Saturday, May 2, 2026
Huis Blog Bladsy 63

கோட்டா கோ கம போராட்டம்; பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதாகும் சாத்தியம்..!

0

2022ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இந்த விடயத்தினை நேற்று அறிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, மன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.


முன்னதாக, கோட்டா கோ கம போராட்டம் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலமும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலமும் காவல்துறை உள்ளிட்ட பிரதிவாதிகள் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரி போராட்டக்காரர்கள் குழுவினால் 5 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்ற போதே அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


இதேவேளை, சம்பவம் நடந்தபோது காவல்துறை செயலற்ற நிலையில் செயற்பட்டதன் காரணமாகவே இந்த துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.

நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக எந்த சதியும் இடம்பெறவில்லை – அரசாங்கம் திட்டவட்டம்

0

நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக திட்டமிட்டு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், தனது பதவி உயர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.


இந்நிலையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதுடன், “முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது சேவைகள் தொடர்பில் சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.


சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும்.

அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம். மாறாக திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருக்கவில்லை.


இது வழமையான நடைமுறையாகும். சில துறைகளில் சேவை நீடிப்புக்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அங்கு பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்கு பொருத்தமானவர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே தான் அங்கு ஓய்வு பெறவிருந்த அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் கழுத்தறுத்துப் படுகொலை..!

0

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேன்று (04) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.


இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்று விட்டு மாலை வீட்டிற்குச் சென்று பார்த்த போது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இ. சிந்துஜா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டதால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இடை நிறுத்தப்படும் மன்னார் காற்றாலை திட்டம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

0

எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மீள் புதுப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.


குறித்த கருத்திட்டங்களில் ஒரு கருத்திட்டமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.

ஏனைய கருத்திட்டங்களான 20 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் 50 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முறையே இரண்டு தனியார் நிறுவனங்களால் 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மேற்படி திட்டங்களை தவிர மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதியினால் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இது குறித்து அமைச்சரவைக்குத் தெரிவித்து அமைச்சரவையின் ஒப்புதலை வழங்க எரிசக்தி அமைச்சர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் காணி அபகரிப்பில் மாற்றம் தராத அரசு – விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

0

இன்றைய அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகிறது என முன்னாள் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடக்கு மாகாணத்தில் 65000 ஏக்கர் அரச காணி இன்னமும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த தனியார் காணிகளே இன்றைய அரசாங்கத்தால் அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.


அரச திணைக்களங்கள் வடக்கு மாகாண காணிகளைக் கையேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. எனினும் ஒரு சில பொது விடயங்களில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது சரியானதாகவேபடுகின்றது.

நாட்டைச் சூறையாடியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர அயராது பாடுபடுகின்றார்கள். தாம் கையேற்ற பொருளாதார வங்குரோத்து நிலையை மேலும் சீரழிந்து போகவிடாமல் காப்பாற்ற பல வழிகளில் பாடுபடுகின்றார்கள்.

வன்முறையில் ஈடுபடும் பாதாளக் குழுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள். போதை மருந்து வருகையையும் பாவனையையும் குறைக்கப் பாடுபடுகின்றார்கள்.


நான் எவ்வாறு முதலமைச்சராக இருந்த போது எனது அமைச்சர்கள் பற்றி ஊழல் முறைப்பாடுகள் வந்த போது அவற்றை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி நீதி முறையான விசாரணைகளை ஆரம்பித்தேனோ அதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பலர் சம்பந்தமாக அரசாங்கம் நீதிமுறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

அவர்கள் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதேவேளை, எமக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகளையும் நாம் அச்சம் இல்லாமல் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்


குறிப்பாக, பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இனரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பேராசிரியர்; பிரதமர் அளித்த உறுதிமொழி..!

0

வயம்ப பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக் கட்டாயமாக தடுத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் குறித்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு முறையான விசாரணை நடத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


வயம்ப பல்கலைக் கழகத்தில் கொரிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை அதிகாரபூர்வமாக கையளிக்கும் தேசிய விழாவில் இன்று (03) பங்கேற்ற பின்னர், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

இந்த விசாரணை மிகவும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் ஒரு குழுவால் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.


நிகழ்வைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் தற்போதைய மாணவர் தலைவர் உட்பட மாணவர்கள் குழு ஒன்று சம்பவம் குறித்து புகார் அளிக்க வந்திருந்தது.

அவர்களில் இருவருக்கு பிரதமரைச் சந்தித்து சம்பவம் குறித்து எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது.

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் உள்நுழைந்த நால்வர் கைது..!

0

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் வந்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னாரைச் சேர்ந்த அந்த வர்த்தகர், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் குறித்த அச்சத்தில் படகு வழியாக இராமேஸ்வரத்திற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.


இராமநாதபுரம் மாவட்டத்தில் அவர், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அவர் மீதான வழக்குகள் தற்போது முடிவடைந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருந்து மீண்டும் மன்னாருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார்.


இராமேஸ்வரம் பகுதியில் இருந்து மன்னாருக்கு படகொன்றில் பயணித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் வைத்துக் குறித்த வர்த்தகர் உட்பட நால்வரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கும் தரப்பு; அரசுக்கு எச்சரிக்கை..!

0

நாடு பூராகவும் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் பணியை உறுதிப்படுத்தி தருமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை இன்று (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர்.


இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனீரன் கையொப்பமிட்டு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், தமக்கான ஆசிரியர் நியமனத்தை உறுதிப் படுத்தித்தராமல் கடந்த ஐந்து வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் நியமனத்தின் ஊடாகவே தாம் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த வகையில் தமக்கு ஆசிரியர் நியமத்தை வழங்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 03.11.2025 திகதியும் நாளை 04.11.2025 திகதியும் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் 16600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் அதிரடியாக பணியிடை நீக்கம்..!

0

சுன்னாகம் காவல் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்றைய தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டடனர்.


கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிசார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது.


தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற வேளை சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் அந்த சம்பவத்தின்போது கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலைக் கழக மாணவனின் உயிரிழப்புக்கு பகிடிவதையா காரணம்?

0

வவுனியாப் பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


மாணவர் உயிரிழந்த போது, ​​அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்தத் திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


உயிரிழந்த மாணவரின் சகோதரி தெரிவிக்கையில், கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக் கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!