திருகோணமலையில் அரச உத்தியோகத்தர் ஒருவர் இன்று (13) மாகாண கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தாபன நடைமுறைகளை மீறி அதிகார துஸ்பிரயோகம் செய்த கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணை வேண்டும்.
அரச உத்தியோகத்தர்களது கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு அரச உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றிற்காக திருகோணமலையில் உள்ள மாகாண கல்வி அமைச்சிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக குறித்த உத்தியோகத்தர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதேவேளை வடக்கிலும் அதிகாரிகளின் நிர்வாக பழிவாங்கல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள், முறைதவறிய இடமாற்றங்களால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களும் இத்தகைய போராட்டங்களை நடாத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத 33 பிராந்திய வைத்தியசாலைகள் இருப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நயினாதீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கருத்துரைத்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
சுகாதார அமைச்சராக தீபகற்பத்திற்கு இது தான் முதல் வருகை என்றும், நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சுகாதார சேவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார்.
மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற வெகுதூரம் செல்லப் பழகி விட்டனர் என்றும், இந்த அணுகுமுறை யாழ் வைத்திய சாலையின் நோயாளிகளின் வருகைக்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.
இது போன்ற தீவுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும் என்றும், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் கூறினார்.
சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்குத் தேவையான சேவை என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், “வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன, எதிர்காலத்தில் புதிய செவிலியர்களை வழங்குவதன் மூலம் இந்த குறையை இல்லாது செய்ய நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் பராமரிப்பு விடயத்தில் சுகாதார அமைச்சகம் பலவீனமாக உள்ளது.
எதிர்காலத்தில், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை வழங்கும் போது, அவற்றை தொடர்ந்து பராமரிக்கும் நிறுவனங்களுடன் அந்த பௌதீக சொத்துக்களை நிர்வகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், வைத்திய சாலைகளில் நோயாளர் காவு வண்டிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாட, முறைப்பாட்டாளர் தீர்மானித்துள்ளார்.
தமது முறைப்பாடு குறித்து, காவல்துறையினர் இதுவரையில் உரிய பதில் வழங்காமையினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக, முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே, தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்வரும் வாரத்தை மாத்திரம் காவல் துறையினருக்கான கால அவகாசமாக வழங்கவுள்ளதாகவும், அதற்குள் பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்ற சட்டத்தரணியினால், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி இசைப்பிரியா மற்றும் பாலசந்திரனின் மரணம் தொடர்பான முறைப்பாடு, பதில் காவல்துறைமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலதிக நடவடிக்கைகளுக்காக, குறித்த முறைப்பாடு சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏற்கனவே, சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரின் போது, சரணடைந்தவர்கள், சட்ட விரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதில், பிரதானமாக, இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா 2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிருடன், நிராயுதபாணியாக, காவலில் இருந்ததாகவும், பின்னர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததாகவும் காணொளி ஆதாரங்கள் காட்டுவதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகளின் அடிப்படையில், அவர் பாலியல் வன்புணர்வு மற்றும் மரண தண்டனை பாணியில் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான தடயங்களைக் காண முடிகிறது.
அதேநேரம், 12 வயதுடைய பாலச்சந்திரன், உயிருடன் ஆயுதம் ஏந்திய படையினர் வசமிருந்தமையும், பின்னர் அவர் மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்து காணப்படுவதையும் காட்டும் புகைப்படங்கள் உள்ளன.
இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கப்பட்டால், சர்வதேசச் சட்டத்தின் கீழ், அவை போர்க் குற்றங்களாகக் கருதப்படும் எனவும், ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் ரோம் சாசனம் ஆகிய இரண்டையும் மீறுவதாக உள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து, உண்மை மற்றும் பொறுப்புடன், நியாயத்துக்கு வழிவகுக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாட்டாளரான, சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கோரியுள்ளார்.
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு உயிரிழந்த பொதுமகனின் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு நீதவான் திகதி அறிவித்துள்ளார்
சம்பவ இடத்துக்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட வவுனியா நீதவான், கள விசாரணைகளை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், உயிரிழந்த பொதுமகனின் உடலத்தில் எவ்வித வெளிப்புற காயங்களும் இல்லை என நீதவான் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
இந்தநிலையில், சட்ட மருத்துவ அதிகாரியின் ஊடாக, உடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனையை எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளுமாறு நீதவான் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உயிரிழந்த 59 வயதான பொதுமகனின் உடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா – கூமாங்குளம் பகுதியில் பொதுமகன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்ததை அடுத்து அங்கு ஏற்பட்ட அமைதியின்மையின் போது, காயமடைந்ததாகக் கூறப்படும் ஐந்து காவல்துறையினரும் தொடர்ந்தும் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில், இருவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வவுனியா தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி கூறினார். ஏனைய மூவரும், சாதாரண காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்கான உதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராம மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 வருடங்களில் 2 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த உதவித் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இளைஞர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 58 சபைகளில் போட்டியிட்டது. இதில் 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.
ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம், அப்படி பிரதிநிதித்துவத்தைப் பெற்றும் கொண்டோம். மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஆகவே, 58 சபைகளில், 46இல் எமது இலக்கை அடைந்துள்ளோம்.
மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம். இது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி என அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பெருமிதப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், 58 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளதாக பொதுவாக கூறும் சுமந்திரன் வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தில் மூவினங்களும் வாழ்கின்ற நிலையில், வவுனியா மாநகரசபையை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கைப்பற்றிய போதும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மன்னார் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியினால் ஏன் ஒரு சபையைக் கூட கைப்பற்ற முடியவில்லை?
இவ்வாறு தமிழரசுக் கட்சி வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் 3 மாவட்டங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், தனித் தமிழரசின் ஆட்சி அமைக்கும் விதத்தில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கிளிநொச்சிக்குத் தலைமை வகிக்கும் சிறீதரன் எம்.பி, முல்லைத்தீவிற்குத் தலைமை வகிக்கும் ரவிகரன் எம்.பி, மன்னாரிற்குத் தலைமை வகிக்கும் முன்னாள் எம்.பி சாள்ஸ் ஆகியோருடன் தமிழரசின் தலைமை வன்மம் கொண்டு மூவரையும் பழிவாங்கும் நோக்குடனும் கட்சியிலிருந்து ஒதுக்கும் வெளியேற்றும் திட்டத்துடனும் செயற்படுவது தமிழரசின் அரசியலையே முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்பதனை தமிழரசின் தலைமைகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.
தமிழரசு வெற்றி கொண்ட முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட உள்ளுராட்சி சபைகளில் தான் பெயரிடுபவர்களையே தவிசாளர்களாக பிரதி தவிசாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற சுமந்திரனின் சர்வாதிகாரத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலைமை தாங்கி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரவிகரன் எம்.பி மற்றும் மன்னாரிற்குத் தலைமை வகிக்கும் முன்னாள் எம்.பி சாள்ஸ் அந்தப் பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து ஒதுங்கியுள்ளார்.
தற்போதைக்கு தமிழரசுக்கு நெருக்கடிகள் ஏற்படாது விட்டாலும் இனி வரும் தேர்தல்களில் அதற்கான விளைவுகளைத் தமிழரசு கட்சி எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
அதேபோன்று, சிறீதரன் எம்.பியின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசின் ஆட்சியமைந்த கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள சிறீதரனின் தீவிர விசுவாசியை அப்பதவியிலிருந்து அகற்றத் தமிழரசின் தலைமை திட்டமிட்டுள்ளது.
இது அந்த தவிசாளருக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல தமிழரசுக்குள் இருந்து கொண்டே தமிழரசின் தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டைக் கடுமையாக எதிர்க்கும், பகிரங்கமாக விமர்சிக்கும் சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே தமிழரசின் தலைமையால் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே ஏலவே பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல ஆசனங்களை இழந்துள்ளதுடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும், பல சபைகளை இழந்துள்ள தமிழரசுக் கட்சி, தன்னை மீண்டும் வலிதாக்கிக் கொள்ள கட்சிக்குள் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பலப்படுத்தி அனைவரையும் ஒரே வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டுக் கொடுப்புத் தன்மைகளுடன் தமிழரசின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
எனினும் இந்த நேரத்தில் தலைக்கனம், வறட்டுக் கெளரவம், பிடிவாதம், நான் என்ற அகங்காரம் போன்றவற்றால் கட்சிக்குள் பிளவுகளை, குழப்ப நிலைகளை, பழிவாங்கல்களை, பதவி நீக்கங்களை, கட்சி நீக்கங்களை மேற்கொண்டால் தமிழர்களின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி விரைவில் காணாமல் போய்விடும் என்பதனை தமிழரசின் புதிய தலைமைகள் சற்றேனும் தமிழர் நலன் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
தவறின், தந்தை செல்வா, “கடவுளாலும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது” என்று கூறியதை “கடவுளாலும் தமிழரசுக் கட்சியை காப்பாற்ற முடியாது” என்று கூற வேண்டிய நிலையே ஏற்படும்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் இன்று(11.07.2025) அப்பகுதியில் பதற்ற நிலையொன்று உருவாகியுள்ளது.
வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்தனர்.
இதன் போது அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை அவர்கள் துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன்றை வீசித் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் நிலைதடுமாறி கீழே வீழ்ந்த மேற்படி நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அவதானித்த மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
பொலிஸாரின் இந்தச் செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்ட நேரமாகச் சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.
உயிரிழந்தவரின் சடலத்தைப் பொலிஸார் அங்கிருந்து அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள், “நீதிவான் இங்கு வரவேண்டும். அவர் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம்” என்று தெரிவித்தனர்.
இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, இந்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து அதனுடன் தொடர்புடையை சந்தேக நபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அங்கு நின்ற மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், “பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நீதிவான் இங்கு வரவேண்டும்’ என்று விடாப்பிடியாக நின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் கலவரம் ஏற்படுவதற்கான நிலைமை ஏற்பட்டது.
