Tuesday, August 4, 2026
Huis Blog

பண்டார வன்னியன், பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக் கடமை..!

0

தமிழர்களின் வீரத்தினைப் பறைசாற்றுகின்ற வகையிலான வரலாற்றினையுடைய வன்னி மன்னன் பண்டாரவன்னியன், பால்ராஜ் போன்றவர்களை நினைவு கூருவது தமிழர்களின் வரலாற்றுக் கடமை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடந்த மேமாதம் இலங்கை நாடாளுமன்றில் பால்ராஜிற்கு தாம் அஞ்சலி செலுத்தியமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பெரும்பான்மை இனத்தவர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்ததாகச் சுட்டிக் காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்வாறான எதிர்ப்புக்களைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் இவ்வாறான நினைவு கூரல்களும், அஞ்சலிகளும் தம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முற்றவெளி மைதானத்தில் 02.08.2026நேற்று இம்பெற்ற தமிழர் பாரம்பரிய வீரக்கலை வீரர்களின் மதிப்பளிப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வில் எனக்கு மிகவும் கவர்ந்த விடயம் என்னவெனில், கேடயத்தைத் தாங்கியவாறு இடம்பெற்ற வாள்ச் சண்டையாகும்.

கடந்த 1803ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 223ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்றதொரு ஆகஸ்ட் மாதத்தில் முல்லைத்தீவில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள்மீது மாவீரன் பண்டார வன்னியன் தாக்குதல்களை மேற்கொண்டு ஆங்கிலேயப் படைகள் நிலை கொண்டிருந்த ஒல்லாந்தக் கோட்டைக்குள் புகுந்து ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றினான்.

ஆங்கிலேயப் படைகள் பீரங்கிகளுடனும், துப்பாக்கிகளுடனும் மிகவும் பலமாக எமது மண்ணில் நிலைகொண்டிருந்த போதும், இவ்வாறான வாள்களையும், கேடயங்களையும், ஈட்டிகளையும் பயன்படுத்தியே மாவீரன் பண்டார வன்னியன் தனது தமிழர் படையுடன் இணைந்து ஆங்கிலேயரது கோட்டைக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தினான். அன்னியப் படைகளை வென்று வாகை சூடினான் என்று வரலாறுகள் கூறுகின்றன.

எமது வன்னி மன்னன் பண்டாரவன்னியன் வெற்றி கொண்ட அந்த ஒல்லாந்தக் கோட்டையின் சிதைவுகள் தற்போதும் முல்லைத்தீவு மாவட்டசெயலக வளாகத்தில் காணப்படுகின்றன.

மாவீரன் பண்டாரவன்னியனின் இந்த வீரதீரச் செயற்பாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தொடர்ச்சியாக நினைவுகூர்ந்து வருகின்றோம்.

இதை ஏன் இங்கு தெரிவிக்கின்றேன் என்றால், வீர விளையாட்டுக்களில் யாரும் தமிழர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இவ்வாறாக எமது பூர்வீகப் பரம்பரைகள் எவ்வாறு வீரம் செறிந்திருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக வரலாறுகள் பல காணப்படுகின்றன.

அதன் பின்னரான விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த வரலாற்றினையும் அனைவரும் அறிவீர்கள். உலகநாடுகளே வியந்துபார்க்கும் அளவில் அவர்களின் வீரதீர செயற்பாடுகள் இருந்தன.

அத்தகைய பரம்பரைவழியில் வந்த எம்மவர்களிடமும் வீர எண்ணங்களே குடிகொண்டிருக்கும். அவர்களும் வீரம் செறிந்தவர்களாகவே இருப்பார்கள்.

மேலும் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் தமிழ் மக்களின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றது.

இந்நிலையில் பாராளுமன்றில் கடந்த மே மாதம் எங்களுடைய மண்ணின் மைந்தன் பால்ராஜ் அவர்களுக்கு பாராளுமன்றில் வீரவணக்கத்தையும், அஞ்சலிகளையும் செலுத்தியிருந்தேன்.

