுவாகல் கடற்கரைப் பாதை நோக்கி பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்றவர்களை விட்டு விட்டு பேருந்துகள் மட்டும் திரும்பி வந்ததாகவும் மக்கள் சொல்கின்றார்கள். வட்டுவாகல் தனித்தமிழ் சைவக் கிராமமாகும். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் ஒரு பெரிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்களை கொண்டு சென்று, படுகொலை செய்து புதைத்துவிட்டு அதன்மேல் இவ்வாறு பெரியவிகாரை இங்கு அமைத்து விட்டதாக மக்கள் கூறுகின்றனர். உங்களின் மடியில் கனமில்லை என்றால் இதனை நிரூபியுங்கள்.

விகாரையை அகற்றி ஆழமாகத் தோண்டுங்கள். அல்லது புதிய தொழில்நுட்ப முறையில் ஆழத்தில் இருப்பவற்றை அறியக் கூடியதான நவீன கருவிகளைப் பயன்படுத்தி உண்மையை வெளிப்படுத்துங்கள்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிக்கும் நீதியைத் தாருங்கள். சிலவேளை நீங்கள் நீதியைத் தரும் போது, நீதிபதி சரவணராஜா போல்தான் உங்களுக்கும் நீதி கிடைக்குமோ தெரியாது.

ஆனால் இன்றைய அரசை நம்புவோம் இந்த விடயங்களுக்கு நீதி தாருங்கள் என்று கேட்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!