முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கி அநுராதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில், இன்று பம்பலபிட்டிய பகுதியில் வைத்து துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபைத் தலைவரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்தக் கோரி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
நிலையியற் கட்டளையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கடந்த 20 ஆம் திகதி சபாநாயகரின் அனுமதியுடன் செயல்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் எழுந்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்ய அரியரத்ன, சபாநாயகர் வழங்கிய அனுமதியை எதிர்த்தும், நிலையியற் கட்டளையை எதிர்த்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும், இது சபாநாயகரின் விருப்புரிமையை தெளிவாக கேள்விக்கு உள்ளாக்கியதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்ட அறிக்கை, நிலையியற் கட்டளை 91 (h) ஐ மீறுவதாக சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், பிமலின் ஜனாதிபதி நிதியை மோசடி செய்து ஏழை மற்றும் அப்பாவி மக்களின் பணத்தைத் திருடிய நபர் என்ற அறிக்கையின் மூலம் தயாசிறி ஜெயசேகரவின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும், அதிலிருந்து சில பகுதிகள் பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10வது நாடாளுமன்றம் தொடங்கியதிலிருந்து தற்போதைய சபைத் தலைவரின் செயல்களும் நடத்தையும், முன்னோடி சபைத் தலைவர்களின் எடுத்துக்காட்டுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக இருப்பதாகவும், எனவே, 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டுக் கொள்கிறார்கள் என்றும் அந்தக் கடிதம் மேலும் கூறப்பட்டுள்ளது.
தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், பேஸ்புக் காணொளி ஊடாக பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நாங்கள் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இருக்கின்றோம். இது ஒரு புண்ணிய பூமிபோன்று தெரிகிறது. உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து அவர்களது உறவினர்கள் சுடர் ஏற்றி வழிபடுகின்றனர்.
ஆனால் கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் இந்த புண்ணிய பூமியில், இடம்பெற்ற இறுதிப் போரின் போது, ஐக்கிய நாடுகளின் சபை தகவலுக்கமைய 70,000 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கமைய 150,000 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெறும் அப்பாவி குடிமக்களே கொல்லப்பட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உயிரிழந்தவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்காத மக்கள் இங்கு வருகை தந்து அவர்களை நினைவு கூறுகின்றனர்.
இந்நிலையில், தெற்கில் உள்ளோர் வடக்கிற்கு செல்ல மே 18 ஆம் திகதியே சிறந்த நாள் என்று” அவர் மேலும் கூறியுள்ளார்
கொழும்பு கொட்டாஞ்சேனையில் பாடசாலை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் பாடசாலையின் அதிபரிடமும் ஆசிரியரிடமும் விளக்கம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் இற்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பம்பலபிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் குறித்த மாணவி கல்விகற்ற பாடசாலை அமைந்துள்ள கல்வி வலய அதிகாரிகளிடம் இந்த அறிக்கைகள் கோரப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலபிட்டியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் அதிபரும், உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியை துஷ்பிரயோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரும் கலந்து கொண்டிருக்கவில்லை.
அவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமைக்கான காரணம் தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குறித்த விடயத்தினை ஏனைய தரப்பினர் சவாலுக்கு உட்படுத்த முடியுமா? என்ற வினா எழுகின்றது.
இலங்கையில் தமிழ் இனப் படுகொலையை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று (15.05.2025) நடைபெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் உறுப்பினர்களுக்கான கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துரைக்கும் காணொளி ஒன்று ஒளிபரப்பட்டுள்ளது.
இதன் போது, “உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றும் வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக 2 அல்லது 3 தமிழர்களுக்கு ஒரு இராணுவ உத்தியோகத்தர் உள்ளார். அத்துடன் வடக்கு கிழக்கில் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலத்தின் அளவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் அவ்வப்போது சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தனித்துவம் தொடர்ந்தும் உறுதி செய்யப்படுவதற்கான சில காரணங்களையும் அவர் தமது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரான்சில் உள்ள 47 மாநகர சபைகளில் இலங்கையில் தமிழ் இனப் படுகொலை நடந்ததை அங்கீகரிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இந்தியாவின் தமிழக மாநிலமும் கனேடிய நாடாளுமன்றமும் இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.
எனவே, ஆர்மெனியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் இனப் படுகொலை இடம்பெற்றமையை அங்கீகரித்ததை போன்று இலங்கையிலும் இனப் படுகொலை இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை மாணவி மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
உயிர் மாய்த்துக் கொண்ட மாணவியின் தாயாரது வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“தாயாரின் வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாக வைத்துக் குறித்த மேலதிக வகுப்பின் உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை.
இதுதொடர்பாக குறித்த தனியார் வகுப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளன.
எந்தவொரு நபரும் அந்த வகுப்பு நிலையத்தின் உரிமையாளருடன் தொடர்புபடுத்தப்படும் சம்பவம் குறித்து நேரடியான சாட்சிகளை வழங்கவில்லை. எவ்வாறாயினும் இந்த விசாரணைகள் கைவிடப்படாமல் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், குறித்த மாணவி கடந்த ஆண்டு பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாமை மற்றும் கல்வி அமைச்சுக்கு அறியப்படுத்தாமை தொடர்பான பிரச்சினை ஒன்று உள்ளது.
இது தொடர்பாக குறித்த மகளிர் பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஒமந்தை இலங்கை வங்கிக்கு அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதுண்டு வீதியின் அருகே நின்ற நபருடனும் விசேட அதிரடிப் படையின் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் வீதியின் அருகே நின்றவர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளின் சாரதி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்தில் 32வயதுடைய கண்ணதாசன் திவியன் என்பவரே உயிரிழந்தவராவார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கேகாலையில் திடீர் சுகயீனம் காரணமாக ஹெம்மாத்தகம அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனை, அதிபரின் கடிதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹெம்மாத்தகம மருத்துவமனையின் மருத்துவர் இவ்வாறு கூறியதை அடுத்து, முச்சக்கர வண்டியில் மாவனெல்ல மருத்துவமனைக்கு மாணவன் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஹெம்மாதகமவில் உள்ள பள்ளிப்போருவ முஸ்லிம் பாடசாலையில் 4 ஆம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரியும் தந்தை, விரைவாக பாடசாலைக்கு சென்று, மாணவனை ஹெம்மாதகம பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மாணவன் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்ததுடன், வாந்தி எடுத்த நிலையில், உடல் மிகவும் சூடாக காணப்பட்டுள்ளது.
பாடசாலை சீருடையில் இருந்த மாணவர் மருத்துவரிடம் அழைத்து சென்றபோது, அவரிடம் பாடசாலை பை இல்லை என்று கூறி மருந்து மறுக்கப்பட்டது. பின்னர் அதிபரின் கடிதம் இல்லாமல் மருந்து கொடுக்க முடியாது என கூறப்பட்டது.
அதற்கமைய, உதவியற்ற தந்தை, மிகுந்த அதிர்ச்சியில், மாணவனை சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாவனெல்ல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய தந்தை, தன்னிடம் பணம் இருந்தால், மாணவனை ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு , மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நால்வரும் இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக திரும்பியுள்ளனர்.
அவர்கள் நால்வரையும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இரண்டு படகோட்டிகள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று அழைத்து வந்துள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த பொலிஸார் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் புகுந்த நால்வரையும் , அவர்களை அழைத்து வந்த படகோட்டிகளையும் கைது செய்து , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றிற்கு சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது.
எனினும் ஆசிரியரின் கேள்விக்கு மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் , ஆனால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் பாடசாலை அதிபர் கூறியதாக தெரிய வருகின்றது.
அதோடு மாணவர்கள் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.