அதற்கு எதிர்க்கட்சியைச் சேரந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையாக எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் ஆளும் தரப்பினர் அதற்கு எவ்வித எதிர்வினைகளையும் ஆற்றியிருக்கவில்லை என்பதையும் இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வீரஞ் செறிந்த வரலாறுகளையுடைய எம்மவர்களையும், அவர்களின் வீரதீர செயற்பாடுகளையும் நினைவுகூரவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும். நினைவுகூரல் என்னும் எமது வரலாற்றுக் கடமையினை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

யாருடைய கூச்சலுக்காகவும் பயந்துகொண்டு, இத்தகைய நினைவு கூரல்களைச் செய்யாமல் அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டோம்.

அத்தோடு தற்போது இந்த வீரவிளையாட்டுக்கள் இடம்பெறும் இந்த முற்றவெளி மைதானத்தில்தான் அன்று விடுதலைப் புலிகளின் காலத்தில், கடற்புலிகளின் ஏற்பாட்டில் சனத்திரள்களின் மத்தியில் மிகவும் சிறப்பான முறையில் எழுச்சிப்பாடகர் தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்வு இடம்பெற்றது. அதனையும் இந்த நேரத்தில் மீட்டிப் பார்க்கின்றேன். இவ்வாறாக முல்லைத்தீவு மண்ணிற்குப் பல பெருமைகள் உண்டு.

இப்படியாக எம்மவர்கள் தமிழர்களின் வீரக் கலைகளை கற்றுக் கொண்டு, அவற்றை வெளிப்படுத்திக்காட்டும் போது மிகவும் மனமகிழ்வாக உள்ளது – என்றார்.

கனடாவிற்கு அனுப்புவதாக மோசடி; சூத்திரதாரி வவுனியாவில் அதிரடிக் கைது..!

0

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து எத்தியோப்பியாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்ட மூன்று வடக்கு மாகாண இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் கடத்தல் வழக்கில், குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் துபாய் வழியாக எத்தியோப்பியாவுக்குப் பயணம் செய்த மூன்று நபர்களை, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வெளிநாட்டுக் குற்றக் குழு கடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மே 27 அன்று இந்த வழக்கு பதிவானது.

சிஐடியின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சந்தேக நபருக்கு சுமார் ரூ. 64 லட்சம் செலுத்தியமை தெரியவந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்க பணம் தேவை என்று கூறி, சந்தேக நபர் அவர்களின் உறவினர்களிடமிருந்து சுமார் ரூ. 20 மில்லியன் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சந்தேக நபருக்கும் கடத்தலுக்குப் பொறுப்பான வெளிநாட்டுக் குழுவிற்கும் இடையே உள்ள தொடர்புகளையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சந்தேக நபர் பின்னர் வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அடிஸ் அபாபா காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்தது.

எத்தியோப்பிய அதிகாரிகள் ஜூன் 6 அன்று மூன்று இலங்கையர்களை மீட்டதோடு, இச்சம்பவம் தொடர்பாக நான்கு பாகிஸ்தான் நாட்டவர்களையும் ஒரு எத்தியோப்பிய நாட்டவரையும் கைது செய்தனர்

26 முதல் 34 வயதுக்குட்பட்ட, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட மூவரும் ஓகஸ்ட் 1 அன்று இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புடன் சந்தேக நபருக்கு உள்ள தொடர்புகளின் முழு அளவையும் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.

வடகிழக்கு தமிழ் தேசிய அரசியலும் அதன் எதிர்காலப் போக்கும் – ஒரு பார்வை

0

வடகிழக்கு தமிழ் தேசிய அரசியல் என்பது இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்ற ஒரு அரசியல் மரபாகும். மொழி, நிலம், அரசியல் பிரதிநிதித்துவம், சமத்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற கோரிக்கைகளை மையமாகக் கொண்டு பல தசாப்தங்களாக இது வளர்ச்சியடைந்துள்ளது. இந்த அரசியல் பயணம் பல்வேறு கட்டங்களை கடந்துள்ளதுடன், எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறது.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், மொழிக் கொள்கை, அரசியல் பிரதிநிதித்துவம், நில உரிமைகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் நிர்வாக அமைப்புகள் தொடர்பான பல்வேறு மாற்றங்கள் தமிழ் அரசியல் கோரிக்கைகளை வலுப்படுத்தின.

