Saturday, July 18, 2026
Huis Blog Bladsy 98

ஊர்காவற்துறையில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான கஞ்சா மீட்பு..!

0

யாழ் ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்துறை கடற்கரை பகுதியில் நிலத்தில் பாரிய கிடங்கு வெட்டி அதனுள் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற மன்னாரில் இருந்து வருகை தந்த சிறப்பு பொலிஸ் குழுவினர் நிலத்தின் கீழ் புதைத்து வைத்திருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.

குறித்த கஞ்சா போதைப்பொருளை இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வந்து , அவற்றை கடற்கரையை அண்டிய பகுதியில் நிலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா போதைப் பொருளுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஒளிந்து திரியும் முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு..!

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து முன்னிலைப்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கிரிந்த மீன்பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைகளை சட்டவிரோதமாக கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் 262 லட்சம் ரூபா இழப்பை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு ஆணைக்குழுவினால் பல்வேறு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து ராஜித சேனாரத்ன வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தரவில்லை.

இந்நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பதுடன் அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடருந்து பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி..!

0

தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன் மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா இராஜினாமா..!

0

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

ரேணுகா ஏக்கநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் மனைவி ஆவார்.

அவரது இராஜினாமா கடிதம் அரசியலமைப்பு சபைக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க சமன் ஏகநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் திருமதி ரேணுகா ஏக்கநாயக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பதவியும் வெற்றிடமாகியுள்ளது.

அதன்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போது இரு உயர் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

”நீதியின் ஓலம்” எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம்..!

0

தாயகச் செயலணி என்ற அமைப்பு ‘நீதியின் ஓலம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.

இந்தப் போராட்டம், எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணியில் ஆரம்பமாகும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் மாணவர்கள் வருகை வீழ்ச்சி – ஜோசப் ஸ்டாலின்

0

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று(11), 2025 மே இல் வெளியிடப்பட்ட 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் சில கண்டறிதல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சகம், கல்வி சீர்திருத்தங்களுக்காக 5,219 மில்லியன் ரூபாய்களை செலவிட்டதையும், தேசிய கல்வி நிறுவனம் 350 மில்லியன் ரூபாய்களை செலவிட்டதையும் அறிக்கை குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படவில்லை என்றும், சீர்திருத்தங்களுக்கான தெளிவான வரைபடம், 2015 மார்ச் 26 வரை கூட தயாரிக்கப்படவில்லை என்றும் அறிக்கை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி, ஆட்சிக்கு வந்த பிறகும், உயர்தர (A/L) மாணவர்கள் மட்டுமல்ல, சாதாரண தர (O/L) மாணவர்களும் குறைந்த பாடசாலை வருகையை அறிக்கைகளில் அவதானித்ததாகக் கூறினார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நிலையான தீர்வுகளை உருவாக்க அமைச்சகத்தை, குறித்த அறிக்கை வலியுறுத்துகிறது.

சிகிச்சைக்காக வந்த இளம் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வைத்தியர்..!

0

25 வயதுடைய ஒரு குழந்தையின் தாயை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வைத்தியர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதற்காக மருத்துவ மையத்திற்குச் சென்ற 25 வயதுடைய ஒரு குழந்தையின் தாயை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வைத்தியருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அனுராதபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

குறித்த பெண்ணுக்கு 1.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தவறும் பட்சத்தில் மருத்துவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட வைத்தியருக்கு எதிராக அரசு தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டிருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

அதள பாதாளத்தை நோக்கி போரால் அழிவடைந்த வவுனியா வடக்கின் கல்வி..!

0

சாதாரண தரப் பெறுபேறுகள் அடிப்படையில் வலய ரீதியாக 100 வலயங்களுள் 96வது இடத்தைப் பெற்று வவுனியா வடக்கு வலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் 100வது இடத்தை நோக்கி நகர்ந்த பின்னர்தான் வடக்கின் கெளரவ ஆளுநர் உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா???

யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி அன்னமலர் சுரேந்திரன், திரு. சிறீஸ்கந்தராசா, திருமதி. அன்ரன் சோமராஜா போன்ற கடமை உணர்வு மிக்க அதிபர், ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றிய அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்ட வடக்கு கல்வி வலயம் இன்று மிகவும் மோசமாக பின்தள்ளப்பட்டமைக்கு வலய அதிகாரி ஒருவரின் பாடசாலைகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அதீத தலையீடும், அழுத்தங்களும், பழிவாங்கல்களுமே காரணம்.

தமக்கான சலுகைகளை முழுமையாகப் பெற்றபடி கதிரைகளை சூடாக்கி வவுனியா வடக்கின் கல்வியை சுடுகாடாக்கும் அதிகாரிகள் எமக்கு தேவையில்லை. அவர்களை உடன் வெளியேற்றி புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டியது கெளரவ ஆளுநர் அவர்களின் தலையாய பொறுப்பாகும். தவறின் இந்த வரலாற்று துரோகத்தை வன்னி மண்ணும் மக்களும் ஒருபோதும் மன்னிக்காது.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பான இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையிலும் அதில் ஒருவர் கெளரவ கல்வி அமைச்சரின் கல்விக் குழு உறுப்பினராக உள்ள நிலையிலும் இதுவரை குறித்த விடயத்தை விசாரணை செய்து பொருத்தமற்ற குறித்த அதிகாரியை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குறித்த அதிகாரி கடமையேற்ற பின்னர்,

1. வவுனியா வடக்கின் கல்வி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. (2021ல் 73%இலிருந்து 2024ல் 63% வரை சாதாரண தரப் பெறுபேறு மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது, மிக அதிகளவான மாணவர்களை பாடசாலைகளில் இருந்து வெளியேற்றி விட்டு உயர்தரத்தில் முன்னணியில் நிற்பதாக ஒரு புரூடா)

2. 2021க்குப் பின்னர் மாணவர் இடைவிலகல் பாரியளவில் அதிகரித்துள்ளது.

