Sunday, March 8, 2026
Huis Blog

போர் ஆரம்பித்து ஒரு வாரத்தில் இஸ்ரேல் வைத்திய சாலையில் இரண்டாயிரம் பேர்..!

0

போர் ஆரம்பித்த ஒரு வாரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரில் 1929 பேர் காயமடைந்து வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களுள் 122 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுள் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இவர்களில் சிலர் ஏவுகணைத் தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்படாமல் வேறு காரணங்களால் காயமடைந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மட்டும் 157 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் பொலிசாரால் கைது..!

0

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் இன்று (08)தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் அசங்க(61867) ரன்வெல(61518) மிதுசன்(91800) நியாம்(84963) றொசான்(86009) ஆகியவர்களை கொண்ட காவல்துறை குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஈரானிய கப்பல் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு..!

0

ஈரானியக் கப்பல்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானியர்கள் தொடர்பாக இலங்கை எடுக்கும் இறுதி முடிவுகள் நாட்டின் இறைமைக்கு உட்பட்டது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், IRIS Bushehr கப்பல் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச கடற்படை விதிகளுக்கு மதிப்பளிப்பதாக வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த இராஜதந்திர நகர்வு, பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் இலங்கையின் சுயாதிபத்திய உரிமையைச் சர்வதேச மட்டத்தில் பலப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், கடல்சார் விவகாரங்களில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புரிந்துணர்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு..!

0

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்திலும், லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் மேற்கொள்ளப்படாத நிலையில் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் உன அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாய் ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாயாக பதிவாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மார்ச் மாதத்திற்கு 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை, 7,800 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மாலைதீவில் தற்போது முக்கிய இருப்பு வைத்திருக்கும் ஒரு கப்பலில் இருந்து மேலும் 30,200 மெட்ரிக் தொன் எரிவாயு வழங்க தயாராக இருப்பதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க முடிவு – ஜனாதிபதி

0

கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்றிரவு அவர் கூறியதாவது,

என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக சொல்லப்பட்ட ஈரானுக்கு சொந்தமான அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவராமல் திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.

நாங்கள் இறையாண்மையுள்ள ஒரு நாடு. எந்த நாட்டுக்கும் சார்பானவர்கள் அல்ல நாம். எங்கள் கடல் பிரதேசத்தில் இருந்து கோரப்பட்ட உதவியை இராஜதந்திர முறையில் கையாண்டோம்.

நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைவருடனும் நாங்கள் நட்புறவை பேணுகிறோம். நாங்கள் நடுநிலையான நாடாக மனித நேய அடிப்படையில் செயல்படுகிறோம்.

இந்த பிரச்சினையை முன்வைத்து அரசுக்கும் நாட்டுக்கும் எதிரான கருத்துக்கள் வந்தன. சிறுவர்கள் அந்த கப்பலில் இருப்பதாக தகவல் பரப்பப்பட்டது.

சிறுவர்கள் இருக்கிறார்கள் அரசு அவர்களை கவனிக்காமல் இருக்கிறார்கள் என்று தான் அவர்கள் செய்திகளை பரப்புகிறார்கள். இது அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் ஈரானிய கப்பலை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் – காதர் மஸ்தான்

0

அரசாங்கம் ஈரானிய கப்பலுக்கு உதவி வழங்கா விட்டாலும் காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரானிய கடற்படையினர் உயிரிழந்தமைக்கு காரணமாக எமது அரசாங்கம் இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

11 மணித்தியாலங்கள் அவர்கள் உதவி கோரியிருக்கின்றனர். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு உதவி வழங்கவில்லை.

உதவி வழங்காவிட்டாலும் பரவாயில்லை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். உண்மையிலே இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் வெறி பிடித்து அலைகின்றன.

இத்தகைய பின்னணியில் உலக சமாதானத்திற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா சபை என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

சரியாக குறிவைத்தே ஈரானிய இலக்குகளை தாக்கியதாக குறித்த நாடுகள் கூறுகின்றன. அப்படி என்றால் 167 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களை இலக்கு வைத்தா தாக்கியுள்ளனர்?

வெனிசுவேலா ஜனாதிபதியை கைது செய்துகொண்டு செல்கின்றனர். ஈரானில் அதன் ஆன்மீக தலைவரை கொலை செய்கின்றனர். அதேபோன்று 167 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த போர்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதேபோன்று ஈரானும் கூட ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், சவுதி அரேபியா போன்ற நாடுகளை தாக்குவதையும் நிறுத்த வேண்டும்.