காலப்போக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தன. அமைதியான அரசியல் நடவடிக்கைகள், தேர்தல் அரசியல், குடியுரிமை போராட்டங்கள் மற்றும் பின்னர் ஏற்பட்ட ஆயுத மோதல்கள் ஆகியவை இந்த வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களாக அமைந்தன.

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மோசமாக அழிக்கப்பட்ட பின்னர், வடகிழக்கு தமிழ் அரசியல் புதிய சூழலுக்குள் நுழைந்தது. தேர்தல் அரசியல், மனித உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கோரிக்கைகள், நிலப் பிரச்சினைகள், அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் போன்ற விடயங்கள் மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாகின.

இன்றைய வடகிழக்கு தமிழ் தேசிய அரசியல் பல்வேறு கட்சிகள், பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் இயங்கி வருகிறது. அதேவேளை, அரசியல் ஒற்றுமை, பொதுவான செயற் திட்டம் மற்றும் நீண்டகால இலக்கு தொடர்பான கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

சமூக ஊடகங்களின் வளர்ச்சி அரசியல் உரையாடலை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் புலம்பெயர் சமூகங்களின் கருத்துக்கள் முன்னரை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தகவல் பரிமாற்ற முறைகளையும் பொதுமக்களுடனான தொடர்புகளையும் மாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

வடகிழக்கு தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் பல முக்கிய சவால்களை எதிர்கொள்கிறது.

முதலாவதாக, அரசியல் ஒற்றுமையை வலுப்படுத்துவது மிகப் பெரிய தேவையாகும். பல்வேறு அரசியல் அணுகுமுறைகள் இருந்தாலும், மக்களின் அடிப்படை நலன்கள் மற்றும் பொதுவான நோக்கங்களில் ஒருமித்த செயற்பாடு அவசியமாகிறது.

இரண்டாவதாக, இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிப்பது முக்கியமானதாகும். புதிய தலைமுறை வேலைவாய்ப்பு, கல்வி, தொழில்நுட்பம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லாட்சியை அதிகம் முன்னிறுத்துகிறது. அவர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளும் அரசியல் அணுகுமுறை தேவையாகிறது.

மூன்றாவதாக, வடகிழக்கின் பொருளாதார வளர்ச்சி, முதலீடு, தொழில் முனைவு, விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளில் நிலையான முன்னேற்றத்தை நோக்கிய கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

நான்காவதாக, இனங்களுக்கு இடையிலான நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவது நீடித்த அமைதி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய அம்சமாகும்.

எதிர்காலத்தில் வடகிழக்கு தமிழ் தேசிய அரசியல், பாரம்பரிய அரசியல் கோரிக்கைகளுடன் பொருளாதார முன்னேற்றம், கல்வி, தொழிநுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இளைஞர் அதிகாரமளிப்பு போன்ற விடயங்களையும் இணைத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

டிஜிட்டல் தொடர்பாடல், தரவுகளின் அடிப்படையிலான கொள்கை வடிவமைப்பு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் மக்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல் ஆகியவை அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்த உதவும்.

வடகிழக்கு தமிழ் தேசிய அரசியல் ஒரு நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளதுடன் அதன் எதிர்காலம் கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வதிலும், ஜனநாயக அரசியல் நடைமுறைகளை வலுப்படுத்துவதிலும், சமூக ஒற்றுமையைப் பேணுவதிலும், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதிலும், பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்தை முன்னிலைப் படுத்துவதிலும் பெரிதும் அமையும்.