3. பல பாடசாலைகளில் உயர்தரம் உட்பட இடைநிலை வகுப்புக்களிற்கு ஆசிரியர்கள் இன்மை தொடர்கின்றது.

4. ஆசிரியர்களுக்கான பொருத்தமற்ற தான்தோன்றித் தனமான இடமாற்றங்கள்.

5. ஆசியர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் தேவை கருதிய பழிவாங்கல் இடமாற்றங்கள் தொடர்கின்றன.

6. ஆசிரியர்கள் கடும் அழுத்தம் காரணமாக அரச சேவையில் இருந்து அதிகளவில் நிரந்தரமாக விலகிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

7. ஆசிரியர்கள் மன அழுத்தம் காரணமாக உளவியல் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறும் நிலை காணப்படுகின்றது

8. ஆசிரியர்கள் அதிகளவில் மன அழுத்தம் காரணமாக வலயத்திற்கு வெளியே இடமாற்றம் பெற்று வெளியேறிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

9. நிர்வாக சீர்கேடுகளால் அதிபர், ஆசிரியர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

10. இடமாற்றங்களின் போது நியமன நியதிகள், இடமாற்றக் கொள்கைகள் பின்பற்றப்படாது ஆசிரியர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நிலை காணப்படுகிறது.

11. எதிர்த்து கேள்வி கேட்கும் ஊழியர்களுக்கு எதிராக கேவலமாக ஏசுதல், அச்சுறுத்தல்கள், அவதூறு பரப்புதல், வம்பு வழக்குகள் போடுதல் தொடர்கின்றது.

12. இதற்கு எதிராக முறைப்பாடு செய்யும் ஊழியர்களுக்கு எதிராக கடும் பழிவாங்கல்கள் ஊழலுக்கு எதிரான இந்த அனுர ஆட்சியிலும் தொடர்கின்றன.

இவ்வாறான சூழலில் ஐனாதிபதி மற்றும் பிரதமர் உடன் தலையீடு செய்து பொருத்தமற்ற வலய உயர் அதிகாரியை அகற்றி அதிபர், ஆசிரியர்களுக்கான மன அழுத்தமற்ற மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தல் சூழல் ஏற்படுத்தப்படுமா? அதன் மூலம் மாணவர்களின் இலவசக் கல்வி பாதுகாக்கப்படுமா? என்பதே வவுனியா வடக்கு பிரதேச தமிழ் மக்களின் கேள்வியாகவுள்ளது.

(நன்றி : தாய்நாடு)

யாழில் அரசியல்வாதி எனும் போர்வையில் செயற்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் கைது..!

0

யாழ், சாவகச்சேரி பொலிசார் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவரை கைது செய்துள்ளனர். இன்று (11) மதியம் 2 மணியளவில் அறுகுவெளி பகுதியில் கஞ்சாவுடன் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

படகில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட கஞ்சாவை பற்றைக் காட்டுக்குள் மறைத்து வைத்திருந்த போது, பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர்.

126 பொதி கஞ்சாவும் மீட்கப்பட்டது. இவை 200 கிலோ கிராமுக்கும் அதிகமான நிறையுடையதாக இருக்கலாமென கருதப்படுகிறது. மீட்கப்பட்ட கஞ்சாவின் நிறையை கணக்கிட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அரசியல்வாதி எனும் போர்வையில் செயற்பட்ட போதைப் பொருள் வர்த்தகரும் கைதானார். இவர் சமூக செயற்பாட்டாளர் என கூறி வந்ததுடன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.

அத்துடன் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தில் இவர் சமூக சேவைகள் என்ற போர்வையில் தன்னை பெரும் கொடை வள்ளல் என காட்டி வந்துள்ளார்.

அதே வேளை இவர் பல அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டுசுட்டானில் மக்களிடம் அத்துமீறிச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்..!

0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் மக்களுடன் அடாவடித்தனமாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தலையீட்டையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமது முறைப்பாட்டை ஏற்று, மக்களுடன் அடாவடித்தனமாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் துரித செயற்பாட்டை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட மக்கள்மீது பொய் குற்றங்களைப் பதிவு செய்வது, மக்கள்மீது அத்துமீறித் தாக்குவது, மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும் வகையில் செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் கடந்த 09.08.2025அன்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்களின் இந்த முறைப்பாட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உடனடியாக குறித்த அத்துமீறல் செயற்பாட்டில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் எதிர்வரும் 16.08.2025 சனிக்கிழமையன்று ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மக்களால் முற்றுகையிடப்பட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்துமிருந்தார்.

இத்தகைய சூழலில் குறித்த அத்துமீறல் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வெலி ஓயா பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரி 11.08.2025இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தெரியப்படுத்தி இருந்ததுடன், அதன்பின்னர் முத்துஐயன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் நேரடியாகவும் சந்தித்து தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இவ்விடயத்தில் தமது வலியுறுத்தலையேற்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக துரிதநடவடிக்கை மேற்கொண்ட ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் செயற்பாட்டை வரவேற்பதாக நடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!