இதையடுத்துத் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.
அதன் பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்ற குடும்பஸ்தர் என்று தெரிய வந்துள்ளது.
அவரது சடலத்துக்கு அருகில் மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சினை ஒன்றும் காணப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்புப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டிருந்தனர்.
யாழ் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப் பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் இடம் பெற்றிருந்தன.
சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர். நேற்றைய தினம் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பையோடு (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப் பையோடு) சிறுவனுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது.
அந்த என்புத் தொகுதிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை, ஆடை, சிறுமிகள் பயன்படுத்தும் பாட்டா நிறுவனத் தயாரிப்பு காலணி, சிறு கண்ணாடி வளையல்கள் என்பனவும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்த மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று நேற்று வழங்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணப் பொலிஸாராலேயே தற்போது இந்த வழக்கு கையாளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செம்மணிப் புதைகுழி வழக்கை ஒப்படைக்க பொலிஸ் தரப்பால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நம்பகரமாக அறிய முடிகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான வழக்குகளைத் தற்போது விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறிருக்கையில், செம்மணிப் புதைகுழி வழக்கு அவர்களின் கீழ் ஒப்படைக்கப் படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்த விடயத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாணத்தின் கல்வி அமைப்பு, வரலாற்று ரீதியாக, தமிழ் மக்களின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது.
இது பல சவால்களையும், மோதல்களையும் தாண்டி, கல்வியறிவு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளில் முன்னணியில் இருந்த ஒரு பகுதியாகும்.
ஆனால், “கல்வி படிப்படியாக அழிக்கப்படுகிறதா?” என்ற கேள்வி பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விடயமாக இன்று மாறியுள்ளது.
இதற்கு பிரதான காரணம், இன்று வெளியாகிய க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சராசரியில் ஏற்பட்ட பின்னடைவு நிலையே.
வடக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் 69.86% மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கை பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
கூடுதலாக, மொத்தம் 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும். இதற்கிடையில், 2.34% மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.
இந்த நிலையை நாம் வடக்கில் கருத்தில் கொண்டால் பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களில் 1 அல்லது 2 மாணவர்கள் சித்திப்பெறாத நிலை உருவாகிறது. யுத்தம் முடிவடைந்த 2010ல் கூட வடக்கு நான்காமிடத்தில் இருந்தது.
ஒரு மாணவன் சிறந்த பெறுபேற்றையோ அல்லது மோசமான பெறுபேற்றையோ பெற்றால் அதற்கு பொறுப்பானவர்கள் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே.
அவ்வாறென்றால் மாகாண ரீதியாக பெறுபேறு வீழ்ச்சியடையும் போது அதன் பொறுப்பு யாருடையது? அதன் முழுப் பொறுப்பும் வலய, மகாண பணி்பாளர்கள் மட்டுமன்றி மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரையே சாரும் எனினும் மாகாண சபை இயங்காத நிலையில் அந்தந்த மாகாணங்களின் செயலாளரே முழுமைக்கும் பொறுப்பாளியாவார்.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வட மாகாணம் தொடர்ந்து இறுதி நிலையில் இருப்பது ஏற்க முடியாத விடயமே.
வடக்கிலுள்ள மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாடசாலைகளை விலக்கி, மாகாணப் பாடசாலைகளை கணக்கிட்டால் வடக்கின் கல்வியின் வீழ்ச்சியின் உண்மை முகம் தெரியும்.
இந்த நிலையில் மாகாண சபை முறை என்ற ஒன்றினை உருவாக்கி அதிகாரிகளுக்கு இருக்கக் கதிரையும் 25ம் திகதி குளிரூட்டிக்குள் இருந்தபடி சம்பளம், வாகன பெர்மிட், வெளிநாட்டு சுற்றுலா போன்ற சலுகைகளைப் பெறுவதற்கு மட்டுமா மாகாண சபை முறை? இது எமக்கு தேவையற்ற சுமையாகவே காணப்படுகின்றது.
குறிப்பாக வடக்கில் பொருத்தமற்ற வெளிப்படையற்ற பழிவாங்கல் இடமாற்றங்கள், பழிவாங்கல்கள், அதீத அழுத்தம், அதிகார துஸ்பிரயோகம் என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மாலைக்கும், பொன்னாடைக்கும் ஆசைப்படும் அதிகாரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சூழலில் எவ்வாறு வினைத்திறனையும், விளைதிறனையும் எதிர்பார்க்க முடியும்?
” குயிலைப் பிடித்து கூண்டில் அடை்த்து கூவச் சொல்கிறது கல்விப் புலம் ” அது எவ்வாறு கூவும்?
வடக்கின் கல்வியின் அதிபாதாள நிலைக்கு காரணமான அதிகாரிகள் தாமே தமது தவறினை ஏற்று பதவி விலகுவார்களா அல்லது ஆளுநர் பதவி நீக்கம் செய்வாரா? என்பதே மக்களின் முன்னுள்ள வினா.