Saturday, July 18, 2026
Huis Blog Bladsy 99

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம்..!

0

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி இரண்டாவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் 09 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பல கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் தீவு பகுதியில் 02 ஆவது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த 03ஆம் திகதி பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும், பொது அமைப்புக்களும் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.

எவ்வாறாயினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கீளியன் குடியிறுப்பு, நடுக்குடா, கட்டுக்காரன் குடியிறுப்பு, பருத்திப்பன்னை, பாவிலுப்பட்டான் குடியிறுப்பு உள்ளிட்ட உள்ளிட்ட கிராம மக்களும் இன்றைய தினம் இடம்பெற்று வருகின்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்ட ஒளிக்கலை ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்கிய நிலையில் ஒன்றிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், பூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில் மன்னார் மக்களும், இளையோரும் இணைந்து தொடர்ச்சியாக இரவு பகல் பாராது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் நகர சபையில் முறைகேடுகள்; வட மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு..!

0

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், மன்னார் நகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (11.08.2025) நடைபெற்றது.

மன்னார் நகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அவசரம் தேவை என்றும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மாந்தை மேற்கு பிரதேசசபையின் வருமானத்தை அதிகரிப்பதற்குரிய வேலைத் திட்டங்களுக்கு உதவிகளை வழங்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, சோலைவரி மீளாய்வை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டதுடன், தவிசாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் நிறைவேற்றக் கூடியவற்றை விரைவில் நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன், மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன், உபதவிசாளர் உசைன், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஞா.பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா பயணம்..!

0

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, உலக நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இம்மாநாட்டில் 193 அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்று ஜனாதிபதி அநுர உரையாற்றவுள்ளார்.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர், ரஷ்ய ஜனாதிபதி , சீன ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்களுடனும் இருதரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.

ட்ரம்பின் வரி விதிப்பால் உலக நாடுகள் இன்று பிளவு பட்டு நிற்கின்றன. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவில் ஐரோப்பிய நாடுகள் உள்ளன, இவ்வாறானதொரு பின்புலத்தில் இம்முறை ஐ.நா. மாநாடு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம்..!

0

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என பிரிட்டனும், கனடாவும் அநுர அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளன.

எனினும், கடந்த கால தீர்மானங்களுடன் ஒப்பிடுகையில் இது மென்போக்குடையதாக அமையும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு கடந்த காலங்களில் இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியுள்ளது. இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கட்டமைப்பில் மாற்றம் வரவுள்ளது.

இலங்கை குறித்த கடந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய மலாவி, மொன்டினேக்ரோ, வட மாசிடோனியா ஆகிய நாடுகள் இம்முறை தீர்மானத்தில் பங்கேற்காமல் இருக்கலாம் என இலங்கை நம்புகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் அவதானித்த விடயங்கள் உட்பட இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்த அவரின் அறிக்கை 60 ஆவது அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது. பெரும்பாலும் செப்டம்பர் 8 ஆம் திகதி அறிக்கை முன்வைக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.

செம்மனி மனித புதைகுழி விவகாரம் இதில் முக்கிய இடத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டு செயல்முறைகள் வலுப்படுத்தப்பட்டு, அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற விடயத்தை இலங்கை தரப்பு எடுத்துரைக்கவுள்ளது.

வவுனியாவில் அடாத்தாக வீட்டினுள் நுழைந்த பிரதியமைச்சரின் இணைப்பாளருக்கு தர்ம‍ அடி..!

0

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் அடாத்தாக வீட்டினுள் நுழைந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்து கொள்ள முற்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

பின்னர் அவர் கிராமத்தின் பெண்களால் தாக்கப்பட்டு போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர் வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜே.வி.பி.யின் வன்னி மாவட்டக் குழுவின் அதிகாரியான இந்த நபர், வவுனியாவின் நந்திமித்ரகம பகுதியில் ஒரு பெண் மட்டுமே வசித்து வந்த வீட்டிற்குள் மதுபோதையில் நுழைந்துள்ளார். அவ்வேளை, அக்கம் பக்க பெண்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அந்த நபரைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

அப்போது அந்நபர் கடும் போதையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிராமத்தின் பெண்கள் அந்த நபரை அடித்து, கயிறுகளால் கட்டி, போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வைத்தியசாலையில் உயிரை மாய்த்துக் கொண்ட யாழ் இளைஞன்..!

0

மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் இளைஞரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (11) காலை தூக்கில் தொங்கியவாறு அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார், வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞனின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

அத்துடன் குறித்த இளைஞன் நேற்றையதினம் இரவு இவ்வாறு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.

ஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி அனுர கவனத்தில் எடுக்க வேண்டும் -மனோ

0

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் இம்மாதம் 15ஆம் திகதி, முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலை தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ” ஐந்து தமிழ் இளைஞர்கள், 8ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தப்பி சென்றவர்களில் ஒருவரான, கபில் ராஜ், 9ம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்க பட்டுள்ளார். தப்பி சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஹர்த்தாலை நாம் ஆதரிக்கிறோம்.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பான உடனடி விசாரணை, சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும்.

எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டும்.

“இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க மூட வேண்டும்.

“அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதேயே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம்.

அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கின்றோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது” இவ்வாறு மனோகனேசனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா தனியார் கல்வி நிலைய கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி..!

0

வவுனியாவில் வைரவப் புளியங்குளத்திலுள்ள தனியார் கல்வி நிலைய வளாகத்திலுள்ள கிணற்றில் இருந்து உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாணவி தில்ஷி அம்சிகா மரணம்; எதிர்வரும் 18ஆம் திகதி வழக்கு விசாரணை..!

0

கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவியான தில்ஷி அம்சிகா, தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

இதுவரையில் அதற்கான நீதி கிடைக்கவில்லை எனவும் எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனாவில் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவி..!

0

யாழில் கிருமித் தொற்று காரணமாக 16 வயதுடைய மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (08) குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் ஐந்தாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சேர்ப்பித்து சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார். தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் நேற்று (08) காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!