வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிப் பயணித்த இளைஞனை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர் உயிரிழந்துள்ளார். இதனால் இன்று(11.07.2025) அப்பகுதியில் பதற்ற சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை போக்குவரத்து பொலிஸார் தாங்கள் வைத்திருந்த தடியை சில்லுக்குள் செருகி முறையற்ற வகையில் நிறுத்த முயன்றுள்ளனர். இதன் போது, இளைஞன் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனால், அப்பகுதியில் அதிகளவான மக்கள் குவிந்துள்ளதோடு மக்கள் கொதி நிலையில் காணப்படும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். புத்தூர் – வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கிளிநொச்சி – முழங்காவில் பகுதியைச் சேர்ந்த லோகவேந்தன் றுகிந்தா (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், முழங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி புத்தூர் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் தாதியர் பயிற்சிநெறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மன்னார் நகரசபை தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவின் போது நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான தன் கட்சியினரே தன்னை அமர்வுக்கு செல்ல முடியாத வகையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தடுத்து வைத்ததாக நகரசபை உறுப்பினர் ஜோன் பொலின்டன் நேற்றைய தினம் (9) பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி மன்னார் நகரசபையின் தலைவர்,உப தலைவர் தெரிவின் போது மஸ்தான் தலைமையில் தொழிலாளர் கட்சி சார்பாக போனஸ் ஆசனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் ஜோன் பொலின்டன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறான பின்னணியில் தன்னை சபை அமர்வுக்கு வரவிடாமல் தனது கட்சியின் தலைவரும் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் தடுத்து வைத்ததாகவும் அதன் காரணமாக தான் சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் தலைவர் தெரிவின் போது தனது ஜனநாயக உரிமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் குறித்த விடயத்தை கூட்டறிக்கையில் விடுமுறை என தெரிவித்த நிலையில் ஏனைய உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் குறித்த உறுப்பினரால் நகர சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சபையில் வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த உறுப்பினருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி தொடர்பில் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு சாய்ந்தமருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சாரா ஜாஸ்மினின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரா ஜாஸ்மின் எனும், புலஸ்தினி மகேந்திரனும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொருப்பானவர் என்பதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் மூன்றாவது டி.என்.ஏ சோதனைக்கான மாதிரிகளை எடுப்பதற்கான நடைமுறை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், அவர் இறந்தாரா இல்லையா என்பது குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“26.04.2019 அன்று சாய்ந்தமருது பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் சாரா ஜாஸ்மின் இறந்தாரா இல்லையா என்பது குறித்து இரண்டு சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட டிஎன்ஏ அறிக்கைகள் கோரப்பட்டது.
ஆனால் அந்த அறிக்கைகள் அவரது நெருங்கிய உறவினர்களின் அறிக்கைகளுடன் பொருந்தவில்லை. மூன்றாவது மாதிரியின் டி.என்.ஏ அவரது தாயாரின் டி.என்.ஏவுடன் பொருந்துகிறது.
டி.என்.ஏ மாதிரியை எடுக்கும் செயல்முறை இப்போது கடுமையான சந்தேகத்தின் கீழ் உள்ளது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பிள்ளையான் இந்தத் தகவலை அறிந்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த நேரத்தில் அவர் புலனாய்வு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹாரா ஹாஷிமை வழிநடத்தியவர்கள் யாராவது இருந்தார்களா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க எதிர்பார்க்கிறோம்.
சஹாரா ஹாஷிமின் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் இப்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த விசாரணைகள் அனைத்தும் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 29.04.2019 அன்று நடந்த ஒரு கொலையில், சஹாரானின் குழுவின் சாரா ஜாஸ்மினின் DNA அறிக்கைகள் எதனுடனும் பொருந்தவில்லை அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட DNA மாதிரிகள் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
சாரா ஜாஸ்மின் சாய்ந்தமர்து தாக்குதலில் இறந்தாரா இல்லையா என்பது குறித்து தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
அரச சேவை ஆணைக்குழுவினால் வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரி யோகேந்திரா ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோயிலை பிறப்பிடமாகக் கொண்டவர்.
1975.10.09 ஆம் திகதி பிறந்தவர் என்பதால் 2035.10.08 ஆம் திகதி வரை சேவையில் இருப்பார். அத்துடன் எதிர்வரும் 21.08.2025 ஆம் திகதி திங்கட்கிழமை வடமாகாண கல்விப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் இருந்து துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கமலராஜன் ஆகியோர் நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற போதிலும் சிரேஷ்ட நிலையில் இருந்ததால் ஜெயச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
பதவியேற்கவுள்ள மாகாணப் பணிப்பாளர் அவர்கள் ஊழல், மோசடிகளுக்கு துணைபோய் வடக்கின் கல்வியை அழிக்கும் அதிகாரிகளின் கபடத்தனமான மாலைக்கும், உபசரிப்புக்கும் மயங்கி அவர்களின் கதிரைகளைக் காப்பாற்றத் துணை போகாது அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக செயற்பட வேண்டும் என்பதே கல்விப் புலம் சார்ந்த அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து , துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வந்த நிலையில் , சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்து.
அங்கு விரைந்த பொலிஸார் சிறுமியை மீட்டு , ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதுடன், வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணையில் ,சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும் , அவரே சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து வந்து 17 நாட்களும் விடுதியில் தங்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை , விடுதியின் உரிமையாளரும் , சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.
அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.
இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
பொலிஸ் சீருடை அணிந்து சமூக வலைத்தளமான ரிக்ரொக்கில் (Tiktok) காணொளி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நபரை எதிர் வரும் ஜூலை 22ஆம் திகதிவரை விளக்கமறயலில் வைக்க மன்னார் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.
குறித்த நபர் மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ள நிலையில் அவற்றில் முன்னிலையாகத் தவறியதால் 25இற்கு மேற்பட்ட பிடியாணை உத்தரவுகள் உள்ளதனை சுட்டிக்காட்டி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்தை கவனத்தில் எடுத்த நீதிவான் மன்று பிணைக் கட்டளைச் சட்டம் 14ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட பிணைகளை நிராகரித்தும் கட்டளையிட்டது.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்காக பல்வேறு சர்ச்சையான கணொளிகளை வெளியிட்டு வந்த வவுனியா – ஒமந்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுமாரன் சிவகரன் என்பவரே இவ்வாறு மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
நீதிபதியுடன் சந்திப்பு என்ற சர்ச்சைக்குரிய காணொலியையும் குறித்த நபரே வெளியிட்டிருந்தார்.
அரச உத்தியோகத்தரான பொலிஸார் அணியும் சீருடையை அணிந்து ரிக்ரொக் காணொலியை உருவாக்கி வெளியிட்ட குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 167 மற்றும் 168ஆம் பிரிவுகளின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்டத்துக்கு புறம்பான செயல்களைச் செய்தல் என்ற அடிப்படையில் மன்னார் நீதிவான் நீதிமன்றில் மடு பொலிஸார் இன்று பி அறிக்கை தாக்கல் செய்தனர்.
வழக்கு மன்னார் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஆதரவாக மன்னார் சட்டத்தரணிகள் முன்னிலையானதுடன் சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவில்லை.
சந்தேக நபர் சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களினால் 25இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று மடு பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று, சந்தேக நபர் பிணை கட்டளைச் சட்டம் 14ஆம் பிரிவை மீறிய உள்ளிட்ட காரணங்களையும் கவனத்தில் எடுத்து அவரை வரும் ஜூலை 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
யாழ் – வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் உறவு முறையுள்ள 19 வயதுடைய இளைஞன் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.