தோட்ட கிணற்றில் வாளியில் மீன் பிடிக்க முற்பட்ட சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளான்.
அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த பிரதீபன் தர்சன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.
தனது பேரனாருடன் தோட்டத்திற்கு நீர் இறைக்க சென்ற சிறுவன் , பேரனார் நீர் இறைத்துக் கொண்டிருந்த வேளை , சிறுவன் கிணற்றினுள் வாளியினை விட்டு , மீன் பிடிக்க முயன்ற வேளை , கால் இடறி கிணற்றினுள் விழுந்துள்ளான்.
சிறுவன் கிணற்றினுள் விழுந்ததை அறிந்து அயலவர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டு , அச்சுவேலி வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தால் மட்டுமே, தங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என, வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ எனும் கருப்பொருளில் ‘காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர்க்கதை’ ஆவணப்படம் திரையிடலும், கருத்துப் பகிர்வும் நேற்று காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றன.
இதில் கலந்து கொண்டதன், பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான சங்கத்தின் இணைப்பாளர் மெனுவல் உதயச்சந்திரா இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
தாக்கப்பட்டதில் காயமடைந்ததாக கூறப்படும், குறித்த மாணவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வகுப்பில் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெற்று கொண்டிருந்தபோது, குறித்த ஆசிரியர் தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கினிகத்தேனை காவல் நிலையத்துக்கு தாம் முறைப்பாட்டளித்து விட்டு சிகிச்சைக்காக செல்வதற்கு முற்பட்ட போது, தமது பாடசாலையைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் முச்சக்கர வண்டியில் காவல் நிலையத்திற்கு அருகில் வந்து, தம்மை பலவந்தமாக பாடசாலைக்கு ஏற்றிச் சென்று முறைப்பாட்டை மீளப் பெற அழுத்தம் கொடுக்க முயன்றதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தாக்குதல் நடந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறான அறிக்கையை வெளியிட்டதாக குறித்த மாணவனுக்கு எதிராகவும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன் பல முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களும் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் சாட்சிகளாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவிர, முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம உட்பட மருத்துவர்கள் குழுவும், சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளது.
முறையற்ற இந்த கொள்வனவின் மூலம் 144.4 மில்லியன் ரூபாய் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தச் சதி செய்ததாகப் பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் இன்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்பாலின உறவுகளை குற்றம் அற்றதாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் உள்ளதென்பது அறிய கிடைத்துள்ளது. அது விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் காவல்துறையில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியான ஈடுபாட்டை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்றைய தினம் (26.06.2025) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதன்போது வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை சில வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த சங்கு கூட்டணி, குறித்த வழக்கின் தீர்ப்பு அர்ச்சுனாவிற்கு எதிராக அமையும் பட்சத்தில் வழக்கின் தீர்ப்பினை தமக்கு சாதகமாக்கி மோசடி மூலம் பெற்ற குறித்த ஆசனத்தை தமக்கு வழங்குமாறு கோரி நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்று நிலைமைகளை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன், செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி செலுத்தினார்.
குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.
வரலாற்றுக் காலந்தொட்டே வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கெதிராக இடம் பெற்றுவரும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன்றுவரை தோற்றுப் போயே இருக்கின்றன. இதில் நேரடியாக அரசுக்கும் பங்கிருப்பதும் இதற்குக் காரணம்.
மாறாக இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுற்று 15 வருடங்கள் கடந்த நிலையிலும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் ஓர் நிழல் யுத்தத்தினை எதிர்கொண்டே வாழ இந்த அரசுகளால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். என்பது மனித உரிமை அமைப்புகள், சிவில் அமைப்புகள், செயற்பாட்டாளர்களின் வெளிப்படுத்தலாக இருக்கின்றது.
வடக்கு, கிழக்கில் இலங்கை அரச பொறிமுறையானது தமிழ் மக்கள் சுதந்திரமாகச் செயற்படமுடியாவண்ணம் நடவடிக்கைகளை முன் நகர்த்துகிறது. தமிழ் மக்களின் நிலங்கள், குடியிருப்பு மற்றும் வாழ்வாதார நிலங்கள் தவறான முறையில் சுவீகரிக்கப்படுகின்றன.
