மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் பொது மக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுடன் கலந்துரையாடுவது அவசியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை முன்னெடுக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், மன்னார் காற்றாலை திட்டத்துக்கான ஜனாதிபதி செயலாளரின் உத்தரவு மக்களின் விருப்பங்களை நேரடியாக பாதிப்பதாக அந்த பதிவில் சுட்டிகாட்டியுள்ளார்.
இதனிடையே, அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு எதிராக பொலிசார் கடுமையாக நடந்து கொண்டமையை கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்த போது, வெளிநாட்டு முதலீடுகளை எதிர்த்து குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தி, தற்போது ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இன்று காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. பல்வேறு கிராமங்களில் உள்ள கடற்றொழிலாளர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமானது.
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிசாரினால் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து குறித்த பேரணி ஆரம்பமானது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக் குழு ஒன்று வருகை தந்தது. மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் காவல் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.
பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்று கூடிய இடத்திற்கு வருகை தந்தார். இதன் போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய கடிதம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் பகுதிக்குச் சென்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் பொலிசாருக்கும்,போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிசார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
தொடர்ச்சியாக முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கதைத்து அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர்.
அதனைத் தொடர்ந்து பஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், பல ஆயிரக் கணக்கான மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைகுட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்படும் என பிரதேச சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் ( 28 ) ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
மாணவர்களுக்கு அதிகரித்து வரும் உள நெருக்கடிக்கு தீர்வினை வழங்கியும் மாணவர்களுக்கான கல்வி நெருக்கடியை குறைக்கும் நோக்கிலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.
இதன் போது தரம் 06 தொடக்கம் 11 வரையுள்ள மாணவர்களுக்கு ஒன்றரை மணித்தியாலத்திற்கு 50 ரூபாவும், உயர் தர மாணவர்களுக்கு 100 ரூபாயும் அறவிடுவதாகவும் தீர்மானித்து நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
இதனிடையில் இவ்வாறு பல்வேறு விட்டுகொடுப்புகளுக்கு மத்தியில் மாணவர்களுக்காக பேராதரவை வழங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் உரிமையாளர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதேவேளை, மாணவர்களுக்காக எந்த நிலைக்கு சென்றும் கல்வியை பெற்றுக் கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.
கண்டியில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை திருடி, அதனை அடகு வைத்துப் பெற்ற பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி தனது காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை, மாதிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்டி – டி.எஸ். சேனாநாயக்க வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி இரவு, டி.எஸ். சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள வாகன விற்பனையகம் ஒன்றுக்குள் நுழைந்த சந்தேக நபர், அங்கிருந்த டொயோட்டா நோவா ரக கார் ஒன்றையும் அதற்கான ஆவணங்களையும் திருடிச் சென்றுள்ளார்.
திருடப்பட்ட அந்த வாகனத்தை, மாத்தளை, பல்லேபொல பகுதியில் உள்ள அடகு மையத்தில் 15 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்து, அந்த பணத்தில் நவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்தநிலையில், தாம் பணிபுரிந்த அதே உணவகத்தில் பணியாற்றிய தனது காதலியுடன் அந்த மோட்டார் சைக்கிளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் முடிவில் இந்த நபர் கைதாகியுள்ளார்.
நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் வெலிகம பகுதியில் தங்குமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப் பொருள் மாதிரிகளை சமீபத்தில் பரிசோதித்ததன் மூலம் இது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், அண்மையில் போதைப் பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு வெளிநாட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அந்த இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதுடன், அதன் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் முதற்கட்ட பரிசோதனைகளின்படி, அந்த இடத்தில் ஐஸ் போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தங்காலை பகுதியில் 03 லொறிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப் பொருள் தொகை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மோட்டார் வாகனம் ஒன்றை தங்காலை குற்றவியல் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
குறித்த போதைப்பொருளை கடத்திய சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் வாகனமே இவ்வாறு மாத்தறை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்காலை பகுதியில் அண்மையில் 700 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டதுடன், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பொலிசாரின் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் உரிமை கேட்டு போராடுவது தவறா? என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னாரில் இன்று ஞாயிற்றுக் கிழமை (28) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன் போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னாரில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பல்வேறு விதமான போராட்டங்களும்,கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், கடந்த மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுடன் சந்திப்பும், 13 ஆம் திகதி ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு பின்னர் ஒரு மாத காலம் இடை நிறுத்தப்பட்டிருந்த பணிகள் அதற்கு பின்னர் மாவட்டத்தில் இயங்குகின்ற அமைப்புக்களுடனான கலந்துரையாடல், பாதிக்கப்பட்ட தரப்புக்களுடன் 5 இடங்களில் கலந்துரையாடல் என இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து வருகை தந்த விசேட குழுக்களிடம் அமைப்புக்கள் ஊடாக கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இவற்றை எல்லாம் பெற்றுக்கொண்டவர்கள், நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவது போல் ஜனாதிபதியினுடைய செயலாளர் கடந்த 22 ஆம் திகதி மின்சக்தி அமைச்சிற்கு கடிதம் எழுதியுள்ளார் 14 காற்றாலை களையும் அதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு அன்றைய தினமே மின் சக்தி அமைச்சின் செயலாளர் மன்னார் மாவட்ட செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆகவே நீதிமன்றத்தின் தீர்ப்பு போல் மக்கள் மன்றங்களின் விவகாரங்களை அரசு கையாள நினைப்பது சர்வ அதிகாரத்தின் அதி உச்சமாக நாங்கள் பார்க்கின்றோம்.
ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாதங்களைக் கேட்டு உணர்ந்தவர்கள் அந்த மக்களுடன் மீண்டும் கலந்தரையாடியே தீர்மானத்திற்கு அவர்கள் வந்திருக்க வேண்டும்.
நீங்கள் சொல்வதை சொல்லுங்கள்.நாங்கள் நினைப்பதை தான் செய்வோம் என்றால் அரசு முற்று முழுதாக சர்வாதிகாரமாக தான் செயற்படுகிறதா?
மக்களுடைய அடிப்படை கோட்பாட்டில் இருந்து விலகி கடந்த கால அரசாங்கங்கள் மக்களுக்கு எதிராக சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்ததோ , அதே விடையத்தை அனுரவின் அரசும் முன்னெடுக்கின்றதா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.” என்றார்.
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த போராட்டத்திற்கு நாளை அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28) 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்கலுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது போக்குவரத்துகள் அனைத்தையும் நிறுத்தி,வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை யாற்றுகின்றவர்கள் நாளைய தினம் கடமைகளுக்கு செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
திங்கட்கிழமை (29) காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகும்.குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும்.பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும்.
குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும். போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும்வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்படும்.
எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள்,வர்த்தகர்கள்,பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர், உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.” என்றார்.
தியாக தீபம் திலீபனுக்கு வவுனியாவில் சிலை வைப்பதற்கு இடம் தாருங்கள் என கோரிக்கை விடுத்து வவுனியா வர்த்தகரான எஸ். சிவரூபன் வவுனியா மாநகர முதல்வரிடம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.
இன்று அவரால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில்,
தமிழர்களுக்காக, உன்னத இலட்சியத்திற்காக பல நாட்களாக பசி இருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் அண்ணாவுக்கு சிலை வைப்பதற்கு வவுனியாவில் இடம் ஒன்றினை ஒதுக்கித் தாருங்கள் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தினை ஏற்றுக் கொண்ட மாநகர முதல்வர் கெளரவ சு. காண்டீபன் அவர்கள், குறித்த சிலையினை வைப்பதற்கு இடம்கோரி தங்களால் தரப்பட்ட இக்கடிதத்தினை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாகவும், அத்தோடு இந்த கோரிக்கையை விடுக்கும் தாங்கள் வேறு சில நடைமுறைகளும் இருப்பதன் காரணமாக அதனையும் செயற்படுத்தி தமக்கு அந்த ஆவணங்களையும் பெற்றுத் தருமாறும் தெரிவித்திருந்தார்.
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடி வருகின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை கொண்டு செல்வதற்கான முயற்சி நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்ட நிலையில் மூவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களின் போராட்டத்தில் கலந்து ஆதரவை வழங்கினர்.