இந்த விடயங்களை குறித்த நாடுகள் மேற்கொண்டு சமாதானத்தை நாட தேவையான ஒத்துழைப்பை எமது அரசாங்கம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் அதுதான் இங்கே பாரிய கேள்விக்குறியாகியுள்ளது. எமது அரசாங்கம் கிட்டத்தட்ட 100 ஈரானிய கடற்படையினர் இறந்ததற்கு காரணமாக கொலைக்குரிய காரணகர்த்தாக்களாக இருக்கின்றது என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

11 மணித்தியாலம் 12 மணித்தியாலம் உதவி கேட்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலையில் உதவி கேட்டதற்கு உதவி வழங்கவில்லை. ஆனால் இங்கே வெளியில் கூறுகின்றார்கள் உதவி வழங்காது விட்டாலும் பரவாயில்லை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். உண்மையிலே இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் தீர்வல்ல; போரை உடனடியாக நிறுத்துக!!! இஸ்ரேலுக்கு சீனா கடும் எச்சரிக்கை..!

0

பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, மோதல்கள் மேலும் தீவிரமடைவதையும் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதையும் தடுப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சீனா கோரியுள்ளது.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச உறவுகளில் உலக நாடுகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கக்கூடாது என சீன வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

இஸ்ரேல் உட்பட அனைத்துத் தரப்பினரின் அடிப்படைத் தேவைகளுக்கும் இது பொருந்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியான சிக்கலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்ப்பதற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், அனைத்துத் தரப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அண்மைய பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ள போதிலும், துரதிர்ஷ்டவசமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஆயுத மோதல்களால் அந்த முயற்சிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சர் கவலை தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பிரச்சினை தொடர்பில் எப்போதும் நடுநிலையான மற்றும் நியாயமான நிலையில் இருக்கும் சீனா, மோதல்களைக் குறைப்பதில் தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தமிழருக்கு எதிரான 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இந்நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது சிற்றுாழியர்கள் துஸ்பிரயோகம்..!

0

க்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்திய சாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

யுவதியின் சடலம் மீது வைத்திய சாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் மக்கள் வைத்திய சாலைக்கு முன்பாக ஒன்று கூடி “பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம், வைத்திய சாலை நிர்வாகமே உண்மையை வெளிக் கொண்டு வா” போன்ற கோஷங்களையெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்துக்கு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி உட்பட ஏனைய வைத்தியர்களும் வருகை தந்ததுடன் வைத்திய அதிகாரி பஷ்லி சம்பவம் குறித்து குறிப்பிடுகையில்,

“உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலமொன்று கடந்த 25ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த சடலம் முதல் நாள் பிரேத அறையில் இருந்த நிலையினை விட மறு நாள் வேறு ஒரு நிலையில் காணப்பட வில்லை. ஆனால் இது தொடர்பாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவினை நாங்கள் பரிசோதித்து பார்த்தோம்.

அப்போது அந்த சிற்றூழியர்கள் மூவரும் பிரேத அறைக்கு சென்றுவந்த காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நாங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த அபேதரன் யாழ் போதனா வைத்திய சாலையில் மரணம்..!

0

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான குமுழமுனையைச் சேர்ந்த மயில்வாகனம். அபேதரன்(அபி) நேற்று யாழ் போதனா வைத்திய சாலையில் மரணமடைந்துள்ளார்.

கடந்த 02.02.2026 அன்று கடும் காச்சல், சளி மற்றும் இருமல் என மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நிமோனியா காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கடந்த 07.02.2026 அன்று யாழ்ப்பாணம் பொது மருத்துவ மனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் சாதாரண மருத்துவ பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு, பின்னர் நோய் நிலைமை அதிகரித்தன் காரணமாக மீண்டும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(03.02.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் விவசாயிகள் நெல்லை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் – அரச அதிபர்

0

மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத் தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் எனவும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறு அரச அதிபர் க.கனகேஸ்வரன் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக எரிபொருட்களுக்கான நெருக்கடி நிலைமை காணப்பட்டது.

இந்த நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் அடிக்கடி தொடர்பில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு தேவையான எரி பொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்தாலோசித்த பிறகு, மன்னார் மாவட்டத்திற்கு தேவையான டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தற்போது போதிய அளவு கையிருப்பில் உள்ளன.

தற்போது நெல் அறுவடை காலம் என்பதால், அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம் என்றும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் தாராளமாக வழங்கப்படுவதால், பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி பயணங்களை மேற்கொள்ள முடியும்.

கடற்றொழிலுக்கு தேவையான மண்ணெண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது. மீனவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களில் எரி பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏதேனும் சிரமங்கள் அல்லது புகார்கள் இருந்தால், மாவட்டச் செயலகம் மற்றும் விவசாயிகள் கமலநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்திலும், மீனவர்கள் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திலும் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

error: Content is protected !!