கடந்த கால வரலாற்றை நினைவில் கொண்டு, நிகழ்காலத் தேவைகளை உணர்ந்து, எதிர்கால தலைமுறையின் நலனைக் கருத்தில் கொண்டு செயற்படும் அரசியல் அணுகுமுறையே வடகிழக்கு மக்களின் நீண்டகால முன்னேற்றத்திற்கும் நிலையான அமைதிக்கும் வலுவான அடித்தளமாக அமையும்.

SLS சான்றிதழ் இல்லாத தலைக் கவசங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்..!

0

SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக் கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

தரமற்ற தலைக்கவசங்களை அணிவது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதற்கு இணையான ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக SLS தரச்சான்றிதழ் பெற்ற தரமான தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படை உரிமையே தவிர அது சலுகை அல்ல – பிரதமர்

0

கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படை உரிமையாகும், மாறாக அதுவொரு சலுகை அல்ல. பிள்ளைகள் கல்வியைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ‘நண இசுர’ புலமைப் பரிசில் திட்டம் பெரும் பக்கபலமாக அமைகின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்போட சிரி ஞாணிஸ்ஸர தேரரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘நண இசுர – 2026’ புலமைப்பரிசில் வழங்கும் விழா ஞாயிற்றுக் கிழமை (2) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதாரச் சிரமங்கள் இருந்த போதிலும் தளராது உயர்தரம் வரை முன்னேறிச் செல்லும் இந்தப் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்குவதற்கு இந்த உதவித்தொகை பெரும் பக்கபலமாக அமையும்.

தற்போது நாட்டின் கல்வித் துறையில் பாரிய மாற்றத்தையும் புதிய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை அறிவீர்கள்.

கல்வி என்பது எந்தவொரு பிள்ளைக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையே தவிர,அதுவொரு சலுகையாக இருக்கக் கூடாது என்பதே அரசாங்கம் என்ற ரீதியில் எமது தெளிவான தொலைநோக்காகும்.

நாட்டின் பொருளாதாரச் சிரமங்கள் எவ்வாறிருந்த போதிலும், பிள்ளையொருவரின் கல்விக்காகச் செய்யப்படும் முதலீடானது இந்த நாட்டின் எதிர்காலத்திற்காகச் செய்யப்படும் மிகச்சிறந்த மற்றும் மகத்தான முதலீடாகும். நம்மிடம் உள்ள மிக வலுவான வள மனித வளமேயாகும்.

அரசாங்கம் என்ற ரீதியில் கல்வித் துறைக்காகப் பல முக்கிய நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் இலவசக் கல்வியைப் பாதுகாத்தல் என்பவற்றிற்காகப் பாடத்திட்டங்களைப் புதுப்பித்து, தற்போதுள்ள பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைமைக்கு பதிலாகப் பிள்ளையின் திறமைகள், அவதானிக்கும் ஆற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படச் செய்யும் நடைமுறைச் சாத்தியமான கல்விச் சூழலை உருவாக்குவதே எமது முதன்மை நோக்கமாகும்.

அத்துடன், புத்தகங்களுக்கு மட்டும் வரையறுக்கப்படாமல் நாட்டுக்குத் தேவையான நேர்மறை மனப்பாங்குகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்ட கல்வி முறையை உருவாக்க நாம் விரும்புகிறோம்.

கிராமப்புற மற்றும் நகரப் பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காகக் கிராமப்புறப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த அதிக நிதியை ஒதுக்கியுள்ளோம். ஏனெனில் நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தாலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

அதேபோல், நீண்டகாலமாகச் சரியான திட்டமிடல் இன்றிச் செயற்படுத்தப்பட்ட கல்வி முறைமையினால், பரீட்சைகளை நடத்துவதிலும் முடிவுகளை வெளியிடுவதிலும் சிக்கல்கள் எழுந்தன. இன்று உரிய அட்டவணையின்படி முறைமையாகக் கல்வித் துறையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதற்கு உங்களது ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவையாகும்.