அதற்கான அண்மைய முயற்சியாகக் கடந்த மாதம் வெளியிடப்பட்டு வாபஸ் பெறப்பட்ட காணி உரிமை கோரல் வர்த்தமானியைக் குறிப்பிடமுடியும். அதே நேரத்தில், வடக்கு கிழக்கு மக்களின் அடையாளங்களை அழிக்கும் செயற்பாடுகளையும் பெரும்பான்மை சமூகமும் அரசாங்கமும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
ஆட்சிகள் மாறினாலும் அரசாங்கத்தினதும் அதன் கட்டமைப்புகளினதும் செயற்பாடுகளில் மாத்திரம் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்பட்டதாக அடையாளம் காணாத இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்குத்
தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியாத புதிரே.
மனித உரிமை பாதுகாவலர்கள், செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் பாதுகாப்புத் தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும், கண்காணிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு இலங்கை அரசின் இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினரால் கட்டமைக்கப்பட்ட வகையிலான அச்சுறுத்தல்களுக்கும் நெருக்குதலுக்குள்ளும் இருந்து கொண்டு காலங்கடத்த வேண்டிய நிலைமையே காணப்படுகிறது.
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கூறமுடியாமலும், போர் குற்றங்கள், இனஅழிப்பு, மனிதப்புதைகுழிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறாமலும் இருந்து கொண்டு அதனை இராஜதந்திர வகைகளில் தவிர்ப்பதையே இலங்கை அரசு கவனமாக மேற்கொள்கிறது. இதனையே சர்வதேச தரப்புகள் ஏற்று நடக்கின்ற சூழலே காணப்படுகிறது.
இந்த நிலையில்தான், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் துர்க் அடுத்த வாரம், இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அவரது விஜயம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களின் பின்னர், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நடைபெறுவதாகப் பேசப்படுகிறது.
அந்தவகையில்தான் இந்த விஜயத்தில் தமிழ் மக்கள் சார்ந்து நடைபெறவேண்டிய, கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இலங்கை சுதந்திரம் பெற்று 76 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களிடம் காணப்படுகின்ற எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாத நிலையில் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள் தங்களின் எதிர்பார்ப்பான சுயநிர்ணய உரிமையானது எப்போது கிடைக்கும் என்பது ஏக்கத்துக்குரியதாகவே மாறிவிட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைத் தமிழ் மக்களின் புரையோடிப்போன இனப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் யுத்தத்தின்போது, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையத்தினை எதிர்பார்ப்பதும் நடைபெற்று வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முள்ளிவாய்க்காலுடன் புதைந்து போனதாக எல்லோரும் எண்ணிக் கொண்டாலும், அந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடைபெற்று 15 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்கான நீதி இதுவரை எட்டாக்கனியாகவே
இருக்கிறது.
ஓவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதத்திலும், செப்ரம்பர் மாதத்திலும் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகளின் போது, நிச்சயமாக இவ்வருடத்தில் நாம் கோரும் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதும் ஏமாறுவதும் வழமையாகிவிட்டது. இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுவிடுமா என்பது அவர்களின் கனவானதாக இருக்கிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் துர்க் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகள் குறித்தும் மனித உரிமைகளை மீறுகின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் எவ்வாறான கவனித்தலை மேற்கொள்வார் என்பது யாராலும் அறிந்து கொள்ள முடியாததே.
இருந்தாலும், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுள்ள செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகளைப் பார்வையிட வேண்டும்.
இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 21இற்கும் மேற்பட்ட மனித புதைகுழி அகழ்வின் போது, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு அழைக்கப்பட்டுக் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம் பெற வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் உள்ள மனித புதை குழிகள் தொடர்பாகவும், இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாகவும் இலங்கை அரசைப் பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும் என்றும் நீண்ட கோரிக்கை இருக்கிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையும் நீதியினையும் வழங்கக் கூடிய சர்வதேச பொறிமுறை ஊடான விசாரணையினை மேற்கொள்ள உதவுதல்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும். வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து கள நிலைவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு முன்னால் இருக்கின்றன.
