வடமாகாணத்தின் கல்வியை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாட்டில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் அவர்களால் பின்கதவு நியமனம் வழங்கப்பட்ட சில அதிகாரிகளும் தொடர்பு பட்டுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
அந்த வகையில் வட மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட 13 வலயங்களில் சில வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு திட்டமிட்ட வகையில் பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட நிர்வாக மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகளின் நியமனங்களில் சேவை மூப்பு உடையவர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டு நியமிக்கப்படுவது நிர்வாக நடைமுறையாக இருந்து வருகின்ற நிலையில் கடந்த காலத்தில் முன்னாள் ஆளுநரால் தான்தோன்றித்தனமாக பல பின்கதவு நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போதய ஆட்சியிலும் இடமாற்ற, பதவியுயர்வு நியமன நியதிகளை பின்பற்றாது தான்தோன்றித்தனமாக நியமனங்கள் மற்றும் இடமாற்றக் கட்டளைகள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ரணில் ராஜபக்ஷ ஆட்சியில் செல்வாக்கின் அடிப்படையில் எதுவித நடைமுறைகளையும் பின்பற்றாது நியமனம் பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களால் விரட்டப்பட்ட காலாவதியான அரசியல்வாதிகளுடன் இணைந்து வடக்கின் கல்வியை சீரழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
குறிப்பாக யுத்தப் பேரவலத்தால் அழிந்த போதும் கல்வியே மீட்சிக்கான ஒரே வழி என மீண்டு வரும் வன்னிப் பிரதேசத்தின் கல்வியை முழுமையாக அழிக்க வடக்கின் அதிகாரிகள் திட்டமிட்டு செயற்படுகின்றனரோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் செயலாளர் மற்றும் முன்னாள் பணிப்பாளரால் வழங்கப்பட்ட அதிபர் நியமன முறைகேடு, கல்வி நிர்வாக அதிகாரிகளின் முறையற்ற இடமாற்றம், ஆசிரிய நியமன முறைகேடுகளால் வன்னிப் பிரதேசம் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான அரசு எனப்படும் இந்த ஆட்சியிலும் அரச ஊழியர்கள் மீது குறிப்பாக கல்வித் துறை மீது பழிவாங்கல்களும், அரசியல் அழுத்தங்களும் கடந்த ஆட்சியை விட அதிகமாகப் பிரயோகிக்கப்படுகின்றது.
கடந்த ஆட்சியின் இறுதியில் வன்னிப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் தமது செல்வாக்கில் யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில் குறித்த வன்னிப் பாடசாலைகளில் வெற்றிடம் நிலவுகின்றது. இது தொடர்பில் நடவடிக்கையெடுக்க முடியாத இன்றைய அரசியல்வாதிகளும் அவர்களின் ஏவலாளர்களும் இளகிய இரும்பாகிய கல்வியை பந்தாடுகின்றனர்.
அந்த வகையில் இந்த அரசின் முறையற்ற செயற்பாடாக வடமாகாண பிரதம செயலாளரின் கையொப்பத்துடன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கட்டளைகள் காணப்படுகின்றன.
எனவே முறையற்ற இடமாற்றத்தை இரத்துச் செய்வதுடன் இடமாற்ற மற்றும் பதவியுயர்வு நியதிகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வடக்கின் கல்விக்குள் காணப்படும் தேவையற்ற தலையீடுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு நாட்டின் ஜனாதிபதியான தோழர் அனுர அவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.