Saturday, July 18, 2026
Huis Blog Bladsy 100

கிளிநொச்சியில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபர் கைது..!

0

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியததாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயது உடைய குறித்த சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அப்பகுதி கிராம சேவகர் வழங்கிய தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் திகதி 20ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கின் கல்வி நிலைமை பின்னடைவுக்கு காரணம் என்ன? பிரதமர் கூறிய காரணம்..!

0

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக ரீதியான பிரச்சினை பிரதான காரணமாக இருப்பதாகப் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விரைவில் வடக்கின் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்துக் கலந்துரையாடி, இதற்குத் தீர்வினை காண இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை அதிகாரிகளால் தொடர்ச்சியாக வழங்கப்படும் அழுத்தம் காரணமாக வவுனியாவில் பல ஆசிரியர்கள் அரச சேவையில் இருந்து விலகியுள்ளதுடன் பலர் கடும் மன உளைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் எம்.பிக்களுக்கும் அஸ்வெசும கொடுப்பனவு..!

0

முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும். ஓய்வூதியத்தை இரத்து செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்

முன்னாள் அரசியல்வாதிகளின் சுமை மக்களின் தோள்களில் சுமத்தப்படுவது நியாயமற்றது என்றும் எம்.பி.க்களின் ஓய்வூதியம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தனது கட்சி தெரிவித்திருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், ஓய்வூதியம் இரத்து செய்யப்படுவதால் எந்த எம்.பி.யும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அவர்கள் வாழ முடியாவிட்டால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதேச செயலகத்தில் மாணவியை தாக்கிய போது வேடிக்கை பார்த்த அலுவலர்கள்..!

0

யாழ் வடமராட்சி பகுதியில் உள்ள பிரதேச செயலகம் ஒன்றில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பப் பெண் ஒருவர் தனது மகளை அங்கு கடமையாற்றிய அலுவலர்களுக்கு முன் நையப்புடைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குடும்பப் பெண் தனது கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவ்வாறு வாழ்ந்து வந்த போதும் கணவரையும் தனது பிள்ளைகளையும் வெறுப்பேற்றும் வகையில் கணவனின் தொலைபேசிக்கு வட்சப் மூலம் படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.

இதனால் கடுப்பான குறித்த குடும்பப் பெண்ணின் மகளான பாடசாலை மாணவி பிரதேச செயலகத்தில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணை அங்கு வரவழைத்த உத்தியோகத்தர்கள் மகளின் முன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது அக் குடும்பப் பெண் தன்னைப் பற்றி முறையிட்டதற்காக குறித்த அலுவலர்களுக்கு முன் தனது மகளைத் தாக்கியதாகத் தெரிய வருகின்றது.

இருப்பினும் இச் சம்பவம் தொடர்பாக உத்தியோகத்தர்கள் பொலிசாரிடம் முறையிடாமல் அம் மாணவி மற்றும் குறித்த பெண்ணை அங்கிருந்த அகற்றியதாகவும் இது தொடர்பாக பிரதேச செயலாளர் குறித்த உத்தியோகத்தர்களை பொலிசாரிடம் முறையிட அனுமதிக்கவில்லை என தெரிய வருகின்றது.

குடும்பப் பெண் தாக்கியதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பொலிசாரிடம் முறையிட முடியும் என அவர் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாகவும், இச் சம்பவம் ஆளுநர் அலுவலகம் வரை சென்றுள்ளதாகவும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிக் டோக் குழுக்களால் சிறுவர்கள் பாலியல் தவறுகளில் ஈடுபடுகின்றனர்..!

0

டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் போது அவர்களை கண்காணிப்பது மிகவும் முக்கியம்.

டிக் டோக் தொடர்பான கடுமையான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த ஒன்றரை மாதங்களில் 20 முறைப்பாடுகள் பெறப்பட்டது.

சிறுவர்கள் இணையத்தில் டிக் டோக் குழுக்களில் சேரும் போக்கை நாங்கள் காண்கிறோம். இதன் மூலம், சிறுவர்கள் தங்களுக்கு அறியாமலேயே கடுமையான குற்றங்களில் சிக்குகின்றனர்.

