Monday, October 27, 2025
Huis Blog Bladsy 8

மட்டுவில் அதிபர் ஒருவருக்கெதிராக பாடசாலை நுழைவாயிலை பூட்டி மாணவர்கள் போராட்டம்..!

0

மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரி பாடசாலை 02.10.2025 மாணவர்கள் பாடசாலை முன் நுழைவாயிலைப் பூட்டி ஆசிரியர்கள் எவரையும் உட்செல்ல விடாது தடைசெய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதேவேளை, அதிபருக்கு ஆதரவாக இருக்கும் சிலரால் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரும் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த பாடங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் இல்லாது இருந்து வருகிறதுடன் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இது தொடர்பாக அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிமனையின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை ஒரு தீர்வும் இல்லை என்றும் மாணவர் குற்றஞ்சாட்டினர்.

இந்த நிலையில் பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வலய கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை.

எனவே, எங்களுக்கு உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்து குறித்த பாடங்களுக்கான ஆசிரியர்களை வலயக்கல்வி பணிப்பாளர் நியமித்து தரும் வரைக்கும் பாடசாலை கதவை திறக்க முடியாது என மாணவர்கள் சுலோகங்கள் ஏந்தியவாறு காலை 7.00 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த போராட்ட இடத்திற்கு தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்திருக்கின்றார். இதன்போது அங்கு சிற்றுண்டிச்சாலை நடத்தி வருவதுடன் பாடசாலை மாணவர்களுக்கு சமைத்து உணவு வழங்கி வரும் பெண் ஒருவரின் வாக்குமூலம் பெறப்பட்டது.

அதிபரின் பணக் கையாளுகை பற்றி அப்பெண்ணால் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதிபர் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அங்கிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை இன்று தொடக்கம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தற்காலிகமாக அங்கு இணைப்பதாகவும் உத்தரவாதம் அளித்ததையடுத்து பகல் 12.மணிக்கு மாணவர்கள் நுழைவாயில் கதவை திறந்து உட்செல்ல அனுமதித்தனர்.

யாழில் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற உடுவில் மகளீர் கல்லுாரி மாணவி..!

0

யாழ் – உடுவில் மகளீர் கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி அந்த கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர்.

இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை குறித்த மாணவியின் தற்கொலை முயற்சி தொடர்பில் உண்மையைக் கண்டறியும் வகையில் பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பில் சிறுமி துஸ்பிரயோகம்; 56 வயது நபருக்கு 30 வருட கடூழிய சிறை..!

0

மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப் பணமும் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.

56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

சந்தேக நபரை சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இனங் காணப்பட்டார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த தீர்ப்பு வழங்கப்படுள்ளது.

தலைமன்னாரில் கஞ்சி பானி இம்ரானின் துப்பாக்கி ரவைகள் மீட்பு..!

0

தலைமன்னார் பகுதியில் பொலிஸாரின் ரீ சேர்ட் ஒன்றுடன் KPI என பெயர் எழுதப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவற்றை மீட்டிருந்தனர்.

அதன் போது பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் , ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் 67 ஐ மீட்டிருந்தனர். அவற்றில் 37 துப்பாக்கி ரவைகளில் KPI என எழுதப்பட்டுள்ளது.

KPI என்பது பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான கஞ்சி பானி இம்ரான் என்பதனை குறிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு..!

0

மன்னார் – பேசாலையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

வவுனியா – கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று(02) பிற்பகல் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தின் முதலாம் சிறை கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதன் போது சந்தேக நபருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து அவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவ இடத்தை இன்று(03) மதியம் மன்னார் பதில் நீதவான் பார்வையிட்டார். இதனையடுத்து சடலம் பேசாலை பிரதேச வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை(04) இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுவர்களுக்கான தண்டனைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..!

0

சிறுவர்களுக்கான உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் வகையில் முன்மொழியப்பட்ட தண்டனைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி இன்று கல்வி அமைச்சுக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இதன்போது, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சட்டத்தை கண்டித்தும், சட்டமியற்றுபவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்று எச்சரித்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இந்த சட்டத்தின் மூலம், அரசாங்கம் பாடசாலை ஒழுக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

அத்துடன், இந்தத் திருத்தம் சிறுவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், மாணவத் தலைவர்களையும் சிறைக்கு அனுப்பும் என அவர்கள் குற்றம் சுமத்தினர்.

இந்த நிலையில் குறித்த திருத்தம், விவாதத்தில் மாத்திரமே உள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

3 வயது சிறுமியைத் துன்புறுத்தியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

0

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (3) குறித்த தீர்ப்பை வழங்கினார்.