எமது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினூடாகப் பாடசாலைக் கல்விக்குப் பிறகு ஒரு பிள்ளை வழிகாட்டுதலன்றித் தவிப்படையாமல், தொழில் சார்ந்த அல்லது உயர்கல்வியை நோக்கிச் செல்வதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் வாய்ப்புகளையும் நாம் விரிவுபடுத்தி வருகின்றோம்.

கல்வித் துறையின் மனித வளத்தில் முதலீடு செய்வதுடன், பாடசாலை மதிய உணவு, பாடப்புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில் திட்டங்கள் மூலம் வறுமையான குடும்பங்களின் பிள்ளைகள் கல்வியைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

கல்வியால் ஆயுத பாணியாக்கப்பட்டு, இந்த நாட்டைச் சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் கருணையுள்ள, நல்லொழுக்கமுள்ள பிரஜைகளாக மாற உறுதி பூணூமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அதிகாரிகள் மீதான தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் – ஸ்ரீநேசன் எம்.பி

0

ஐந்து கோடி தண்டப் பணம் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி தண்டப் பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி தண்டப் பணம் செலுத்திய தமக்கு அந்த தண்டனை கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நினைத்திருப்பார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் சனிக்கிழமை(01.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நினைத்தால் வேதனை தான். இதனை நினைத்து அவரது குடும்பம் மிகவும் வேதனைப்படுவார்கள்.

ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போதும் 269 அப்பாவி பக்தர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுக்கவில்லை என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே ஒரு பக்கம் அவரையும் அவரது குடும்பத்தையும் நினைத்து சற்று வேதனைப்பட்டாலும் 269 அப்பாவி மக்கள் தேவாலயங்களில் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது கொல்லப்பட்டுள்ளார்கள். அவர் கடமையை சரிவர செய்யவில்லை அதன் காரணமாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டிடம்; அலட்சியத்தில் அதிகாரிகள்..!

0

திருகோணமலை வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே குடைசாய்ந்து காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே அருகாமையில் உள்ள வகுப்பறை மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரை இங்கு காணப்படுகிறது.

எனவே மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு குறித்த கட்டிடத்தை திருத்தியமைத்தாவது தருமாறும் உரிய தரப்புக்களுக்கு பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு..!

0

முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் வீடுகளைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு வலியுருத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு இந்த அறுவுருத்தலை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில், அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு உட்பட்ட அரச நிர்வாகப் பிரிவு, உள்நாட்டலுவல்கள் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவுகளுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60,430.04 மில்லியன் ரூபாய் மூலதனச் செலவினம் மற்றும் 706,226.83 மில்லியன் ரூபாய் மீளாவெழும் செலவினங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பிராந்திய ரீதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக (Development Units) மாற்றுவதற்கான திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி மேலதிக வழிகாட்டல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தப்பியோடிய குற்றவாளிகள்; ஒரு வாரத்தில் மீள இலங்கைக்கு..!

0

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில், இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இருவர் இறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், கைதுசெய்யப்பட்ட இருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தினர்.

அதன்படி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 ஆகிய வயதுடைய வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வாரத்திற்குள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 14 வயது சிறுமி கர்ப்பம்; குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை..!

0

14 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில், பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட காவல்துறை புலன் விசாரணைகளின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த பிரதிவாதிக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றபகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பிரதிவாதிக்கு தலைமறைவாகியிருந்தார்.

அதனை தொடர்ந்து பிரதிவாதிக்கு இல்லாத விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தபட்டிருந்தது.

குறித்த விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, வழக்கு தொடுநர் தரப்பு குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டினை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதன் பிரகாரம் பிரதிவாதிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டுமென தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

குறித்த குற்ற செயலின் போது பிரதிவாதியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், குறித்த சிறுமி கர்ப்பம் தரித்தமை, எதிரி வழக்கு விசாரணைகளில் இருந்து தலைமறைவாகியமை.

மற்றும் சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்ற காரணிகள் எதிரிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிபதி ஏ ஏ ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

error: Content is protected !!