Saturday, May 2, 2026
Huis Blog Bladsy 65

திருகோணமலையை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு; சிறுமிக்கு நீதிமன்றின் உத்தரவு..!

0

திருகோணமலையில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுமிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்றைய தினம் (30) பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மூதூரில் கடந்த (2025.03.14) அன்று நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30) திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


இதில் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயது சிறுமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது அம்மம்மா மற்றும் அம்மம்மாவின் சகோதரி ஆகிய இருவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று (30) திருகோணமலை மேல் நீதிமன்றில் சிறுமி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, சிறுமியின் கல்வி கற்கும் உரிமை, அவர் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை மற்றும் அரசியல் அமைப்பில் சிறுவர்களின் சட்ட உரிமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


குறித்த உத்தரவை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் பிறப்பித்திருந்தார். நீதிமன்றம் சிறுமிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், காசிப் பிணை: 25,000 ரூபாய் மற்றும் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, சிறுமியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை சிறுமியைப் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மூதூர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு நீதிவான் அறிவுறுத்துதல் வழங்கியுள்ளார்.


சிறுமி சார்பாக சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எதிர்காலத்தையும் மற்றும் கல்வி கற்கும் உரிமையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகப் இத்தீர்ப்பு காணப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்த மன்னார் மாவட்டம்..!

0

இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், மொனராகலை மாவட்டத்தில் 97.9% என்ற அதிகபட்ச எழுத்தறிவு விகிதம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் 97.3% என்ற இரண்டாவது அதிகபட்ச எழுத்தறிவு விகிதம் பதிவாகியுள்ளது.


மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதம் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு தெரிவாகியுள்ளதுடன் அம் மாவட்டத்தில் 88.0% ஆக பதிவாகியுள்ளது.

தன்னை விடுதலை செய்யக் கோரிய எழுத்தாணை மனு நாளை உயர் நீதிமன்றில்..!

0

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.


அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார்.

இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்து வருகிறது.


எனினும், கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி, தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய சுமார் ஏழரை மாதங்கள் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


இதனடிப்படையில், தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், இதனூடாக தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அறிவித்து உத்தரவிடுமாறு கோரி, பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனு நாளை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரசுக்கு 1,277 மில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டிய மருத்துவ அதிகாரிகள்..!

0

சேவையில் இருந்து விலகிய, அரச மருத்துவ அதிகாரிகள் 1,277 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவான நிதியை, அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி நிலவரப்படி, இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசினால் அறவிடப்பட வேண்டிய பிணை முறி, தண்டப் பணம் மற்றும் கடன் முற்பண நிலுவைகளே இதற்குள் உள்ளடங்குகின்றன.


விசேட கணக்காய்வு அறிக்கை ஊடாக இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பல காரணங்களுக்காக, வெளிநாடு செல்லும் மருத்துவ அதிகாரிகள் சேவையை விட்டு விலகுவது மற்றும் சேவையை கைவிடுவது போன்ற செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.


அதே நேரம் இந்த நிதியை அறவிடுவதற்கான நடவடிக்கைகளில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 705 மருத்துவர்கள் தமது ஒப்பந்தத்தை மீறியுள்ளமை இந்த கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நாட்டின் தேசிய சுகாதாரக் கொள்கை குறித்து விரிவான கலந்துரையாடல்..!

0

தேசிய சுகாதாரக் கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் நோக்குடன் “தேசிய சுகாதார அபிவிருத்தி குழு” கூடியுள்ளது.

மக்களுக்குத் தரமான, பயனுள்ள மற்றும் வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை வழங்குவது பற்றியும், எதிர்காலத்தில் நாட்டின் சுகாதாரக் கொள்கைகள் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப் பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவின் தலைமையில், இலங்கை மன்றத்தின் கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.


கடந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது பற்றியும், எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையான திட்டத்தின்படி பயன்படுத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி சீர்திருத்தத்திற்கான காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி..!

0

மாணவர்கள் மீதான தேவையற்ற சுமைகளைக் குறைக்கவும், பொறுப்புள்ள மற்றும் உலகளவில் சிந்திக்கும் குடிமக்களை வளர்க்கவும் இலங்கையின் கல்வி முறையை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


கண்டியில் உள்ள மகாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வில், கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி தேர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும், நன்கு வளர்ந்த நபர்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.


சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை துணை சபாநாயகர் கலாநிதி சாலிஹ் எடுத்துரைத்தார், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் மட்டுமே உண்மையான சட்டமியற்றுபவர்களாக மாற முடியும் என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.

நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள வைத்தியர்கள் ..!

0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.



நாட்டின் அனைத்து வைத்திய சாலைகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து தினசரி சிகிச்சை சேவைகளும் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.



எவ்வாறாயினும், சுகாதார அதிகாரிகள் நியாயமான தீர்வினை வழங்கினால், வேலைநிறுத்தம் குறித்து மீளப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

போதைப் பொருள் ஒழிப்புக்காக துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!

0

போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்குழுவின் கோரிக்கையின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘1818’ என்ற துரித தொலைபேசி இலக்கம் மூலம், நாட்டின் எந்தவொரு இடத்திலும் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்துக்குரிய செயற்பாடுகள் பற்றிய சரியான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 15வது சனத்தொகை கணக்கெடுப்பு ஒரு பார்வை..!

0

இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின் படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது.

“சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024” இன் கணக்கெடுப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாவது வாரம் வரை மேற்கொள்ளப்பட்டன.


இந்தக் கணக்கெடுப்பின் கணக்கெடுப்பு நேரமாக, 2024 டிசம்பர் 19 ஆம் திகதி அதிகாலை 00:00 மணி குறிப்பிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் பதிவான மொத்த மக்கள் தொகையை விட, இந்த முறை மக்கள் தொகை 1,403,731 அதிகமாக பதிவாகியுள்ளது.

2001-2012 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.7% ஆக பதிவாகி இருந்தது.

தற்போதைய 2012-2024 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.5% ஆக பதிவாகியுள்ளது.


இதன்படி, நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைந்துள்ள போதிலும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.

மாகாண ரீதியான மக்கள் தொகை பரம்பல்:

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 28.1% உடன் மேல் மாகாணமே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.

மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரம்பலை எடுத்துக் கொண்டால்:

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை வாழ்கிறனர். அதன் மக்கள் தொகை 2,433,685 ஆகும்.

அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தின் மக்கள் தொகை 2,374,461 ஆகும்.

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே வசிக்கின்றனர்.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைத் தவிர, கடந்த கால கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:

குருநாகல் (1,760,829)

கண்டி (1,461,269)

களுத்துறை (1,305,552)

இரத்தினபுரி (1,145,138)

காலி (1,096,585)

இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ளது.

முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் நாட்டின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.


வளர்ச்சி வீதம்:

அதிகபட்ச சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமான 2.23% முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

மிகக் குறைந்த சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமானது வவுனியா மாவட்டத்தில் 0.01% ஆகப் பதிவாகியுள்ளது.

தேர்தல் திணைக்கள விடுதியில் இருந்து அலுவலரின் சடலம் மீட்பு..!

0

மட்டக்களப்பு நகரில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் விடுதியிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(30.10.2025) காலை மீட்கப்பட்டுள்ளார்.



களுவாஞ்சிகுடியை சேர்ந்த குறித்த நபர் தேர்தல் திணைக்களத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கடமையாற்றிவந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் எருவில் பகுதியை சேர்ந்த 35வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நீதிவான் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!