Wednesday, March 4, 2026
Huis Blog Bladsy 126

திருகோணமலையில் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் கைது..!

0

திருகோணமலையில் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கைானது நேற்று (9) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய தீர்த்தக்கரை சிலாவத்தையில் வசிக்கும் கடற்றொழில் சங்க தலைவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் உள்ள மனைவியின் சித்தி வீட்டிற்கு போய்வருவது வழக்கமான நிலையில் சித்தியின் மகளான 15 வயதுடைய பாடசாலை மாணவியை அதிக நாட்களாக தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மாணவிக்கு உடல் நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த மாணவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட போது அவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவியிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் நேற்றையதினம் (9) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணையின் பின்னர் இன்றைய தினம் (10) முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாண YouTuber கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

0

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ், பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

பெண்ணொருவரை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளியொன்று வெளிவந்த நிலையில், அது சர்ச்சையாக மாறி இருந்தது. அத்தோடு, இந்த விடயமானது, நாடாளுமன்ற அமர்வில் கூட பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டிற்கு யூரியூபர் வந்திருந்த வேளை, ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கிருஸ்ணா மீது மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழில் பொலிஸ் அதிகாரியின் மகன் லஞ்சம் வாங்கிய சம்பவம்; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

0

யாழ் தலைமை காவல் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். தலைமைப் காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரியின் மகன் வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாவினை பொதுமகன் ஒருவரிடம் இலஞ்சமாக பெற்றுள்ளார்.

இதையடுத்து, இலஞ்சம் பெற்றமை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த வகையில், சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த வழக்கானது இன்றைய தினம்(10) காவல்துறையினரால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதன்படி, இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதிக்குள் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவதில்லை; தமிழரசுக் கட்சி தீர்மானம்..!

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுகின்றமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அந்த வகையில் கொழும்பு மாநகரசபையின் கீழ் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளன. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலையை ஏற்ப்படுத்தியுள்ளது.

இங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக் கிழமை (09) நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம் பெற்று வரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விஷயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கூட்டத்தில் பதில் பொதுச் செயலாளர் எம்.எ,சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஐ.நாவில் குவியும் தமிழர் தரப்பின் முக்கிய ஆவணங்கள்; அநுர அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி..!

0

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 58வது அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மையக் குழு மீண்டும் ஒருமுறை நாட்டின் மீதான இராஜதந்திர நகர்வை நீட்டித்துள்ளது.

இலங்கை சர்வதேச பொறுப்புக்கூறலை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஒரு போர்க் குற்றவாளியை கூட விசாரிப்பதை மறுக்கும் அதேவேளை, தொடர்ச்சியான மேலோட்டமான நடவடிக்கைகளை இலங்கை வரவேற்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நாவின் கோர் குழு, அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் “அமைதியான தேர்தல்கள் மற்றும் சுமூகமான அதிகார மாற்றத்தை” அங்கீகரித்தது.

இலங்கை அதன் ஆழமாக வேரூன்றிய மனித உரிமை மீறல்கள் மற்றும் தீர்க்கப்படாத போர்க் குற்றங்களை நிவர்த்தி செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியது.

இருப்பினும், 2009 இல் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு ஒரு இலங்கை அதிகாரி கூட பொறுப்பேற்கவில்லை என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் சுட்டிக்காட்டுகிறது.

ஐ.நா. தீர்மானங்களையும் சர்வதேச வழிமுறைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து நிராகரிப்பது, இலங்கையின் அரசியலுக்கு நல்ல நோக்கம் என கொழும்பு மைய அரசியல் கருதினாலும் – நீதி நிலைநாட்டப்படுவதை தடுக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்நிலையில் போர்குற்றம் மீதான இலங்கையின் நகர்வுகள் மற்றும் புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச விசாரணை தொடர்பிலான அழுத்தங்கள் வலுத்து வருகிறது.

யாழ். யூடியூப்பரின் மோசமான செயலுக்கு ரஜீவன் எம்.பி கண்டனம்..!

0

யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன. நேற்றையதினம் கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித் தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம்.

இது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலைத் தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன. இந்த விடயம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மகளிர் விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.

வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காண்பித்து அதன் மூலம் பணத்தை திரட்டி பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள், சிறுவர்கள் எமது நாட்டின் முதுகெலும்புகள் அவர்களை காக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.

அவர்களின் வறுமை என்ற கருவியை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பணம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பெண்களின் சிறப்பு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாக அமைகிறது. இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டி இருக்கின்றது.

எனவே,இவ்வாறான செயற்பாடுகளை ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொலிசார் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் என்றார்.

வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது..!

0

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாவற்குளம் படிவம் 2 பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், இரண்டு இடத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த ஒருவரிடம் இருந்து 2 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு மான் கொம்புகளும் மீட்கப்பட்டன.

இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சட்டில் அப் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், நீதிமன்றினால் இரண்டு பிடிவிறாந்து விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டார்.

குறித்த மூவரும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு உளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அத்தோடு, வவுனியா- கோவில்குளம் பகுதியில் மாடு திருடிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றின் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட பாவற்குளம் படிவம் 2 பகுதியைச் சேர்ந்த மேலும் இருவரும் இதன் போது கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளின் பின் உளுக்குளம் மற்றும் வவுனியா பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை அதிகரிப்பு; வெளியாகிய விசேட அறிக்கை..!

0

இலங்கை உட்பட முழு உலகமும் இன்று சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கும் நிலையில், நாட்டில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பிரிவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய அறிக்கையில் உள்ள தரவுகளின்படி,

2023 ஆம் ஆண்டில் 167 பாடசாலை வயது சிறுமிகள் கருவுற்றதாகவும் 2024 ஆம் ஆண்டில் இவ்வாறான 213 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணி சிறுமிகள் மத்தியில் 10 வயது சிறுமியொருவர் உள்ளடங்கியிருந்ததாகச் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் படி, 18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இதுபோன்ற பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார்.

விசாரணையை ஆரம்பிக்கும் அநுர அரசு; சிக்கலில் மாட்டிய ரணில்..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என அநுர அரச தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும்.

அத்துடன் இவை இரண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத் தன்மைக்கான உறுதி பூண்டுள்ளது.

மேலும், ரணில் விக்ரமசிங்க முன்னர் அரசியல் பாதுகாப்பைப் பெற்ற அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் என விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் வாங்கிய மகன்; யாழ் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்..!

0

இலஞ்சம் வாங்கிய மகனால் , யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால அவர்களினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகி இருந்தது.

முறைப்பாட்டினை செய்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் வாகனம் செலுத்தி சென்ற போது யாழ் பொலிஸாரினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கினை இல்லாது செய்வதற்காக யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றிருந்தார்.

இருப்பினும் வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் முறைப்பாட்டாளருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிசார் குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.

இந்த விடயமானது ஊடகங்களில் பேசுபொருளான நிலையில் பின்னணியில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முல்லை தீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!