Friday, March 6, 2026
Huis Blog Bladsy 101

புதுக்குடியிருப்பில் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞன் மற்றும் யுவதி கைது..!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் யுவதி ஒருவருமாக இருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலையை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் , யுவதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா மற்றும் போதைப்பொருளைக் கடத்திச்செல்வதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற வாகனம் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனைக்குட்படுத்தினர்.

அதன்போது 550 கிராம் கஞ்சா, 160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன் ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துவதற்குரிய பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அதனையடுத்து கஞ்சா மற்றும் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இளைஞர், யுவதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் போர் குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்க நிதியுதவி நிறுத்தப்படுமா?

0

இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்வதற்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துமாறு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.

தகவல் அறிந்த அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் அரச ஆவணங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும் 24 திட்டங்களுக்கான நிதியை நிறுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் உள்ள முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அலுவலகம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரொய்ட்டர்ஸின் தகவல்களுக்கு அமைய, இலங்கை, ஈராக், நேபாளம், பெலாரஸ், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, சிரியா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகள் அந்த பரிந்துரை பட்டியலில் அடங்குகின்றன.

இருப்பினும் அமெரிக்க வெளிவிவகார துறையினரும், வெள்ளை மாளிகையின் முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அலுவலகமும் இது தொடர்பில் பதில் எதனையும் வழங்கவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் குறித்த திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி தீர்மானமாக இதனை கருத முடியாது எனவும், இந்த விடயம் தொடர்பில் வெளியுறவுத்துறைக்கு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி..!

0

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் சமீபத்திய நாட்களில் பரவி வரும் பல்வேறு செய்திகள் தவறானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் பரீட்சைகள் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 21, 2025 வரை நிகழ்நிலையில் (Online) கோரப்படும் என்றும் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் புதையலை தோண்டிய குற்றச்சாட்டில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்..!

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மாணிக்கபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள், நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 14 நாட்களுக்கு அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் தங்கம் காணப்படுவதாக தெரிவித்து சந்தேகநபர்களால் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் – மீசாலை, கிளிநொச்சி – உருத்திரபுரம், பெரிய பரந்தன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையர்களுக்கான மீள் நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்த இஸ்ரேல்..!

0

இலங்கையர்களுக்கான மீள் நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்க இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ் சுன்னாகம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

0

யாழ் சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (27.06.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு 60 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் – விஜய் தணிகாசலம் ஆதங்கம்

0

தமிழினப் படுகொலை காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஒன்ராறியோ மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் செம்மணி விஜயத்தை மேற்கோள்காட்டி, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

செம்மணி பகுதியில் 1990களில் இலங்கை இராணுவத்தால் புரியப்பட்ட படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள் இங்கு புதைந்துள்ளதாகவும், இதற்கான ஒரு விசாரணையின் தேவையை அழுத்தமாக எடுத்துக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தணிகாசலத்தின் இந்தக் கருத்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரும் தமிழ் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையுடன் ஒத்துப் போகிறது.

2021 ஜனவரியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையும், இலங்கையின் உள்நாட்டு நீதி விசாரணைகளின் தோல்வி காரணமாக சர்வதேச நடவடிக்கைகளின் தேவையை வலியுறுத்தியிருந்தது.இலங்கை உணவகம்

இதனால், செம்மணி புதைகுழி உள்ளிட்ட இடங்களில் நடந்த மீறல்களுக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்பது தமிழ் சமூகத்தின் நிலைப்பாடாக உள்ளது.

இந்நிலையில் விஜய் தணிகாசலத்தின் கருத்து, செம்மணி விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோருவதற்கு சர்வதேச விசாரணையின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.

யாழில் காட்டுக்குள் கசிப்பு உற்பத்தி; முற்றுகையிட்டு கைது செய்த கிராம சேவகர்கள்..!

0

யாழ்.புங்குடுதீவு இறுப்பிட்டி ஜே/27 கிராமசேவகர் பிரிவிலுள்ள பற்றைக்காடு நிறைந்த பகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை கிராமசேவகர்கள் இருவர் முற்றுகையிட்டனர்.

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அன்ரன் பயஸ் விதுசன் எனும் நபர் ஒன்றரை லீற்றர் கசிப்பு போத்தலுடன் புங்குடுதீவு பிரதேச கிராம சேவகர்களான சிறீதரன் நிமால் மற்றும் பிரியலக்சன் ஆகியோரால் கடந்த 25 ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பெறப்பட்ட இறுப்பிட்டி காட்டுப் பகுதியில் காணப்பட்ட சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம் இருப்பது தெரியவந்தது.

அதனையடுத்து குறித்த பற்றைக் காட்டுக்குள் இரு கிராம சேவகர்களும் துணிச்சலாக சென்று சட்டவிரோத கசிப்பு நிலையத்தினை முற்றுகையிட்டனர்.

பின்னர் இது தொடர்பில் குறிகாட்டுவான் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். எனினும் வாகனம் இல்லாததால் 50 நிமிடங்களுக்குப் பின்னரே பொலிஸார் அவ்விடத்தை சென்றடைந்தனர்.

முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையத்தில் 180 லீற்றர் கொள்ளளவு உடைய கோடா பரல்களை மீட்ட பொலிஸார் அதனை நிலத்தில் ஊற்றி அழித்தனர்.

அத்துடன் கிராம சேவகர்களால் கைது செய்யப்பட்ட அன்ரன் பயஸ் விதுசன் என்பவர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான குறித்த காட்டுக்குள் பயமின்றி சென்று கசிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு நபரையும் கைது செய்த கிராம சேவகர்கள் இருவரின் துணிச்சலான செயல் மிகவும் பாராட்டத்தக்கது என்று அவர்களுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

யாழ். செம்மணிப் புதைகுழியில் இன்றும் இரண்டு மனித எலும்புக் கூடுகள் மீட்பு..!

0

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக் கூடுகள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் வியாழன் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து நேற்று (27) இரண்டாம் கட்ட இரண்டாவது நாள் அகழ்வுப் பணியில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி புதைகுழியில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!

0

இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி திருகோணமலையில் இணைந்த சேவை உத்தியோகத்தர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக மட்டத்திலான இடமாற்றம் தாபன விதிக்கோவைக்கு முரணானது. இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு வழியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பில் இடமாற்ற சுற்றறிக்கையில் பிழைகளை விட்டுவிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தூரப் பகுதிகளுக்கு பிரதேச செயலக ரீதியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை உத்தியோகத்தர்களை உடல், உள ரீதியாக பாதிக்க வைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்தனர்.

அத்தோடு இடமாற்றத்தில் பிரதேச செயலகங்களுக்கிடையிலும் ஆண், பெண் என்ற ரீதியிலும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளனர் என்றவாறான விடயங்களை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தர்.

மேலும் நீதியான இடமாற்றம் வேண்டும், பாரபட்சமற்ற இடமாற்றத்தை ஏற்படுத்துங்கள், நியாயமற்ற இடமாற்றத்தினை உடனடியாக திரும்ப பெறவும் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டவாறான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!