டிக் டாக் குழுக்களில் சேரும்போது சிறுவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது மிகவும் முக்கியம். அந்த டிக் டோக் குழுக்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம். இந்த குழுக்கள் சில சிறுவர்களின் அந்தரங்க புகைப்படங்களைப் பெறுகின்றனர். அதனை கொண்டு பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.

சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி, மடிக்கணினிகள் மற்றும் டேப்களை வழங்கும் போது, அவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும்.

மேலும் சிறுவர்களை அவர்களின் அறைகளில் தனியாக இருக்க அனுமதிக்க வேண்டாம். சிறுவர்கள் தனியாக இருக்கும் போது, அவர்கள் கையடக்க தொலைபேசிகள் மூலம் டிக் டோக் குழுக்களில் சேர்ந்து கடுமையான குற்றங்களில் பாதிக்கப்படலாம்.

உங்கள் பிள்ளகைள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 100 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 444 பாடசாலைகள்..!

0

கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (08.08.2025) சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் கல்வியின் நிலைமை, பாடசாலையின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவையனெ தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.

அதுபோலவே எமது அரசாங்கத்தின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பிரதான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளது.

அதில் வறுமை ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்துக்கு கூடுதலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வட மாகாணத்தை விசேடமாக கவனத்தில் கொண்டனர். வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது.

இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது.

இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது. கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது.

மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ் மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படுகிறது. இந்த சவால்களில் இருந்து மீண்டு புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இதற்கமைவாகவே கல்வி புலத்தை வெளிப்படுத்தி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும் 20 – 50 பிள்ளைகள் கற்கும்; 171 பாடசாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளைகள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு தேவை என்பது உணரப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்லமுடியுமென எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, கல்வி அமைச்சின் அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தத்தை ஆதரிக்கின்றோம் – கெளரவ ஆளுநர்

0

வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். எங்கள் திறமையான இளைஞர்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் எங்கள் மக்களின் உறுதியுடன், இலங்கையின் கல்விக்கான புதிய அத்தியாயத்தில் வடக்கு மாகாணம் ஒரு வெற்றியின் முன்மாதிரியாக இருக்கும் என நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான மாகாண மட்டக் கலந்துரையாடல் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை மாலை (02.08.2025) நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய ஆளுநர்,

நாட்டின் பெருமைமிகுந்த மற்றும் மீள்தன்மை கொண்ட எங்கள் பிராந்தியத்துக்கு உங்களை வரவேற்கின்றேன். தேசிய ஒற்றுமை, சம வாய்ப்பு மற்றும் எந்த மாணவனும், எந்தப் பாடசாலையும், எந்த மாகாணமும் பின்தங்கியிருக்காத எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புக்கான உங்கள் செய்தி மிகப்பெரியது.

இன்று, வடக்கு மாகாண மாணவர்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நம்பிக்கையைத் தரும் ஒரு துணிச்சலான கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உங்கள் தொலைநோக்குத் தலைமையை நாங்கள் பாராட்டுகின்றோம்.

ஒவ்வொரு மாணவனும் தங்கள் கல்வியை முடிக்கவும், அவர்கள் விரும்பும் எதிர்காலத்தைத் தொடரும் வாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான ஒருங்கிணைந்த தொழில் மற்றும் கல்விப் பாதைகளுடன் கல்வி முறையை மறுசீரமைத்தல் சிறப்பானது.

பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளை பரீட்சைப் புள்ளிகளுடன் சமநிலைப்படுத்தும் மிகவும் நெகிழ்வான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவது, மாணவர்கள் மீதான தேவையற்ற போட்டி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

எண்ணிமப்படுத்தலை (டிஜிட்டல் மயமாக்கல்) புகுத்துவதன் மூலம் வடக்கு மாகாணம் போன்ற கல்வி இடைவெளிகள் அதிகமாகவுள்ள மாகாணங்கள் மிகப்பெரிய நன்மையடையும்.