இலங்கை அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்படுத்தப்பட்ட இலங்கைக்கான பொறுப்புக் கூறல் திட்டக் குழுவினர் இலங்கைக்குள் வருகை தருவதற்கும் அவர்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இருந்தாலும், மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகள் அதுதொடர்பில் அழுத்தங்களைப் பிரயோகிக்கவுமில்லை. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும், அதனைப் பூரணப்படுத்துவதற்கான போதாமையுடனேயே காலம் நிறைவடையவுள்ள திட்டத்திற்குக் கால நீடிப்பு தேவையாக இருக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட 40இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான நீதிக்கான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டவைகளாகவே இருக்கின்றன.
அரசியல் நலன்களுக்காக, கண்துடைப்புக்காக அவை கையிலெடுக்கப்பட்டாலும் பயன் எதுவும் நடைபெறுவதேயில்லை. புதிய அரசாங்கமும் இதற்கு விதிவிலக்கானதல்ல.
இணைபிரியா வடக்கு – கிழக்குத் தாயகம் என்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு காணாமல் போய் நீண்டகாலமாகிவிட்ட ஒரு நாடு, ஓர் அரசு, ஒரு சட்டம் என்றமைகின்ற இலங்கையில் தமிழர்களுடைய சுயநிர்ணயக் கோரிக்கைகள் காணாமல் ஆக்கப்படும் என்பது நிச்சயமாகிவிட்ட நிலையில், தமிழர்களுடைய இனப் பிரச்சினை குறித்த விடயம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையினால் எந்த அளவுக்குச் சாத்தியப்படும்.
இனக் கலவரங்களையும், இனப் பரம்பல் மாற்றங்களையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்திருந்த இலங்கையின் அரசாங்கங்கள் தமிழர்களுடைய நியாயமான கோரிக்கைகளை மழுங்கடிக்கும் வகையிலேயே செயற்பட்டிருந்தன. இதில் புதிய அரசு மாற்றமுடையதாக இருக்குமா என்றால் அது காத்திருப்புக்கானது.
சீடோ சமவாயம் இலங்கையில் சட்டமாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் காணப்பட்டாலும் அது இன்னமும் நடைபெறவில்லை. இதற்கான வலியுறுத்தலை மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்குக் கொடுப்பாரா பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய இரண்டையும் முற்றாக நீக்குவதற்கான எந்தவித தோதான நிலைமையும் உருவானதாகத் தெரியவில்லை.
இன அழிப்புச் செயற்திட்டங்களும், பொறுப்புக் கூறல் தட்டிக்கழிக்கப்பட்டு கால இழுத்தடிப்புகளும் பூசி மெழுகல்களும் நடைபெற்று வருகின்ற இலங்கையில், மனித உரிமைகள் ஆணையாளர் 76 வருட தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை அரசு உடன்
மேற்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பாரா பொறுப்புக்கூறலை விடுத்து நீதி வழங்கலுக்கான சூழலை ஏற்படுத்துவாரா அல்லது இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான நிகழ்ச்சிநிரலுக்குள் அகப்பட்டு அந்த அலையில் அடிபட்டு அமைதியாவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
வெறுமனே அழுத்தம் பிரயோகத்தல் மாத்திரம் எதனையும் அடைந்து தராது என்பதும் கட்டாயப்படுத்தலும் அதனையும் தாண்டிய செயற்பாடுகளே பொருத்தமுடையதாக இருக்கும் என்றாலும் மனித உரிமைகள் ஆணையாளரது இலங்கைக்கான விஜயம் அடுத்த மனித உரிமை அமர்விலேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்போம். தொடர்ந்தும் அதனையே செய்வோம். மாற்றமில்லாதது அதுவொன்றே.
யாழ் – செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தப் புதைகுழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு 45 நாட்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
இந்நிலையில் அகழ்வு பணிக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையால் , நாளைய தினம் வியாழக்கிழமை முதல் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.