25,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை செலுத்தாவிட்டால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.300,000 இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அதை செலுத்தாவிட்டால் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நேரிடும் என உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர், தனது மனைவியின் சகோதரியின் 3 வயது மகளை, மோசமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 365 (a) (2) (b) இன் கீழ், அத்தகைய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு 7 ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும், மேலும் கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.”என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

குற்றவாளி செய்த செயல் ஒரு கடுமையான குற்றம் என்றும், அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

இதேவேளை எதிர்த் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, குற்றஞ்சாட்டப்பட்டவர் வேறு எந்தவித குற்றச் செயல்களிலும் இதற்கு முன்னர் ஈடுபடவில்லை என்றும் அவரது வயதைக் கருத்திற் கொண்டு தண்டனையைக் கடுமையாக்க வேண்டாம் எனவும் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

இருதரப்பினரினதும் வாதங்களைப் பரிசீலித்த நீதிவான், 12 வருடக் கடூழிய சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர், தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னணியில், அவர் குற்றவாளி என்று தான் கருதுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

நீதி வழங்குவதே நீதிமன்றத்தின் பங்கு, மேலும் நீதி வழங்குவதில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவருக்கும் நீதிமன்றம் நீதி வழங்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சரியான தண்டனை வழங்கப்படாது விட்டால், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாகப் பரந்த குரல் இருக்கும் இன்றைய சமூகத்தில் நீதிமன்றம் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, இந்தக் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கிறேன், என்று நீதிபதி தனது உத்தரவை அறிவித்தார்.

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்..!

0

இலங்கையில் சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த சட்டத்தின்படி, உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை சேகரித்த வழிமுறையை நியாயப்படுத்த தவறினால் அல்லது முடியாவிட்டால், அவற்றை அரசு பறிமுதல் செய்ய முடியும்.

அதன்படி, சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கள் தொடர்பான சட்டபூர்வமான மூலங்களை நிரூபிக்க வேண்டும்.

இல்லை என்றால் தண்டனை விதிக்கப்படாமலேயே, சொத்துக்களை இழக்க நேரிடும் என இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் பெண் கடற்படை சிப்பாயை பலாத்காரம் செய்த சக சிப்பாய்..!

0

யாழ் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்த ஆண் கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதான கடற்படை சிப்பாயை மனநல வைத்தியரிடம் முற்படுத்தி , மனநல சான்று அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் சிப்பாய் ஒருவர் முகாமில் உள்ள பெண்கள் தங்குமிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளை , அங்கு அத்துமீறி நுழைந்த ஆண் கடற்படை சிப்பாய் பெண்ணிடம் அத்துமீறி நடந்து , பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புங்குடுதீவு கடற்படை முகாம் அதிகாரி , இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை வடபகுதி கட்டளை பணியகத்திடம் ஒப்படைத்தார்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த கடற்படை உயர் அதிகாரிகள் இருவரையும் காங்கேசன்துறை பொலிஸார் மூலம் ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

பொலிஸார் சந்தேகநபரான கடற்படை சிப்பாய் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் கடற்படை சிப்பாய் ஆகிய இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , பின்னர் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து சந்தேகநபரான கடற்படை சிப்பாயை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்திய வேளை சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அதோடு , சந்தேக நபரை மனநல வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ அறிக்கையை பெறுமாறு மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டதுடன் , முறைப்பாட்டின் உண்மை தன்மை குறித்தும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கட்டளையிட்டது.

காருக்கு லீஸ் கட்ட வழியின்றி இருந்தவர் இன்று 15 கோடி ரூபா சொத்துக்கு அதிபதி..!

0

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லை என வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்தவர் இன்று 15 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர். ஊழலை ஒழிக்க போகிறேன் என சாவகச்சேரியில் இருந்து வந்தவர் இன்று கொழும்பில் நாமலின் வீட்டை சுற்றி திரிகிறார் .

ஒருவேளை ஐஸ்லாந்தில் சுகாதார அமைச்சராக வரலாம் என கனவு காண்கிறார் போல, சுகாதார அமைச்சராக வந்தால் ஊழல் செய்யலாம் கஞ்சா கடத்தலாம் என நினைக்கிறாரோ தெரியவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணை பணம் கட்ட காசு இல்லை என புலம்பெயர் மக்களிடம் காசு சேர்த்தார்.

அவரிடம் காசு கொடுத்து ஏமார்ந்து புலம்பெயர் தேசத்தவர்கள் இருந்தால் , இலங்கை நீதித்துறையை நாடினால் அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அவருக்கு சிறைத் தண்டனையையும் பெற்றுக் கொடுக்க முடியும்.

புலம்பெயர் தேசத்தவர்களை ஏமாற்றி 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை சேர்த்துள்ளார்.

அவர் விடுதலைப் புலிகள் அமைப்பை காட்டி கொடுத்த பரம்பரையை சேர்ந்தவர். அவரது உடலில் ஓடுவது காட்டிக் கொடுக்கும் பரம்பரையை சேர்ந்தவர்களின் இரத்தம். துறைமுகத்தில் விடுவிக்கப்பட்ட 350 கொள்கலன்கள் விடுதலைப் புலிகளுடையது என காட்டிக் கொடுத்தார்.

அவர் என்ன நோக்கத்திற்காக அது தொடர்பில் பேசினார் என எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மேலும் தெரிவித்தார்.

error: Content is protected !!