பிரான்ஸ் பாரிஸ் வொண்டிப் பகுதியில் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட 39 வயதான கணவனும் 36 வயதான மனைவியும் நள்ளிரவு வேளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் விவாகரத்துப் பெற்றுள்ளனா்.
இந் நிலையில் மனைவி மற்றும் அவளது இரு குழந்தைகளுக்குமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையை மனைவி பெற்றுவந்த நிலையில் இரகசியமாக கணவனுடம் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிய வருகின்றது.
இந் நிலையிலேயே இவர்கள் இருவரும் பிரான்ஸ் பொலிசாரால் நள்ளிரவு வேளை வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருநகர் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கும்பல் ஒன்று போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கும்பலை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமிருந்தும் ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , கும்பலின் ஏனைய வலையமைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, தமக்கான வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். அவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (21.11.2025) புதுமுறிப்பு விக்னேஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நான் நிர்வாகச் சேவையில், ஆளுநராகப் பதவியேற்ற பின்னரே மாகாண நிர்வாகத்தினுள் நுழைந்தேன். மாகாண நிர்வாகம் இவ்வளவு பின்னடைவைச் சந்திக்கக் காரணம், பொறுப்பிலுள்ள சில அதிகாரிகளே.
இவர்கள் பதவிகளையும் கதிரைகளையும் பிடித்து வைத்துக் கொண்டு, மக்கள் சேவையாற்றாது காலத்தை ஓட்டுகின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித தயக்கமும் இன்றிப் பெற்றுக் கொள்ளும் இவர்கள், அந்த மக்களுக்குச் சேவையாற்ற மட்டும் விரும்புவதில்லை. இத்தகைய சுமைகளையும் சுமந்து கொண்டே நாம் பயணிக்க வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல கிராமங்கள் அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ‘பின்தங்கிய கிராமம் என்று எதுவும் இருக்கக் கூடாது’ என்ற உறுதியான நோக்கோடு செயற்பட்டு வருகிறது.
எமது மாகாணத்துக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த நன்மைகள் மக்களைச் சென்றடைவதற்கு எமது அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருப்பது வேதனையளிக்கிறது” என கூறினார்.
திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிற்றுண்டிச் சாலைக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (21) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்குத் தொடுத்த நகராட்சி மன்றின் சார்பிலும், எதிர் தரப்பான சிற்றுண்டிச் சாலையின் உரிமையாளர் சார்பிலும் விரிவான சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
மட்டக்களப்பில் தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த 12 வயதான சிறுமியை மாமனார் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் , சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் பாலியல் கல்வி தொடர்பிலான கற்பித்தல் இடம்பெற்றது.
இதன் போது, சிறுமி சோகமாக இருந்ததனை அவதானித்து , அது தொடர்பில் ஆசிரியர் வினாவிய போதே சிறுமி தனக்கு நடந்த சம்பவம் தொடர்பில் கூறியுள்ளார்.
அது தொடர்பில் ஆசிரியரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , மாமனாரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜெ. பிரபாகரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, எதிரியான சிறுமியின் மாமனாரை குற்றவாளியாக கண்டு , 40 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டினை செலுத்த தவறின் மேலும் மூன்று வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என தண்டனை தீர்ப்பை வழங்கினார்.
நாட்டின் தெற்கு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் பன்னலவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா நெடுங்கேணி காவல்நிலையத்தில் பணிபுரியும் சாஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைதுநடவடிக்கை நேற்று(19) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
குறித்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறைஉத்தியோகத்தர் ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்றையதினம் நெடுங்கேணி பகுதிக்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் காவல்துறை உத்தியோகத்தர் இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதியை பெறமுற்பட்ட போது அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம்(20) வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் முழுமையாக திட்டமிட்ட இனவாத செயற்பாடு இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருகோணமலை புத்தர் சிலை தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நெருங்கிய தொடர்புள்ளது. கஸ்ஸப தேரர் முழுமையான இனவாதி எனவும் சாடியுள்ளார்.
கஸ்ஸப தேரருக்கு பணம் கொடுத்தால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒருவர் என சத்தாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கஸ்ஸப தேரர் தலையிடும் விடங்களில் குழப்பங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாகும். அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி அரசுக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.
இந்த பேரணி, சமகால அரசாங்கத்தை கவிழ்க்க நாமல் ராஜபக்சவினால் முன்னெடுக்கும் செயற்பாடாகும் என்றும் சத்தாரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலைக்கு அடுத்தடுத்து தேரர்கள் செல்கின்றார்கள். ஞானசார தேரரும் சென்றார். அப்படி என்றால் ஏதோ ஒரு பிர்ச்சினை உள்ளதென அனைவருக்கும் தெரியும்.
தவறான விடயங்களுக்கு நாங்களும் எதிர்ப்பு தான். அரசாங்கத்தை கவிழ்க்க இந்த மோசடியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
அதற்கான இனவாதம் மதவாதம் தூண்டப்படும் என நான் பயமின்றி கூறுவேன். இந்த மோசடி செயற்பாடுகளில் ஏமாற வேண்டாம் என நான் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
போதை பொருள் கடத்தல்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள், திருடர்களால் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்குத் தேசிய மக்கள் சக்தி அரசு இடமளிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் திருகோணமலைக்குச் சென்று, வடக்கு மற்றும் கிழக்கு விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக் கொண்டு பௌத்த சின்னங்களை அங்கு வைப்பதற்குத் தடையாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுக்கின்றார் எனவும், எவ்வித காரணத்துக்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது எனவும் கூறியிருந்தார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,
எமது தமிழர் தாயகத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் செயற்பாடுகளைபி பார்த்துக் கொண்டு இனியும் இருக்கமாட்டோம். அத்தோடு தேசிய மக்கள் சக்தி அரசு, ஞானசார தேரரின் இனத் துவேஷ செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது.” – என்றார்.