இந்தச் சீர்திருத்தங்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவை கொள்கை மாற்றங்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை. நீதி, உள்ளடக்கம் மற்றும் சமமான வளர்ச்சிக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் சமூகங்களுக்கான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, என்றார் ஆளுநர்.

இங்கு உரையாற்றிய பிரதமர் அவர்கள், இந்தக் கலந்துரையாடலை ஒழுங்குபடுத்திய வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் அவர்தம் நிர்வாகக் கட்டமைப்பினருக்கு முதலில் நன்றிகளைக் கூறுகின்றேன்.

கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் வலிகள் நிறைந்த காலத்திலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் நீங்கள். வடக்கு மாகாணம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. ஏன் இந்த நிலைமை என்று சிந்திக்கவேண்டும்.

தற்போதுள்ள கல்வி முறைமை எல்லோருக்கும் சமனானதாகத் தெரியவில்லை. பணம் சார்ந்த சுமைகளை பெற்றோருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. பரீட்சை மையக் கல்வியானது மாணவர்களை முடக்கியுள்ளது. எனவே, அவசியமான இந்தக் கல்விச் சீர்திருத்தம் கட்டம் கட்டமாகவே மேற்கொள்ளப்படும். 2026ஆம் ஆண்டு தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் யாழ் நகரத்தில் வேலை செய்வதற்கு ஆசைப்படுகின்றார்கள். ஏனைய மாவட்டங்களுக்கும் அதுவும் குறிப்பாக எல்லை நிலையிலுள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும், என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், நிரல் கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், மாகாண கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

யாழில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சி; எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள்..!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.

யாழ் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறுகின்றது.

இதன் போது இனப் பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களை கையாளுவதற்கு என கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கூட்டத்தில் வட – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த வகையில், கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ப.சத்தியலிங்கம், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் எம்பி த.கலையரசன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கே.துரைராஜசிங்கம் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்..!

0

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த 11ஆம் திகதி வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றினைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சில பொலிஸாார் காயமடைந்தனர்.

பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள், கப் ரக வாகனம் ஒன்றும் சேதமானது. இந்தச் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது, அந்தப் பகுதியில் மக்களுடன் நின்ற தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரும் கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினருமான விக்டர்ராஜ் வாக்கு மூலம் பெறுவற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் சபை அமர்வுக்காக நீதிமன்ற அனுமதி பெற்று பொலிஸார் மற்றும் சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் அமர்வுக்காக அழைத்து வரப்பட்டு அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

அமர்வு முடிந்ததும் மீண்டும் அதே வாகனத்தில் அழைத்து சென்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு பொது விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அவரின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

இலங்கை மீதான தீர்வை வரியை மேலும் குறைத்தது அமெரிக்கா..!

0

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி 20 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

புதிய வரி வீதங்கள் தொடர்பான நிறைவேற்று உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை தெரிவித்தது.

அமெரிக்க ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ள நிறைவேற்று உத்தரவில் பல்வேறு நாடுகளுக்கான வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு ஜனாதிபதி கைச்சாத்திட்ட தினத்திலிருந்து 7 நாட்களின் பின்னர் அமுல்படுத்தப்படும் என வௌ்ளை மாளிகை கூறியுள்ளது.

ஏற்கனவே இலங்கை மீது கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி 44 வீத தீர்வை வரி அறிவிக்கப்பட்டது.

குறித்த வரியைத் தளர்த்துவது தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகத்துடன் அரசாங்கத்ம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்திவந்ததுடன் அந்த வரி 30 வீதமாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கைக்கான தீர்வை வரியை 20 வீதமாக குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் இந்தத் தகவல் இன்று அதிகாலை இலங்கைக்கு கிடைத்தது.

இதற்காக இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை கடந்த சில நாட்களாக அமெரிக்காவுடன் நடத்தி வந்ததுடன் இது அதன் பலனாக கிடைத்த வெற்றி என இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டது.

error: Content is protected !!