பாடசாலை மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைது செய்யப்பட்ட அதிபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதிவான் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
சந்தேக நபரைத் தலா மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதேவேளை கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கிராமப்புற பாடசாலைகளை மூடுவது பாடப்புத்தகங்களை இல்லாமல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பல்கலைக் கழக மாணவர் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில் ‘பாடசாலைகள் மூடப்படுகிறது பாட புத்தகங்கள் இல்லை, மாணவர்கள் கல்வியை விட்டு வெளியேற்றம், சீர்திருத்தத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப் பொருளில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தலைமையில் இன்று கையொழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இன்று வரை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏன் ஏமாற்றுகிறது.
இன்றைய இளைய சமூதாயத்தினர் நாளைய தலைவர்கள் அவர்களின் கல்வி தேவைக்காக ஒதுக்கப்படும் நிதியை இடை நிறுத்தினால் மாணவர்களின் கல்வி எந்தளவுக்கு செல்லும் மக்களே சிந்தியுங்கள்” என கூறியுள்ளனர்.
போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கடந்த மாதம் (5) கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த அதிபர் தொடர்பில் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிகாரி ‘அதிபர்’ எனக் குறிப்பிடப்பட்டாலும், அவர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல.
அவர் இலங்கை ஆசிரியர் சேவையின்அதிகாரி என்பது உறுதியாகியுள்ளதுடன், அவர் அதிபர் பதவியை தற்காலிகமாகப் பொறுப்பேற்று (Covering duties) பணியாற்றியுள்ளார்.
‘அதிபர்’ என்று அழைக்கப்படக்கூடியவர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் மாத்திரமே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் மேலும் கூறுகையில், அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் அல்லாதவர்கள் இவ்வாறு ‘அதிபர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது அதிபர் சேவைக்கு செய்யப்படும் அநீதியாகும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், குறித்த அதிகாரியைப் பற்றிய தகவல்களை வெளியிடும் போது, அவரை “இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி” என்று அடையாளப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும், அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 16, 2019 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர் கடந்த 34 ஆண்டுகளாக ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றியதாகக் கூறினார்.
அத்துடன் தேர்தல் ஆணையாளர் நாயகமாக தனது கடமைகளைச் செய்வதில் தனக்கு உதவிய அனைத்து முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலாளர்கள், பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களுக்கு சமன் ஸ்ரீ ரத்நாயக்க தனது நன்றியைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலையின் விவாதம் நாளை (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக்க கூறுகையில், இந்த வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்காததால் அதற்கு எதிராக வாக்களிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபானக் கடத்தல்களில் ஈடுபட்டு அதன் மூலம் சொத்துக்களை ஈட்டிய எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி, சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினால் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் போது, மாஹிங்கொட, எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி, சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி, 3 கோடி ரூபா பெறுமதியான மூன்று காணிகளையும், எஹெலியகொட இரத்தினபுரி வீதிக்கு அருகில் உள்ள 6 பேர்ச் காணியில் கடையுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றையும் கட்டியுள்ளார்.
இதையடுத்து, சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள், பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்குச் செயலிழக்கச் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மாஹிங்கொட, எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஆவார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி, பேராதனை வீதியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் முகத்தில் உள்ள தழும்புகளுக்கு சிகிச்சை பெற வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் சேட்டை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கண்டி குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் ஒருவரை கைது செய்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
அந்த இளம் பெண் நேற்று (13) மதியம் சிகிச்சைக்காக மையத்திற்குச் சென்றிருந்த போது சிகிச்சைக்காக அவரிடம் ரூ.35,000 செலுத்துமாறு வைத்தியர் கேட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் ரூ.20,000 மட்டுமே இருந்ததால், மீதமுள்ள தொகையை பின்னர் செலுத்த யுவதி அவகாசம் கேட்டுள்ளார். இதன் போது ரூ.5,000 சிறப்புக் கழிவாகச் செலுத்தி, மீதமுள்ள ரூ.10,000 பின்னர் செலுத்த அனுமதிப்பதாக கூறியுள்ளனர்.
பின்னர் மருத்துவ நிபுணர் என்று கூறிக் கொண்ட குறித்த சந்தேக நபர், யுவதியின் உடலைப் பரிசோதிப்பதாக கூறி அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பெண் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று கொக்குவில் – கலட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
20, 21 மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக் கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர் என கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட பிக்குகள் தெரிவித்துள்ளனர்
யாழிற்கு நேற்றைய தினம் வருகை தந்த பிக்குகள் முன்னதாக யாழ் . பொது நூலத்திற்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் , நூலகர்களுடன் கலந்துரையாடி புத்தகங்களையும் அன்பளிப்பு செய்தனர்.
தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கும் , யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கும் நூல்களை பகிர்ந்தளித்தனர்.
அதன் பின்னர் மாலை வலி. வடக்கு பிரதேசத்திற்கு சென்று அப் பகுதிகளை பார்வையிட்டதுடன் , மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றதுடன் , ஆலய குருக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்றைய தினம், காலை நாக விகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , விகாரதிபதியுடனும் கலந்துரையாடினர்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்
மேலும் தெரிவிக்கையில்,
யாழில் நாம் எந்த வித இடர்களுக்கும் முகம் கொடுக்கவில்லை. யாழ் மக்கள் அன்பாக வரவேற்றனர். எமக்கு மொழியே தடையாக இருந்தது. தமிழ் மொழி தெரியாததால் , மக்களுடன் பேச முடியாது இருந்தது.
சிங்களத்தில் பேசும் போது, அவர்களுக்கு சிங்கள மொழியை நன்றாக விளங்கி கொள்ள முடியாது இருந்தது. நாம் தமிழ் பேசிய போது, சந்தோசமாக எம்முடன் பேசினார்கள்.
தமிழ் மொழியை கற்றுக் கொண்டு , நாம் இங்கே வந்தால் மிக பயனுள்ளதாக எமக்கு இருக்கும்.
ஏழை மக்கள் தென்னிலங்கையிலும் அதிகளவில் உள்ளனர். ஆனாலும் நாம் வடக்கு மக்களுக்கு உதவ வேண்டும் எனும் நோக்குடன் இங்கே வந்து இந்த மக்களுடன் பழகி சிலருக்கு உதவியுள்ளோம்.
எமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டும் என தெரிவித்தனர்.
இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை மண்டபம் கடற்கரை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைதானவர் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் இந்திய எல்லைக்குள் உட்பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.